"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 20 "இன்னா செய்யாமை"
"என்னப்பா வருத்தமா இருக்கற மாரி கீறே! இன்னா சமாச்சாரம்? ஆராச்சும் இன்னாவாவுது சொன்னாங்களா? சொல்லு!" என மயிலை மன்னார் மூன்றாம் முறையாக என்னைக் கேட்டான்!
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன்!
"இப்ப, நீ சொல்லப் போறியா இல்லியா? இல்லேன்னா கிளம்பு. எடத்தைக் காலி பண்ணு!" எனச் சற்று கோபத்துடன் அதட்டவே, அவனைப் பார்த்து,
'சரி, சொல்றேன். ஆனா, நீ என்னைக் கோவிச்சுக்கக்கூடாது! நான் செஞ்ச ஒரு காரியம் எனக்குப் பிடிக்கலை. அதான்!' எனத் தயக்கத்துடன் இழுத்தேன்!
'எனக்குத் தெரியும் நீ இன்னா சொல்லப்போறேன்னு! நானே ஒன்னியக் கேக்கணும்னுதான் இருந்தேன்! நீ அப்பிடியாப்பட்ட ஆளில்லியே! இவன் ஏன் இதுலெல்லாம் போயி வாயைக் கொடுக்கறான்னு நெனைச்சேன்! சரி, பட்டுன்னு விசயத்தைச் சொல்லு' என்றான்.
'ஒண்ணுமில்லேப்பா! எம்மனசுக்கு சரின்னு பட்ட கருத்தை .. கவனிச்சுக்கோ.. கருத்தை மட்டும் தான் சொன்னேன். அதைத் தனிப்பட்ட முறையிலே எடுத்துகிட்டு, நான் அவங்களை தாக்கினதா கொஞ்சப்பேரு நினைக்கறாங்க! அதான் இன்னா பண்றதுன்னு உங்கிட்ட கேட்டா நீ எதுனாச்சும் சொல்லுவியேன்னு வந்தேன்' என்றேன்.
'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்! நீயும் ஒனக்கு தோணிணத எளுதறதுக்கு நேரம் கிடைச்ச மாதிரியாவும் இருக்கும். ஆனா, அடுத்தவன் இன்னா செஞ்சாலும், நீ நெதானத்த விடவே கூடாது! அடுத்தவங்க இன்னா சொன்னாலும், நீ பதிலுக்கு பதில் சொல்லிக்கினே நிக்காம 'ஜூட்' வுட்டுறணும்! இத்த நல்லா நெனைப்புல போட்டுக்கோ! இத்தப் பத்தி ஐயன் செம சூடா சொல்லியிருக்காரு! இப்ப ஒனக்காக அதச் சொல்றேன். கேட்டுக்கோ!' என ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றிவிட்டான்! மயிலை. மன்னார்!
இனி வருவது குறளும் அதற்கு மயிலை. மன்னார் அளித்த விளக்கமும்!
"அதிகாரம் - 32" "இன்னா செய்யாமை
'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [311]
இப்ப ஒரு காரியம் செஞ்சேன்னா, ஒனக்கு நெறைய துட்டு கிடைக்கும்னு வைச்சுக்கோ! அதும் மூலமா, நீ பெரிய பணக்காரனாக் கூட ஆயிறலாம்னும் வைச்சுக்கோ! ஆனாக்காண்டி, அந்தக் காரியத்தப் பண்ணினா, மத்தவங்களுக்கு கஸ்டம் வரும்னா, அத்தச் செய்யாமலியே இருக்கறதுதான் ரொம்ப நல்லது. அதான் மனசு சுத்தமா இருக்கறவங்களோட கொள்கைன்னு ஐயன் சொல்றாரு.
'கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.' [312]
அத்தோட வுடலை வள்ளுவரு. இந்த மாரி மனசு சுத்தமா இருக்கறவங்களுக்கு இன்னோரு கொள்கையும் இருக்குதாம்! அத்து இன்னான்னா, அடுத்தவங்க வந்து ஒரு கஸ்டத்தைக் கொடுத்தாகூட, அதை சகிச்சுகிட்டு, பொறுமையாப் போயிருவாங்க. திருப்பி அவங்களுக்கு ஒரு தொல்லையும் கொடுக்காம..!! புரியுதா?
'செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.' [313]
இப்ப, நீ ஒண்ணுமே பண்ணலைன்னு வைச்சுக்குவோம். ஆனா, அடுத்த ஆளு ஒருத்தர் வந்து உனக்குத் தொல்லை கொடுத்து வருத்தத்தைக் கொடுக்கறாரு. இப்ப ஒனக்கு இன்னா தோணும்? பதிலுக்கு இன்னா சொல்லலாம்... இல்லாக்கட்டி.. இன்னா செய்யலாம்னுதானே! அத்தான் கூடாது! அப்பிடி நீயும் திருப்பிச் செஞ்சியானா, அது ஒன்னியப் போட்டு வருத்திக்கிட்டே இருக்கும்னு எச்சரிக்கை பண்றாரு ஐயன்!
'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.' [314]
இது ஒனக்கு மட்டுமில்ல... நம்ம ஆளுங்க அல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு குறளுதான்! ஒவ்வொருத்தனும் ஒரு ஆயிரம் வாட்டியாவது கேட்டிருப்பாங்க! கேட்டு இன்னா புண்ணியம்? அப்பிடி செய்யறவங்க ரொம்பக் கம்மி!
ஒருத்தர் ஒரு கஸ்டத்தை ஒனக்குக் கொடுத்தார்னா, திருப்பி அவனுக்கு நீ ஒரு கஸ்டத்தைக் கொடுக்காதேன்னு முந்தின குறள்ல சொன்னாருல்ல? இப்ப அதுக்கும் மேல ஒரு படி போயி, அது மட்டுமில்லைடா மவனே! திருப்பி செய்யறதா இருந்தா, நீ அவஙளுக்கு ஒரு நல்ல காரியத்தைப் பண்ணிருன்னு புத்தி சொல்றாரு. நல்லாக் கேட்டுக்கோ!
'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.' [315]
இப்ப வீதியில நடந்து போய்க்கினே கீறே நீ! ஒரு ஆளு அடிபட்டு விளுந்து கிடக்கான். ரெத்தமாக் கொட்டுது. அத்தப் பாத்துகினே, நம்ம சோலியப் பாக்கப் போவோம்னு போயிராதே! ஒடனே, அது ஒங்குடுமத்துலியே ஒருத்தருக்கு நடந்த மாரி நெனைச்சுகினு, அந்த ஆளுக்கு வேண்டிய ஒதவியை நீ செய்யணும்! அப்பத்தான் ஒனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவு இருக்குதுன்னு அர்த்தமாம். அறிவில்லாதவந்தான், நமக்கென்ன போச்சுன்னு போயிருவான்னு சொல்லாம சொல்லி வெளங்க வைக்கறாரு. புத்தர், ஏசுநாதர், அல்லான்னு எல்லா பெரிய மனுசங்களும் சொல்லிகினே இருக்கற ஒரு சமாச்சாரம் இது!
'இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.' [316]
கஸ்டம்னா இன்னான்னு ஒனக்குப் புரியுந்தானே? வருத்தம்னா இன்னான்னு தெரியுந்தானே? அப்போ அது மாரி விசயம்லாம் மறந்துங்கூட அடுத்தவனுக்குப் பண்ண நெனைக்காதேன்னு கறாராச் சொல்றாரு இதுல!
'எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.' [317]
மேலே சொன்னதையேத்தான் இங்கியும் அழுத்தந் திருத்தமாச் சொல்றாரு, மறுபடியும்!
தனக்குத் துன்பம்னு மனசுல பட்ட எதையும் பிறத்தியாருக்குச் செய்யாம இருக்கறதுதான் ஒலகத்துலியே தலை சிறந்த அறம்.. தருமம்னு திரும்பவும் சொல்றாரு.
'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.' [318]
ஒருத்தன் கொடுக்கற வருத்தம் எப்பிடியாப்பட்டதுன்னு ஒனக்குத் தெரியுமில்ல! இப்ப நான் ஓங்கி 'பளார்'னு ஒரு அறை விட்டேன்னா எப்பிடி இருக்கும் ஒனக்கு! எம்மாம் வலிக்கும்! அந்த வலி ஒனக்குத் தெரியுமின்னா, நீ அதே போல, அடுத்தவனுக்குச் செய்யாதேன்னு இன்னும் ஒரு தபா சொல்றாரு. இன்னாடா, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்றாரேன்னு நெனைக்காம, நம்ம மரமண்டையில ஏத்தறதுக்காவத்தான் இப்பிடி சொல்றாருன்னு புரிஞ்சுகிட்டா ஒனக்கு நல்லது! சரியா!
'பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.' [319]
ஏன் இத்தினி தபா ஐயன் சொன்னாருன்றதுக்கான காரணத்த இங்க சொல்றாரு. நீ ஒருத்தனுக்கு ஒரு துன்பத்தைக் கொடுத்தியானா, ஒனக்கு ஒரு பெரிய கஸ்டம் கொஞ்ச நேரத்துலியே பின்னாடியே வந்து நிக்குமாம்! அத்த எப்பிடி சொல்றாருன்னா, நீ காலையில கொடுத்த கஸ்டம் சாயங்காலமே ஒன் வூட்டாண்டை வந்து கதவைத் தட்டுமாம்! நான் சொல்றதை நீ ஒனக்கு மட்டும் எடுத்துக்கோ! அவனுக்கு வரலியே, இவனுக்கு ஒண்ணும் ஆவலியேன்னு மயங்காத! அவனவன் கஸ்டம் அவனவனுக்குத் தெரியும். நீ நெதானமா நடந்துக்கோ! இன்னா நா சொல்றது!
'நோய் எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.' [320]
முன்ன சொன்ன அதேதான்! நீ கொடுத்த கஸ்டம் ஒன்னியவே வந்து சேரும்! அதுனால, ஒனக்கு ஒரு துன்பமும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறியா, அப்படீன்னா, வேற யாருக்கும் நீ அத்தச் செய்யாம இரு.
ஒனக்கு இந்த வியாதி வேணாம்னா, இந்த வியாதியைத் தேடிப் போகாதே!
"இன்னா! நா சொல்றது எல்லாம் புரிஞ்சுதா! ஒனக்குப் பிடிக்கலியா, பேசாம போய்க்கினே இரு. இந்த ஒலகத்துல ஆரும் தன்னோட தப்பை அடுத்தவன் சொல்லிக் காட்டறத விரும்பறதில்ல. அவன் அப்பிடி செய்யறதுல ஒரு தப்பும் இல்லேன்னுதான் நானும் சொல்லுவேன்! ஏதோ அவனுக்குப் பிடிச்சிருக்கு; செய்யறான். ஒனக்கு அதுனால, ஒரு பேஜாரும் இல்லேன்னா, 'கம்'முனு கண்டுக்காம போயிரு. ஒன்னியக் கேட்டா மட்டும் சொல்லு. அப்பவும் தன்மையா சொல்லு. இப்பிடி இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோன்னு சொல்லிப் பாரு. அப்பிடி நீ சொன்னது அவனுக்குப் பிடிக்கலியா... வுடு ஜூட்!
இப்ப நா சொன்னது ஒனக்குப் பிடிச்சுதா, பிடிக்கலியா?' எனக் கேட்டுச் சிரித்தான் மயிலை மன்னார்.
'நீ என்னோட நண்பண்டா! நீ சொன்னா, எனக்குப் பிடிக்காமப் போகுமா!' எனச் சொல்லியபடியே இன்னும் 2 மசால் வடையும் 'டீ'யும் தரச் சொல்லி நாயரைக் கேட்டேன்!
19 பின்னூட்டங்கள்:
வீஎஸ்கே ஐயா,
சில உள்குத்துகளைத் தவிர்த்தால் மன்னார் பாணி குறள் விளக்கம் பிற்காலத்தில் படிப்பவர்களுக்கு மிக நல்ல தொகுப்பாக இருக்கும். உள்குத்துகள் பிறகாலத்தில் படிக்கும் போது இடுகையின் கருத்துகளுடன் ஒட்டு இல்லாதது போல் இருக்கும்.
மற்றபடி இடுகைக்கான கருத்து ?
உங்கள் மன்னார் குறள்களில் பாராட்டுக்களைத் தவிர வேறு எதும் சொல்வதற்கு இல்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு !
:)
////'முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்! நீயும் ஒனக்கு தோணிணத எளுதறதுக்கு நேரம் கிடைச்ச மாதிரியாவும் இருக்கும். ஆனா, அடுத்தவன் இன்னா செஞ்சாலும், நீ நெதானத்த விடவே கூடாது! அடுத்தவங்க இன்னா சொன்னாலும், நீ பதிலுக்கு பதில் சொல்லிக்கினே நிக்காம 'ஜூட்' வுட்டுறணும்! இத்த நல்லா நெனைப்புல போட்டுக்கோ! ////
அசத்தலான அறிவுரை!
எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் ஏது சார் பிரச்சினை?
///கோவியார் சொல்லியது:உங்கள் மன்னார் குறள்களில் பாராட்டுக்களைத் தவிர வேறு எதும் சொல்வதற்கு இல்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு !
:)////
அப்படியும் எங்கே விட்டீர்?
பின்னூட்டத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் சாமி!
உள்குத்து என்ற வாதத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பதாம்?:-)))
எந்த ஒரு உள்குத்தும் வைத்து இந்தப் பதிவை நான் எழுதவில்லை கோவியாரே!
வழக்கமாக ஒரு சம்பவத்தைச் சொல்லி நான் மன்னாரைப் பார்ப்பது என் வழக்கம்.
அதன்படியே என்னையே இதில் வைத்து நான் எழுதிய ஒரு கற்பனை சம்பவம்தான் இது.
உங்களது கருத்தை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.
நன்றி.
//எல்லோரும் இதைக் கடைப்பிடித்தால் ஏது சார் பிரச்சினை?//
இன்னா செய்யாமல் எல்லாருக்கும் உங்களைப் போல் நல்லதே செய்து வருபவர்களைப் பாராட்டும் விதமாக இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன், ஆசானே!
//அப்படியும் எங்கே விட்டீர்?
பின்னூட்டத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் சாமி!
உள்குத்து என்ற வாதத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பதாம்?:-)))//
:)))))
வாத்தியார் கோடு போட்டுக் காண்பிச்சதுதான் எனக்கும் ரொம்ப பிடிச்ச லைன்.
சூப்பராச் சொல்லி இருக்கீங்க.
வலையுலக நட்பிற்கு இலக்கணம் வகுத்த் ஐயன் வாழ்க வாழ்க!! :))
நீங்கள்லாம் வந்து சொன்னதே ரொம்ப சந்தோசம் கொத்ஸ்!
நீங்க விளக்கும்போது எனக்குக் கூடப் புரிஞ்சிடுதே! நன்றி அண்ணா! :)
'எனக்குக் கூட' எனச் சொல்வது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாத் தெரியலியா கவிநயா!
உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்கிறேன்!
நன்றி!
இரண்டவது முறை படித்தபோது மனதில் பதிந்தது:
//////முதல்ல நீ ஒன்னோட நண்பங்க ஆருன்னு ஒரு வரையறுத்துக்கணும். முடிஞ்சா அவங்க கூட மட்டுமே ஒன்னோட கருத்தையெல்லாம் வைச்சுகிட்டேன்னா, ஒனக்கு நல்லது! அல்லார்கிட்டியும் போயி, சொல்றியா, சொல்லு... வேணாங்கலை! ஆனா, அது அவிங்களுக்குப் புடிக்கலியா... டக்குன்னு கழண்டுக்க. மேக்கொண்டு வாதம் பண்ணிகிட்டு நிக்காத! போகாமலே இருந்தா இன்னும் விசேசம்!/////
அருமை! இதைக் கடைப் பிடித்தால் மன உளைச்சல் ஏது?
குறளை படிச்சிட்டு விளக்கத்தை படிக்கனும், ஆனா கண்ணு டபாலுன்னு விளக்கத்துல போய் நிக்குதே!!
கண் மருத்துவரை பார்க்கனுமா? என்று மன்னாரை கேட்கவும். :-)
//அருமை! இதைக் கடைப் பிடித்தால் மன உளைச்சல் ஏது?//
முடிந்தவரையில் கடைப்பிடிக்க இப்பவெல்லாம் முயற்சிக்கிறேன் ஆசானே!
நன்றி.
//கண்ணு டபாலுன்னு விளக்கத்துல போய் நிக்குதே!!
கண் மருத்துவரை பார்க்கனுமா? என்று மன்னாரை கேட்கவும். :-)//
அதுவும் நல்லதுக்குத்தான்! கண்மருத்துவரை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனச் சொல்லி மன்னார் சிரிக்கிறான்,.. திரு. குமார்!
இன்னா செய்தாரை ஒறுத்தலை எப்பவோ விட்டாச்சு மன்னார்.
ஆனால் அதை மறக்கறத்துக்குத்தான் உங்க தாடிக்காரர் வழி சொல்ல மாட்டேங்கறார்:))
நாம் ஒருவரைத் தண்டிக்க,அவர நம்மத் திருப்பி அடிக்க, கர்மவினை தொடராமலிருக்க வழி சொல்கிறார்.
ம்ம் பார்க்கலாம். டான்க்ஸுப்பா.
//இன்னா செய்தாரை ஒறுத்தலை எப்பவோ விட்டாச்சு மன்னார்.
ஆனால் அதை மறக்கறத்துக்குத்தான் உங்க தாடிக்காரர் வழி சொல்ல மாட்டேங்கறார்:))//
இந்த அதிகாரம் இன்னா ச்ய்தாரை ஒறுத்தல் அல்ல, வல்லியம்மா!
இன்னா செய்யாமை மட்டுமே!
எனவே, எப்ப நீங்க ஒறுத்திட்டீங்களோ, அப்பவே உங்க பணி முடிஞ்சாச்சு!
அதை மீண்டும் நினைப்பதே சரியில்லையே!
திரும்பத் திரும்பத் தொடர வேண்டாமே!
விட்டிருவோம்!
சரியா அம்மா!
முன்னுரை எதற்காக என்று புரியவில்லை எஸ்.கே. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டாம் என்றே நினைக்கிறேன். எல்லோருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்கத் தானே செய்கின்றன. நீங்கள் கற்பனை என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.
எல்லா குறள்களும் அருமையாக இருக்கின்றன எஸ்.கே. விளக்கங்களும் நேரடியாக அமைந்திருக்கின்றன. அறிவினான் ஆகுவதுண்டோ என்ற குறள் ரொம்ப பிடித்தது.
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் என்று கண்ணன் சொன்னதையே ஐயனும் எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணா செய்யாமை தலை என்று இன்னும் ஆயிரம் அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கார்.
ஆயிரம் பேர் வந்தாலும் [சும்மா ஒரு உதாருக்குத்தான்! கண்டுக்காதீங்க குமரன்!:))] நீங்க வந்து சொன்னாத்தான் எனக்கே மகிழ்வாய் இருக்கு குமரன்!
தினசரி வாழ்வே ஒரு பாடம் தான்!
நன்றி
என் பதிவின், நாலாவது கமெண்ட்டை படிக்கவும் :)
http://surveysan.blogspot.com/2009/10/blog-post_12.html
Post a Comment