Tuesday, May 13, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 5

முந்தையப் பதிவு இங்கே!


"கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும் என இயம்புகிறான் பாரதி!
இப்படி வருகின்ற மேன்மை எத்தகையது?"

சொல்லுகிறான் பாரதி!

'விண்ணின் இடி முன் விழுந்தாலும்
பான்மை தவறி நடுங்காதே.
பயத்தால் ஏதும் பயனில்லை,
........ கோடிமுறை இன்னும் கோடி முறை சொல்வேன்,
ஆன்மாவான கணபதியின்
அருளுண்டு; அச்சமில்லையே.'


ஆம்! பான்மை..... உன்னுடைய இயல்பு தாண்டி நடுங்காதே! கணபதி என்பது உன்னுடைய ஆன்மா! அவன் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு அச்சமென்பதே இருக்கக் கூடாது எனக் கோடி முறை சொ ல்லிவிட்டேன்! இன்னும் பல கோடி முறை சொல்லுகின்றேன்! நீ மேன்மையுறுவாய் என்கின்றான்!

இந்த அச்சமில்லாமல் இருப்பதால் என்னென்ன பயன் என விவரிக்கத் தொடங்குகிறான்!

வரகவி அல்லவா இவன்! தமிழ் வெள்ளமெனப் பொங்கி வழிகிறது! நம்மையும் நனைக்கிறது.... இல்லை மூழ்கடிக்கிறது!


'அச்சமில்லை, அமுங்குதல் இல்லை, நடுங்குதல் இல்லை, நாணுதல் இல்லை, பாவம் இல்லை, பதுங்குதல் இல்லை.

எது நேரினும் இடர்ப்பட மாட்டோம்; அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம்; கடல் பொங்கி எழுந்தால் கலங்கமாட்டோம்; யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்; எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்.

வானமுண்டு; மாரியுண்டு; ஞாயிறும், காற்றும், நல்ல நீரும், தீயும், மண்ணும், திங்களும், மீன்களும், உடலும், அறிவும் உயிரும் உளவே.

தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், காண நல் உலகமும், களித்து உரை செய்யக் கணபதி பெயரும் என்றும் இங்கு உளவாம்!

சலித்திடாய்; ஏழை நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி! வஞ்சக் கவலைக்கு இடம் கொடேல் மன்னோ! தஞ்சம் உண்டு சொன்னேன்; செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே!'


இதைப் படித்தாலே போதும்! விளக்கம் தானே உள்ளில் புரியும்! அப்படி எளிமையாக எழுதியிருக்கிறான்!

'நமக்கே' என முடித்தவுடன் தன்னை அலைக்கழிக்கின்ற மனத்தைப் பற்றிய எண்ணம் வருகிறது பாரதிக்கு! திரும்பவும் மனதுக்குச் சொல்கிறான்!

ஒரு மூன்று செயல்களை இடைவிடாது செய்துகொண்டு வா!

'உமைக்கு இனிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்' என அதற்குத் தெம்பூட்டுகிறான்!

அவை என்ன மூன்று செயல்கள்!


'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்'!

இவைதான்! திரும்பத் திரும்ப, 'அஞ்சாதே! சோர்ந்து போய் விடாதே! பொதுநலம் பேணி, உனக்கு இயல்பாக வருகின்ற ஒன்றைச் செய்துவா! கணபதி காப்பான்!' என அறிவுறுத்துகின்றான்!

மேலும், ஒவ்வொன்றையும் விரித்துக் கூறுகின்றான்!

'நமக்குத் தொழில் கவிதை' என்றான்! இதைத் தருவது யாராம்!?


'செய்யும் கவிதை பராசக்தியாலே செயப்படும் காண்! வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி!'

அவளது அருள் உன்னிடம் பூரணமாக நிறைந்திருக்க, உன்னுடைய திறமைகளை எல்லாம், 'வீண் ஐயத்திலும், துரிதத்திலும் சிந்தி அழிவதென்னே!' என மனத்தைச் சாடுகிறான்!

பொறுமையாக...
'பையத் தொழில் புரி நெஞ்சே!'.... அப்படியே, 'கணாதிபன் பக்தி கொண்டே' அதைச் செய்வாயாகில், ஒரு குறையும் இல்லாது செழிக்கும் என தெம்பூட்டுகிறான்!

அடுத்து, 'இமைப்பொழுதும் சோரதிருத்தல்' என்றால் என்ன என்று விளக்குகிறான்!

ஒரு கணம் கூட சோம்பித் திரியாமல், கொண்ட செயலே கொள்கையென அனவரதமும் அதைப் பற்றியே உழைத்திருத்தல் தான் இதன் பொருள் எனச் சொல்லுகிறான்!

இதன் முதல் படியாக என்ன இருக்கவேண்டும் எனவும் செப்புகிறான்! செய்யும் தொழில் மீதும், கணபதி மீதும் பக்தி மிகவும் அவசியம் என வலியுறுத்துகிறான்.


'பக்தி உடையார் காரியத்தில் பதறார்' என்கிறான்! அதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கிறான்!

ஒரு விதை நடப்படுகிறது. மறுநாளே அது முளைத்து வந்துவிடுவதில்லை. ஒரு சில நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவரைக்கும் அந்த விதை சும்மா இருப்பதில்லை. நீரை உண்டு, நிலத்தில் இருக்கின்ற வளத்தை உண்டு, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு தேவையான அளவு சக்தியும் உரமும் கிடைத்ததும், நிலத்தைக் கிழித்துக் கொண்டு முளை விடுகிறது!


'வித்து முளைக்கும் தன்மைபோல், "மெல்லச்" செய்து பயன் அடைவார்'

இதெல்லாம் நிகழ ஏது காரணம்?

'சக்தி தொழிலே அனைத்துமெனில், சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?' என பலம் கொடுக்கிறான்!

'வித்தைக்கு இறைவா! கணநாதா! மேன்மைத் தொழிலில் பணி எனையே!' என, முடிக்கிறான்!

அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம் கொடுக்கிறான் பாரதி!


அடுத்த பதிவில்!

7 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Tuesday, May 13, 2008 10:10:00 PM  

////பக்தி உடையார் காரியத்தில் பதறார்' என்கிறான்! அதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கிறான்!

ஒரு விதை நடப்படுகிறது. மறுநாளே அது முளைத்து வந்துவிடுவதில்லை. ஒரு சில நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவரைக்கும் அந்த விதை சும்மா இருப்பதில்லை. நீரை உண்டு, நிலத்தில் இருக்கின்ற வளத்தை உண்டு, தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு தேவையான அளவு சக்தியும் உரமும் கிடைத்ததும், நிலத்தைக் கிழித்துக் கொண்டு முளை விடுகிறது!////

வி.எஸ்.கே சார், அருமையான விளக்கம் கொடுத்து எம் சிந்தனைகளைத் தூண்டி விட்டு விட்டீர்கள்!

கணபதி அருளால் நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நெடு நாள் வாழ்வீர்களாக!

VSK Tuesday, May 13, 2008 11:01:00 PM  

ஆசானே!
தங்களிடமிருந்து வருகின்ற எந்தவொரு மடலும் என்னை மகிழ்த்தும்! இதுவும் அவ்வாறே!

நீங்கள் வந்து வாழ்த்தியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!

நன்றி ஆசானே!

jeevagv Tuesday, May 13, 2008 11:08:00 PM  

// கணபதி என்பது உன்னுடைய ஆன்மா! //
ஆகா, அருமையான வாக்கு!

VSK Tuesday, May 13, 2008 11:14:00 PM  

ஆன்மாவைத் தொட்டெழுப்பும் பதிவுகளைத்தொடர்ந்து அயராது இட்டுவரும் நீங்கள் இதைச் சொல்வது இன்னமும் பொருத்தம் திரு.ஜீவா!

கவிநயா Thursday, May 22, 2008 3:32:00 PM  

உங்கள் தமிழ் படிக்கையிலேயே உயரம் கூடுவது போன்ற உணர்வு. மிகுந்த கம்பீரத்துடன் ஒலித்து மெத்தச் சிலிர்க்க வைக்கிறது...

//'சக்தி தொழிலே அனைத்துமெனில், சார்ந்த நமக்குச் சஞ்சலம் ஏன்?'//

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய செய்திகளை அழகான விளக்கங்களுடன் பதித்து விட்டீர்கள் - மனதிலும்...

VSK Thursday, May 22, 2008 8:25:00 PM  

எல்லாப் பெருமையும் பாரதிக்கே சேரும், கவிநயா அவர்களே!

எந்தவொரு குறிப்பும் இல்லாமல் இந்தப் பாடல்களைப் படிக்கத் துவங்கினேன்!

நன்றாக வந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே!

உங்களுக்கும் நன்றி!

கவிநயா Thursday, May 22, 2008 10:17:00 PM  

என்னங்க நீங்க, என்னைப் போய் அவர்களேன்னு இவர்களேன்னு விளிக்கிறீங்க?நான் ரொம்ம்பச் சின்னப் பொண்ணுதான். (நிஜம்ம்மா! :) ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாமே...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP