"தாய்க் கனவுகள்"
"தாய்க் கனவுகள்"
அன்னையர் தினத்தை ஒட்டி பலரும் சிறப்பாக எழுதிவிட்டார்கள்! இனி என்ன எழுத இருக்கிறது என நினைத்தபோது, ஒரு எண்ணம் வந்தது. ஏதேதோ காரணங்களுக்காகத் தங்கள் பிள்ளைகளைப் பிரிந்து, அவர்கள் மீண்டு[ம்] வரும் நாளை எதிர்நோக்கி வாழ்நாளைக் கழித்துவரும் அனைத்து அன்னையர் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக என் எண்ணத்தில் உதித்த இந்தச் சந்தக் கவிதையை இவர்கள் எல்லாருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
"இந்த உலகில் தவறான[அன்பில்லாத] பிள்ளைகள் இருக்கலாம்; ஆனால் தவறான [அன்பில்லாத] தாய் என எவரும் உண்டோ அம்மா!" என ஆதி சங்கரர் கதறிய சொற்களை முன் வைத்து இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கின்றேன்!
எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புடன் வாழ்க!
வாழ்க அன்னையர்!
கடலி னின்று மேகங்கள் எழும்பும்; காற்றுடன் கலந்து கார்முகில் ஆகும்!
காற்றலை அதனை வானத்தில் நடத்தும்; குளிரலை சேர்ந்து மழையும் பொழியும்!
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி சரமாய் மழையும் தரையினை நாடும்!
மழைநீர் வெள்ளம் ஆறாய் மாறிச் செல்லும் வழியெலாம் சோலையை விரிக்கும்!
மண்ணின் உயிர்கள் மகிழ்ந்தே வாழ்ந்திட மழைநீர் தன்னின் பங்கினைச் செய்யும்!
தன்பணிமுடித்து கசடினை வழித்து கடலினைத் தேடி நதியும் விரையும்!
பிறப்பிடம் தேடிச் சென்றிடும் ஆறினைத் தாய்க்கடல் தாவித் தன்னில் கொள்ளும்!
மீண்டும் இயக்கம் இதுபோல் தொடங்க தாயின் கண்ணீர் மழையாய் மாறும்!
அன்பே! நீயும் அதுபோல் கண்ணே! என்னில் பிறந்து, என்னுள் வளர்ந்து,
என்னில் கிளம்பி, எங்கோ சென்று, பண்ணும் செயல்கள் பண்புடன் ஆற்றி,
மண்ணின் மானம் தன்னில் வளர்த்து, மாண்புகள் பலவும் நின்னில் கொண்டு,
சொல்லிய சொல்லின் துயரினைத் துடைத்து, கள்ளில் ஊறிய மலர்போல் சிரித்து
என்னைத் தேடி ஒருநாள் வருவாய்! இறையவன் ஈந்த நல்வரம் நீயே!
கண்ணைவிட்டுப் பிரிந்திருந்தாலும், கண்ணே நின்னை நினைத்தே இருந்தேன்!
என்னில் நின்னைக் கூட்டும் நாளை உள்ளில் வாழும் இறையிடம் கேட்டேன்!
''தருவேன்! தருவேன்! எல்லாம் தருவேன்! கவலை உனக்கேன்!'' எனவே சொல்ல...
யானும் சிரித்தேன்!
4 பின்னூட்டங்கள்:
VSK, நல்லா ரைம் இருந்தது வார்த்தைகளில்.
அருமை.
மிக்க நன்றி, சர்வேசன்!:))
//தன்பணிமுடித்து கசடினை வழித்து கடலினைத் தேடி நதியும் விரையும்!
பிறப்பிடம் தேடிச் சென்றிடும் ஆறினைத் தாய்க்கடல் தாவித் தன்னில் கொள்ளும்!//
நெகிழ்ச்சியைக் கொடுக்கும் நிறைவரிகள் ஐயா!!!
//என்னில் நின்னைக் கூட்டும் நாளை உள்ளில் வாழும் இறையிடம் கேட்டேன்!//
இவ்வண்ணமே கேட்கும் எனக்கு,
பொறுமை, பொறுமை பூமி விஜயத்தின் பொருளென்ன?!!
வினை தீர்த்து வெற்றி கொள்வதே.
அதுவரை பொறுமையை உரிமையாய் பிடித்து
நல்வழி செல்லென ஆணையிடும் அன்னை அபயக்கரம்.__/\__
//பூமி விஜயத்தின் பொருளென்ன?!!
வினை தீர்த்து வெற்றி கொள்வதே.
அதுவரை பொறுமையை உரிமையாய் பிடித்து
நல்வழி செல்லென ஆணையிடும் அன்னை அபயக்கரம்.__/\__//
சீரியதொரு கருத்தினை வைத்திருக்கிறீர்கள் அனானியாரே! மிக்க நன்றி!
Post a Comment