"முடிவில் ஒரு தொடக்கம்!"
"முடிவில் ஒரு தொடக்கம்!"
பொதுவாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி எதுவும் எழுதியதில்லை.
ஆனால், இந்தத் தொடர் என்னை மிகவும் பாதித்தது.
விஜய் தொலைக்காட்சியில், "படிகள்" என்னும் தொடரைப் பார்த்தேன்!
6 நிகழ்வுகளாக இது பிரிக்கப்பட்டு, வந்தது.
அதில் கடைசி நிகழ்ச்சியாக வந்தது, "முடிவில் ஒரு தொடக்கம்" !!
அதைப் பற்றிய ஒரு விமர்சனம் இது!
படியுங்கள்!
முடிந்தால் பாருங்கள்!
வாழ்வில், ஒரு கார்விபத்தில், தன் தவற்றினால் மனைவியையும், தன் உடலின் கீழ்ப்பாகத்தில் உணர்வையும் இழந்த ஒரு முதியவரின் தனிமைச் சோகம்!
யாரையும் அண்டவிடாமல், அருமை மகளையும் கோபித்து ஒதுக்கிவிட்டு பணிப்பெண்களின் உதவியால் காலம் தள்ளும் இவர் வாழ்க்கையில் ஒரு ஈழப் பெண் குறுக்கிடுகிறார், பணிப்பெண்ணாக.
எவரிடமும் எரிந்து விழுந்து, தன் ஆற்றாமையைக் கோபமாக வெளியிட்டு அனைவரையும் துரத்தி அடிக்கும் பெரியவரின் ஜம்பம் இந்தப் பெண்ணின் மீதும் பாய்கிறது.
ஆனால்,.... ஓ! இதென்ன அதிசயம்! இந்தப் பெண் அமைதியாக இவரது ஏசல்களையும், அவமரியாதையையும் சிரித்தபடி தாங்கிக் கொள்கிறாளே!
அது மட்டுமின்றி, அன்புடன், இனிய, தூய தமிழிலும் பேசி இவரை நிமிர்ந்து பார்க்க வைக்கிறாள்.
இவள் பேசும் அந்தத் தமிழ்.... இன்று முழுதும் கேட்டுக் கோண்டிருக்கலாம்.
மூலையில் கிடந்த, மகளுக்காக ஆசையாய் வாங்கி, இப்போது உபயோகமின்றிக் கிடக்கும் மீன் தொட்டியை நடுவீட்டில் வைத்து, அதில் அழகிய தங்க மீன்களையும் விட்டு அழகு பார்க்கிறாள்!
வாய் கொப்பளிக்கத் தண்ணீர் கேட்டவருக்குக் கூடவே அதை வாங்கும் கோப்பையைக் கொண்டுவராததால், கோபத்தில் தரையில் துப்பிய உமிழ்நீரை சாந்தமாய்த் துடைக்கிறாள்.
10 ஆண்டுகளாகப் பார்க்க வராமல், இவர் கோபத்தைக் கண்டு பயந்து வாழும் மகள் குடும்பத்தைப் பெரியவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு அழைக்கிறாள்,... பெரியவர் கூப்பிட்டார் என ஒரு பொய் சொல்லி.!
வந்தவர்கள் அவமானப்பட்டுத் திரும்பும் போது, தன் தவறுதான் இது என வேண்டுகிறாள் அவர்களிடம்.
ஏன் இவர்களைக் கூப்பிட்டாய் எனப் பெரியவர் திட்டிவிட்டு, தன் கண்ணீர்க் கதையை இவளிடம் சொல்லும் போது, ஒரு சலனமுமில்லாமல் இவரைப் பார்க்கிறாள்.
"உனக்கென்ன தெரியும், நீ சின்னப் பெண்தானே! உனக்கு ஒன்றும் புரியாது" என பெரியவர் ஏளனமாய்ப் பேசும் போது, பொங்கி எழாமல், கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட, அமைதியாய், அன்பாய் வழ்ந்த தன் குடும்பம், இராணுவ வீரர்களின் கொடுமையால், தன் கண்ணெதிரே கொலையுண்டதை, மானபங்கப்படுத்தப் பட்ட அவலத்தைச் சொல்லி அழுகிறாள்....... "நானா சின்னப்பெண்? எனக்கா ஒன்றும் புரியாது? என ஒரு வார்த்தை கூடச் சொல்லாமலேயே!
தன் சோகத்தை விடப் பெரியதொரு சோகத்தைத் தாங்கி நிற்கும் இப்பெண்ணைக் கண்டு பிரமித்துப் போய் இருக்கும் பெரியவர் மனம் திருந்தி, ஒரு பாசத்துடன் இவளுக்கு ஒரு அன்பளிப்பு வழங்க முயல,
"ஓ! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஐயா! இதை உங்கள் மகளுக்குக் கொடுங்கள்" எனச் சொல்லி மறுக்கிறாள் இப்பெண்!
சொல்ல மறந்தேன்!
இவள் பெயர் ரேணுகா!
"நீங்கள் எனக்காக ஏதேனும் செய்ய விரும்பினால், என்னுடன் சற்று வெளியில் வந்து வெளியுலகத்தைப் பாருங்கள் ஐயா!" என ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க...
சரியெனச் சொன்னதும் தனக்கு ஏதோ ஒரு பெரிய பரிசே கிடைத்து விட்டது போல் ஒரு புன்முறுவல் பூக்கிறாளே... அது விலை மதிக்க முடியாத ஒரு காட்சி!
சீவி சிங்கரித்து, பவுடர் பூசி, புதுச்சட்டை மாட்டி, கறுப்புக் கண்ணாடி அணிவித்து, வெளியில் செல்லும் வேளையில், .....மனம் மாறி, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது!
வர மறுக்கிறார்.
சுய பச்சாதாபத்தினால், தன் சொந்தங்கள் யாவையும் இழந்து, ஒதுக்கி வாழும் அவலத்தை மீண்டும் இவர் சொல்ல,, "நீ ஒருத்தி மட்டும் ஏன் என்னை விட்டுப் போகாமல் இருக்கிறாய்?" என இவர் வினவ, அதற்கு அமைதியாய் அவரை ஏறெடுத்துப் பார்த்து,"நீங்கள் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள் ஐயா" எனச் சொல்லும் போது பெரியவர் மட்டுமல்ல.. நாமும் கலங்குகிறோம்.
மறுநாள்... ஞாயிற்றுக்கிழமை.. பெரியவர் மெதுவாகக் கேட்கிறார்.."இன்று வெளியில் கூட்டமாய் இருக்குமோ?' என!
ஏன் என ரேணுகா கேட்க, " வெளியில் போகலாமா? என ஒரு பச்சைக்குழந்தையைப் போல, இவளை எப்படியாவது மகிழ்விக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு பெரியவர் கேட்டவுடன்.....
அவ்வளவுதான்! இந்தப் பெண் காட்டும் முகபாவங்கள் இருக்கின்றனவே... அதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!
அதை விடவும் சிறப்பான காட்சி அடுத்து வருவது!
எங்கே இந்தக் கிழம் மீண்டும் மனம் மாறிவிடுமோ என்ற அச்சத்தில், போட்ட பனியனோடு சக்கரவண்டியை நகர்த்தி வீட்டை விட்டு வெளீயில் அவசர அவசரமாகத் தள்ளிச் செல்கிறாள், மலர்ந்த சிரிப்புடன்!
நாமும் சிரிக்கிறோம்.
பெரியவரை ஒரு பார்க்குக்கு அழைத்துச் சென்று, குழந்தைகள் விளையாடும் இடத்தருகே கொண்டு சென்று, அவரை ரசிக்க விட்டுவிட்டு, இந்தப் பெண் தனியாக ஒரு பெஞ்சில் சென்ற அமர்கிறாள்.
இவர் ரசித்துச் சிரிப்பதைக் கண்டு தானும் சிரிக்கிறாள்.
மாகோவின் நடிப்பும், இந்தப் பெண்ணின் நடிப்பும் மறக்க முடியாத ஓர் அனுபவம்.
குறிப்பாக ரேணுகாவாக நடித்தவர்!
நவரசத்தையும் பிழிந்தெடுத்துத் தந்திருக்கிறார்!
கூடவே இனிய தமிழ் விருந்தும்!
நான் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு தொடர் இது!
15 பின்னூட்டங்கள்:
வேண்டாத எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே நிறந்த சின்னத்திரையிலும் இப்படி ஒரு தொடரா, சிக்கென்று...
வாவ்!
மற்ற பிரபல தொலைக்காட்சிகளை விடவும், விஜய் டி.வி.யின் நிகழ்ச்சிகள் ரசிக்கும்படியே இருக்கின்றன என்பது என் கருத்து.
புதுவிதமாகச் சிந்திக்கிறார்கள்.
இந்தத் தொடர் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ஒன்று.
நடிப்பவர்கள் எல்லாரும் அந்த ஊர் நடிகர்கள்!!
நல்லதைச் சொல்ல எனக்கு நடுக்கமில்லை!
பார்ப்பதில் உங்களுக்கேன் தயக்கம்... நண்பர்களே!
பூங்காவில் விளையாடும் இரு சிறுவர்கள் வந்து சக்கரகாலியில் அமர்ந்த பெரியவரிடம் "நீங்கள் இங்கே வாழ்கிறாயா? உன்னை பார்த்தது இல்லையே என்பார்கள்"
ஆமோங்க அக்கா
இல்லை அக்கா
வாருங்கள் அக்கா
கோவைதமிழில் வாங்கோ ஐயா என்போம்
அவள் வாருங்கள் ஐயா என்றாள்
தொலைகாட்சி தொடர்களில் காணும் அழுகைகள் சிரிப்புதான் வரும்.
