Sunday, April 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2

"பாரதி" -- சில காட்சிகள்! -- 2


முந்தைய பதிவு


..... "எனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்!
அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்!"....


இப்படிச் சொன்னதற்கே படிப்பவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதை உணர்கிறேன்!

இந்தப் பதிவு நான் மிகவும் மதிக்கும் ஒருவர் சொன்னதற்காக எழுதத் தொடங்கிய ஒன்று!

இதுவரை பாரதியைப் படித்தவர்க்கு இதில் புதிதாக நான் ஒன்றும் சொல்லைவிடப் போவதில்லை என நினைக்கிறேன்!

பாரதியைப் படிக்க எப்படித் துவங்கலாம், இவ்வளவு பெரிய கவிஞன் எனச் சொல்கிறார்களே, இவனை அணுக முடியுமா? என ஒரு பயத்துடன் இவனை இன்னமும் படிக்காமல் இருக்கும் ஒருவரையாவது இந்தப் பதிவுகள் ஈர்த்தால் அதையே ஒரு பெரிய வெற்றியாகக் கருதுவேன்!

இத்தொடரை வரவேற்றுப் பாராட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

சரி!

இப்போது, "அப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்?" என்கிற கேள்விக்கு வருவோம்!

தனது அடுத்த பாடலிலேயே இதற்கான விடையைச் சொல்கிறான் பாரதி!

ஒரு நான்கு நிலைப்பாடுகளைச் சொல்கிறான்!

'கடமை என்றால் என்ன?'

'தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இதையெல்லாம் தர வேண்டி, 'உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்' என ஒரு நான்கு நிலைகளைச் சொல்கிறான்!

இதில் என்ன புதுமை? எல்லாரும் சொல்வதுதானே என்கிறீர்களா?

இங்குதான் பாரதி தன்னை மற்றவரிடமிருந்து முன்னிலைப் படுத்திக் காட்டுகிறான்!

பொதுவாக இந்த முதல் மூன்றையும் சொல்ல வருபவர்கள், தங்களது மதக் கருத்தை முற்படுத்தி வைத்தே சொல்வார்கள்!

ஆனால், பாரதி......?

'விநாயகதேவனாய், வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச்சடை முடியனாய், பிறநாட்டிருப்பொர் பெயர் கூறி, அல்லா! யெஹோவா! எனத் தொழுது அன்புறும் தேவரும் தானாய், திருமகள், பாரதி, உமை எனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும் கடமை எனப்படும்"
எனச் சொல்லிகின்ற பொதுநோக்கின் மூலம் தான் யார் என்பதைக் காட்டுகிறான் பாரதி!

இத்தோடு விட்டானா?

ஏன் இதைக் கேட்கிறேன் எனவும் சொல்கிறான்!
'மணக்குள விநாயகா! வான் மறைத் தலைவா!
தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்!
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் இருதாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே!'


தன்னைக் கட்டுதல் என்கிற சுய ஒழுக்கம் ஒன்றே இங்கு நாமெல்லாம் செய்ய வேண்டிய முதல் செயல் என்னும் பாரதியின் வேண்டலை ஒரு சில நொடிகள் தனியே அமர்ந்து சிந்தியுங்கள்!

'பழியற்று வாழ்ந்து, ஒளி பெற்று, கல்வி பல தேர்ந்து, கடமை எல்லாம் நன்காற்றி, தொல்வினைக் கட்டுகள் எல்லாம் துறக்க வேண்டுமெனில்'
...... தன்னைக் கட்ட வேண்டும்!

அப்படிக் கட்டுபவரால் என்ன செய்ய இயலும்!?? அப்படிக் கட்டுபவர்கள்தாம் சிறந்தவரா?

மேலே சொன்னது போல எல்லாம் துறந்தவர்கள் திறமை பெரிது என ஒப்புக் கொள்கிறான் பாரதி!

ஆனால்,

'இங்கு குறைந்தாரைக் காத்து,
எளியார்க்கு உணவு ஈந்து,
குலமகளும், அறம் தாங்கு மக்களும் வாழ்க என
ஒருவன் வாழ்கின்ற தவ வாழ்க்கை,
அதனினும் பெரிது!'
என்கிறான்!

சரி! இப்படி என்னால் செய்ய முடியவில்லையே என வருந்துபவர்க்கும் ஒரு வழியை உடனே சொல்கிறான்!

'தத்துவம் ஆகியதோர் பிரணவமே! நீ அஞ்சேல் எனச் சொல்லுதியே!'
என வேண்டினால் போதுமாம்!

ஆம்! 'பயப்படாதே!' என "ஓம்" என்கின்ற பிரணவத்தின் மூலப் பொருளான விநாயகன் சொன்னால் போதுமாம்!

இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை?

யார் இதற்குக் காரணமாம்? எது தடுக்கிறது இவர்களை?

அதையும் சொல்கிறான் பாரதி!

அடுத்த பதிவில்!!

2 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Friday, April 25, 2008 9:02:00 AM  

ஆழமான கருத்துகளை எடுத்து வைக்கிறீர்கள் எஸ்.கே. ஆனால் இன்னும் விளக்கங்கள் சொன்னால் தான் பாரதியைப் பார்த்து மலைத்திருக்கும் அன்பர்கள் பாரதியைப் படிக்கத் தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன். இங்கே நீங்கள் எடுத்துக் கொடுத்திருக்கும் வரிகளைத் தனியே அமர்ந்து சிந்தித்துப் பார்க்க பாரதியை ஏற்கனவே படித்திருப்பவர்களால் தான் முடியும். மற்றவர்களுக்கு இன்னும் நிறைய விளக்கம் தேவை.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP