"பரிசேலோர் எம்பாவாய்" [10]
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10
10.
[மேலும் சிவனாரின் பெருமையை வியந்து, அனைவரும் பாடுவது, திருக்கோயில் பணி செய்யும் பெண்டிரிடம் வினாவுவது:]
பாதாளம் எனப்படும், பூமிக்குக் கீழிருக்கும் ஏழு உலகங்களையும் தாண்டி
சிவனாரின் திருப்பாத கமலங்கள், சொல்லுதற்கும் எட்டா தூரத்தில் உள்ளன;
கொன்றை மலர்களால் நிறைந்துள்ள கட்டிய சடைமுடியும் எல்லாப்
பொருள்களின் எல்லையையும் தாண்டி விரிந்து பரந்திருக்கின்றன;
மலைமகளாம் உமையினை தன் ஒருபாகம் வைத்தவன் அவன்;
அவனது திருவுருவங்களோ ஒன்றிரண்டு எனச் சொல்லவொண்ணாது;
நான்மறைகளும், விண்ணவரும், மண்ணிலுள்ளோரும் வணங்கித் துதித்தாலும்
இத்தன்மையானவன் எனச் சொல்ல முடியாத பேரருளாளன்;
என்றும் நம் துணைவன்; நண்பன்; அவன் இருக்கும் இடமோ அவனது
திருத்தொண்டர்களின் உள்ளமெனும் கோயிலிலே!
சொல்லொணா குணமுடைய சிவனது திருக்கோயிலில் அருட்தொண்டாற்றி வரும்
குற்றமொன்றும் இல்லாத குலப்பெண்களான பணிப்பெண்களே!
அவன் வசிக்கும் ஊர் எது? அவனது பெயர்தான் என்ன?
எவர் அவனது உறவினர்கள்? யாரெல்லாம் உறவினர் ஆகமாட்டார்?
அவனை முறைப்படி வாழ்த்தி வணங்கிப் பாடும்
வழிமுறைதான் என்னே? சொல்லுங்களேன் பெண்டிரே!
அருஞ்சொற்பொருள்:
சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.
Sunday, December 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 பின்னூட்டங்கள்:
//அவன் வசிக்கும் ஊர் எது? அவனது பெயர்தான் என்ன?
எவர் அவனது உறவினர்கள்? யாரெல்லாம் உறவினர் ஆகமாட்டார்?
//
ஐயா,
இந்த கேள்விகளுக்கு விடை தெரிய ஆவ்ல். விளக்குவீர்களா ?
அடுத்து வரும் சில பாடலக்ளை கவனமாக நோக்கவும், கோவியாரே!!
//போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே//
அழகான சொல்லாட்சி; புனை முடியும் இறைவனிடத்தில் எல்லாப் பொருட்களும் முடிந்து நிறைந்து விடுகின்றனவே!
//கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்//
பிணாப்பிள்ளைகாள் - சொல் விளக்கம் தாருங்கள் SK ஐயா!
"கோயில் பிணாப்பிள்ளைகள்" என்பது கோயிலில் பணி புரியும் பெண்கள் என இருக்கிறது, நான் படித்த உரையில்.
பிணா என்றால் பெண் எனப் பொருள்
பிணாப்பிள்ளை என்றால் பெண் பிள்ளை
கோயில் பிணாப்பிள்ளைகாள் எனின், கோயில் பெண்டிர் என வருகிறது.
அரன் கோயில் பிணாப்பிள்ளைகாள் சிவன் கோயிலில் பணி புரியும் பெண் பிள்ளைகள்.
இவர்கள் குற்றமற்ற குலத்தில் பிறந்த பெண்டிர் என்பதை 'கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளகாள்' எனச் சொல்கிறார்.
[கோது= குற்றம்; கோது+இல்= குற்றமற்ற]
அந்தக்காலத்தில், கோயில் பணிக்கென பெண்கள் இருப்பது வழக்கம் என அறிகிறேன், ரவி.
:)
பிணாப்பிள்ளைகாள் - சொல் விளக்கம் அருமை SK ஐயா!
அதுவும் கோதில் குலத்து பிணாப்பிள்ளைகாள்!
நன்றி தங்கள் விளக்கத்திற்கு!
Post a Comment