Monday, December 25, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" [11]

"ஆடேலோர் எம்பாவாய்" [11]

திருப்பாவை 30 பாடல்கள்; ஒரு மாதம் சரியாக வரும். ஆனால், திருவெம்பாவை 20 தானே! எப்படி மார்கழி முழுதும் வரப்போகிறது எனக் கேட்டார்கள்.
தோழியரை எழுப்ப முதல் 15ம், பின்னர் அரங்கனையும், அவன் சுற்றத்தையும் எழுப்பியும், போற்றியும், அடுத்த 15ம் ஆண்டாள் பாடியருளியிருக்கிறார்.

மாணிக்க வாசகரோ, ஒரு படி மேலே போய்,
தோழியரை எழுப்ப முதல் 10, அவன் பெருமை பாடி குளத்தில் நீராடி அடுத்த 10,[இரண்டும் சேர்த்து திருவெம்பாவை] பின்னர் திருக்கோயிலுக்குச் சென்று, சிவனாரையே எழுப்பிப் போற்றும் அடுத்த 10 [திருப்பள்ளி எழுச்சி] என 30 பாடல்கள் பாடித் தந்திருக்கிறார்!!

அந்த வகையில், "பூம்புனல் பாய்ந்து ஆடும்" அடுத்த பத்து பாடல்களைப் பார்க்கலாம்!!

இவை "ஆடேலோர் எம்பாவாய்" எனும் தலைப்பில் வரும்!


"ஆடேலோர் எம்பாவாய்" [1]

11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி


ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

11.
மலர் நிறைந்ததால் வண்டுகள் மொய்க்கின்ற தடாகத்தில் இறங்கி
முகம் மேலே தெரியக் கைகளால் துழாவித் துழாவி நீராடுகையில்
உன் திருவடிதடங்களைத் தேடுவதாய் எண்ணி, அக்கழல்களின்
பெருமையினைப் பாடி வழிவழியாய் வணங்கிட்ட உன் அடியவராம்
நாங்கள், பெறற்கரிய வாழ்வினைப் பெற்றோம் என் ஐயனே!

சுடர்விட்டு எரிகின்ற செந்தழல் போல் சிவந்தநிறமுடையானே!
திருநுதலில் வெண்ணீறு பூசி நிற்கும் செல்வனே
சிற்றிடையும், மை பூசிய அகன்ற விழிகளையும் உடைய
உமையவளின் அழகிய மணவாளனே! எங்கள் ஐயனே!

எங்களையும் ஒரு பொருட்டாக எண்ணி திருவிளையாடல் புரிந்து
நீவிர் ஆட்கொண்ட திறத்தால், உமது அடியவர்கள்
அடைகின்ற சிவாநுபவத்தை யாமும் அடைந்து போனோம்!
இதன் விளைவால் நாங்கள் தளர்ச்சியுறா வண்ணம்
எங்களைக் காத்தருள்வாய்! எனப் பாடடி என் பெண்ணே!

[குளிக்கையில், கைகளை அசைத்து அசைத்து நீந்துகையில், அவன் கழல்களைத் தேடுவதாக உணர்கின்றனர் இவர்கள்! அதில் மெய்மறந்தோ, அல்லது, உலகியல் வழியாகவே, நீந்துவதால் ஏற்படும் களைப்பு தெரியாமல் இருக்கவும், அதற்கும் சிவனையே வணங்கும் இவர்கள் அநுபவம்தான் எத்தகையது!]

அருஞ்சொற்பொருள்:
மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

8 பின்னூட்டங்கள்:

SK Monday, December 25, 2006 4:47:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

கோவி.கண்ணன் [GK] Monday, December 25, 2006 8:43:00 PM  

//sk said...திருப்பாவை 30 பாடல்கள்; ஒரு மாதம் சரியாக வரும். ஆனால், திருவெம்பாவை 20 தானே! எப்படி மார்கழி முழுதும் வரப்போகிறது எனக் கேட்டார்கள்.
தோழியரை எழுப்ப முதல் 15ம், பின்னர் அரங்கனையும், அவன் சுற்றத்தையும் எழுப்பியும், போற்றியும், அடுத்த 15ம் ஆண்டாள் பாடியருளியிருக்கிறார்.

மாணிக்க வாசகரோ, ஒரு படி மேலே போய்,
தோழியரை எழுப்ப முதல் 10, அவன் பெருமை பாடி குளத்தில் நீராடி அடுத்த 10,[இரண்டும் சேர்த்து திருவெம்பாவை] பின்னர் திருக்கோயிலுக்குச் சென்று, சிவனாரையே எழுப்பிப் போற்றும் அடுத்த 10 [திருப்பள்ளி எழுச்சி] என 30 பாடல்கள் பாடித் தந்திருக்கிறார்!!//

ஐயா,

உங்கள் விளக்கம் மூலம்,
திருப்பாவை - வைணவ பாடல்கள் என்றும்
திருவெம்பாவை சைவ பாடல்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

பாடல் பகுதி 11க்கு ஆன விளக்கமும் மிக நன்றி !

kannabiran, RAVI SHANKAR (KRS) Monday, December 25, 2006 9:38:00 PM  

//மாணிக்க வாசகரோ, ஒரு படி மேலே போய்,
தோழியரை எழுப்ப முதல் 10, அவன் பெருமை பாடி குளத்தில் நீராடி அடுத்த 10 பின்னர் திருக்கோயிலுக்குச் சென்று, சிவனாரையே எழுப்பிப் போற்றும் அடுத்த 10 //

ஆண்டாள் இன்னுமொருபடி மேலே போய், ஊரில் ஒருவ்ர் விடாது அத்தனை பேரையும் முதல் 15இல் எழுப்பி, பின்னர் இறைவன் வீட்டுக்குச் சென்று, காவலனை எழுப்பி, மொத்த குடும்பத்தையும் தன் பக்தியால் எழுப்பி, பின்னர் இறைவனை எழுப்பி, இறைவனுடனே சேர்ந்து நீராடும் அற்புதக் காட்சி என்னே என்னே!! :-)))

//இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்//

SK Monday, December 25, 2006 9:49:00 PM  

முதல் பின்னூட்டத்திற்கு நன்றி, கோவியாரே!

SK Monday, December 25, 2006 9:50:00 PM  

அந்தப் பாடலும் 20வது பாடலாக வருவதைக் கவனித்தீர்களா, ரவி!

SK Monday, December 25, 2006 9:58:00 PM  

ஆதியும், அந்தமும் இல்லா இறைவனுக்கு, ஆர் உற்றார்? ஆர் அயலார்?

யாரைக் கூப்பிட்டு எழுப்புவது?

அதுதான் அடுத்த 10 பாடல்களுக்கு நீர்ரடுகின்றனர் போலும்!

சரியா, ரவி?

Anonymous,  Tuesday, December 26, 2006 6:44:00 AM  

//ஆதியும், அந்தமும் இல்லா இறைவனுக்கு, ஆர் உற்றார்? ஆர் அயலார்?//

ஆம் ஸ்கே அவர்களே, அதனால் தான்

"ஆதியந்தம் இல்லா ஹரனே, அன்பர் உள்ளம் வாழும் குகனே" என்றார்களோ?....
மெளலி...

SK Tuesday, December 26, 2006 8:22:00 AM  

இப்படிக் கொள்ளலாமே!

அனைத்து ஜீவராசிகளையும் இணைக்கும் கயிறு சிவன்;
அவற்றின் உள்ளிருக்கும் பிழம்பு மருகன்;
இவற்றையெல்லாம் காப்பவன் மாலன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP