Sunday, January 16, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!- 1

சென்ற ஆண்டில் ஐந்தே ஐந்து பதிவுகள் மட்டுமே! எழுதவில்லையா என நண்பர்களிடமிருந்து கேள்விகள்! எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். வேலைப் பளுவின் காரணமாக அதையெல்லாம் இங்கே பதிய நேரமில்லை!
அதனால்.......!!!
இந்த ஆண்டில் அநேகமாக தினம் ஒரு பதிவு வரக்கூடும்!
முதன் முதலாக, எனது அருமை நண்பன் 'மயிலை மன்னார்' எனக்குச் சொல்லிய 'கந்தர் அநுபூதி' விளக்கத்துடன் இந்த ஆண்டைத் துவக்குகிறேன்!அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்!
**************

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்!

எனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது "நண்பன்"
மயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த
இழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்!

[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு! என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது! மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்
இருக்கிறது! பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான்! நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்!] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை! நாயரின் மசால் வடையும் டீயும்
உலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன்! சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை! இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்! வணக்கம்.]

"கந்தர் அநுபூதி" -- 1

வழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது!

'மன்னாரைப் பார்த்தியா?' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.

'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்?' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.

'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.

சற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு!' என்றான்.

'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார்! என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.

'ம்ம்... இன்னா சமாச்சாரம்? சொல்லு!' என அமர்த்தலாகக் கேட்டான்.

ஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.

'இவ்ளோதானே! அல்லாம் நல்லபடியா நடக்கும்! கவலிய வுடு! எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.

அதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.

'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.

இதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும்! அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன்! சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்
இருக்குமே! அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி!' என்றான் மயிலை மன்னார்.

படித்தேன்!

திருச்செந்திலாதிபன் துணை
கந்தரநுபூதி - 1

'காப்பு'

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே
பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.

[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]

"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே? ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு! நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே! அவனும் இன்னா பண்றான்?
'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்?'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு!

அந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை! இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.

பலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை!

அப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா?
நாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும்! அதுனால, அவரோட காலடியுல போயி
இத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.

இப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே? ஒரு கொறைவும் வராது" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.

'கணபதி எல்லாம் தருவான்!' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்!
************
[தொடரும்]
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
****************

17 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, January 17, 2011 12:51:00 AM  

முருகா வருக!
நீயே என் அனுபூதி!
அதனால் உன்னையே தருக!

இனிய துவக்கம் SK!
தொடருங்கள், என் நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்துருக...

VSK Tuesday, January 18, 2011 7:13:00 AM  

இனிய வருகை ரவி!

வாரம் இரூமுறையாக இதனை இட எண்ணம்.

முருகனருள் முன்னிற்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, January 18, 2011 10:35:00 AM  

இந்த நெஞ்சக் கன கல்லுக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் SK ஐயா!

நெஞ்சக் கல் என்று சொல்லி இருக்கலாம்! அதென்ன கன+கல்? கல்லென்றாலே Hard-ஆ இருக்கும்! இதுல கனமாவும் வேற இருக்கு என்கிறாரே அருணகிரி! இதன் நயம் உரையுங்களேன்!

VSK Tuesday, January 18, 2011 1:57:00 PM  

//நெஞ்சக் கல் என்று சொல்லி இருக்கலாம்! அதென்ன கன+கல்? கல்லென்றாலே Hard-ஆ இருக்கும்! இதுல கனமாவும் வேற இருக்கு என்கிறாரே அருணகிரி! இதன் நயம் உரையுங்களேன்!//


'கல்லுன்னாலே கனந்தான். ஆனாக்காண்டிக்கு, நம்ம மனசு க்கீதே,.. அது எப்பிடி வேணுன்னாலும் அர்த்தம் பண்ணிக்கும். கல்லுன்னா, அது செங்கல்லா, கருங்கல்லா, இல்லை பாறாங்கல்லான்னுல்லாம் கேட்டு ரவுசு பண்ணும்.

முருகனைப் பத்தி நெனைச்சாலே மனசு கொளை[ழை]ஞ்சு போயிறும்னா, அப்பாலிக்கு, அவனை நெனைக்கலைன்னா இன்னாவா ஆவும்ன்ற? கல்லாத்தான் போயிறும். அப்பிடி அவனைப் பத்தி நெனைக்காம நெனைக்காம ரொம்பவே இறுகிப் போயி ஒரு பெரிய பாரமான கல்லா ஆயிப் போயிருச்சாம் மனசு. அதான் இந்த நெஞ்சக் கன கல்லு! ஆனா, அந்தக் கனமான கல்லு கூட முருகான்னு சொன்னதுமே அப்பிடியே பாகாக் கொளை[ழை]ஞ்சு உருகிரும்ன்றதத்தான் அருணகிரியாரு இப்பிடி சொல்லிருக்காருன்னு நெனைக்கறேன்' என்கிறான் மயிலை மன்னார்!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, January 19, 2011 2:28:00 PM  

//'கல்லுன்னாலே கனந்தான். ஆனாக்காண்டிக்கு, நம்ம மனசு க்கீதே,.. அது எப்பிடி வேணுன்னாலும் அர்த்தம் பண்ணிக்கும். கல்லுன்னா, அது செங்கல்லா, கருங்கல்லா, இல்லை பாறாங்கல்லான்னுல்லாம் கேட்டு ரவுசு பண்ணும்//

மன்னாரு, நல்லா கீறீயா-ப்பா?
மனசு-ன்னாலே ரவுசு தானே! :)
அதுனால அத்தையெல்லாம் தப்பா எடுத்துக்கக் கூடாது!

நீனே யோசிச்சிப் பாரு! கல்லு என்னைக்காச்சும் உருகுமா? உன்னால உருக்கிக் காட்ட முடியுமா மன்னாரு? தங்கம் உருக்கலாம், வெள்ளி உருக்கலாம், ஆனா கல்லு? பொடிப்பொடியா போகுமே தவிர, தூளாப் போகுமே தவிர உருகுமா?

அப்பறம் என்னாதுக்கு இப்படி அருணகிரி தப்பு தப்பாப் பாடறாரு? அவரு அப்படியெல்லாம் பாட மாட்டாரே! நெஞ்சக் கன கல்லு - நெகிழ்ந்து உருக!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, January 19, 2011 2:39:00 PM  

அருணகிரி அனுபூதி ஆரம்பிக்கும் முன், கொஞ்சம் யோசிக்கறாரு, இது வரை தான் வாழ்ந்து வந்த வாழ்வை! அதான் "நெஞ்சக் கன கல்" என்கிறார்!

அம்மா, அக்கா, மனையாள் என்று தனக்காகவே வாழ்ந்த மூன்று பெண்மணிகளின் அன்பைக் கண்ட பிறகும், அவர் மனசு "வேறு ஒரு சுகத்தையே" நாடியது!

அதுவும் உண்மையான சுகம் கொடுக்கக் கூடியதா-ன்னா இல்லை! பணம் கையில் இருக்கும் வரை சுகம் என்பதான பரத்தை "அன்பு" மட்டுமே அது!

இப்படித் தனக்காகவே வாழ்ந்த உள்ளங்களைக் கண்ட பிறகும், தன் மனம் கரையாமல் கெட்டியாக இருந்ததால் = "கல்" என்கிறார்!

சரி, கல்லா இருந்தாக் கூடப் பரவாயில்லை! அங்க இங்க நகரும், நாமளும் கொஞ்சம் நகர்த்தி வைக்கலாம்! என்னைக்காச்சும் மனசு மாறும்! ஆனால் இதுவோ வெறுங் கல்லு இல்லை! = "கன-கல்"!

நகரவே நகராது! இருந்த இடத்திலேயே, அதையே பிடிச்சிக்கிட்டு உழலும்! தானும் நகராது! மத்தவங்களும் அதை எடுத்து அந்தாண்ட வைக்க முடியாது! அந்த அளவுக்கு அதி பாரமுள்ள கல்லு!

அதே போல்...
பரத்தையர் விரட்டிய போது, அடிப் பாவிகளா, நேற்று வரை கொஞ்சினீர்களே-ன்னு அப்போ கூடச் சுயப் புத்தி வரலை! அப்பவும் அங்கேயே உழன்றது! அக்கா அன்போட எடுத்துச் சொல்லியும் புத்தி வரலை!

இப்படித் தானும் நகராது, மத்தவங்களும் நகர்த்த முடியாத கல், ஆதலாலே "கன கல்" என்றார் அருணகிரி! = நெஞ்சக் கன கல்!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, January 19, 2011 2:49:00 PM  

அப்பேர்ப்பட்ட கல்லை யாரால் உருட்டி விட முடியும்? = தஞ்சத்து அருள் சண்முகனால் முடியும்!

ஆனால் அவன் உருட்டி மட்டும் விடவில்லை! உருகவும் வைத்தான்!

தங்கம், வெள்ளியை இருக்கலாம்! கல்லு உருகாதே! உடையும், மண்ணாகும்! ஆனால் உருக்குவது எப்படி?

சாதாரண மனிதனால் முடியுமா?
விஞ்ஞானியால் வேணும்ன்னா முடியும்! PV=nRT ன்னு Theorem போட்டு, சோதனைச் சாலையில் அதிக வெப்ப/அழுத்தம் எல்லாம் கொடுத்து, கல்லை(Silica), Silica Gel ஆக மாற்ற முடியும்! அது போல் மாற்ற வல்ல பெரும் விஞ்ஞானி, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஞானி-ஞானஸ்கந்தனால் முடியும்!

அதனால் தான் நெஞ்சக் கன+கல், நெகிழ்ந்து உருக என்று துவக்கத்திலேயே பாடுகிறார், அருணகிரியார்! அப்படியான கனகல்லு உருகத் துவங்கியதும், மற்ற அனுபூதிப் பாடல்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் வருகின்றன!

கோவி.கண்ணன் Wednesday, January 19, 2011 8:38:00 PM  

//'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.
'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்!
ஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.//

அனுபூதி விளக்கம் நன்று. இரும்பூது போல இருக்கு :)

VSK Thursday, January 20, 2011 7:57:00 AM  

//கல்லு? பொடிப்பொடியா போகுமே தவிர, தூளாப் போகுமே தவிர உருகுமா?

அப்பறம் என்னாதுக்கு இப்படி அருணகிரி தப்பு தப்பாப் பாடறாரு? அவரு அப்படியெல்லாம் பாட மாட்டாரே! //

இதைக் கொண்டுபோய் மன்னாரிடம் காட்டியபோது,
'இதுக்கெல்லாமா எங்கிட்ட வந்திருவே? போயி தேடு' எனத் துரத்திவிட்டான்!
தேடியதில் கிடைத்தது!:)) கல்லும் உருகும் ரவி!:))

What is the melting point of stone?
In: Earth Sciences
Answer
Most magmas (melted rock) are in a range of temperature between 700C-1300C. Because rocks are made of combinations of different minerals, each with its own melting point, the composition of the rock will affect the melting point.

VSK Thursday, January 20, 2011 7:59:00 AM  

//அனுபூதி விளக்கம் நன்று. இரும்பூது போல இருக்கு :)//


"அதென்னமோ தெரியலை! ஆனாக்காண்டிக்கு, கோவியார் வந்ததில் எனக்கு இறும்பூதுதான்' எனச் சிரிக்கிறான் மயிலை மன்னார்!

VSK Thursday, January 20, 2011 8:02:00 AM  

//இப்படித் தானும் நகராது, மத்தவங்களும் நகர்த்த முடியாத கல், ஆதலாலே "கன கல்" என்றார் அருணகிரி! = நெஞ்சக் கன கல்!//


கன - கல்லின் விளக்கம் நல்லாருக்கு. ஆனாக்காண்டிக்கு, இந்தப் பாட்டுல்லாம் அருணையாரு தன்னை வைச்சு மத்தவங்களுக்காகப் பாடின பாட்டுன்னு தான் நான் நெனைக்கறேன். அனுபூதி கெடைச்சதுக்கு அப்பறமாப் பாடின பாட்டுங்க இதுன்றத மனசுல வைச்சுக்கோ' என்கிறான் மன்னார்.

கல்லின் விளக்கம் சரிதான். ஆனால், அதுவும் உருகும் ஐயா!:))

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, January 20, 2011 11:50:00 AM  

//கல்லின் விளக்கம் சரிதான். ஆனால், அதுவும் உருகும் ஐயா!:))//

மன்னாரு!
அதையே தான் நானும் சொன்னேன்! ஆனால் அந்தப் பின்னூட்டத்தை மட்டும் SK ஐயா இன்னும் ரிலீஸ் பண்ண மாட்டேங்கறாரு! நான் என்ன செய்ய? :(

கல்லும் உருகும்!
ஆனால் நம்மால் உருக்க முடியுமா?
700C-1300Cஐ நம்மால் உருவாக்கி உருக்க முடியுமா?
அதுக்கு விஞ்ஞானி தேவை! முருகனே அந்த மண்ணுக்கும் விண்ணுக்கும் ஞானியான விஞ்ஞானி! அவன் உருக்கினால் உருகும்! கன கல்லும் நெகிழ்ந்து உருகும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, January 20, 2011 12:00:00 PM  

//ஆனாக்காண்டிக்கு, இந்தப் பாட்டுல்லாம் அருணையாரு தன்னை வைச்சு மத்தவங்களுக்காகப் பாடின பாட்டுன்னு தான் நான் நெனைக்கறேன்//

:)
அருணகிரி போன்றவர்கள் மனிதர்களாய் வாழ்ந்து, ஞானம் கண்ட பெருந்தகையாளர்கள்!

