Saturday, September 23, 2006

"அ.அ.திருப்புகழ்" -- 10 "கருவடைந்து" [3]

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"-- 10 -- "கருவடைந்து" [3]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
இது மூன்றாம் பகுதி! [முதல் இரு பகுதிகளும் படித்தாயிற்றா?!]
[பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

"கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[மூன்றாம் பகுதி]

"கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றி"

[இந்த ஐந்து சொற்களுக்கு ஒரு அழகிய விளக்கம் கண்டேன்!
எந்தவொரு விஞ்ஞான வசதிகளும் இல்லாத அக்காலத்தில், எவ்வளவு சரியாக இதைச் சொல்லியிருக்கிறார்கள் என எண்ணியதால், அதை இங்கு எடுத்துரைக்க விழைகிறேன்.]

தாம் செய்த நல்வினையும் தீவினையும்
அதன் பயனும் நுகர்ந்த பின்னர்,
கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு
விண்ணினின்று மழை வழியே, இறைவனாணையால்

பூவுலகம் வருகின்ற உயிர்களனைத்தும்
காய், கனி, மலர், நீர், தானியம்
இவற்றினுள்ளே கலந்து நின்று,
அதையுண்ட ஆணிடம் கலந்த வண்ணம்,

அறுபது நாள் அவன் கருவில் இருந்தபின் விந்தாகி
பெண்ணுடனே சேருகின்ற காலத்தில்
கருமுட்டையுடன் கலக்கின்ற விந்தையினை
அருணையாரும் சுருங்கக்கூறி விளக்குகின்றார்

கருப்பம் உண்டாகும் நற்காலம்
ருதுவென்று பெயர் விளங்கும்
மாதவிடாய் ஆன நாள்முதல்
பன்னிரன்டு நாட்கள்வரை ருதுவாகும்

விலக்கு முதல் நான்கு நாட்கள்
சங்கமித்தல் ஆகாது
ஐந்து முதல் பதினைந்து வரை
ஒற்றைப்படை நாட்களிலே சங்கமித்தால்
பெண் மகவு பெற்றிடலாம்

இரட்டையான நாட்களிலோ, அதாவது,
ஆறு முதல் பதினாறு வரை நாட்களில்
சங்கமமோ ஆண் குழந்தை
பிறக்குமென்று சொல்லி வைத்தார்.

கருப்பையின் வாய் அங்கு
குவிந்து போவதனால்
அதன் பின்னர் கருத்தரிக்கும்
வாய்ப்பெதுவும் இருப்பதில்லை.

ருது கழிந்த நான்காம் நாளினிலும்
பகற்பொழுதிலும் சேர்ந்தங்கே
கருவொன்று வருமாயின் ஆயுள், அறிவு,
செல்வம் இவை குறைந்த மகவு தோன்றும்.

ஐந்தம் நாள் கருத்தரிக்கின்
பெண் மகவு தோன்றி வரும்
ஆறாம் நாள் கருத்தரிக்கின்
மத்திமமாய்ப் பிள்ளை வரும்

ஏழாம் நாள் பெரும்பாலும்
கருவொன்றும் வருவதில்லை
எட்டாம் நாளோ குணமிக்க
பெண்மகவு உருவாகும்

ஒன்பதம் நாள் கருவுறின்
நலம் சேர்க்கும் பெண் வந்திடும்
பத்தாம் நாளில் பார் புகழும்
உயர்ந்த ஆண்மகன் வருவான்

பதினோராம் நாள் கருத்தரித்தால்
தரம் குறைந்த தருமமற்ற
பெண் மகவு வந்து உதிக்கும்
பனிரண்டாம் நாளன்று உத்தமனும் வந்திடுவான்

பதிமூணாம் நாள் வரும் பெண்ணோ
பலரை விரும்பும் குணமுடையாள்
பதினாலாம் நாளன்று ஜனிப்பவனும்
உலகாளும் நன்றியுள்ள மகனாவான்

பதினைந்தாம் நாளுதிக்கும் பெண்ணவளோ
பார்புகழும் பேரரசன் பத்தினியாய்
பல்வகைப் பெருமயெலாம் பெற்றிட்டு
உத்தம புத்திரரும் பெறுவாள்

பதினாறாம் நாள் திருக்குமரன்
கல்வி கலைகளிலே தேர்ச்சி பெற்று
நல்லொழுக்கம் மிக்கோனாய்ப் பலராலும்
விரும்புகின்ற பாக்கியவானாய் ஆவானாம்.

முழுநிலவோ, கருநிலவோ,
அட்டமியோ, சஷ்டியோ, துவாதசியோ
இந்நாளில் அமையுமாயின்
அந்நாளில் சேர்க்கை தவிர்த்திடவும்.

கருவொன்று உதித்த பின்னர்
அது வளரும் நிலையினையை
முன்னோர்கள் சொன்ன
வாக்கைஇப்போது காண்போம்!

விந்தும் முட்டையும் சேர்ந்த கரு
இரண்டும் கலந்ததாலே திரவமாகி நிற்கும்
ஏழாம் நாளினில் அது ஒரு மலர் போல விரியும்
பதினந்தாம் நாளினில் அது சற்றே இறுகிவரும்

ஒரு மாதம் போனபின்னர் இன்னும் கடினமாகி
இரண்டாம் மாதத்தில் தலையொன்று முளைத்துவரும்
மூன்றாம் திங்களிலே கால்கள் தோன்றவரும்
நாலாம் திங்களிலே விரல், வயிறு, இடுப்பென

தனித்தனியே பிரிந்து உருத் தோன்றும்
ஐந்தாம் மாதத்தில் முதுகெலும்பு ஊன்றிவரும்
ஆறாம் திங்களிலே கண், மூக்கு, செவி உதிக்கும்
ஏழாம் மாதம் ஜீவன் வந்துதிக்கும் [Viable]

எட்டாம் மதத்தில் அங்கமெல்லாம் வளர்ச்ச்சி பெறும்
ஒன்பதாம் திங்களிலே முன் ஜென்ம நினைவு வரும்
மீண்டும் இந்த பிறப்பு இறப்பென்னும்
துன்பமதில் விதித்தாயே என்னிறைவா என வருந்தும்

தன் துன்பம் மிக நினைத்து தானங்கே வாடுகின்ற
ஒன்பதாம் மாதத்தில் இறைவனிடம் முறையிட்டிடினும்
யோனித்துவாரம் வழி வருகையில் ஏற்படும் துன்பத்தால்
அவை அழிந்து, முன் நினைவு மறந்து போகுமாம்.

பத்தாம் திங்களிலே, தனஞ்சயன் எனும்
வாயுவால் தள்ளப்பட்டுத், தலைகீழாய்
சிசுவங்கே வெளிவரும் நேரத்தில்,
மலையினின்றுஉருட்டப்படும் துன்பத்தை அனுபவிக்கும்.

[மீதி வரிகளுக்கு அடுத்த பதிவில் பொருள் விளக்கமளித்து முடித்து விடலாம்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!

8 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Saturday, September 23, 2006 4:37:00 PM  

அம்மாடி. மிக நன்றாக விரித்து எழுதியிருக்கிறீர்கள் எஸ்கே. இந்தச் செய்திகளை வேறெங்கோ ஏற்கனவே படித்திருக்கிறேன். முதல் செய்தியான மழை வழியே தானியங்கள் வழியே ஆணிடம் உயிர் சேர்ந்து முதலில் வளர்வது பின் பெண்ணிடம் சேர்வது போன்றவற்றை வாரியார் சுவாமிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். மற்றவற்றை ஏதோ ஒரு புத்தகத்தில் (துலா காவேரி மஹாத்மியமோ கார்த்திகை புராணமோ நினைவில்லை) படித்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் [GK] Saturday, September 23, 2006 10:58:00 PM  

மருத்துவம் அறியா அந்நாளில்
விருத்தம் பாடி, மக்கள் பேற்றின்
கருத்ததையும், கருவுற்றல்லின் க்ஷனத்தை
பொருத்தமாய் இயம்பும் பாடலிது !

உறவுகொள்ளல் வெறும் நிகழ்வல்லவென
பிறவு மகவு பேராற்றல் பெற
அறிவு புதையல்கள் ஆங்கேசேர
செறிவாய் எழுதிய கருப்பொருளிது !

இருவர் சேர்ந்த(தால்) ஒருவர் என,
உருவம் உதித்தித்து முதல்,
கருவளர்ந்து உதைத்து வெளிவரும்
பருவங்களை பாங்காய் படைத்த படையலிது !

முத்தமிழ் வித்தகரே ! முப்பாலும் அறிந்தவரே,
முன்னிற்க முருகன் அருள் !

VSK Monday, October 02, 2006 10:17:00 AM  

ஆமாம் குமரன், சில வடமொழி சுலோகங்களும், வாரியார் உரையும் இதற்கு உதவியாய் இருந்தது.

சொல்ல வரும்போது எல்லாவற்றையும் சொல்லி விடலாமே என்ற ஆர்வக்கோளாறு!

நன்றி!

VSK Monday, October 02, 2006 10:19:00 AM  

முருகனருள் முன்னிற்க உங்களைப் போன்றோரின் ஊக்கமும் உறுதுணையாய் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை, கோவியாரே!

அழகு தமிழில் பண்ணியற்றி பின்னூட்டத்தில் சேர்த்து பெருமைப் படுத்தியதற்கு மிக்க நன்றி!

G.Ragavan Monday, October 02, 2006 1:08:00 PM  

எத்தனையெத்தனை செய்திகள். உயிரின் தொடக்கத்தினை விளக்க எத்தனையெத்தனை செய்திகள். படிப்பதோடு நிறுத்திக் கொள்ளத்தான் இந்தப் பதிவினைப் பொறுத்த வரையில் நான் செய்யக் கூடியது.

VSK Monday, October 02, 2006 1:50:00 PM  

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்."

நன்றி ஜி.ரா.

பராசரன் Friday, October 06, 2006 3:55:00 AM  

எந்தவித scanning technique கும் இல்லாத அக்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் இதை அறிந்து எழுதியிருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. அழகாகவும் எளிமையாகவும் அவற்றை இங்கு தந்தமைக்கு நன்றி

VSK Friday, October 06, 2006 9:16:00 AM  

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி பராசரன்.

அதுதான் வியப்பின் எல்லை! எப்படி இதெல்லாம் அறிந்து சொல்லியிருக்கிறார்கள் என்பது!

நீங்கள் வந்ததைச் சொல்லவில்லை!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP