"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"
"தேங்காப்பாலு... மாங்காப்பாலு!"
இந்த மாதிரி சமாச்சாரமெல்லாம் சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது என்பதால், வழக்கம் போல மன்னாரைத்தான் தொந்தரவு செய்ய வேண்டியிருந்தது! காலையில்தான், ஒரு குறளைப் பற்றிக் கேட்கப்போய், கோபமாகத் திட்டி அனுப்பியிருந்தான் என்றாலும், வேறென்ன செய்வது என அவனைத் தேடிப் போனேன்!
மாலை நேரம்! நாயர் கடை வாசலில் ஒரு ஸ்டூலின் மீது அமர்ந்துகொண்டு, ஒரு பீடியை வலித்தபடி, மாலைத் தினசரி ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தவன் முன்னே சென்று நின்றேன்!
'அடடே! வாப்பா சங்கரு! இன்னா காலையில பேசினதுக்கு கோவமா எம்மேல?' என அவன் கேட்டதும், எதையுமே மனதில் கொள்ளாத அவனது பாங்கை நினைத்து வியந்தபடியே, 'கோபம்னா இப்பத் தேடிகிட்டு வருவேனா?' எனச் சிணுங்கினேன்.
'ம்க்கும்! இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறைச்சலில்லை! சும்மா வரமாட்டியே! இன்னா சமாச்சாரம்? இப்ப ஆரு இன்னா கேட்டாக்க?' எனச் சொல்லிச் சிரித்தான்.
மௌனமாகக் கையிலிருந்த தாளை அவனிடம் நீட்டினேன்.
'அத்தெல்லாம் வேணாம்! நீயே படி அதுல இன்னா எளுதிருக்குன்னு' எனச் சொல்ல, நானும் படித்தேன்.
1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி
2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி
3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி
4. பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி.
'இதுக்கெல்லாம் அர்த்தம் வேணுமாம் என்னோட நண்பர் ஒருவருக்கு' என்றேன்.
'கொதம்பைச் சித்தர் பாட்டுல்ல இது!' என்றவன், சற்று நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு, கண்ணைத் திறந்து, என்னைப் பார்த்து,
'இதுல அந்த ரெண்டாம் பாட்டுத்தான் கொஞ்சம் கஸ்டம்! மத்ததெல்லாம், அப்பிடியே படிச்சாலே கொஞ்சம் புரிஞ்சிரும். அதுனால, மொதல்ல அதுக்குச் சொல்றேன், கேட்டுக்கோ' எனச் சொல்லத் தொடங்கினான்.
'சித்தருங்க பாசையில, ரெண்டு சமாச்சாரத்தை அமிர்தம்னு சொல்லுவாங்க! ஒண்ணு வெளியில கிடைக்கற அமிர்தம்; இன்னொண்ணு உள்ளாலியே சுரக்குமாம்!
இந்த வெளியில கிடைக்கறதுக்குப் பேரு தேங்காப்பாலு! தேங்காயில இருக்கற
கொளுப்பை எடுத்துட்டுக் கடயற பாலுக்கு இந்தப் பேரு. நம்ம வள்ளாலாரு சாமி இத்த 'புறப்புற அமிர்தம்'னு சொல்லுவாரு. இத்த மட்டுமே சாப்பிட்டுகிட்டு உசிரு வாளுவாங்க சித்தருங்கல்லாம்.
தேங்காப்பாலு கதை இதாச்சா! இப்ப மாங்காப்பாலுக்கு வருவோம்!
வாசி யோகம்னு ஒரு பயிற்சி இருக்குன்னு சித்தருங்க சொல்லி வைச்சிருக்காங்க!
மூச்சு வுடறதக் கட்டுப்படுத்தி, சுளுமுனைன்னு சொல்ற இடத்துல அதை நிறுத்தி பயிற்சி பண்றதை அப்பிடி வாசின்னு சொல்லுவாங்க! இதப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, ஒரு சரியான குருகிட்ட போய் கத்துக்கணும் நீ! அதான் ஒனக்கு ஒருத்தர் இருக்காரே! அவருக்குத் தெரியும் ஒனக்கு சொல்லணுமா, வேண்டாமா, அப்பிடி சொல்லணும்னா, அத்த எப்ப சொல்லணும்னு
அல்லாமே தெரியும் அவருக்கு! இப்ப அதில்ல இங்க பிரச்சினை!
விசயத்துக்கு வருவோம்!
இப்பிடி வாசியைக் கட்டி, தியானம் பண்ணிப் பண்ணி, அசைவே இல்லாம நிக்கற நிலை ஒருத்தனுக்கு வந்திச்சுன்னா, அப்போ, புருவத்துக்கு மத்தியில, ஒரு ஜோதி தெரிய ஆரம்பிக்குமாம். அப்ப, அவனோட உள்ளுக்குள்ள, ஒரு அமுதம் சுரக்குமாம்! அதான் இந்த மாங்காப்பாலு.!
இத்தச் சாப்பிட்டவனுக்கு சாவைப் பத்தின பயம் போயிரும்! 'மரணமில்லாப்
பெருவாழ்வு'ன்னு வள்ளலாரு சொல்றதும் இதைத்தான்! அதுக்கப்புறம், சாப்பாடு கூடத் தேவைப்படாது அவனுக்கு! அந்தத் தேங்கப்பாலு கூட அவனுக்கு இனிமே வேணாம்!
அத்தத்தான் அந்த ரெண்டாவது பாட்டுல, மாங்காப்பாலு சாப்ட்டவனுக்கு, தேங்காப்பாலு ஏதுக்கடீன்னு கொதம்பையைப் பார்த்து பாடறாரு சித்தர்! வெளங்கிச்சா?
வெளங்கலைன்னா, இதுக்கு மேல என்னால ஒண்ணும் பண்ண முடியாது! ஓடு, ஒன்னோட குருவாண்டை!' எனச் சொல்லி நிறுத்தினான்.
இப்ப ஓடிட்டா, மீதிப் பாட்டுக்கு விளக்கம் கிடைக்காதேன்னு, 'ம்ம்' எனப்
புரிந்ததுபோலத் தலையாட்டினேன்!
************
என் மனநிலையைப் புரிந்தவன்போல், மன்னார் ஒரு நமுட்டுச் சிரிப்பை
உதிர்த்துவிட்டு மேலே தொடர்ந்தான்!
'இன்னொண்ணு சொல்லணும். வாசின்னா குதிரைன்னு அர்த்தம்! மூச்சுக்காத்து மூலமா இந்தக் குதிரையைக் கட்றதுக்குப் பேருதான் வாசி யோகம். இனிமே மத்ததெல்லாம் பாக்கலாம்.
தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி?
மொதப்பாட்டுல, தாவாரம் இல்லேன்னா ஒனக்கு ஒரு வீடு இல்லைன்றாரு! அந்தக் காலத்துல வீடு கட்றப்ப, தாவாரம் இல்லாம ஒரு வீடும் இருக்காது! வெளியிலேர்ந்து வர்றவங்கல்லாம், அக்கடான்னு ஒரு துண்டை விரிச்சு அதுல படுத்துக்குவாங்க. மேலேருந்து வெட்டவெளிக் காத்து சும்மா ஜிவ்வுன்னு பிச்சிக்கும்! சாப்பாடு ஒரு நூறு பேருக்கு ஒக்கார வைச்சுப் போடலாம்! சுருக்கமா சொல்லப்போனா, பிறத்தியாருக்கு ஒதவுற ஒரு எடம் வீட்டுலியே அதான்னு சொல்லலாம்.
இப்பல்லாம், ஆரும் தாவாரம் வைச்சு வூடு கட்றதில்லை! ஒதவி பண்ணனுன்ற
நெனைப்பே கொறைஞ்சு போச்சே! எப்பிடி அவன் தாவாரம் வைச்சு வூடு கட்டுவான்!
ஆனாக்க, அதில்ல இதுல சொன்னது!
"தா"ன்னா துன்பம், கஸ்டம்னு அர்த்தம். 'வாரம்'னா பங்கு போடறது! அடுத்தவங்களோட கஸ்டத்துல நாமளும் பங்கு எடுத்துக்கறதுதான் தாவாரம்! அத்தப் பண்ணாம, சும்மனாச்சுக்கும் தேவாரத்தை, அதாவது, சாமிப்பாட்டுங்களை மட்டுமே பாடிகிட்டு இருந்தியானா, ஒனக்கு மோட்சம் கிடக்காதுன்னு தீர்மானமா சொல்றாரு சித்தரு! 'பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்' னு கண்ணதாசன் பாடுவாரே, அதான் இது!
இன்னும் சுளுவாச் சொல்லணும்னா, எளுத வேண்டிய பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்காம, பிள்ளையாருக்கு நூறு தேங்கா ஒடைக்கறேன்னு வேண்டிக்கறாங்களே, அவங்களுக்கெல்லாம் ஒரு பதிலாக் கூட, இந்தப் பாட்டை எடுத்துக்கலாம்!
அடுத்தது மூணாவது!
செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் ஏதுக்கடி?
இந்தக் கட்சி மீட்டிங்லல்லாம் பார்த்திருப்பியே! ஆளாளுக்குப் பேசிகிட்டே இருப்பாங்க! திடீர்னு ஒர்த்தன் வந்து, மைக்கைப் பிடிச்சுகிட்டு,' இதோ நம்ம தானைத் தலைவர் வராரு'ன்னு ஒரு சவுண்டு வுடுவான். அவ்ளோதான்! கூட்டமே எளுந்து நின்னு, கையைத் தட்டிகிட்டு, 'தலீவா. தலீவா'ன்னு கோஷம் போடும்! அவரு பேசறப்ப, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டி குஜால் ஆவாங்க!
ஆனாக்க, அல்லாத்தியும் ஒணந்தவனுக்கு, இதுல்லாம் லச்சியமே இல்லை! விடுதலை ஆனவன்னா இன்னா? அல்லாம் செத்துப் போனவன்னு அர்த்தம்! செத்துப் போறதுன்னா உசிரை வுடறது இல்லை! அல்லா நெனைப்பையும், ஆசையையும் தொறந்தவன்னு பொருளு! அப்பிடியாப்பட்ட ஆளை இந்த வாள்க, ஒளிக கோஷம்லாம், கைத்தட்டல்லாம் ஒண்ணுமே பண்ணாதுன்றதை இதுல சொல்றாரு.
இப்பக் கடோசி பாட்டு!
பட்டணம் சுற்றிப் பகலிலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு ஏதுக்கடி?
ஆரும் பார்த்திடக் கூடாதேன்னு, பதுங்கிப் பதுங்கிப் போறவந்தான் முட்டாக்குப்
போட்டுகிட்டு, இருட்டுலியும் மூஞ்சியை மறைச்சுகிட்டுப் போவான்! அல்லாத்தியும் தொறந்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சத்துலியே இருக்கறவனுக்கு அதெல்லாம் எதுக்குன்றாரு. ரெண்டாவது பாட்டுல சொன்னதுபோல, வாசிக் குதிரையைக் கட்டி, உள்ளுக்குள்ளாலியே ஒரு ஜோதியைப் பார்த்தவனுக்கு, எப்பவுமே வெளிச்சந்தான்! எப்பவுமே பகல்தான்! ஐயா சுத்தறதும் பெரிய பட்டணம்! சாமியே இருக்கற பெரிய பட்டணம்! அப்பால இன்னாத்துக்கு அவரு முக்காடுல்லாம் போட்டுக்கினு, தான் ஒரு சாமியாருன்னு காட்டிகிட்டுத் திரியணும்? ஆரும் வந்து கை தட்றதுக்கா? இல்லேன்னா,
தேவாரம், பிரபந்தம் படிக்கறதுக்கா? அவருதான் விடுதலையாகி, ஜோதியில நிக்கறாரே! முக்காடெல்லாம் தேவையில்லைன்றாரு. அதெல்லாம் ஒன்னிய, என்னியப் போல ஆளுங்க போடறது! அவருக்குத் தோதுப்படாது!'
எனச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தவன், 'இதுக்கெல்லாம் இன்னுமே ஆளமாப் பொருள் இருக்கும்! சொல்றவங்க வந்து சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்வாங்க! ஒனக்கு இது போறும்' எனச் சொல்லி, நாயரிடம் இரண்டு 'டீ'க்கு ஆர்டர் கொடுத்தான் மயிலை மன்னார்!
தெரியாத நாலு விசயத்தைக் கற்றுக் கொண்டோமே, அதையெல்லாம்விட, மயிலை மன்னாருடன் நல்லபடியாக இன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்ததே என்னும் திருப்தியோடு மானசீகமாக 'இறுகப் பற்றியவனை' வணங்கிக் கொண்டேன்!
எதிரே இருந்த கபாலீச்வரர் கோயிலில் மணி ஓங்கி ஒலித்தது!
********************
1 பின்னூட்டங்கள்:
குதம்பைச் சித்தர் தாளடி போற்றி!
Post a Comment