அவர்கள் செய்த பிழைகளை அவர்களே ஒளிக்காமல் சொல்லி, அந்த அனுபவத்தையும் நமக்கு உணர்த்தி வைப்பார்கள்!

அவர்களுக்குப் புனிதம் ஏற்ற வேண்டுமே என்று...நாம் தான், இதெல்லாம் அவர் செய்யலை, நாம் செய்வதையெல்லாம் அவர் தன் மேல் ஏற்றிப் பாடுகிறார் என்று "நயவுரை" சொல்லிக் கொள்கிறோம்!

ஆனால் அருணகிரி அருணகிரியே!

அவரை ஒதுக்கி ஒரு பீடத்தில் உயர வைக்கும் போது, சாதாரண மனிதனுக்கு அருணகிரி அந்நியப்பட்டுப் போய் விடுவார்! அது கூடவே கூடாது!
பிழைகள் செய்த அருணகிரியால் முடிந்தால், பிழைகள் செய்யும் தன்னாலும் அனுபூதி பெற முடியும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேணும்! அதுவே அருணகிரி மக்களுக்கு அளிக்கும் நம்பிக்கை! முருக நம்பிக்கை!

VSK Thursday, January 20, 2011 2:46:00 PM  

//அவன் உருக்கினால் உருகும்! கன கல்லும் நெகிழ்ந்து உருகும்!//

முருகன் வர வேண்டாம்.
அவனைப் பற்றிய இந்தப் பாக்களைப் படித்தாலே அந்தக் கல்லான மனசும் குழைஞ்சு போயிரும்னு அருணையார் சொல்றாரு! :))

VSK Thursday, January 20, 2011 2:49:00 PM  

//அவர்களுக்குப் புனிதம் ஏற்ற வேண்டுமே என்று...நாம் தான், இதெல்லாம் அவர் செய்யலை, நாம் செய்வதையெல்லாம் அவர் தன் மேல் ஏற்றிப் பாடுகிறார் என்று "நயவுரை" சொல்லிக் கொள்கிறோம்!

ஆனால் அருணகிரி அருணகிரியே!

அவரை ஒதுக்கி ஒரு பீடத்தில் உயர வைக்கும் போது, சாதாரண மனிதனுக்கு அருணகிரி அந்நியப்பட்டுப் போய் விடுவார்! அது கூடவே கூடாது! //


ரொம்பவே அவசரப் படறீங்களே, ரவி!
நான் சொன்னதைக் கவனிக்கவேயில்லியே என மன்னார் வருத்தப்பட்டான்.

அவரைத் தூக்கி வைக்கலை. 'தன்னை வைச்சு மத்தவங்களுக்காக' என மன்னார் சொன்னதை நீங்க கவனிக்கவில்லையோ?

தன் அனுபவங்களை மறக்காமல், ஆனால், அதையே மற்றவருக்காகச் சொல்லிப் பாடியது அனுபூதி.

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, January 20, 2011 3:00:00 PM  

//Most magmas (melted rock) are in a range of temperature between 700C-1300C. Because rocks are made of combinations of different minerals, each with its own melting point//

சூப்பர் SK ஐயா! இதைத் தேடித் தந்தமைக்கு மிக மிக நன்றி!

ஒரேயொரு பின்னூட்டம் உங்களுக்கு வரலை-ன்னு நினைக்கிறேன்!
அதில், இதையே சொல்லி இருந்தேன்!

pv=nRT என்ற விதிகளைக் கடைப்பிடித்து, அதிக வெப்பம்/அழுத்தம் எல்லாம் கொடுத்தா, அப்போ கல்லு உருகும்!

அப்படியான அதிக வெப்பம் நம்மால் உருவாக்க முடியாது! விஞ்ஞான நிபுணனால் முடியும்! அப்படி உருவாக்கித் தருபவன் முருகப் பெருமான்! அதனால் என் நெஞ்சக் கன+கல்லும் உருகும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, January 20, 2011 3:17:00 PM  

//நான் சொன்னதைக் கவனிக்கவேயில்லியே என மன்னார் வருத்தப்பட்டான்//

ஆகா! சாரிப்பா மன்னாரு! நீ அப்படிச் சொல்ல வந்தீயா? அப்படின்னா சரி! :)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP