Thursday, November 30, 2006

அ.அ.திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

முருகப்பெருமானின் எட்டுவிதக் குணங்களைக் கூறும் அருமையான பாடல் இது.
என்னை மிகவும் கவர்ந்த இப்பாடலில் அக்கருத்தினை எவ்வளவு அழகுறச் சொல்கிறார் பாருங்கள்!
இசைத்துப் பாடிக் கேட்பதற்கும் மிக இனிமையான பாடல்.

அதுவும் சித்ராவின் தேன்குரலில் இப்பாட்டினைக் கேட்கணும்!

வலையேற்ற முயற்சிக்கிறேன், தெரிந்தவர் உதவி கொண்டு.

.................பாடல்.....................

தனதனதந்தன தனதனதந்தன
தனதனதந்தன தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் --பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் --பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் --பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் --பெருமாள்காண்

அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் --பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் --பெருமாள்காண்

இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் --பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் --பெருமாளே.

............................................................

.................பொருள்................


இதற்கான பொருள் மிகவும் எளிது!

"திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்"

காக்கும் கடவுளாம் பரந்தாமன்
காப்பதெல்லாம் யார்துணை கொண்டு?
வீரமிகு தோள்களில் வீற்றிருக்கும்
வீரலக்ஷ்மியின் வீரியத்தாலன்றோ!


முரனென்னும் அசுரனை அழித்து
முராரியெனப் பெயர்பெற்றதுவும்
இன்னுமிந்த உலகினைக் காப்பதுவும்
அவள் அளிக்கும் புயவலிமையாலன்றோ!

இவ்விருவர் மருகரென பேர்பெற்று விளங்கிடும்
எம்பெருமான் இவனெனவே அறிந்திடுவாய்!
அடியவர் மானம் காத்து அருளுவதால்
இவனே "மானமூர்த்தி" என உணர்ந்திடுவாய்!

"ஜெகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண்"

மண்ணவரும் விண்ணவரும் மனமுருகிப் பாடுகின்ற
பண்ணிசைக்கும் பாடல்களின் இன்னிசையைக் கேட்டுணரும்
என்னருமைக் கந்தன்பிரான் இவனென்றே தெளிவாய் மனமே!
அண்ணலிவன் "கானமூர்த்தி" என உணர்வாய் மனமே!

"மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்"


சிறுபிள்ளைக் குமரனவன்
சிரித்தாட இடம் வேண்டும்!
இரவும் பகலும் அவனை எண்ணி
உருகும் அடியார்கள் மனமே ஆடுகளம்!
பச்சைமயில் வாகனனும்
பரவசமாய் அதை நாடி
ஆடாமல் ஆடுகிறான்
அடியவரின் மனத்தினிலே!
அதை அறிந்து அவனொன்றே
"தியானமூர்த்தி" எனத் தெளிவாய்!

"மணிதரளம் வீசி அணி அருவி சூழ
மருவு "கதிர் காமப்" பெருமாள் காண்"

அவுணர்கோமானாம் சூரனை அழித்திடவே
சிவனார் கண்ணினின்று பிறந்திட்ட பாலனவன்
சீரலைவாய் கடந்து தென்னிலங்கை சென்றடைந்து
போர்க்கோலம் தாங்கி நின்று கோபாவேசமாய்
நின்றிட்ட புண்ணியத்தலம் கதிர்காமம்


பொங்கிவரும் மாணிக்கநதி நீரில் திரண்டுவரும்
இரத்தினமும் முத்துகளும் திருமுருகன் காலடியில்
அருவியங்கே பொழிந்துவரும் அழகான காட்சியுண்டு.
உருவமங்கு கிடையாது; திரையொன்றே வணங்கப்படும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வானளாவி நிற்பவனை
"வானமூர்த்தி" என நீயும் வணங்கிடுவாய் மனமே!

"அருவரைகள் நீறுபட அசுரர் மாள
அமர் பொருத வீரப்பெருமாள் காண்"

அங்கிருந்து வேல்விடுத்து அசுரர் குலமழித்து
தீங்குசெய்த சூரனையும் மலைகளையும் பொடியாக்கி
வீரமிகு போர்செய்து அடியவர் துன்பமகற்றிய
தீரனிவனை "வீரமூர்த்தி" என பணிந்திடுவாய் நெஞ்சே!

"அரவு, பிறை, வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண்"

தவமொன்றே தனிப்பயன் அளித்திடும்
சிவனெமக்கு வேண்டாமென்று ஆணவத்தால்
அபிசாரவேள்வி செய்து அழிக்கவல்ல பாம்புகளை
ஏவிவிட்ட முனிவர்களை முறியடித்து அரவங்களை
ஆபரணமாய் அணிதிட்டான் ஆலவாயழகன்.

தக்கன் சாபத்தால் கலையழிந்து உருக்குலைந்த
சந்திரனைக் காக்கவெண்ணி அஞ்சேலென்று
தன் தலையில் சூடிக்கொண்ட சந்திரமௌளி.

உலகத்தை அழிக்கவென உக்கிரமாய்ப் புறப்பட்ட
கங்கையின் சீற்றமடக்கி தன்சடையில் அதைத்தாங்கி
உலகுய்யச் செய்திட்ட உத்தமனாம் கங்காதரன்.

இத்தனையும் தான் கொண்டும்
அத்தலை பணிந்து வணங்க
பிரணவத்தின் பொருள் கேட்ட
தகப்பனுக்கே உபதேசித்த
குருநாதன் என்னப்பன்
சாமிநாதன் "ஞானமூர்த்தி"
என்றே வணங்கிடு நன்னெஞ்சே!

"இருவினை இலாத தருவினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்"

நல்வினை தீவினை என்னுமிரண்டும்
தமக்கென்று இல்லாமல், மனிதருக்கு
அவரவர் வினைக்கேற்ப பலனளிக்கும்
தேவர்களின் குலமழியாமல் காத்து
வாழ்வளித்த வள்ளலாம் குமரக்கடவுள்
"தியாகமூர்த்தி" என அல்லும் நினைத்திடுவாய்.

"இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதன விநோதப் பெருமாளே."

பரம், அபரம் எனும் இருவித ஞானமுண்டு.

இவ்வுலக சிந்தனையில் இன்பமுடன் ஈடுபட்டு
செய்கருமம் செப்புடனே செய்து பரம் உணரலாம்.
செய்வதெல்லாம் அவன் செயலேயென்றுணர்ந்து
இறைவனிடம் பக்திவைத்து அபரம் அறியலாம்.

இவ்விரண்டும் தன்னகத்தே வைத்திருந்து
உலகனைத்தும் இன்புறவேயென்று இன்முகம் காட்டி
இன்பசக்தியாம் வள்ளியம்மையுடன் இனித்திருக்கும்
"போகமூர்த்தி"யாய் விளங்கும் முருகனை பணிந்திடுவாய்.
.............................................................

இவ்வண்ணம் இப்பாடலில் எட்டுமூர்த்தியும் காட்டி
நல்வண்ணம் நம்வாழ்வில் நாம் உய்ய நமக்களித்து
பொன்வண்ணக் குமரனின் கோலமெல்லாம் காட்டிய
பண்வண்ணன் அருணையானின் பதம் பணிந்து போற்றுவோம்.
------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

தரளம் == முத்து
அருவரைகள் == சிறந்த மலைகள்
அரவு == பாம்பு
பிறை == நிலவு
வாரி == நீர் [கங்கை]
விரவு சடை வேணி == [மேற்கூறிய மூன்றும்] கலந்து வாழ்கின்ற சடைமுடியை உடைய [சிவன்]
அமலர் == சிவன்
தருவினை == நமது வினையால் வரும் விளைவுகள்
இமையவர் == தேவர்
இலகு சிலை வேடர் == கையில் வில் தாங்கி நிற்கும் வேடர்

-----------------------------------------------------------------


வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க!

******************************************************************

31 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Thursday, November 30, 2006 9:41:00 PM  

தமிழ்மணத்தில் வரும்
http://aaththigam.blogspot.com/2006/11/16.html
என்ற தொடுப்பு பதிவுக்கு செல்லவில்லை.

சரியான தொடுப்பு
http://aaththigam.blogspot.com/2006/11/14.html
இதுதான்.

மீள் பதிவு செய்து திரும்பவும் தமிழ்மணத்தில் ஏற்றுங்கள் !

கோவி.கண்ணன் [GK] Thursday, November 30, 2006 9:56:00 PM  

எஸ்கே ஐயா,

எட்டுவித குணங்களை கொண்ட
பிட்டுக்கு மண் சுமந்தவர் மகனை
தொட்டு எழுப்பும் பாடலிது !

அருணையார் பாடலின் உட்பொருளை
வருணனை செய்தவிதத்தில் அறிந்தேன்
கருணை பொய்யும் உம் கண்களையும் !

பாராட்டுக்கள் !
நன்றி !

VSK Thursday, November 30, 2006 9:59:00 PM  

உதவிக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, கோவியாரே!

கருணை பொழிந்த கண்கள் உம்முடையதன்றோ!!

ஞானவெட்டியான் Thursday, November 30, 2006 10:01:00 PM  

"திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்"
அதைத் தங்களின் உரையுடன் படித்து நெஞ்சு மணக்கிறது.

VSK Thursday, November 30, 2006 10:07:00 PM  

ஐயா, தங்கள் வந்து பாராட்டுவது இதுவே முதன்முறை.
மிகவும் பெருமையாக இருக்கிறது.
மிக்க நன்றி.

இலவசக்கொத்தனார் Thursday, November 30, 2006 11:01:00 PM  

ஐயனின் எட்டு குணங்களையும் வெளி கொணார்ந்த விதம் அருமை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, November 30, 2006 11:17:00 PM  

SK ஐயா

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புகழ் விருந்தா? அருமை! அருமை!

மானமூர்த்தி
கானமூர்த்தி
தியானமூர்த்தி
வானமூர்த்தி
வீரமூர்த்தி
ஞானமூர்த்தி
தியாகமூர்த்தி
போகமூர்த்தி

என்று எண்குணங்களையும் அருமையா விளக்கிச் சொன்னமைக்கு நன்றி!
எந்தத் தலத்து முருகனின் அழகில் இப்படி மயங்கி நம் எல்லாரையும் காண் காண் காண் என்று இத்தனை முறை காணச் சொல்லிப் பாடுகிறாரோ?

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, November 30, 2006 11:23:00 PM  

அடியேன் முருகனுக்கு, அணில் போல் செய்யும் சிறு தொண்டு, SK அவர்கள் பதிவின் வாயிலாக!

சித்ரா அவர்கள் பாடும் பாடல் சுட்டி இதோ
http://www.raaga.com/channels/tamil/movie/TD00100.html

raaga.com நேரிடையாகச் சுட்டி தர மறுக்கிறது! மேலும் விளம்பரமும் கூட! இருப்பினும் மேலிருந்து நான்காவது பாடலைச் சொடுக்கினால், விளம்பரத்துக்குப் பின்...."திருமகள் உலாவும் பாடல்"! மிக இனிமை!!

VSK Thursday, November 30, 2006 11:25:00 PM  

கதிர்காமத்துக் கந்தவேளைப் போற்றிப் பாடிய பாடல் இது, திரு.ரவி.

அதையும் தடித்த எழுத்தில் போட்டிருக்கிறேனே!

பாடிக் கேட்டால் மிகவும் சுகமாயிருக்கும்!

நான் பூஜையில் தினமும் பாடும் பாடல் இது!

நன்றி.

VSK Thursday, November 30, 2006 11:32:00 PM  

படிக்கும் போதே இனித்த பாடல், கொத்தனாரே!

நானறிந்த செய்தியினை நம்மவர்க்கும் தர வேண்டி முருகனருளால் முன்மொழிந்தேன்.

உங்களுக்கும் பிடித்திருக்கிறது என அறிந்து மிக்க மகிழ்ச்சி.

VSK Thursday, November 30, 2006 11:34:00 PM  

உடனே சுட்டி கொடுத்து இப்பாடலை அனைவரும் கேட்கச் செய்தமைக்கு மிக்க நன்றி, திரு. ரவி.

எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பாடலும், குரலும்!

மிகவும் கடமைப்பட்டுள்ளேன் உங்களுக்கு இதற்காக!

முருகனருள் முன்னிற்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, November 30, 2006 11:48:00 PM  

//கதிர்காமத்துக் கந்தவேளைப் போற்றிப் பாடிய பாடல் இது, திரு.ரவி.அதையும் தடித்த எழுத்தில் போட்டிருக்கிறேனே//

SK ஐயா; பார்த்தேன்!இருப்பினும் //உருவமங்கு கிடையாது// என்றும் சொன்னதால் ஒரு சிறு ஐயம்! அதனால் தான் "காண்" என்று வேறு ஒரு தலம் சுட்டுகிறாரோ என்ற ஐயம் வந்தது!
இலங்கை கதிர்காமத்து ஐயனை எங்களுக்குக் காட்டினீர்களே! நன்றி!

ஒரு விண்ணப்பம்; "திரு.ரவி"யில் திருவாகிய அன்னை மகாலட்சுமியை அடியேன் பற்றிக் கொண்டேன்; நீங்கள் ரவி என்று உரிமையுடனே அழைக்க வேண்டும்! :-))

VSK Friday, December 01, 2006 12:00:00 AM  

"திரு" வை திரும்ப எடுத்தால் அது எனக்குத்தானே வரும்!

நீங்கள் எப்படி பற்ற முடியும்?

சரி, இருவரும் எடுத்துக் கொள்வோம்!!

திரையைப் பார்த்தே அட்டாங்க லீலையையும் காணச் சொல்கிறார் அருணையார்!

வெற்றி Friday, December 01, 2006 5:34:00 PM  

SK ஐயா,
திருப்புகழுக்கான விளக்கம் அருமை. படித்துப் பயனடைந்தேன். மிக்க நன்றி.

மாணிக்கநதி: ஈழத்தில் மாணிக்க கங்கை என்று தான் சொல்வார்கள். கதிர்காமத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனைத் தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் பக்தி சிரத்தையுடன் தரிசித்து வருகிறார்கள். இங்கே அந்தணர்கள் பூசை செய்வதில்லை. சிங்களவர் ஒருவரே வாயைத் துணியால் கட்டிய வண்ணம் பூசை செய்வார். முந்தி இப் பகுதி தமிழர்கள் வாழ்ந்த பகுதியாகவே இருந்தது. பின்னர் சிங்களமயமாகி விட்டது. இவ் ஆலயத்திற்கு அண்மையில் செல்லக் கதிர்காமம் எனும் முருகன் ஆலயமும் உண்டு. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து தரிசித்தால் முருகன் அருள் பாலிப்பான் எனும் நம்பிக்கை ஈழத்தவர்கள் மத்தியில் உண்டு.

VSK Saturday, December 02, 2006 12:16:00 AM  

மாணிக்க கங்கை, கதிர்காமம், செல்லக் கதிர்காமம் பற்றிய அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி, திரு. வெற்றி.

VSK Saturday, December 02, 2006 12:21:00 AM  

தனி மடலாய் திரு சுப்பையா அவர்கள் அனுப்பிய மடலில் இருந்து சில பகுதிகள், அவர் அனுமதியுடன்!
*************************

"இந்தப் பதிவில்

1. அடியவர் மானம் காத்தருள்வதால் - மானமூர்த்தி
2. மனம் உருகிப் பாடும் பண்ணிசைப் பாடல்களைக் கேட்பதால் கான மூர்த்தி
3. அடியவர்கள் மனதில் ஆடாமல் ஆடுவதால் தியானமூர்த்தி
4. விண்ணிற்கும் மண்ணிற்கும் வானளாவி நிற்பதால்
வான மூர்த்தி
5. வீரமிகு போர் செய்து தன் அடியவர்களின் துன்பத்தைத்துடைத்தால் - வீர மூர்த்தி
6. தந்தைக்கு உபதேசம் செய்ததால் ஞானமூர்த்தி
7. அவரவர் வினைக்கேற்ப பலனளிக்கும் தேவர்குலமழியாமல் காத்ததால் 'தியாகமூர்த்தி
8. உலகத்தோர் இன்புற இனிமை காட்டுவதால் போகமூர்த்தி

என்று முருகப் பெருமானின் எண் குணங்களை அருணகிரியாரின் பாடலோடு, உங்கள்
உரை மொழியில் அற்புதமாக விளக்கம் சொல்லியுள்ளீர்கள்

பதிவிற்கும், உங்கள் பணிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

"முன் பிறவியில் அருணகிரியார், காட்டில் தீயவனாக வாழ்ந்தபோதும், ஒரு
கல்லைத் தினமும் முருகனாக நினைத்துத் தினமும் அந்தக்கல்லிற்கு காட்டில்
கிடைக்கும் தேனைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டதால்தான்
அவருடைய அடுத்த பிறவியில், முருகப் பெருமான் கை கொடுத்துக் காத்ததோடு,
உலகில் கலப்படமில்லாத உயர்ந்த பொருளான முத்தை வைத்துத் தொடங்கும்
படியாக அவரே அருள் பாலித்ததோடு 'முத்தைத்திரு' என்று அடியெடுத்துக்
கொடுத்துத் திருப்புகழை இந்த உலகத்தோர் பயன்பெறப் பாட வைத்தார்.

திருப்புகழ் ஒரு அற்புதமான நூல். மேலோட்டமாக படிக்காமல், மனதில் உள்
வாங்கிப் படித்து மெய் உருக வேண்டிய நூல். அதில் உள்ள பாடல்களை அருமையான
விளக்கங்களோடு நீங்கள் பதிவிடுகிறீர்கள்."
********************************

மிக்க நன்றி ஐயா!

கருப்பு Saturday, December 02, 2006 1:02:00 AM  

எஸ்கே சார்,

நீங்க என்னல்லாமோ சொல்றீங்க..

எனக்கு அதெல்லாம் பிரியாது...

ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுறேன்..

அது இன்னாக்கா...

வினாயகனின் தம்பியான முருகனைப் பத்தி நீங்க எழுதுன இந்த பக்தி பதிவு ரொம்ப நல்லா இருந்துச்சு.

அதுக்கோசரம் இங்கன வந்தேன்..

சரி வர்ட்டா சார்...

குமரன் (Kumaran) Thursday, December 07, 2006 8:53:00 PM  

பலமுறை சிறுவயதிலிருந்தே படித்த பாடிய பாடல் இது எஸ்.கே. உங்கள் விளக்கங்களை பல முறை ஆழ்ந்து படித்து அனுபவித்ததில் பின்னூட்டம் இட நாளாயிற்று. மன்னிக்கவும்.

முருகப்பெருமானின் எட்டுவித மூர்த்திகளை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். வாத்தியார் ஐயாவும் அவற்றை மீண்டும் நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

மருமக்கள் தாயம் இந்தப் பாட்டில் கொஞ்சம் அதிகம் தென்படுகிறது. பெருமாள் என்று மீண்டும் மீண்டும் சொல்வதைத் தான் சொல்கிறேன். :-) பாடலின் இறுதியில் ஒரே ஒரு முறை பெருமாளே என்பார். ஆனால் இந்தப் பாடலில் வரிக்கு வரி பெருமாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். படிக்கும் போதும் பாடும் போதும் சிறந்த அனுபவமாக இருக்கின்றது.

இவ்வண்ணம் நல்வண்ணம் பொன்வண்ணக் குமரனின் கோலமெல்லாம் பண்வண்ணன் காட்ட அதனை நீங்கள் பல்வண்ணத்தில் நன்கு காட்டியிருக்கிறீர்கள்.

VSK Thursday, December 07, 2006 10:41:00 PM  

சொல்வண்ணச் செல்வனாம் குமரனிங்கு
எண்வண்ணக் குமரனைப் போற்றிப்பாடும்
பண்வண்ணன் பாட்டினைப் பாராட்டி
எண்ணொணா மகிழ்வளிக்கும் இனியசெய்தி!

G.Ragavan Friday, December 08, 2006 7:48:00 AM  

அறுவர் பயந்த அறுந்தவச் செல்வன் குறித்து கதிர்மலைநாதன் அருளிய பொருள்மிகு பாடலிற்குத் தகுமிகு உரை செயும் எஸ்.கேவிற்கு நன்றி பல.

திருமகள் உலவும் இருபுய முராரி என்ற தொடக்க வரியே அழகிய கவிதை. பாடல் முழுவதும் அது தொடர்கிறது. ரசித்து ரசித்து ருசித்தாலும் பசித்தல் குறையாது உள்ளத்தில் வசித்தல் செய் தலைவன் புகழ் மகிழ்த்துகிறது.

மணிதரளம் வீசி அணியருவி சூழ என்ற வரியை மிகவும் ரசித்தேன். அருவி இழிகிறது. அது நீராகவா இழிகிறது? இல்லை...வழியெங்கும் மின்னும் மணியும் மினுக்கும் முத்துமாய்த் தள்ளிக் கொண்டு வந்து இழிகிறது. அப்படி மலையிலிருந்து கீழே இறங்குகையில் மணிகளும் தரளங்களும் உதறி வீசப்படுகின்றன. அந்தச் சிறப்பான கதிர்காமம். முருகா! அங்குன்னைத் தரிசிக்கும் நாள் எந்நாளோ?

//அரவுபிறை வாரி விரவுசடை வேணி //

ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புணைந்த பெருமான்....இதுவும் அருணகிரிதானே! ஒன்றையே வெவ்வேறு விதமாய்ச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அவரேதான்.

VSK Friday, December 08, 2006 8:51:00 AM  

இது....இது....! இந்த முத்தான முத்தாய்ப்பு வரிகளுக்காகத்தான் காத்திருந்தேன்!

இனி அடுத்த புகழ் பாடலாம்!

மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், ஜிரா!

உங்கள் விளக்கம் இப்பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

நன்றி!

ஜெயஸ்ரீ Friday, December 08, 2006 9:12:00 AM  

அழகான பாடல். உங்கள் சொல்வண்ணத்தில் அழகுதமிழில் அதன் பொருள் பல முறை படிக்க வைத்தது.

Anonymous,  Friday, December 08, 2006 9:20:00 AM  

ஐயா!
இது ஓர் கதிர்காமம் பற்றிய திருப்புகழானதால்; இளமையில் எங்கள் பாடப்புத்தகத்தில் இருந்து பாடமாக்கி ஒப்புவித்த நினைவும்;என் சமய ஆசிரியர் "பொன்னுச்சாமி" யும் நினைவுக்கு வந்தார்.
உங்கள் விளக்கத்தால் கூடுதல் தெளிவு.
கதிர்காமத்தில் பூசை செய்பவர்களை "கப்புறாளை" என்பர். இவர்கள் வேடுவர் குல வழிவந்தவர்கள் எனும் கருத்து முண்டு.(அதாவது வள்ளியின்)
செல்வக் கதிர்காமத்தில் இருப்பது பிள்ளையார் கோவில்.
வெற்றி கூறியது போல் இவை இப்போ சிங்களமயமாக்கிவிட்டார்கள். சுதந்திரமாகத் தரிசிக்க யோசிக்க வேண்டிய நிலை
யோகன் பாரிஸ்

VSK Friday, December 08, 2006 9:20:00 AM  

அட! நீங்களும் வந்து படிச்சாச்சு!

எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது!
மிக்க நன்றி, ஜெயஸ்ரீ!!

VSK Friday, December 08, 2006 9:25:00 AM  

ஈழ நண்பர்கள் வந்து நல்ல பல தகவல்களைச் சொல்வது மிக அருமையாக இருக்கிறது!

வேடுவர் கூட்டம் இன்றைக்கும் வரிசைகள் கொண்டு வந்து வழிபட்ட பின்னரே, விழாக்காலங்களில் பூஜைகள் தொடங்கும் எனப் படித்தேன் ஓரிடத்தில்!

அது பற்றி மேல்தகவல் சொல்ல முடியுமா, திரு. யோஹன் -பாரிஸ்?

நன்றி.

ஜெயஸ்ரீ Friday, December 08, 2006 9:30:00 AM  

//அட! நீங்களும் வந்து படிச்சாச்சு! //
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க !


உங்கள் எல்லா திருப்புகழ் பதிவுகளையும் பல முறை படித்திருக்கிறேன். படித்துவிட்டு இவ்வளவு அழகாக நீங்கள் சொன்ன பிறகு நான் வேறென்ன சொல்ல , என்று தோன்றுவதால் நானும் அருணகிரியார் போல "சும்மா இரு சொல்லற" என்று இருந்துவிடுகிறேன். ))

VSK Friday, December 08, 2006 9:34:00 AM  

இன்றைய நிலையில் நீங்கள் செய்வதுதான் சரியெனப் படுகிறது!
:))

நீங்கள் "சும்மா இருக்கும்" அநுபூதி நிலையையும் இனி நான் புரிந்து கொள்கிறேன், ஜெயஸ்ரீ!! !

மீண்டும் நன்றி!!

G.Ragavan Saturday, December 09, 2006 5:21:00 AM  

// ஜெயஸ்ரீ said...
இவ்வளவு அழகாக நீங்கள் சொன்ன பிறகு நான் வேறென்ன சொல்ல , என்று தோன்றுவதால் நானும் அருணகிரியார் போல "சும்மா இரு சொல்லற" என்று இருந்துவிடுகிறேன். ))//

என்ன ஜெயஸ்ரீ இது! சும்மா இரு சொல்லறச் சொல்லும் சொல்அறந்தனைப் புகழச் சொல்லறச் சும்மா இரலாமோ!

VSK Tuesday, December 19, 2006 8:00:00 PM  

இவ்வளவு நேரம் 'சும்மா இருந்துவிட்டு" இப்போது மயிலார் வந்து உபதேசம் செய்கிறார் பார்த்தீர்களா, ஜெயஸ்ரீ!!

:))

வல்லிசிம்ஹன் Tuesday, December 19, 2006 8:48:00 PM  

நீங்கள் ஒரு பதிவு இட,அதைப் பற்றிப் பின்னூட்டங்கள் அழகு தமிழில் ஆறாக,
இறங்க
அத்தனையும் முத்துக்கள்.
முருகனும் தமிழும் இங்கே கண்டதால் என் செவ்வாய்க் கிழமை நன்றே ஆனது.
உங்கள் அனைவருக்கும் நன்றி.

VSK Tuesday, December 19, 2006 9:17:00 PM  

திருவெம்பாவை தினம் தொடர்ந்து இட எண்ணியிருப்பதால், அருணையாரைக் கொஞ்ச நாள் பதிவிடாமல் இருக்கலாம் என் எண்னியிருந்தேன்.

இந்தப் பாடலை மீண்டும் நீங்கள் புரட்டி,
இன்று கொண்டுவந்து மீண்டும் ஒருமுறை இதனை ரசிக்க வைத்ததற்கு, நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், வல்லியம்மா!

இது போல மற்ற பாடல்களையும் அவ்வப்போது புரட்டி இந்த ஒரு மாதம் எனக்கு உதவுங்களேன்!

மற்றவரும் துணை வரலாம்!!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP