"பாலியல் கல்வி - பெற்றோருக்கு" [3]
"பாலியல் கல்வி" - பெற்றோருக்கு [3]
கோவி கண்ணன் 'கோவி'ப்பதால், இனி நேரடியாக கல்வி புகட்ட ஆரம்பிப்போம்!சரியா!
என்ன, எல்லாரும் சிலேட்டு, பலப்பம்லாம் எடுத்துகிட்டு வந்துட்டீங்கதானே!
'அடுத்தது, 3 வயதுக் குழந்தையின் பெற்றோர் அறிய வேண்டியது' எனப் போட்டவுடன் கோவியார் சிங்கையிலிருந்து தொலை பேசினார்!
"விட்டா எதை எழுதறதுன்னு ஒண்ணும் கிடையாதா? மூணு வயசுக் குழந்தைக்கு என்னங்க தெரியும்? அப்ப ஏங்க நாம கவலைப்படணும்? அப்பவே போய் எதுனாச்சும் சொன்னோம்னா, தப்பா போயிறாதா?" என்று!
இது போன்ற 3 வயதுக் குழந்தையின் தாய் ஒருவர், ஒருமுறை என்னிடம் வந்து கேட்டார்கள், "டாக்டர்! என் பையன் என்னை விட்டு நகர மாட்டேன் என்கிறான்.
தனி ரூம், பெட் எல்லாம் போட்டு அவனைத் தூங்கச் செய்துவிட்டு வந்தாலும், ஒரு அரை மணி நேரத்தில் அங்கிருந்து எழுந்து என்னிடம் ஓடி வந்து கட்டிபிடித்துத் தூங்கினால்தான் அவனுக்கு நிம்மதி!
அதுக்கப்புறம் போகவே மாட்டான்!
எங்க பெட்லதான் மீதி ராத்திரி முழுவதும்!
இதனால், எனக்கும் என் கணவருக்குமிடையே பிரச்சினை வருகிறது!
நீ சரியாக வளர்ப்பதில்லை எனத் திட்டுகிறார். என்ன செய்வது?" என்று.
குழந்தைகள் வளரும் காலத்தில் பல நிகழ்வுகள்!
அவற்றை அப்படியே தேக்கி வைத்து மூளையின் ஒரு பகுதியில் போட்டு வைத்து சமயம் வரும் போது உபயோகப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு.
இன்று நாம் காட்டும் ஆசை, பாசம், அன்பு, கோபம், வெறுப்பு, விருப்பு, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் ஏதோ திடீரென வருவதில்லை.
சிறுவயது முதலே, பார்த்து, உணர்ந்து, பழகிய நிகழ்வுகளின் விளைவே இவையெல்லாம்!
பிறக்கும் போதே அத்தனை மொட்டுக்களையும் வைத்துத்தான் பிறப்பிக்கிறோம்!
அந்தந்த நேரங்களில் அவை மலர்கின்றன!
[நம்ம பொன்ஸ் சொன்ன மாதிரி!]
சரி, ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும்?
அன்பின் அரவணைப்பு எப்படி இருக்கும் எனத் தெரியும்!
பால் குடித்த இடத்தின் சுவை தெரியும்!
பெண்ணென்றால் ரோஸ் நிறம்[pink]. ஆணென்றால், நீல நிறம்[blue] எனத் தெரியும்!
பொம்மை வைத்து விளையாடுவதா, இல்லை கார், ட்ரக் போன்ற விளையாட்டுப் பொருளா எனத் தெரியும்!
சொப்பு, டீ கோப்பைகளும், சமையலறை சாதனங்களும் வைத்து விளையாட பெண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூடைப்பந்து, கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் ஆண் குழந்தைகளுக்குத் தெரியும்!
கூட இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, தமக்கையோ ஒரே தொட்டியில் அமர்ந்து, குளித்து, நீரிறைத்து விளையாடும் போது ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் உறுப்பு வேறுபாடுகள் தெரியும்.
தாய், வீட்டில் பார்த்துக் கொள்ள யாரும் இல்லையென்பதால், குழந்தையை முன்னே விட்டு, தான் குளிக்கும் போது,.... பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே உள்ள உருவ வேறுபாடுகள் தெரியும்!
படுக்கையறையில் சில பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து, ஒன்றும் புரியாமல், ஆனால் அதே நேரம் அதை நினைவின் ஒரு மூலையில் போட்டு வைக்கத் தெரியும்!
ஆச்சரியமாக இருக்கிறதா?
இதுதான் உண்மை!
மருத்துவ வல்லுநர்கள், உளநிலை வித்தகர்கள் கண்டறிந்து சொல்லும் உண்மைகள்!
நான் சொன்னது பாலியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே!
இன்னும், அப்பா அம்மா சண்டை போடுவது, அடுத்த குழந்தை பிறந்தவுடன், தன்னை விட்டு, அதை கொஞ்சுவதைக் கவனிப்பது போன்ற நிகழ்வுகளைச் சொல்லப் போனால், பதிவின் நீளம் அதிகமாகி, நோக்கம் சுருங்கி விடும் அபாயம் இருப்பதால் சொல்லாமல் விடுகிறேன்!
மேற்சொன்னவைகளை வைத்து தவறாக எண்ண வேண்டாம்!
இவற்றின் தீவிரமும், பொருளும் புரியாத வயதுதான் இது!
ஆனால், மனதில் நிறுத்திக் கொள்ளப்படுபவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
இந்த வயதுக் குழந்தைகள் சாதாரணமாகக் கேட்கும் கேள்விதான் நான் பதிவின் தலைப்பாய்ச் சொன்னது!
"அம்மா! நான் எங்கேருந்து வந்தேன்?"
எப்போது இது வரும் என எதிர்பாராததால், எதை வைத்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் இப்படித்தான் இருக்கும்!
"அதுவா கண்ணு! நீ சாமிகிட்டேர்ந்து வந்தே!"
"இதெல்லாம் உனக்கெதுக்கு இப்போ?"
"ஒரு பூதம் கொண்டு வந்து ஒரு நாளு உன்னைய இங்க போட்டுது!"
"ஏய்! குழந்தை கேக்குது! என்னா சொல்லப் போற?, நான் சொல்லட்டுமா?"
போன்ற பொறுப்பற்ற பதில்களே!
மாறாக என்ன சொல்லலாம்?
" நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!"
"நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"
இது போன்ற தெளிவான, எளிமையான பதில்களால் குழந்தை அந்த வயதில் மேற்கொண்டு கேளாமல் திருப்தியடைந்துவிடும்!
உங்கள் மேல் இன்னும் பாசம் கொள்ளும்!
அது வளர, வளர, மேற்கொண்டு சொல்லிக்கலாம்!
பதிவு நீள்கிறது!
இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்!
அடுத்த பதிவில் தொடர்வோம், அவர்கள் பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன இந்த வயதில் என்பது பற்றி!
*************************************************************************************
24 பின்னூட்டங்கள்:
நிறைய விஷயங்கள், தெரிந்ததும் தெரியாததுமாய்.....
பிஞ்சு மனதில்(மூளையில்) பதிவாகிவிடும்போது அவற்றின் பாதிப்புகள் அந்தந்த வயதில் தெரியவரும் இல்லையா?
எஸ்.கே சரியான பாதையில் தொடங்கியிருக்கிறீர்கள். பாலியியல் என்று வரும் பொழுது குழந்தைகளின் மனோ தத்துவம் சிறிது தொட்டு போகவே வேண்டும். எளிய முறையில் எல்லோருக்கும் கிடைக்கும் வழியில் வழங்கியிருக்கிறீர்கள்.
பொரும்பாலான நமக்கு இச் சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் இவ்ளோ விசயங்கள் சிறைப் பட்டு விடுகிறதா என்று எண்ணும் பொழுது ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் நீங்கள் சொல்வதுதான் சரி. சரியான புரிதலுக்கூரிய விடை கிடைக்கவில்லையெனில், அது வெறும் கேள்வியாகவும், குழப்பமுற்ற நிலையில் அங்கே குழந்தை வளர வளர அந்த கேள்வியும் வளர்ச்சியுற்றுக் கொண்டே இருக்கிறது.
எஸ்.கே.
நல்ல ஆரம்பம்!
குழந்தைகள் என்ன கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமலே அல்லது ஒரு கதையை இட்டுக் கட்டிச் சொல்லாமல், முடிந்த அளவிற்கு உண்மைத் தகவலை எளிமையாக்கித் தர வேண்டும்.
அதுதான் அவர்களைச் சரியான வழியில் கொண்டு செல்ல உதவும். அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட உதவும்.
உங்கள் பதிவின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மிக அருமையாக எழுதுகிறீர்கள். நான் முன்பு (ஒரு வருடம் முன்) பாலியல் தொல்லைகளில் இருந்ட்து குழந்தைகள் எப்படி தங்களை காத்து கொள்வது என்பது பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
SK அய்யா
மிக அருமையான பதிவு.. கலக்கல்...
எனக்கும் 5 வயது குழந்தை உள்ளது..
மிகவும உபயோகமான பதிவு..
இது அருமையான பதிவுக்காக--1
சரியாகச் சொல்லி ஆரம்பித்திருக்கிறீர்கள், சிபியாரே!
இப்பதிவின் ஆணிவேரே அதுதான்!
அதை வலியுறுத்தவே இந்தப் பதிவு!
ஒவ்வொரு நிகழ்வும் மூளையில் செதுக்கப்பட்டு, பின்னால், பெருமளவில் வெடிக்கும்!
அதனால், அந்தப் பிஞ்சு உள்ளங்களில் காயம் ஏற்பட நாம் காரணமாகக் கூடாது1
பிங்க், ப்ளூன்னு நிறங்கள்.
வீட்டுச் சமையலறைச் சாமான் பொம்மைகள். பாப்பா பொம்மை, அதைக் கொண்டு போக ஸ்ட்ரோலர்
இதெல்லாம் பொண்குழந்தைகளுக்கு.
ட்ரக், டிக்கர் இந்த ஹெவி வெஹிக்கிள் மாடல் எல்லாம் ஆம்புளைப் பசங்களுக்குன்னு
'இங்கேயும்' மூளைச்சலவை செய்யறதுபோல பொம்மைகள் வச்சுருக்கறது எனக்குச்
சுத்தமாப் பிடிக்கலை.
அந்தக் கேள்விகளுக்கு அவர்களே சரியான, அல்லது தவறான இடத்தில் விடை தேட நாம் உதவியாகவோ, தீங்காகவோ இருக்கப் போகிறோமா என்பதுதான் கேள்வி.
தகவல் தொடர்புகளும், பல்வேறு அறிமுகங்களும் தவிர்க்கப்பட முடியாத இந்நாட்களில், முதன் முதல் அந்தப் பிஞ்சுகளோடு உறவாடி உணர்த்தும் வாய்ப்பினை நாம் பெற்றதற்கு, எப்படி பங்கேற்கப் போகிறோம் என ஒவ்வொரு பெற்றோரும் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
மிகச் சரியான பாதையில் இதை சிபியாரைத் தொடர்ந்து இட்டுச் சென்றிருக்கிறீர்கள், இ. நேசியாரே!
தெளிவு, எளிமை.... இவை இரண்டைத்தான் குழந்தைகள் நம்மிடம் இருந்து எதிர் பார்க்கின்றனர்!
அறுசுவை உண்டி வேண்டாம் அவர்களுக்கு!
வாசனையான பருப்பைக் குழைத்து, நெய் விட்டு, நிலா காட்டிச் சோறூட்டினாலே மகிழ்ந்து போகும் ஜீவன்கள் அவை, கொத்தனாரே!!
நாம் அதில் காட்டும் அக்கறையை, இது போன்ற நிகழ்வுகளிலும் காட்ட வேண்டும் என்பதே என் அவா!
மிக்க நன்றி, தேன் துளியாரே!
நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி!
முடிந்தால் அதன் நகலையோ, சுட்டியையோ தந்தால் நலமாயிருக்கும்.
SK,
மிக அருமையான தொடர். அவசியமானதும் கூட.
உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துக்கள் !!
நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ என நினைக்கிறேன், துளசி கோபால்!
உண்மையில் இது நீங்கள் சொன்னதற்கு நேர் எதிரானது!
குழந்தைகளை மூளைச்சலவை செய்யவில்லை!
பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை ஆராய்ந்து, பெண் குழந்தைகளுக்கு, ஆண் குழந்தைகளுக்கு என அறிவியல் சோதனை மூலம் ஈர்ப்பு வருகின்ற நிறங்களை அறிவியலார் கண்டு சொல்ல, இப்போது வியாபாரிகள் மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, கொள்ளை லாபம் காண்பதே நிஜம்! [மா. சி. கவனத்திற்கு!!]
யாரும் அவர்கள் மனதில் இதைப் புகுத்த வில்லை!
உங்களுக்கு உபயோகப் படுகிறது என அறிந்து மகிழ்ச்சி, சிபா!
னீங்க சும்மா இப்படியே போடுங்க!
நான் 'ம------' மாதிரி எல்லாம் செய்ய மாட்டேன்!
ஆஹா! உங்களைக்கூட வரவழைத்த இந்தப் பதிவுக்கு ஆயிரம் நன்றிகள்!
உங்களது பல பதிவுகளைப் படித்து, ரசித்து, வியந்திருக்கிறேன்!
மிக்க மகிழ்ச்சி, ஜெயஸ்ரீ
என்ன பாட்டி, இப்படி சொல்லிட்டே!
நீ சொல்லி இந்தப் பேரன் கேக்காம இருப்பேனா?
கண்டிப்பா செஞ்சுடறேன்!
அந்த நீளமான காதும், பெரீய்ய கண்ணாடியும், குமிழ் சிரிப்பும்.. அடாடா! என்னமா இருக்கே பாட்டி நீ!
:)
SK,
மிக நல்ல பதிவு.
//மாறாக என்ன சொல்லலாம்?
"நீ என் வயித்துக்குள்ளே ஒரு ஸ்பெஷல் இடத்துல வளர்ந்தே! இதோ பாரு, அதோட வரிகள்!" "நானும் அப்பாவும் நீ வேணுமின்னு சொல்லி உன்னிய இங்கு கொண்டாந்தோம்"//
பல சமயங்களில் குழந்தைகளுக்கு சரியான பதில்/பிழையான பதில் என்றெல்லாம் இல்லை! ஒளிந்து கொள்ளும் பதிலாய் இல்லாது, "உன்னை நான் புரிந்து கொண்டேன்; நான் சொல்வது உனக்குப் புரிகிறதா" என்ற நேசமும் தான் முக்கியம்.
*இயற்கை நேசி* அவர்கள் சொன்னது போல், "மனோ தத்துவம் சிறிது தொட்டு போகவே வேண்டும்"; அதற்கு பெற்றோர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள தங்கள் பதிவு நிச்சயம் உதவும்!
இந்தக் காலத்தில் "பெற்றால் மட்டும் போதுமா?" :-)
உண்மைதான் எஸ்.கே. எளிமையான விடைகள்தான் யாருக்கும் புரியும். குழந்தைகளுக்கு அவர்கள் அளவுக்கு எளிமையாக. அம்மா வயித்துக்குள்ள இருந்தன்னு சொன்னாலே போதும்னுதான் தோணுது.
வலைப்பதிவு ஒரு பொழுதுபோக்கு சாதனமல்ல,அது ஒரு தொலை தூர கல்வி நிலயம் என்பதை உணர்த்திய திரு.ஸ்.கே.வுக்கு வாழ்த்துக்கள்.
அந்த வயதில் 'குழந்தை என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து குதிப்பதில்லை, தாயின் வயிற்றில் இருந்தே வரும், அதற்கு அப்பா, அம்மா என்ற இருவரும் வேண்டும்' என்பது போன்ற எளிய கருத்துகள் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது என நான் சொல்லியதை,
சரியாகப் புரிந்து கொண்டு மேலும் சுவை சேர்த்த, கண்ணபிரான், ஜி.ரா.வுக்கு எனது நன்றி!
வாழ்த்திய திரு. தி.ரா.ச.வுக்கு என் வணக்கங்கள்!
இதில் சொல்லப்பட்ட சில நிகழ்வுகள் எங்கள் வீட்டிலும் நடந்தது.
தனியறையில் படுக்கவைத்த கொஞ்ச நாளில் ஏதோ ஒரு சமயத்தில் "நீங்கள் தான் என்னை தனியாக ஒரு ரூமில் தள்ளீட்டீங்களே"-என்று வந்தது.நாங்கள் படுக்க வைத்தது தைரியம் வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்டது வேறு மாதிரி.
அதெல்லாம் மூளையின் ஒரு ஓரத்தில் பதியப்படுகிறது என்று சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.
ஐயா,
அருமையாக உள்ளது.
Post a Comment