Wednesday, December 16, 2009

"மழையாடும் மகிழ்வு வேண்டும்!"

"மழையாடும் மகிழ்வு வேண்டும்!"


காலைநேரக் கூட்டமன்று கூடுதலாய் இருந்தது
வேலைமிக அதிகமெனப் பார்த்ததுமே புரிந்தது

வந்தமர்ந்த நோயாளிகளை ஒவ்வொருவராய்ப் பார்வையிட்டேன்
வயதான கிழவரொருவர் பரபரப்பாய் இருக்கக் கண்டேன்

அருகழைத்து என்னவென ஆதரவாய் விசாரித்தேன்
அவசரமாய்ப் போகவேண்டும் ஒன்பதுக்குள் எனச் சொன்னார்

கைக்காயத் தையல் பிரிக்கும் எளிதான வேலையென்பதால்
மருத்துவரின் அனுமதியுடன் அவர் காயம் கவனித்தேன்

'ஏதேனும் அவசரமோ? ஒன்பதுக்கு என்ன வேலை?' எனக்கேட்டேன்
'மனைவியுடன் சேர்ந்தமர்ந்து காலையுணவு உண்ணும் நேரம்' என்றாரவர்

'காத்திருக்க மாட்டாரோ? பிடிவாதம் மிகவுமோ!' எனச் சீண்டினேன்
'இல்லையில்லை! அவளிருப்பதோர் மருத்துவமனையில்' எனச் சொன்னார்

'கட்டுத்தையல் பிரித்தபடியே, 'உடம்புக்கென்ன?' எனக் கேட்டேன்
'ஆளை மறந்துபோகும் அல்ஸைமெர் நோய்' என்றார் அமைதியாக

'ஆவலை அடக்கமுடியாமல், 'உங்களை மட்டும் நினைவில் கொள்வார்தானே' என்றேன்
'இல்லையில்லை! யாரையுமே அடையாளம் தெரிவதில்லை' வருத்தமுடன் சொன்னார்

'லேசாகத் துளிர்த்த எரிச்சலை அடக்கிக் கொண்டு' 'பிறகேன் அவசரமாம்?எப்படியும்
அவருக்கு உங்களை அடையாளம் தெரியப் போவதில்லை' என்றேன் அசுவாரசியமாக

'ஆனால், எனக்கவளை நன்றாக அடையாளம் தெரியுமே' ஏறெடுத்து எனைப் பார்த்தார்
என்னிருவிழிகளிலும் குபீரெனப் பொங்கியது பெருகிவந்த கண்ணீர்வெள்ளம்!

மேனியெங்கும் சிலிர்த்துப் போச்சு! உடம்பெல்லாம் ஆடிப்போச்சு!
'காதலென்றால் இதுபோல வாய்க்கவேண்டுமெனக்கு' என்னுள்ளில் எண்ணம் தோன்றியது!

காதலென்பது காமமல்ல, கனிவாகப் பேசுவதுமல்ல
நிகழ்கின்ற அனைத்தையுமே அப்படியே ஏற்றிடும் மனப்பாங்கே காதல்

மகிழ்வான தம்பதியர் அனைவருமே எல்லாச்சுகமும் பெற்றவரில்லை
இருப்பது எதுவாயினும் அதனை மகிழ்வாகக் கொள்வாதாலேயே!

வரும்புயலைச் சமாளிக்கத் திட்டம் தீட்டுவதல்ல காதல்
பெயும்மழைநீரில் களித்தங்கு ஆடுவதே வாழ்க்கை!


நான்படித்த பாடமிதைப் பகிர்ந்திடவே இதை வடித்தேன்
வான்புகழும் வாழ்க்கையிங்கு நுமக்கமைய வாழ்த்துகிறேன்!

4 பின்னூட்டங்கள்:

மெளலி (மதுரையம்பதி) Wednesday, December 16, 2009 10:04:00 PM  

//
காதலென்பது காமமல்ல, கனிவாகப் பேசுவதுமல்ல
நிகழ்கின்ற அனைத்தையுமே அப்படியே ஏற்றிடும் மனப்பாங்கே காதல்//

அருமை டாக்டர் சார்.

VSK Wednesday, December 16, 2009 11:42:00 PM  

மிக்க நன்றி ஐயா!

Unknown Sunday, December 20, 2009 7:35:00 AM  

மிக அருமை டாக்டர்.
எல்லோருக்கும் இருப்பதை அப்படியே (அதாவது என்னை நானாகவே) ஏற்றுக் கொள்ளும் அருமையான துணை வாய்க்கப் பெறுவதுதான் இல்வாழ்க்கையில் நல்வாழ்க்கை.

VSK Sunday, December 20, 2009 10:27:00 PM  

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தங்களைச் சந்திப்பது மகிழ்வளிக்கிறது, நண்பர் சுல்தான் அவர்களே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP