"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!"-1
"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!" -1
"இது ஒரு கொலைக் கதை" என ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
வழக்கமாக, ஒரு தொடர் பதியும்போது, மற்ற எதுவும் எழுதுவதில்லை நான்.
ஆனால், அந்த கோட்பாடை முறியடிக்கும் விதமாக, இந்த அமெரிக்க சுதந்திர தின வாரத்தில், 'கல் எண்ணை' [பெட்ரோல்] விலை அதிகமாக இருப்பதால், எங்கும் போகாமல் இருந்ததால், வேறு வழியின்றி, என் நண்பர் ஒருவர் அழைத்ததினால், என் மனைவியுடன் இரண்டு திரைப்படங்கள் பார்க்க நேரிட்டது.
ஆஹா! என்ன ஒரு அனுபவம்!
அதை உங்களுடன் பகிரவே, என் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தி, இந்தப் பதிவை இடுகிறேன்.
நேற்றும் இன்றுமாக இரண்டு படங்கள்.
இரண்டும் இருவித அனுபவங்கள்!
முதல் படம்...!
"தி விஸிட்டர்" [The Visitor]
கண்டிப்புக்குப் பெயர் போன ஒரு பேராசிரியர்.
சமீபத்தில் தன் மனைவியை இழந்தவர்.
அவள் ஒரு திறமையான பியானோ கலைஞர்.
அவளைப் போற்றும் விதமாக, இத்தனை நாளாய், தான் கற்றுக்கொள்ளாத அந்தப் பியானோவை கற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார்.
அவருக்கோ அது வரவில்லை.
நாலு ஆசிரியர்களிடம் பாடம் கற்றும், அது பிடுபடவில்லை.
வகுப்பிலும் கண்டிப்பாக இருப்பவர் அவர்.
ஒரு மாணவன் காலம் தவறி சமர்ப்பித்த ஒரு ஆய்வறிக்கையைக் கூட ஏற்க மனமில்லாது நிராகரிக்கும் அளவுக்குக் கண்டிப்பானவர்.
கன்னெக்டிக்கட்டில் பணி புரியும் அவர், ஒரு வேலை நிமித்தமாக நியூயார்க் நகரத்துக்கு வர நேரிடுகிறது.
அங்கு அவருக்கென ஒரு வீடு இருக்கிறது.
வருகிறார்.
வீட்டின் அமைப்பே மாறியிருக்கிறது.
யாரோ அங்கு இருக்கிறார்கள்!
'யாரடா நீ?' என ஒரு கரம் அவர் கழுத்தை நெருக்குகிறது!
'இது என் வீடு! நீ யார்?' என இவர் கேட்க உண்மை வெளிப்படுகிறது.
ஆம்!
இவர் இங்கு வருவதே இல்லை என அந்த வீட்டை ஒரு தம்பதிகளுக்கு அபார்ட்மெண்ட் உரிமையாளர் உபரி வாடகைக்கு இவர்களுக்கு விட்டிருக்கிறார்.
நிலைமை புரிந்த தம்பதிகள், மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்கள்.
'இந்த இரவு நேரத்தில் எங்கே போவீர்கள் எனச் சொல்லி அவர்களை அங்கேயே தங்கச் சொல்லுகிறார் அந்தப் பேராசிரியர்.
அந்தத் தம்பதிகள் குடியுரிமை இல்லாது இருக்கின்ற இருவர்!
ஆண் ஒரு சிரியா நாட்டுக் குடிமகன். பெண் செனெகல் நாட்டைச் சேர்ந்தவள்.
அந்தப் பையன் ஒரு திறமையான ட்ரம் வாசிக்கும் கலைஞன்.
கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு அவன் திறமையின் மீது ஒரு பிடிப்பு வந்து, இவரும் அவனிடம் ட்ரம் கற்றுக் கொள்ளத் துவங்குகிறார்.
நியூயார்க் நகரத் தெருக்களில், இவரும் அவனோடு ட்ரம் வாசிக்கும் அளவுக்கு ஈடுபாடு உண்டாகுகிறது!
இந்த நிலையில், அந்தப் பையன் குடியுரிமை அதிகாரிகளிடம் துரதிர்ஷ்டவசமாகச் சிக்கிக் கொள்கிறான்.
இந்தத் தம்பதிகளிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்தப் பேராசிரியர், இவனைக் காப்பாற்றப் பாடுபடுகிறார்.
மிச்சிகனில் இருக்கும் அந்தப் பையனின் தாய், தன் மகனிடமிருந்து ஒரு செய்தியும் சில நாட்களாக வரவில்லையே என்பதால், இந்த வீட்டுக்கு வருகிறார்.
பேராசிரியர் அவரிடம் நிலைமையைச் சொன்னதும், அந்தத் தாய், தன் மகனைப் பார்க்காமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை எனச் சொல்லி வெளியேறும் போது, அவருக்கும் குடியுரிமை இல்லை என்பதை அறிந்த பேராசிரியர் தன் வீட்டிலேயே அவரைத் தங்கச் சொல்லி வேண்ட, முதலில் மறுத்தாலும், மகன் மீதுள்ள பாசத்தால், அங்கேயே தங்குகிறார்.
இவர் செய்கின்ற உதவியைக் கண்டு, மனம் நெகிழ்கின்ற அந்தத் தாய், இவர் மேல் ஒர்விதப் பாசம் கொள்கிறார்.
அது காதலா?
தெரியவில்லை.
தன் மகன் காதலித்த அந்த செனெகல் பெண்னைச் சந்தித்து, தன் மகன் அவளுடன் இருந்த நாட்களை அந்தத் தாய் நினைவு கூருகிறார். அந்த இடங்களுக்கும் அவளுடன் செல்லுகிறார்.அவளையும் ஏற்றுக் கொள்ளுகிறார்.
இதற்குள், ஒரு தவறும் செய்யாத.... ஆனால், குடியுரிமை இல்லாத...அந்தப் பையன் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப் படுகிறான்.
தனது ஒரு தவற்றினால்தான்..... குடியுரிமை அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை மறைத்த செயலால்தான்.... இது நிகழ்ந்தது எனப் புலம்பும் அந்தத் தாய், தானும் சிரியாவுக்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார்....... இனித் திரும்பி வர முடியாதெனத் தெரிந்தும்!
செல்லும் முதல் நாள் இரவு, அவர் அந்தப் பேராசிரியரை அவரது படுக்கையறையில் சந்தித்து, அவரைக் கட்டியணைத்து, அவருடன் படுக்கிறார்.
எந்தவொரு தவறும் நிகழ்வதாகக் காட்டவில்லை.
மறுநாள் அவர் கிளம்பி சிரியா செல்லுகிறார்.
பேராசிரியர் வழியனுப்பி வைக்கிறார்.
'வந்துவிடு என்னுடன்' என அந்தத் தாயோ, 'வரட்டுமா' என பேராசிரியரோ கேட்கவில்லை!
மறுநாள், எந்த சப்வே ரயில் நிலையத்தில் அந்தப் பையன் கைது செய்யப்பட்டானோ, அங்கே அந்தப் பேராசிரியர் அவனது ட்ரம்மை எடுத்துக் கொண்டு போய், ஆவேசமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்.
படம் முடிகிறது.
எதைச் சொல்லுவதற்காக இயக்குநர் இதை எடுத்தாரோ, அதை விட்டு ஒரு இம்மியும் அகலாமல், ஒரு 100 நிமிடங்கள் நம்மையும் அவர்களோடு பயணிக்க வைத்த இயக்குநரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
சிரிக்கிறோம், மகிழ்கிறோம், நெகிழ்கிறோம், அழுகிறோம், ஆத்திரப் படுகிறோம், நிகழ்வின் நிலைமையையும் புரிந்து கொள்கிறோம்!
எவர் மீதும் குறை சொல்ல முடியாமல், ஒரு அநீதி நிகழ்ந்து விடுகிறது. சம்பந்தப்பட்டவர்க்கே அந்தச் சோகம் புரியும்... பாதிக்கும்.
அதை நம்மையும் உணரச் செய்வதில்தான் இயக்குநர் வென்றிருக்கிறார்.
துளிக்கூடத் தேவையில்லாத காட்சிகளோ, வசனங்களோ, நடிகர்கள் தேர்வோ எதிலும் சோடை போகாமல் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, 'உலகத்தரம்' என பீற்றிக் கொள்ளும் நம் படங்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகிறது.
தவறாமல் பாருங்கள் இந்தப் படத்தை!
அடுத்த படம்...... நாளை!
11 பின்னூட்டங்கள்:
////சிரிக்கிறோம், மகிழ்கிறோம், நெகிழ்கிறோம், அழுகிறோம், ஆத்திரப் படுகிறோம், நிகழ்வின்
நிலைமையையும் புரிந்து கொள்கிறோம்! ////
ஆகா, இதைவிடப் பெரிய விமர்சனம் அந்தப் படத்திற்கு எங்கே கிடைக்கப்போகிறது?
சூப்பர் விமர்சனம் சார்.அசத்தலாக ஐந்தே வார்த்தைகளில் சொல்லிவிட்டீர்கள்!
////துளிக்கூடத் தேவையில்லாத காட்சிகளோ, வசனங்களோ, நடிகர்கள்
தேர்வோ எதிலும் சோடை போகாமல் எடுக்கப் பட்டிருக்கும்
இந்தப் படத்தைப் பார்க்கும் போது, 'உலகத்தரம்' என பீற்றிக்
கொள்ளும் நம் படங்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகிறது.////
இங்கே படமெடுத்தவர்களைவிட, அதில் நடித்தவர்களைவிட,
ரசிகர்களின் பீத்தல்கள்தான் அதிகமாக இருக்கும்!
அவர்களின் மீது பரிதாபப் படுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை!
ஸ்ரேயாவிற்கும், நமீதாவிற்கும் கூட ரசிகர் மண்றங்களை வைத்து
அல்லாடுபவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்?
இந்தியாவிற்கு இது பெரிய அளவில் வருமா எனத் தெரியாது. வந்தால் கண்டிப்பாகப் பாருங்கள் ஆசானே!
அப்படி இல்லையென்றால், அடுத்த முறை நான் தாயகம் வரும்போது இதை உங்களுக்குக்காகக் கொண்டுவருகிறேன்!
நன்றி.
அதுதான் வருத்தம் ஆசானே!
எவரையும் குறை சொல்ல நினைக்கவில்லை ஆசானே!
ஆனால், அதைச் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
நன்றி.
நாயகன் ட்ரம் வாசிக்கும் படம் நன்றாக உள்ளது. பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாமா?
என்ன, என்னுடைய பதிவு ஒன்றில் போடுவதற்குத்தான்!
காப்பி ரைட் பிரச்சினை ஒன்றும் வராதே?:-))))
வருகைக்கு நன்றி, கோவியாரே!
'கசடற' இன்னும் சில நிமிடங்களில்!!:))
//பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாமா?
என்ன, என்னுடைய பதிவு ஒன்றில் போடுவதற்குத்தான்!
காப்பி ரைட் பிரச்சினை ஒன்றும் வராதே?:-))))//
வராது எனத்தான் நினைக்கிறேன் ஆசானே!
நானே இதை ஒரு பொதுப் பதிவிலிருந்துதான் எடுத்தேன். அங்கு காப்பிரைட் பற்றி ஒன்றும் சொல்லியிருக்கவில்லை.
முடிந்தால், 'நன்றி- தி விஸிட்டர்' எனப் போட்டுவிடுங்கள்.
இம்புட்டு சீரியஸ் படமெல்லாம் நமக்கு ஒத்து வராது. மி தி எஸ்கேப்பூ!!
சீரியஸ் படம் இல்லை கொத்ஸ்!
உங்களுக்கு ரொம்பவுமே பிடிக்கும்.
இப்படத்தின் துள்ளல் இசைக்காகவே இதைப் பார்க்கணும் நீங்க!
பார்த்திட்டு சொல்லுங்க!
கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அருமையான கதை அமைப்பு.
இதே மன உணர்வுடன்( உறவுகளை கொச்சைப் படுத்தாமால்) நம் தமழ் திரை உலகில் ஒரு சில படங்கள் வந்துள்ளன.
உதரணத்திற்கு அர்ச்சன நடித்த வீடு என்ற திரைப்டம். நடுத்திர வர்க்கம் வீடு கட்டுவதில் ஏற்படும் இன்னல்கள்,உணர்ச்சிப் போரட்டங்களை இயக்குனர் அழகாக சொல்லியுள்ளார்.
ஆனால் படம் வழ்க்கம் போல் பிரமாத வெற்றி கிட்டவில்லை.
t.vijay
http://pugaippezhai.blogspot.com/
சரியாகச் சொன்னீர்கள், திரு. விஜய்!
குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் தமிழிலும் வந்திருக்கின்றன.
சரியான முறையில் அவற்றை ரசித்து கௌரவிக்க நாம்தான் தவறிவிட்டோம்.
வணிக ரீதியிலும் தி விஸிட்டர் வெற்றிப்படம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
விரைவில் இப்படத்தின் ஒரு சில பாடல்களை இங்க்கு பதிய முயற்சிக்கிறேன்.
நன்றி.
Post a Comment