Friday, January 21, 2011

"கந்தர் அநுபூதி" -- 2

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 2

'ம்ம். புள்ளையாரைக் கும்புட்டுக்கிட்டாச்சு! மேல அடுத்த பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

"நூல்"

1.
ஆடும் பரிவே லணிசே வலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானைசகோ தரனே.

[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.]

இந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே மனசுல வைச்சுக்கோ! ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம்! அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன்! சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு
ஒண்ணா வெளக்கம் சொல்லுவேன்! சரியா! நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு!' என ஒரு பெரிய பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்!

மொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு! ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை! நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு! அப்பிடியே தான் சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு!

ஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு!

ஆடும் பரி, வேல், அணி சேவல்னு!

ஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை, வேலு, அளகான ஒரு சேவலு!
முருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே!

அதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா?
குதிரைன்னா இன்னா?
சவாரி பண்ற ஒரு வாகனம்!
ஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும் ஒவ்வொரு நெனைப்பு வரும்!
ஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.
அதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்!

ஆனா, முருகனுக்கு எது வாகனம்?.... மயிலு!
சும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு!
மெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது!
ஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு? .... முருகன்!
அவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்!

அது மட்டுமில்ல!
'இங்கே போயி அவனை அடிக்கணுமா? அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா? அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம்! அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு! அது இன்னா தெரியுமா?

ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும்! அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு "இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு போவணும்"னு காலடியுல காத்துக்கினு க்கீது!
அது ஒரு பக்கத்துல!

அப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு!
அளகான சேவலாம்!
ஆரு அது?
ஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்!
இப்ப இன்னா பண்றான்?
அடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்!

இன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது! அதுவும் இன்னா சொல்லிக்கினு?
'வாங்கப்பா! வாங்க! அல்லாரும் வாங்க! வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது!
அது இந்தாப் பக்கமா!

நடுவுல 'வேலு'!
அதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு! இதுக்கு அணிசேவல்னு சொன்னாரு!
ஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை!
ஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு!

வேல்னா இன்னா?
ஞானம்!
ஆரு குடுக்கறது அத்த?
அவந்தான் !... அந்த கந்தந்தான்!

உண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது?
உண்மை உணமைதான்!... மெய்யி மெய்யிதான்! ... ஞானம் ஞானந்தான்!
அந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது!
அதான் ஒண்ணுமே சொல்லாம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு!
ஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு!

இந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு!

அப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு!
இன்னான்னு சொல்லி?

நீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...
அதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....
அவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி!...
கெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு சண்டை போட்டானே கஜமுகாசுரன்! அந்தக் கதைதான்!

ஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா? தனி ஆனை! அதாவுது ஸ்பெசல் ஆனை!
இவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது!
தனின்னா இன்னா?

இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!
இவுரு ரொம்பவே விசேசமானவரு! அதுனாலியும் இவுரு தனி!
அல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெனைப்பாரு....
அப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி!
அதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை!

அவரோட தம்பிதான் நம்ம கந்தன்!
இவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு!.... தேடி வந்து ஒதவுறதுக்காவ!
மறுபக்கம் சேவலு!..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி!
நடுவுல ஞானம்!......
இவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது?!
அதான் இந்த மொதப் பாட்டு!

ரொம்ப இளுத்துட்டேன்ல!?
மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்! இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா?' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்!
'நீ சொல்லு மன்னார்!' என உற்சாகப் படுத்தினேன் நான்!
****************
[தொடரும்]

13 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, January 21, 2011 10:19:00 AM  

//மொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன்!//

மன்னாரு! நீ உணர்ச்சி வசப்பட்டா தான்ப்பா நல்லா இருக்கு! ப்ளீஸ், உணர்ச்சி வசப்படு! முருகன் வசப்படு! :)

VSK Friday, January 21, 2011 10:22:00 AM  

ம்ம்ம்ம்...மொதல்ல பாராட்டுப் பின்னூட்டம்! மிச்சதும் வரட்டும்!:))

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, January 21, 2011 10:25:00 AM  

நோ, நோ...
இனிமே ஒத்தைப் பின்னூட்டம், பாராட்டுப் பின்னூட்டம் தான்! நோ கேள்வீஸ் & சுவை கேள்வீஸ்! :)

VSK Friday, January 21, 2011 10:43:00 AM  

ஏனிந்த விபரீத முடிவு? அப்போ, அது ரவியாவே இருக்காதே! :))

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, January 21, 2011 11:15:00 AM  

ஆடும் பரி
வேல்
அணி சேவல்
- அழகான முருக ஓவியத்துடன் தொடங்குது!

ஆடும் பரி = குதிரை ஆடாது! ஓடும்! பொய்க்கால் குதிரை வேணும்-ன்னா ஆடும்! :) அதனால் இங்கே ஆடும்பரி என்று அருணகிரி சொல்வது மயிலே! மயில் ஆடும்!

ஆனா மயிலைப் போய் குதிரை-ன்னு சொல்லலாமா? என்ன தான் வாகனம்-ன்னாலும், மயிலை எப்படிக் குதிரை-ன்னு சொல்லலாம்? மயிலு கோச்சிக்காதா? :)

இதே போல் பல இடங்களில் மயிலை, குதிரை-ன்னு சொல்லுவாரு அருணகிரி! :) தனி மயிலேறும் ராவுத்தனே, உக்ர துரகம்-ன்னு பல இடங்களில் இப்படிக் குறிப்பு வரும்!

நாம கன்னுக்குட்டி, என் பூனைக்குட்டி-ன்னு காதலியைக் கொஞ்சறோம்-ல்ல? அதுக்காக காதலி, பூனை ஆயிடுவாளா? அதே தான்! :)

நல்லா பறந்து (தாவி), முகக் குறிப்புக்கு ஏற்றாற் போல் உதவும் மயிலை, என் குதிரையே என்று கொஞ்சுகிறார்! குதிரை தான் அந்த நாள் வீரனின் இலட்சணமாக இருந்தது அல்லவா! அதனால்!
-------------------

அணி சேவல் = அழகான சேவல்!
ஆனா, இன்னொரு பொருளும் உண்டு! அணி சேவல்-ன்னா முருகன் அணிந்துள்ள சேவல்! சேவலை எப்படி அணிய முடியும்? கொத்திறாதா? :)

அணி சேவல் = சேவலைக் கொடியாய்த் தோளில் சாய்த்து "அணி"ந்துள்ளான்!
ஆடும் பரி = முருகன், தான் ஆடும் பரியாய், மயிலை வைத்துள்ளான்!

* ஒன்று மேலே!
* இன்னொன்று கீழே!

மேலே முருகனைப் பார்க்கும் போது சேவல் தெரிகிறது = வெற்றிக் கொடியாய்! பார்த்தாயா, உன்னை வென்று விட்டேன் என்று சொல்கிறான்!
கீழே திருவடிகளைப் பார்க்கும் போது, மயில் தெரிகிறது! = நீ கீழ்மை செய்தாலும், உணர்ந்தால் திருவடிகள் என்பதைப் போல!

நடுவில் வேல்!
அதுக்கு அடைமொழி ஒன்னும் இல்லையா-ன்னா இருக்கு...
ஆடும் பரி-அணி சேவல் = இது ரெண்டும் தான் வேலுக்கு அணிகலன்கள்! ஏன்-னா அந்த ஆடும் பரியையும், அணி சேவலையும் இரு கூறாய் உருவாக்கியதே அந்த வேல் தானே!

என்னை அவனிடத்தில் கொண்டு விடு வேலே!
என்னை அவனிடத்தில் கொண்டு சேர்த்து விடு!

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, January 21, 2011 11:26:00 AM  

//ஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு! அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும்!//

ஹா ஹா ஹா
கோவி கண்ணன் இதை வச்சித் தான், ஓம் என்பது சைவ சமயத்துக்கே உரிய தத்துவம்-ன்னு சொன்னாரு! மயில் தோகை விரிக்கிறது தான் தரவாம்! :))
தமிழ்நாட்டு மயிலு தோகை விரிச்சா அப்போ ஓம்! நாக்பூர் இந்தி மயிலு தோகை விரிச்சா, அப்போ "ॐ" வரலையே! :))

ஒரு நயத்துக்குச் சொல்லுறது, எப்படியெல்லாம் வேலை பாக்குது-ப்பா! :))

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, January 21, 2011 11:34:00 AM  

//இவுருக்கு சோடி கெடையாது! அதும்னால தனி!//

தனி யானை = தனிமை கொண்ட யானை/ ஜோடி இல்லாத யானை-ன்னு பொருள் வராது! இதே போல் தனி மயில் ஏறும் ராவுத்தனே-ன்னும் சொல்வாரு!

தனித்தன்மை கொண்ட யானை-ன்னு சொல்லுறது ஓக்கே!

ஆனா, தனி யானை = வி+நாயகன்
தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாதவன் என்ற பொருளில், அழகான தமிழாக்கம் செய்துள்ளார் அருணகிரி!

இக்குற மகளை
அச்சிறு முருகனிடம்
இக்கணம் மணம் அருள் பெருமானே!

Lalitha Mittal Sunday, January 23, 2011 4:51:00 AM  

romba toppaa keethu mannaaru!
thamilula eyutha nammaala aavarathulla ;mannaappu kettukine; adjust pannikko mannaaru!

Lalitha Mittal Sunday, January 23, 2011 5:14:00 AM  

romba toppaa keethu mannaaru!
thamilula elutha varle;mannaappu kettukiren;konjam adjust pannikko mannaru ![munnaadi oruthaatti eyuthinenaa.?athule innaa mishtakennu therle ;engiyo poodchu.]

VSK Monday, January 24, 2011 11:07:00 AM  

//மேலே முருகனைப் பார்க்கும் போது சேவல் தெரிகிறது = வெற்றிக் கொடியாய்! பார்த்தாயா, உன்னை வென்று விட்டேன் என்று சொல்கிறான்!
கீழே திருவடிகளைப் பார்க்கும் போது, மயில் தெரிகிறது! = நீ கீழ்மை செய்தாலும், உணர்ந்தால் திருவடிகள் என்பதைப் போல!

நடுவில் வேல்!
அதுக்கு அடைமொழி ஒன்னும் இல்லையா-ன்னா இருக்கு...
ஆடும் பரி-அணி சேவல் = இது ரெண்டும் தான் வேலுக்கு அணிகலன்கள்! ஏன்-னா அந்த ஆடும் பரியையும், அணி சேவலையும் இரு கூறாய் உருவாக்கியதே அந்த வேல் தானே!

என்னை அவனிடத்தில் கொண்டு விடு வேலே! //

நல்ல விளக்கங்கள்! இதான் ரவி! :)))

VSK Monday, January 24, 2011 11:09:00 AM  

தனியான்+ஐ எனப் பிரித்திருப்பதும் சரியே!

VSK Monday, January 24, 2011 11:11:00 AM  

//தமிழ்நாட்டு மயிலு தோகை விரிச்சா அப்போ ஓம்! நாக்பூர் இந்தி மயிலு தோகை விரிச்சா, அப்போ "ॐ" வரலையே! :))//

தனியான் என்னும் நயம் போலத்தான் இதுவும் ரவி! என்ன பண்றது. உங்களைப் போல பலமொழி படித்தவன் இல்லை எங்க மன்னார்! அவனுக்குத் தெரிந்த பாமரத்தமிழில், அவனைப் போன்ற மற்றவர்க்குச் சொன்னதுதான் இது! :))

VSK Monday, January 24, 2011 11:12:00 AM  

//romba toppaa keethu mannaaru!
thamilula eyutha nammaala aavarathulla ;mannaappu kettukine; adjust pannikko mannaaru!//


ரொம்ப நன்றிங்க!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP