Thursday, December 15, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- – 38
37.

'ஒரு கூட்டத்துல ஒர்த்தனா இருக்கணும்னா, மொதல்ல அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியணும். அது இல்லேன்னா எந்தப் பிரயோசனமும் இல்லை' என உரக்கக் கூறியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினான் மயிலை மன்னார்.'இப்ப என்ன ஆயிடுத்துன்னு நீ இந்தக் கூப்பாடு போடறே?' என உரிமையுடன் அதட்டினார் சாம்பு சாஸ்திரிகள்.இந்தக் கோவாலுப் பயலைத்தான் சொல்றேன். நம்ம கூட்டத்துலதான் இருந்தான். தாயா புள்ளையாப் பள[ழ]கினோம். இப்ப இன்னாடான்னா, தெனாவெட்டாப் பேசறான். கையுல நாலு காசு பார்த்துட்டான்னா, அதுக்காவ மரியாதையில்லாமப் பேசறதா இன்னா? அகங்காரம் தொலைஞ்சாத்தான் உருப்புடுவான். அதான் ரெண்டு தட்டு தட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பாட்டு கூட அத்தத்தான் சொல்லப் போவுது. என்றான் மன்னார்.


பதிலொன்றும் சொல்லாமல் பாட்டைப் படித்தேன்.

கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியோ டுமகந் தையையே


கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே


" மனனே! கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்!"

'மனசைப் பாத்து ஒரு கோரிக்கை வைக்கறாரு.


இதுவரைக்கும் நீ இன்னான்னாமோல்லாம் பண்ணிட்டே! அதுனால ஒனக்கும் எனக்கும் படா பேஜாராகித்தான் போயிருக்கு. உருப்படியா ஒண்ணும் நடக்கலை. தொந்தரவு மேலத் தொந்தரவா வந்து இப்பிடி சிரிப்பா சிரிக்கறோம். நீ பண்ணின காரியத்தால,.... சரி, சரி... நானுந்தான் சேர்ந்து செஞ்சேன்....இல்லேங்கலை.... நாம பண்னின காரியத்தால, நமக்குன்னு சொல்லிக்க ஒரு நாலு பேரு கூட இல்லை இப்ப!


நான் ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேக்கறியா? இனிமேங்காட்டிக்கும், நமக்குன்னு நல்லவங்க கூட்டம் வேணும். அதுக்கு நாம போயி முருகனோட அடியாருங்க கூட்டத்துல இருக்கறவங்க காலடியுல விள[ழ]ணும்.

ஆரு இந்த முருகன்னு கேக்கறியா?


அது மாயக் குகை, மந்திர மலை, கொஞ்சம் பாத்து கவனமாப் போங்கப்பான்னு, படிச்சு, படிச்சு சொன்னவருதான் இந்த முருகன்.


ஆருக்கு சொன்னாரா?


சூரனோட சண்டைக்குப் போகங்காட்டி, அவனோட தம்பி தாரகன்னு ஒரு ராட்சசன். ஒரு பெரிய மலையாத் தன்னை மாத்திக்கினு, அதுக்குள்ளாற போறவங்களைல்லாம், மனசு மயங்கப் பண்ணி, மயக்கம் போட வைச்சிருவான்.


அவனைக் கொல்றேன் பேர்வளி[ழி]ன்னு வீரவாகுத் தேவரு கெளம்பறாரு. அவரு பின்னாடியே இந்த பூதங்கல்லாம் கூட கும்மாளம் போட்டுக்கினு பொறப்பதுங்க! அப்பத்தான், முருகன் தேவரைப் பார்த்து சொல்றாரு,' கெவனமாப் போங்கப்பா'ன்னு.


அத்தெல்லாம் நான் பார்த்துகறேன்னு சொல்லிட்டு, அல்லாரோடியும் போயி, மலைக்குள்ள மாட்டிக்கினு, இப்ப அல்லாரும் மயங்கிக் கெடக்கறாங்க!


அல்லாம் தெரிஞ்ச கந்தன், சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கினே, தன்னோட வேலை எடுத்து வுடறாரு. அது நேராப் போயி, அந்த கிரவுஞ்ச மலையோட வாயைக் கிளி[ழி]ச்சுக்கினு, அந்த மலையையே சுக்கு நூறாக்கிருது.

தம் பேச்சைக் கேக்கலைன்னாலும், தன்னோட ஆளுங்கன்றதால, கருணை பண்ணின முருகனோட அடியாருங்களுக்கு அத்தினிப் பெருமை க்கீது!


இப்ப நாம இன்னா பண்றோம்னா, நேரா அவங்களோட காலுல போயி விளணும். விளுந்து, என்னியயும் உங்க கூட்டத்துல ஒரு வேலைக்காரனாவவாது சேத்துக்கோங்க சாமிங்களான்னு கெஞ்சிக் கதறணும்.


இப்ப இன்னாத்துக்கு அத்தப் போயி ஒங்கையுல வந்து கேக்கறேன்னு பாக்கிறியா?


நீ மனசு வைச்சாத்தான் அந்தக் காரியமே நடக்கும்! நீதானே என்னோட மனசு? அதுனால நீதான் ஒதவி பண்ணணும்.'னு மனசுக் கையுல போயிக் கெஞ்சறாரு.

" பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே"

[பொறையாம் அறிவால் அடியோடும் அகந்தையையே அரிவாய்]

'இந்த மனசைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்காரு அருணகிரியாரு! இன்னாதான் கெஞ்சினாலும், திமிரு நெறைய க்கீற இந்த மனசு அத்தயெல்லாம் கேக்காதுன்னும் தெரியும்! அதுக்காவ, ஒரு ஐடியா குடுக்கறாரு மனசுக்கு!


இது கஸ்டந்தான்; ஒன்னால அவ்வளோ சுளுவா இந்த அகங்காரத்தயெல்லாம் விட்டுத் தொலைச்சிட்டு அடியாருங்க காலுல போயி விள[ழ]றது முடியாதுன்னு எனக்குத் தெரியும்.


அதுனால, நீ இன்னா பண்ணணும்னா, ஆண்டவன் ஒனக்குக் கொடுத்த புத்தியை கொஞ்சம் 'யூஸ்' பண்ணணும். அதுலியும், கன்னா பின்னான்னு திரியுற அறிவைப் பத்தி நான் சொல்லலை. பொறுமையா இருக்கணும்னா அதுக்கு அறிவு ரொம்பவே வோணும். 'தாட்-பூட்'டுன்னு எகிர்றதுக்கு அறிவே தாவ[தேவை]யில்ல. அத்த ஆர் வோணும்னாலௌம் செஞ்சிறலாம். ஆனாக்காண்டிக்கு, பொறுமையா க்கீறதுக்குத்தான் புத்தி அவசியம்.


இந்தப் பொறுமை வரணும்னா, அதுக்கு மொதல்ல நீ ஒண்ணை கண்டிப்பாப் பண்ணியே தீரணும்!


ஒனக்குள்ள [மனசுக்குள்ள] ஒளிஞ்சுக்கினு க்கீதே இந்த ஆணவம்,.. அகந்தை,... அகங்காரம்,... அத்த சுத்தமா, வெட்டிச் சாய்ச்சிறணும். அத்த வெட்றதுன்றது அவ்ளோ 'ஈஸி'யான சமாச்சாரம் இல்லை! அங்கதான் நீ பொறுமைன்ற அறிவை வைச்சு, ஆணவத்தை வெட்டணும்... அரிஞ்சு தள்ளணும்.


அதும் மட்டும் நீ பண்ணிட்டியானா, அப்பாலிக்கா, ஒனக்கே அல்லாமும் புரிஞ்சிரும். அப்பத்தான், நாம ரெண்டு பேருமாப் போயி, அவங்க பாதத்துல சரணடைய முடியும்'னு சொல்லிக் குடுக்கறாரு. போன பாட்டுல அடக்கமா இருக்கணும்னு சொன்னவரு, அதுக்கு மொதல்ல ஆணவத்தை வெட்டணும்னு இந்தப் பாட்டுல சொல்லிக் குடுக்கறாரு.


இப்பப் புரியுதா? நான் இன்னாத்துக்காவ அப்பிடிப் பேசினேன்னு' என என்னைப் பார்த்தான்.


பொறுமையைத் தரும் அறிவைத் தேட 'ஓம் சரவண பவ' என்னும் திருமந்திரத்தை நானும் சொல்லத் தொடங்கினேன்!


முருகனருள் முன்னிற்கும்!

[தவறுதலாக போன வாரம் 37-ம் பாடலை இடாமல், 38-ஐ இட்டுவிட்டேன். அருள்கூர்ந்து இந்தப் பதிவைப் படிக்கவும். முமு!]

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Thursday, December 22, 2011 4:17:00 AM  

"பொறுமையைத் தரும் அறிவைத் தேட 'ஓம் சரவண பவ' என்னும் திருமந்திரத்தை நானும் சொல்லத் தொடங்கினேன்!"

ditto

VSK Thursday, December 22, 2011 7:37:00 AM  

பொறுமையா, விடாம சொல்லுங்க! நேரிலே வருவான். அருள்வான்! முமு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP