Saturday, December 23, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [9]

"பரிசேலோர் எம்பாவாய்" [9]

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

[ஒருவழியாக, அனைவரையும் எழுப்பிச் சேர்த்த பின்னர், அவன் பெருமையைப் பாடியவண்ணம்.....] அனைவரும்:

பழமையென இவ்வுலகில் சொல்லும் அனைத்துப் பொருள்களுக்கும்
பழமையாக முந்தி நிற்கும் பெரும் பொருளாம் சிவபரனே

பின்னர், புதுமையென ஒவ்வொன்றாய்த் தோன்றி வருகின்ற
அனைத்திற்கும் இன்னும் புதுமையினை அளிப்பவனே!

உன்னை எங்கள் தலைவனாகப் பெறும் பேறு பெற்ற
உன்னடியவரான நாங்கள் என்றும் உன் அடியார்களை
வணங்கிடுவோம்! அவர்களை எம் உற்றவராகக் கொள்வோம்!
அத்தகைய அடியாரையே நாடி மணம் புரிவோம்!
அவர்கள் சொல் கெட்டு அவர்களுக்கு அடியவராகி
அவர் இடும் பணியினையும் செய்திடுவோம்!

இவ்வாறே எங்கட்கு எம்பிரானாகிய நீவிர் அருள் செய்தால்
ஏதாகிலும் குறையுமுண்டோ! சொல்லடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை

9 பின்னூட்டங்கள்:

VSK Saturday, December 23, 2006 10:25:00 PM  

எம்.எல். வசந்தகுமாரி பாடிய திருவெம்பாவைப்பாடல்களை இங்கே கேட்கலாம்.

http://www.musicindiaonline.com/music/devotional/s/album.374/diety.8/

கோவி.கண்ணன் [GK] Saturday, December 23, 2006 11:16:00 PM  

//இவ்வாறே எங்கட்கு எம்பிரானாகிய நீவிர் அருள் செய்தால்
ஏதாகிலும் குறையுமுண்டோ! சொல்லடி என் பெண்ணே!//

ஆக அந்த பெண் எழுந்துவிட்டாள் போல் இருகிறது.
சொல்லுவதை சொல்லும் விதத்தில் சொன்னால் எவரும் ஈர்கப்படுவர் என்பது உங்கள் எழுத்துகளில் இருந்தும் கண்டு கொண்ட உண்மை.

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, December 24, 2006 7:29:00 PM  

முதல் பாடலில் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி என்றவர்,
இப்போது
ஆதிக்கும் ஆதி = முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே என்றும்
அந்தத்துக்கும் அந்தம் = பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே

என்று கூறுவது இன்னும் சிறப்பு!

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, December 24, 2006 7:34:00 PM  

உன்னைப் பிரானாகப் பெற்று விட்டோம். இனி,
உன்னடியாரை மணாளனாகப் பெறுவது தான் வாழ்வு என்ற வேண்டுதல் எவ்வளவு சிறப்பு!

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் = யாதும் மறுக்காத மலையப்பா, குறையொன்றுமில்லை மறை மூர்த்தி...

VSK Sunday, December 24, 2006 7:55:00 PM  

அட! மிகச் சரியகப் புரிந்து கொண்டு விட்டீர்களே, கோவியாரே!

அடுத்த பதிவுகளில் இதற்கு விளக்கம் கிடைக்கும்!

VSK Sunday, December 24, 2006 7:56:00 PM  

ஆதி இல்லாதவர் என்றாலே ஆதிக்கும் முன்னவர் என்றுதானே பொருள், ரவி!

:))

VSK Sunday, December 24, 2006 7:59:00 PM  

//என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் = யாதும் மறுக்காத மலையப்பா, குறையொன்றுமில்லை மறை மூர்த்தி...//

"ஏதாகிலும் குறையுமுண்டோ! சொல்லடி என் பெண்ணே!"
இந்த வரிகளைப் போட்டதுமே, அதை எடுத்துக் கொண்டு கோதையடியார் யாராவது வருவார்கள் என நினைத்த என் கருத்தை, நிரூபித்ததற்கு மிக்க நன்றி, ரவி!

குமரன் (Kumaran) Saturday, December 30, 2006 6:17:00 PM  

மிக அருமையான பாடல் இது எஸ்.கே. பெண்ணாய்ப் பிறந்தவர்கள் மட்டுமின்றி ஆண்மக்களும் பாடலாம் இதனை. கணவன் என்ற இடத்தை மட்டும் கொஞ்சம் மாற்றி மனைவி என்று இட்டு. அந்த குறையில்லா வாழ்வு அமைவதே இறைவன் கொடுத்த வரம்.

VSK Saturday, December 30, 2006 6:35:00 PM  

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், குமரன்!

நம் அனைவர்க்கும் உகந்த பாடல் இது!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP