"இன்று ராம நவமி!"
"இன்று ராம நவமி! "
ஏதோ ஒரு உந்தலில் ஜெயகாந்தனின் 'சுந்தர காண்டம்' நாவலைப் படித்தேன்!
முதல் அத்தியாயம் படித்தவுடன் மேலே படிக்க முடியவில்லை!
என் மனதில் தோன்றி எண்ணங்களை இங்கு வடித்திருக்கிறேன்!
எல்லாம் வல்லவனே! என் மனம் ஆள்பவனே!
ரகுகுல நாயகனே! ராஜீவ நயனனே!
ராவணனை அழிக்கவே நீயிங்கு அவதரித்தாய்!
அப்படியே இதிகாசம் இங்கெமக்கு உரைக்கிறது!
ஆனாலும் நானிதனை அடியோடும் நம்பவில்லை!
நீ பிறந்த காரணத்தை நானுரைப்பேன்! நீ கேள்!
எம்முள் எத்தனை ராவணன் இங்கிருக்கின்றார்!
தம்மில் புரியாது தவறுகளைச் செய்கின்றார்!!
எத்தனை சீதைகள் இங்குழல்கின்றார்!
அவர்தம் கதறல்கள் காதில் விழவில்லையோ!
பாரதப் பெண்களிடை எந்த முகம் பார்க்கின்றாய்?
பரிதவிக்கும் பெண்களிடை நீ பார்க்கும் சீதை எங்கிருக்கிறாள்?
துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும்
கண்களிலே தேக்கியிங்கு வானத்தை நோக்கியபடி
அவலப் பெருமூச்செறியும் கோடானுகோடி
பாரதப் பெண்களிடையில் நீ தேடும் சீதை
எங்கிருக்கின்றாள் என உனக்கு
இப்போதேனும் தெரிகிறதோ ஓ ராமா!
தாயின்றித் தந்தையின்றி
உடன்பிறப்பாய் ஒருவருமே இங்கின்றி
உற்றார் உறவினருமே எவருமே இங்கின்றி
ஜாதியின்றி மதமின்றி குலமின்றிக் கோத்திரமுமின்றி
நாடின்றி மொழியின்றி துன்பமொன்றே தனதென்று
தனதாக்கிக் கொண்டிட்ட பலகோடி மக்களிடை
எவரையிங்கு சீதையென்று நீயிங்கு தேடிடவே
பூவுலகில் அவதரிக்க உளம் கொண்டாய் சொல் ராமா!
உணர்வின்றி ஒளியின்றி ஒருத்தருமே துணையின்றி
புணர்வொன்றே குறியாகி புரள்கின்ற மாந்தரிடை
தனக்கென்று பலமின்றி நீ வருவாய் எமைக் காப்பாய்
என நம்பி உனக்காக நிதமிங்கு வாழ்கின்ற
கணக்கில்லா சீதைகளைக் கரையேற்ற மன்ம் கொண்டு
நீ வரும் நாள் எப்போது எனக்கதனைச் சொல் ராமா!
என் மகளே நீயின்று! என் சொல்லைக் கேட்டிடுவாய்
நானுனக்கு காட்டுகின்ற மணமகனை மணமுடிப்பாய்
என்றிங்கு ஒரு ராவணன் எனையனுப்பி மனம் மகிழ்ந்தான்!
தனக்கென்றே வந்ததென இன்னொருவன் எனை முடித்தான்!
தன்னடிமை என்றெனவே எனையிங்கு சிறை பிடித்து
தனக்கெனவே கொண்டிட்டு எனையடிமை செய்திட்டான்!
என்னுடலை மாசு பண்ணி என் மானம் கெடுத்திடவே
அவனுக்கு அடிமனத்தில் அச்சமொன்றும் இருக்கவில்லை!
அவனுரிமை என்றெண்ணி என் உள்ளம் அறியாமல்
எனையள்ளிக் கொண்டிட்டான் என் கற்பைச் சிதைத்திட்டான்!
அபலையாய், அனாதையாய், ஆரும் கேளா கொத்தடிமையாய்
வாழ்நாள் முழுவதிலும் ஆயுள் கைதியாய் என்னையவன் சிறை செய்தான்!
கையிலொரு குழந்தையுமாய், கந்தலாடை பற்றியபடி இன்னும் சில குழந்தைகளுமாய்
எனை மீட்க என்று நீ வருவாயோ எனவெண்ணி எதிர்பார்க்கும் சீதைகட்கு
இதோவிங்கு நானிருக்கேன் எனச் சொல்லி வில்லெடுத்து
விடிவளிக்க என்று நீ வருவாயோ எனக்கு சொல்லு என் ராமா!
நாள்தோறும் ஏதோ ஒரு ராவணனின் கைப்பாவை
நான் ஆகிப் போனதினை நீ உணர மாட்டாமல்
ஆண்டுதோறும் பிறக்கின்றாய் அனைவரும் கொண்டாடுகின்றார்!
எனக்கதனில் மறுப்பில்லை என்றாலும் எனக்கின்னும் விடிவில்லை!
இத்தனைக்கும் நடுவினிலே நானிங்கு சுடர்கின்றேன்
எனைக்காத்து உனையெண்ணி என் நாளை வளர்க்கின்றேன்!
தாய் சுமந்து பெறும் வேளை எனையழிக்க சில பேர்கள்!
பிறந்திட்ட பொழுதினிலும் எத்தனையோ சோதனைகள்!
பை சுமந்து பள்ளிக்குச் சென்றிங்கு கற்றாலும்
பெண்ணென்ற பெயர் சொல்லி எனக்கிருக்கும் பல தடைகள்!
அத்தனையும் தாண்டிவந்து ஆளாகி நின்றாலும்
எனையடைந்து எனையழிக்க எத்தனையோ காமுகர்கள்!
இவர்களுக்கு விடை சொல்லி எனைக் காத்து தற்பேணி
நானிங்கு நின்றாலோ எனை வெல்ல பல பேர்கள்!
எல்லாரும் ராவணர்கள்! ராமனே நீயெங்கே!
எனை விடுத்து எமைக் காக்க வருகின்ற வேளை எப்போ!
நீ பிறக்கும் நாளின்றில் உனைக் கேட்கும் ஒரு வரமும்
நானிங்கு உரைப்பேன் கேள்! எனக்காக வந்துவிடு!
படுகின்ற துயர் தீர்த்து பரிசுத்தம் ஆக்கிவிடு!
பட்டதினிப்போதுமைய்யா! படமுடியாதினித் துயரம்!
இனிமேலும் பிறப்பதென்றால் எமக்காகப் பிறந்துவிடு!
அது முடியாதெனிலோ பிறப்பதை நீ நிறுத்திவிடு!
அனைவர்க்கும் ராமநவமி வாழ்த்துகள்!
5 பின்னூட்டங்கள்:
அனைவர்க்கும் ராமநவமி வாழ்த்துகள்!
பிறந்த நாள் அதுவுமாக அவரை கேள்வியால் துளைத்து எடுத்துவிட்டீர்களே!!
பானகம் எந்த கோவிலில் கிடைக்கிறது என்று தெரியவில்லை,குடித்த ஞாபகம் மட்டும் இருக்கு.
இராமன் என்று சொன்னவுடன் அறச்சீற்றம் பொங்கிவிட்டது போல் இருக்கிறது எஸ்.கே. ஆண், பெண், அலி மூவரிலும் பலவிதங்களில் அடிமைப்பட்டுக் கிடக்கும் நம் எல்லோரையும் காப்பாற்ற நமக்கு 'உள்ளே' இராமன் தோன்றட்டும்.
பானகம் நாமே செய்து கொள்ளலாமே திரு. குமார்!
செய்முறை:
வெல்லத்தைத் தட்டி பொடி செய்து, தேவையான நீரில் கரைத்துக் கொள்ளவும்!
அதனுடன், ஏலக்காய் தூள் சிறிது கலந்து, அரை மூடி எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, ஒரு சில ஐஸ்கட்டிகளைப் போட்டுக் கலக்கினால் சுவையான பானகம் ரெடி!
:)))))
ஆமாம் குமரன்.
எல்லாவித அடிமைத்தனங்களும் ஒழிய ராமன் நமக்குள் வரத்தான் வேண்டும்!
மிகச் சரியாகச் சொன்னீர்கள்!
Post a Comment