ஆனால் இந்த தொடர் அந்த ஈழபெண்ணால்தான் கண்ணீர் வர வைக்கும்..
அந்த பெரியவர் மாகோ அவர்களா என்பது என் ஐயம். முன்பு பார்த்த நிகழ்ச்சியில் போல் இல்லை
பி.கு: தமிழ்ல் பேச தெரியாத பேரனிடம் நானும் பேசமாட்டேன். போடா வெளியே உங்க அப்பனோடு என்பேன்.
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
வாசிக்கும் போதே உணர முடிகின்றது கதையின் ஆழத்தை..
!!..
தினமும் நெருப்புக் குளியல் என்றாலும் தன் மூச்சின் வெப்பம் கூட யாரையும் சுட்டு விடக்கூடாது எனும் பண்பு!! இயல்பாய் வரவேண்டியது அந்த இயல்பை வெளிக்கொண்டுவரும் பாத்திரமாகவே மாறிவிட்ட 'ரேணுகா"....பாராட்டப்பட வேண்டியவர் தான்..
விஜி
ஆமாம் ஐயா!
கோவை கேரளா பக்கலில் இருப்பதால், ஈழத்தமிழும், கொஞ்சம் மலையாளம் சாயலில், ஆனால், தூய்மையான செந்தமிழில் இருப்பதால் நீங்கள் சொல்வதும் பொருத்தமாகவே இருக்கிறது.
ஈழப்பெண் ரேணுகா கண்ணீர் வரவழைத்தது உண்மையே!
நன்றி!
நான் முழநீளம் சொல்லியதை அற்புதமாக ஒற்றை வரியில் சொல்லிவிட்டீர்கள் விஜி அவர்களே!
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்!
இந்த ஒரு 'ரேணுகா"வின் மூலம் இதுபோல தினந்தினம் நெருப்புக் குளியலிடும் பல "ரேணுகா"க்களை என்னால் உணர முடிந்தது!
இதுவே இதன் வெற்றி!
திரை விமர்சனப் பதிவுகளுக்கு இடையில் சின்னத்திரை விமர்சனமா?
கலக்குங்க SK
எனக்கென்னவோ விமர்சனம் மாதிரியே தெரியலை!
நீங்கள் கண்டதையும் அதில் கரைந்ததையும் அப்படியே கண் முன் வைத்துள்ளீர்கள்.
மால்குடி டேஸில் கூட இப்படி ஒரு தாத்தா வருவார். அவங்க குட்டிப் பேத்தி அவரின் மனச் சிதைவை எவ்வளவு இயல்பா மாற்றுவாள் என்பதைக் காண்பிப்பார்கள். இது போல உறவுக் கதைகளை அவ்வப்போது தாருங்கள் SK!
இதையும் படித்து, இப்படி ஒரு உணர்ச்சிமயமான பின்னூட்டம் இட உங்களால் மட்டும்தான் முடியும் ரவி!
மிக்க நன்றி.
நீங்கள் கூறும் போதே மனதில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி கதையை பார்த்து மகிழ்ந்தேன். அருமையாக உள்ளது எஸ் கே அய்யா. சின்னத்திரையில் வரும் தொடர்களில் இது சிறிது வித்தியாசமானது தான்.
சுருக்கமாக ஒரு மூன்று எபிஸோடுகளில் சொல்லி முடித்திருந்தார்கள் இத்தொடரை!
வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கத் தவறாதீர்கள், அன்புத்தோழியே!
நீங்கள் ரசித்ததை அருமையாக சொல்லி உள்ளீர்கள், ஐயா!
ம்ம்ம்.... சின்ன திரையில் இப்படி ஒரு தொடரா? விஜய் டி.வி.யில் செய்திகள் கிடையாது என்பதுதான் அதை எடுக்கவில்லை!
உங்களுக்கு ஒரு தகவல், தென்றலே!
பொய்யான செய்திகளைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பார்க்கப் பிடிக்காமல்தான், நான் விஜய் டி.வி.க்கு மாறினேன்!
:))
இந்த குறிப்பிட்ட படிகள் நாடகத்தில் நடித்தது அடியேன்தான்.
என்னை அறுபது வயது கிழவனாக 'முகமாற்றம்' செய்துவிட்டார்கள். எனக்கும் தமிழ்நாட்டு 'இளையர்' திருமிகு ஸ்டாலின் அவர்களுக்கு ஒருவயதுதான் வேறுபாடு.
ஹே.. ஹே..
மாகோ (சிங்கை)
தெரியும் ஐயா!
உங்களிடம் இருந்து அந்த நாடகத்தின் டிவிடி வருமென்று இன்னமும் காத்திருக்கிறேன்!
நீங்களும், அந்த சிங்களப் பெண்ணாக நடித்தவரும் மிகவும் இயற்கையாகவும்,அற்புதமாகவும் வாழ்ந்திருந்தீர்கள்!
:))
Post a Comment