Saturday, September 23, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [4]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 10 -- "கருவடைந்து" [4]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் "குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ"

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[நான்காம் பகுதி]

"குழந்தை வடிவாகி கழுவி அங்கு எடுத்து,
சுரந்தமுலை அருந்துவிக்கக் கிடந்து,கதறி,
அங்கு கை கொட்டித் தவழ்ந்து, நடமாடி,
அரைவடங்கள் கட்டி, சதங்கை,இடுகுதம்பை, பொற்சுட்டி, தண்டைஅவையணிந்து,, முற்றிக் கிளர்ந்து "

குழந்தையென வந்துதித்த பின்னர்
அதனைக் கழுவிக் குளிப்பாட்டி,
தாயின் முலையினின்று சுரந்திட்ட
பாலருந்த பக்கவாட்டில் கிடந்து,

ஓர் கணம் கதறலும், உடனேயே
கைகொட்டிச் சிரித்தலும் மாறி மாறிச் செய்து
பின்னர் உடல் திருப்பி,மார்பினால் தவழ்ந்து,
இன்னும் உடலெழுப்பி நின்று நடை பழகி,

துணையென்று ஒலிகேட்கத் தாயவளும்

இதன் இடையில் அரைவடம், கால்களிலே சதங்கை
காதசையக் காதணிகள், கைவிரலில் மோதிரம்
இவையெல்லாம் அணிவித்து அழகு பார்த்து

பசியறிந்து, தன் ருசியறிந்து
உடல் வலு சேர்க்க பதம் அறிந்து
தாயவள் ஊட்டிய அன்புச் சோற்றினால்
உடல் நன்கு முற்றி வலுவடையும் அந்த,

"வயதேறி அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து"

பதினாறு வயதினிலே, தான் பிறந்த
பயனறியாது, காலத்தின் உயர்வறியாது,
உய்யக் கரை சேரும் வழி அறியாது
பருவக்கிளர்ச்சியால் மனம் சஞ்சலித்து

கண்ணில் படுகின்ற பெண்களின் கருத்தைக்
கவர எண்ணி அதுபற்றியே சிந்தித்து
அவருடன் இணக்கமாக வழியனைத்தும்
தேடுவதில் காலத்தைச் செலவிட்டு,

"பிணியுழன்று சுற்றித் திரிந்தது அமையும்"

பல்வேறு வகையாலும் பாவச் செயல்களைப் புரிந்து
அதனாலே பல்வேறு விதமாய நோய்நொடி அடைந்து
துன்புற்று, பாவ, புண்ணியங்களால் மீண்டும் மீண்டும்
இப்பூவுலகில் வந்து உழற்படா வண்ணம் அருளுகின்ற

"உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ ?"

நின்னுடைய கருணைத் திறனை
நான் பெறும் நாள்தான் எந்நாளோ?

[இத்துடன் இந்த சிறிய தொடர் நிறைவுற்றது!
இதில் சொன்ன பல நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு சிந்திக்க உதவும் என்னும் நம்பிக்கையுடன் தாற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!
பின்னூட்டங்கள் இடவும்!
அவை படித்து பிரசுரிக்கப் படும்!
திரும்பி வந்ததும் விரிவாக பதிலிட முயலுவேன்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

6 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Saturday, September 23, 2006 4:38:00 PM  

குழந்தை பிறந்து வளர்வதை மிக நன்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். 'அவனி தனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து' என்ற திருப்புகழிலும் அருணகிரிநாதர் இப்படி விரிவாகப் பேசியிருப்பார்.

VSK Monday, October 02, 2006 10:14:00 AM  

மிக்க நன்றி, குமரன்!

இப்பதிவுக்கு நிறையப் பின்னூட்டங்கள் வரும் என எதிர்பார்த்தேன்.

பார்வையினின்று அகல, மனதினின்றும் மறையும் என்ற பழமொழி மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

G.Ragavan Monday, October 02, 2006 1:13:00 PM  

எஸ்.கே. சின்னஞ்சிறு குழந்தை பிறந்து அதாவது ஈன்று புறம் வந்து சான்றோகாமல் நன்னெறி நல்காமல் கொல்லன் வடித்துக் கொடுத்த வேலைக் காணாமல் அழகுறு மாதர் விழிகள் என்னும் வேலைக் கண்டு அதனையே சிந்தையில் கொண்டு எந்நாளும் அதையே சிந்தையில் உண்டு உழலும் ஒவ்வொரு இளைஞனும் ஒரு பொழுதேனும் கந்தனை நமது சொந்தனைக் கொண்டாடினால் வாழ்நாளில் திண்டாடினான் என்ற நிலை வராது போகும். உண்மை. உண்மை. உண்மை.

VSK Monday, October 02, 2006 2:04:00 PM  

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே [க.அ. 72]

இதனை அழகுற விளக்கியிருக்கிறீர்கள், ஜி.ரா. நன்றி!

அத்தனையும் உண்மை!

முருகனருள் முன்னிற்கும்!

Unknown Wednesday, February 17, 2010 3:28:00 AM  

ஒரு நிமிடம் சிந்திக்க பெற்றென்.
.மக மகபேறு அடைய...
.அவனிதனில் அழகன் பிறக்க .கார் மயில் காந்தனை வரவேற்க
.திருப்புகழ் பாயில் தவளவிட உன் கருணை காற்றலை கான.
பெரும் நாள் தான் எந்நாளோ /? ஒரு நிமிடநேர மட்டில் (தியானம்)...........சித்ரம் ..

VSK Friday, February 19, 2010 1:31:00 PM  

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! உண்மை! நன்றி. மு.மு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP