Saturday, August 26, 2006

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

"பாலியல் கல்வி -- பெற்றோருக்கு" - 2

வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

முன்னுரையைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம், பெற்றோர்களைப் பற்றி சொல்லிவிட்டு மேலே போகலாம் எனக் கருதுகிறேன்.

ஆசையின் தேக்கமெல்லாம் அள்ளிக் கொணர்ந்து தமக்கென ஒரு பிள்ளையைப் பெறுகின்ற பெற்றோர்கள் தாம் பெற்றது இன்னவென பெரும்பாலும் அறிவதில்லை.

தன் வாரிசு என ஒருவனை, ஒருத்தியைக் காட்டிக் கொள்வதிலும், தன் சந்ததி மேலும் வளர்கிறது எனும் அளவிலேயே தன் குழந்தையைப் பார்க்கிறார்கள்.

தான் கற்ற, கற்க மறந்த சில பாடங்களின் அளவுகோலையே கொண்டு தம் அளவிலேயே அக்குழந்தையை சீராட்டி, பாராட்டி வளர்க்க முற்படுகின்றனர்.

தன்னை மீறியும் இவ்வுலகம் வளர்கிறது; அதில்தான் இப்பிள்ளை வளரந்து ஒரு பேர் சொல்லப் போகிறது என்பதனை அறிந்தோ, அறியாமலோ, தன் மரபு அளவுகோள்களை [hereditory values] அதன் மீது திணித்து, அதற்கு ஒரு தாழ்வு மனப்பானமையையோ, அல்லது ஒரு மெத்தனத்தையோதான் பெற்றோர்கள் "பெரும்பாலும்" கொடுத்து வளர்க்கிறார்கள்!

இல்லையென மறுத்தாலும், இதுதான் நாம் காணும் உண்மை நிகழ்வு!

அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன்.

நிறைய வசதிகளைக் கொடுப்பதின் மூலம், ஒரு நல்ல பரம்பரையை உருவாக்கிடலாம் எனவே பெருமளவில் தாய்-தந்தையர் கணக்கு போடுகின்றனர்.

"வழக்கத்தை மாற்றுவானேன்?"[Why change the tradition?] என்ற மனப்பான்மையே இங்கு அதிகம் காண்கிறோம்!

ஆங்கிலத்தில் மூன்று 'I'களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு.

தகவல், [Information], பரிமாறல், [Interaction], செயலாக்கம், [Implementation] என்று.


இவை மூன்றும் ஒன்று அல்ல!

தகவலைச் சொல்ல வேண்டும்.
பரிமாறும் போது விருப்பு வெறுப்பில்லாமல், இருதரப்புக் கருத்துகளையும் கேட்க வேண்டும்.
செயலாக்கும்போது யார் இதனைச் செய்ய வேண்டுமென நாம் நினைக்கிறோமோ, அவர்களைச் செய்ய விட வேண்டும்.

ஆனால், நடைமுறையில் வரும்போது இம்மூன்றையும் கலந்தடித்து குழப்பி விடுகிறோம்.

தகவலைச் சொல்லி, பரிமாறலைத் தவிர்த்து, நம் கருத்தை மட்டுமே வலியுறுத்தி, இப்படித்தான் செய்ய வேன்டும் என நிர்பந்தித்து வளர விடாமல் செய்து விடுகிறோம்.

நாம் எது சரியென நினைக்கிறோமோ, அதைத் தாண்டி அவர்களை வளர விடுவது இல்லை என்பதே இங்கு நிஜமாகிப் போன நிதரிசனம்.

எவ்வளவுக்கெவ்வளவு வசதிகளைக் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் வளர்ச்சியில் நாம் குறுக்கிடுகிறோம் என்பதுதான் உண்மை.

நாம் புனிதமாகக் கருதும் இதிகாசங்கள் இதனைத்தான் நமக்கு உணர்த்துகின்றன!

அவை நிஜமோ, இல்லை வெறும் கதையோ, அதைப் பற்றி இங்கு பேச வேண்டாம்.

இராமாயணம் என்ன சொல்லுகிறது?

எனக்குத் தெரிந்ததெல்லாம் இது மட்டுமே!
"கடவுளே உனக்கு மகனாகப் பிறந்தாலும், உனக்கு நிம்மதி வராது;அவனே உன் சாவுக்கும் காரணமாயிருக்கக் கூடும்!"

இராமன் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆட்சி புரிந்தான்.
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தான்.
அதற்கு முன்னர், சுகபோகத்தில் திளைத்தான்.
வனவாசத்திலும், 13 ஆண்டுகள் மனைவி, தம்பியுடன் வாழ்ந்தான்.
அடுத்த ஆறு மாதங்கள் அவளைத் தேடி அலைந்தான்.
கடைசி ஆறு மாத காலம்தான் உண்மையிலேயே இராமாயணம்.
அதை விடுத்துப் பார்த்தால், மற்ற நிகழ்வுகளெல்லாம், வெறும் இடத்தை நிரப்பும் காட்சிகளே!

சரி, கண்ணன் கதைக்கு வருவோம்!
அதில் முக்கால்வாசி அவனது பாலபருவத்தின் கதைகளே!
பிறந்தவுடனேயே இட்ம் மாறினான்.
ஒரு சேரியில் வளர்ந்தான்.
அவன் செய்த விஷமங்கள்!
அவன் நடத்திய லீலைகள்!
அவன் காட்டிய தீரச் செயல்கள்!
அதனைக் கண்டும் காணாமலும், பாராட்டியும், அனைத்திலும் கூடவே இருந்த யசோதையும், நந்த கோபனும்!
அதை விட்டால், நேரே, கீதை உபதேசம்தான்!

இதிலிருந்து என்ன தெரிகிறது!
குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!

இதனால் மட்டுமே நான் அவ்விரு கதைகளையும் போற்றுகிறேன்!

சொலவதைச் சொல்லி, நல்லவிதமாய்ப் பகிர்ந்து கொண்டு, அவர்களை அவர் போக்கில் விட, பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

நம் செல்வம் என்று எதனையும் அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென எனத் துடிப்பதை விட்டு, அவர்கள் நாளைய உலகின் நல்ல குடி மக்களாக வளர நாம் - பெற்றோராகிய நாம் - உறுதுணையாய் இருக்க வேண்டும்.

இதில் மற்ற எவரையும் விட, நான் முன்னர் சொல்லிய, ஆசிரியர், மற்றவர், நண்பர் இவர் எல்லாரையும் விட பெற்றவர்களே பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

இனி, பெற்றோராகிய நாம் அவர்களுக்கு எப்படி இருக்க வேண்டும், என்ன வகையில் அவர்களின் இப் பாலியல் அறிவில் உதவி புரிய வேண்டும் எனப் பார்ப்போம்!

அடுத்து.... நிச்சயமாக [!!] 3 வயதுக் குழந்தையின் கேள்வி!!

***அடுத்த வாரத்திலிருந்து, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் இப்பதிவு வரும்!***

*************************************************************************************

30 பின்னூட்டங்கள்:

Unknown Saturday, August 26, 2006 2:25:00 AM  

//எவ்வளவுக்கெவ்வளவு வசதிகளைக் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் வளர்ச்சியில் நாம் குறுக்கிடுகிறோம் என்பதுதான் உண்மை.//
'கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்று பாட்டி பாடியது சரிதானே.
நமக்கு கிடைக்காத செழுமையை நம் பிள்ளைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் கவலையின்றி தம் காரியங்களை திறம்பட நிறைவேற்றி தம் வாழ்வை சீரியதாய் மாற்றி அமைத்துக் கொள்வார்கள் என்றுதானே எல்லா பெற்றோரும் விரும்புகின்றனர். அதெப்படி தவறாய்ப் போய் வளர்ச்சியில் குறுக்கிடுவதாகும்.

தங்களுடைய இந்தப் பதிவு மிகச்சீரிய தொண்டு - மிகத் தேவையானது. ஒரு மருத்துவராயிருந்து இலக்கியத்திலும் சிறப்பிக்கும் உங்களுக்குத் தகுதியானது. தொடர் அருமையாய்த் தொடர வாழ்த்துக்கள்.

G.Ragavan Saturday, August 26, 2006 2:35:00 AM  

பிள்ளை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான ஒரு பணி. அதற்குக் கொஞ்சமாவது இந்தத் தொடர் உதவும் என்பதில் ஐயமில்லை.

பிள்ளைக்கு அளவுக்கு மீறிய செல்லமும் பணமும் வசதியும் நிச்சயம் நல்லதைச் செய்யாது. பிள்ளைகளின் உடல் வணங்க வேண்டும். சொகுசு பழகிக் கொண்டால் பின்னால் மிகக் கொடிது.

துபாய் ராஜா Saturday, August 26, 2006 3:04:00 AM  

//குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!//

இது விவாதத்திற்குரிய உண்மை.

வடுவூர் குமார் Saturday, August 26, 2006 10:06:00 AM  

சிங்கை பள்ளியில் ஒரளவு சொல்லிக்கொடுப்பதாக தெரிகிறது.
தொடருங்கள் உங்கள் பணியை..
அவன் அருளில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

VSK Saturday, August 26, 2006 10:47:00 AM  
This comment has been removed by a blog administrator.
VSK Saturday, August 26, 2006 10:48:00 AM  

இதைப் பற்றி இன்னும் விவரித்துச் சொல்லவே எண்ணியிருந்தேன், திரு. சுல்தான்.
பதிவின் நீளம் கருதி விட்டிருந்தேன். நான் சொல்ல வந்தது, தேவையற்ற, வசதிகளைக் குறித்தே!
அடிப்படை வசதிகளை, நாம் அனுபவிக்காததை அவர்களாவது அனுபவிக்கட்டுமே என நினைத்து, அளவை மீறி, நம்மையும் வருத்தி அவர்களுக்குக்ச் செய்வதை ஒரு சில குழந்தைகளே உணருகின்றார்கள்.
"செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்குதல்" என ஒரு சொல்லடை உண்டு, நம் வழக்கில். அதுதான் நான் குறிப்பிடுவது.
'ல்' மாதிரி இதையும் சேர்த்து விடுகிறேன். :)

முதலில் வந்து பாராட்டியதற்கு நன்றி.

திரு.ஜி.ரா. இதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா!?

VSK Saturday, August 26, 2006 10:54:00 AM  

//பிள்ளைக்கு அளவுக்கு மீறிய செல்லமும் பணமும் வசதியும் நிச்சயம் நல்லதைச் செய்யாது. பிள்ளைகளின் உடல் வணங்க வேண்டும். சொகுசு பழகிக் கொண்டால் பின்னால் மிகக் கொடிது.//


நான் சொல்ல நினைத்ததை மிக நன்றாகச் சொல்லி என் பளுவைக் குறைத்தமைக்கு மிக்க நன்றி, ஜி.ரா.!

இது...இதுதான் வேணும்!

அடிக்கடி இப்படி வந்து கை குடுங்க! இல்லை, திருத்துங்க!

VSK Saturday, August 26, 2006 11:09:00 AM  

////குழந்தைகளை அவர் போக்கில் விட்டால் அவர்கள் பேராற்றல் கொண்டு விளங்குவர் என்றே!//

இது விவாதத்திற்குரிய உண்மை.//


அந்த வரிகளை மட்டும் பார்த்தால் விவாதம் வருவது தவிக்க முடியாதது தான், ராஜா.
ஆனால், சுல்தானும், ஜி.ராவும் சரியான நேரத்தில் வந்து கை கொடுத்திருக்கிறார்கள்!

இப்போது நீங்களும்!

இது சரியாகப் புரிந்து கொள்ளப்படுவது, தொடர்ந்து நான் சொல்ல வருவதை எளிதாக்கும் என நம்பியே இப்பதிவை எழுதினேன்.

மேலும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் அந்த இரு கதைகளினின்று 'நான்' அறிந்த நீதியே! அது பற்றிய என் எண்ணங்களை அடுத்த வரிகளில் சொல்லியிருக்கிறேன்.

மிக்க நன்றி.

VSK Saturday, August 26, 2006 11:15:00 AM  

அவ்வப்போது இது பற்றிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள், திரு. குமார். நன்றி.

இயற்கை நேசி|Oruni Saturday, August 26, 2006 11:28:00 AM  

நல்ல தொடக்கம், மேலே அன்பர்கள் கூறிய படி சில கூற்றுக்கள் தர்கத்துக்குறியது. எனினும், தாங்கள் வாழ்ந்து பார்த்து தாங்களின் பார்வையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது, மகிழ்வுடன் அவைகளை கருத்தில் நிறுத்துவது சிறந்தது என எண்ணுகிறேன்.

தொடருங்கள், படிக்க காத்திருக்கிறோம்.

கோவி.கண்ணன் [GK] Saturday, August 26, 2006 11:32:00 AM  

எஸ்கே !
"டைட்டில் போரடிக்குது ... மெயின் பிக்சரை சீக்கிறம் போடுங்கப்பா" என்று
'சிறில்' வந்து கேட்கப் போகிறார் !!!

இலவசக்கொத்தனார் Saturday, August 26, 2006 12:44:00 PM  

//பிள்ளைகளின் உடல் வணங்க வேண்டும். சொகுசு பழகிக் கொண்டால் பின்னால் மிகக் கொடிது.//

//அடிப்படை வசதிகளை, நாம் அனுபவிக்காததை அவர்களாவது அனுபவிக்கட்டுமே என நினைத்து, அளவை மீறி, நம்மையும் வருத்தி அவர்களுக்குக்ச் செய்வதை ஒரு சில குழந்தைகளே உணருகின்றார்கள். //

எஸ்.கே., ஜிரா,

எது சொகுசு? உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றுவது எனக்கு சொகுசாகத் தெரியலாம். எனக்கு சாதாரணமாக இருப்பது மற்றொருவருக்கு சொகுசாகத் தெரியலாம். இதுதான் சரி, இது சொகுசு என வரையறுப்பவர் யார்?

எனக்கு தெரிந்த ஒருவர் பசங்களுக்கு ஒரு விதமான வசதியையும் செய்து தரமாட்டார். நீங்கள் சொல்லும் உடம்பு வணங்க வேண்டும் என்ற பெயரில். நான் என்ன இந்த வசதிகளோடா படித்தேன்? இப்பொழுது நான் நன்றாக இல்லையா? இவனுக்கு மட்டும் அதெல்லாம் எதற்கு என்பது அவர் வாதம்.

அவரிடம் நான் கேட்பது, உங்களுக்கு இந்த வசதிகள் இருந்தா செய்யாமல் இருந்தீர்கள்? உங்கள் பெற்றோரால் இந்த வசதிகளைச் செய்து தர முடிந்தால் அவர்கள் செய்து தராமல் இருந்திருப்பார்கள்?

அன்று தொலைபேசிகளும் கணினிகளும் சொகுசு. இன்று இவையெல்லாம் (கிட்டத்தட்ட) அத்தியாவசியம். நான் படிக்கும் போது எங்கள் வீட்டில் கணினி இருந்ததா? உனக்கு மட்டும் எதற்கு என ஒரு தந்தை கேட்டால் அது முட்டாள்தனமான விவாதம் அல்லவா? முடிந்தால் வாங்க வேண்டும் இல்லையென்றால் முடியாது எனச் சொல்ல வேண்டியதுதான். அப்படிச் சொன்னாலும் அந்த தேவை இல்லாமல் போகாது. வேண்டுமானால் வாரம் ஒரு முறை இண்டர்நெட் கபே செல்ல பணம் தரலாம்.

ஸ்கூல் பஸ் இருக்கும் போது நிதமும் காரில் கொண்டு போய் விட வேண்டாம். ஆனால் எப்பொழுதாவது கொண்டு போய் விட்டால் தப்பில்லை. அல்லது அந்த பஸ்ஸில் வரும் நேரத்தில் வேறொரு கிளாஸுக்குப் போகலாம் என்றால் காரில் போகலாம் என்றால் என்ன தப்பு? என்னால் அப்படி போக முடிந்தால் வேறெதாவது படித்திருக்க மாட்டேனா? அன்று அந்த வசதி இல்லை. செய்யவில்லை, இன்று இருக்கிறது. செய்யலாமே.

இதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலையைப் பொருத்து இருக்கிறது. இதை பொதுப்படுத்தி இவர்கள் செல்லம் கொடுக்கிறார்கள் அவர்கள் கொடுக்கவில்லை என சொல்வது தவறு. ஒரு எல்லைக்குள் வசதிகள் செய்வது சரிதான். அந்த எல்லைகள் ஒரு குடும்ப சூழ்நிலைகளைப் பொறுத்து விரியும் சுருங்கும். அதில் எந்த தவறும் இல்லை.

G.Ragavan Saturday, August 26, 2006 1:51:00 PM  

// பஸ்ஸில் வரும் நேரத்தில் வேறொரு கிளாஸுக்குப் போகலாம் என்றால் காரில் போகலாம் என்றால் என்ன தப்பு? என்னால் அப்படி போக முடிந்தால் வேறெதாவது படித்திருக்க மாட்டேனா? அன்று அந்த வசதி இல்லை. செய்யவில்லை, இன்று இருக்கிறது. செய்யலாமே.

இதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலையைப் பொருத்து இருக்கிறது. இதை பொதுப்படுத்தி இவர்கள் செல்லம் கொடுக்கிறார்கள் அவர்கள் கொடுக்கவில்லை என சொல்வது தவறு. ஒரு எல்லைக்குள் வசதிகள் செய்வது சரிதான். அந்த எல்லைகள் ஒரு குடும்ப சூழ்நிலைகளைப் பொறுத்து விரியும் சுருங்கும். அதில் எந்த தவறும் இல்லை. //

கொத்தனார் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருடைய குடும்பச் சூழலைப் பொருத்து ஒருவருடைய வாழ்க்கை முறை அமையும். அதைப் பொருத்தே பிள்ளைகளின் வளர்ப்புச் சூழலும் அமையும்.

உடல் வணங்க வேண்டும் என்று சொன்னது....முதலில் அவரவர் வேலையை அவரவர் செய்வதில் தொடங்க வேண்டும். கோடீசுவரன் பிள்ளையாக இருந்தாலும் தனக்கு வேண்டியவைகளைத் தானே செய்து கொள்வதில் தவறென்ன இருக்கிறது? அத்தோடு வீட்டு வேலைகளிலும் கொஞ்சம் பழக்கம் இருக்க வேண்டும்.

காரில் போனால் மேலும் இரண்டு படிக்கலாம் என்று சொன்னீர்கள் பார்த்தீர்களா? அது மிக மிகத் தவறு. ஒரு குழந்தையின் அறிவும் திறமையும் ஒருமுகப் படுத்தப்பட வேண்டும். அப்படி ஒருமுகப் படுத்தப்பட்ட குழந்தைதான் பெரிய ஆளாக வரும். இல்லையென்றால் மாதச் சம்பளக்காரனாகத்தான் வரும். குழந்தையின் உண்மையான திறமை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பதில்தான் பெற்றோரின் முதல்பணி தொடங்குகிறது.

அதைத்தான் "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்கிறது தமிழ்.

புறந்தருதல் என்பது பெற்றுப் போடுதல் அல்ல. புறம் என்றால் உலகு. உலகிற்குக் கொடுத்தல். ஒன்றை ஒருவர் கொடுத்தால் அதை அடுத்தவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் கொடுக்க வேண்டும். நல்ல பண்பைப் பழக்க வேண்டியது தாய். சான்றோனாக்குத்தல் தந்தைக்குக் கடன். எந்த வகையில் தனது பிள்ளை சிறப்படையும் என்பதைக் கண்டறிந்து சான்றோனாக்க வேண்டும். இதுவும் எளிதன்று. ஆனால் முயற்சி திருவினையாக்கும். இதையெல்லாம் யார் படிக்கிறார்கள் இன்று? தமிழில் இல்லாத வாழ்வியல், இறையியல், சமூகவியல், கலையியல் நூலா?

அடித்துச் சொல்கிறேன். காலை பாட்டு, பிறகு நடனம், பிறகு பள்ளி, பிறகு கராத்தே, பிறகு விளையாட்டு, பிறகு வீட்டுப்பாடம் என்று வளரும் குழந்தை கண்டிப்பாக "master of none and jack of all" ஆக வரும்.

Sudhakar Kasturi Saturday, August 26, 2006 2:44:00 PM  

இந்தப் பதிவையும் நண்பர்களின் பின்னூட்டங்களையும் இருமுறை படித்தேன். சாதாரணமான செய்தியல்ல இது என்னும் எண்ணமும், எனக்கும் இது உதவுமே என்னும் தன்னலமுமே காரணம். பெற்றோருக்கு ஒரு பள்ளி வேண்டும் என்பதை நானும் ஆமோதிக்கிறேன். இது குறித்து ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன்.

ஜி.ரா சொன்னதுபோல "உடல் வணங்க வேண்டும்". இது சத்தியமான உண்மை. தொலைக்காட்சியும் பிற ஊடகங்களும் எத்தனை பயனளிக்கிறதோ அத்தனைக்கும் விஷத்தையும் கொண்டுவந்து இறக்குகிறது - அலை அலையாக. எப்போது நிறுத்தவேண்டும், எப்போது பார்க்கவேண்டும் என்னும் கட்டுப்பாடு இன்னும் பெரியவர்களுக்கே வருவதில்லை:)
சிறு வயதில் கட்டுப்பாடு அவ்வளவு எளிதில் வராது. தேவைகள் எது, சொகுசு எது எனப்புரியாத வயதில் ஆசைகளை எதிர்த்துச் செல்ல வழிகாட்டிகள் தேவை. பெற்றோர் இங்கு தங்கள் கடமையை உணர்தல் அவசியம். எங்கே நான் ஒரு கண்டிப்பு நிறைந்த தந்தையாக இருக்கவேண்டும் , எங்கே நான் ஒரு தோழனாக இருக்கவேண்டும் என்னும் அறிவு எனக்கு வரும்வரை.. என் மகன் நிலை சற்றுப் பரிதாபம்தான்.:)

எது சொகுசு எது அத்தியாவசியம் என்பதில் இருக்கும் வரைமுறைகூட ஒருவரது மனமுதிர்வு, அனுபவம் சார்ந்ததே. ஆயினும் சில அடிப்படை விடயங்களில் அனைவரும் ஒத்துப் போக முடியும்.
எஸ்கே அவர்களே, நல்ல பதிவு. மேலும் தொடருங்கள்.
அன்புடன்
க.சுதாகர்.

VSK Saturday, August 26, 2006 4:43:00 PM  

நல்ல கேள்வி, கொத்தனாரே!

இதுதான் நான் நினைத்ததும், தொடர் நேரடியான நிகழ்வுகளுக்குப் போகும்போது, இதை ஒட்டிய பல கருத்துகள் வர இருக்கின்றன.
அந்நேரத்தில் என் நிலையின் தெளிவு அனைவர்க்கும் இருக்கட்டும், எந்த கண்ணோட்டத்தில் இருந்து நான் சொல்கிறேன் என்பதை ஒவ்வொரு முறையும் விளக்கிக்கொண்டிருக்க வேண்டாம் எனத்தான், இப்பதிவை எழுதினேன்.

இன்னொரு முறை நான் சொன்னவற்றைப் படித்தீர்களாயின், இப்படி ஒரு வரியைத் தூக்கிக் கொண்டு வர மாட்டீர்கள்!
னக்குக் கிடைக்காத வசதிகளை, நாம் அனுபவிக்க வில்லை என்பதற்காகவே நம் பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருக்கக்கூடாது எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அளவுக்கு மிஞ்சி செய்ய வேண்டாமே எனத்தான் சொன்னேன்.

மற்றபடி, உபரியாக இன்னும் படிக்கலாம் காரில் போனால் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்லக் கூடியதல்ல. ஜி.ரா. மறுபடியும் இதற்கும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
மேலும், 'பொதுவான பெற்றோர்களைப் பற்றி மட்டுமே இங்கு நாம் பேசுவோம். 'மணி வளைவின் [Bell-Curve] அடியின் இருபக்கமும் இருப்பவர்களைக் கணக்கில் கொண்டால் வீண் வாதம் தான் வளரும்.
சரிதானே நான் சொல்வது!?
:)

VSK Saturday, August 26, 2006 4:45:00 PM  

கட்டுரைக்குப் பொருந்தும் தகவல்களை, கருத்துகளை, உங்கள் தூத்துக்குடி தெய்வங்களைப் பற்றி சொன்னது போலவே அழகுறச் சொல்லியிருக்கிறிர்கள், திரு. சுதாகர்!

அடிக்கடி இப்படி வாங்க! நன்றி!

VSK Saturday, August 26, 2006 4:49:00 PM  

இதற்கு ஏன் பாவம் சிறிலை இழுக்கிறீர்கள், கோவியாரே!

நேராவே சொல்லலாமே!

இனிமே மெயின் பிக்சர் தான் நைனா!

VSK Saturday, August 26, 2006 4:51:00 PM  

தர்க்கம் இருக்கட்டும், இ.நேசியாரே!
விதண்டாவாதமாகவோ, வீண் விவாதமாகவோ போகாத வரை இவையெல்லாம் ஒரு புரிதலின் தேடல்கள் தானே!
வரவேற்போம்!
முடிந்ததற்கு, தெரிந்ததற்கு பதில் சொல்லுவோம்!
அனைவரும்!!!

கோவி.கண்ணன் [GK] Sunday, August 27, 2006 11:41:00 AM  

//SK said...
இதற்கு ஏன் பாவம் சிறிலை இழுக்கிறீர்கள், கோவியாரே!

நேராவே சொல்லலாமே!//

எஸ்கே ...!
பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கும் பழக்க தோஷம் தான்...! :))

இரண்டு ரீலுக்கு டைட்டிலே ஓடிக் கொண்டிருந்தால் படம் பாக்க வந்தவங்க பீடிவலிக்க வெளியில் சென்றுவிடுவார்களே
:)))

//இனிமே மெயின் பிக்சர் தான் நைனா! //
அப்பா ... ! வயத்துல பாலை வார்த்திட்டிங்க !
:))

VSK Sunday, August 27, 2006 12:08:00 PM  

கோவியாரே!

தொடரின் தலைப்பு இரண்டு பகுதிகள் கொண்டது!
முதல் பதிவு முதல் பகுதி - 'பாலியல் கல்வி' பற்றியது!
இர்ண்டாவது பதிவு 'இது ஏன் பெற்றோருக்கு' என்பது குறித்து!
நீங்களும் ஒரு குழந்தையைப் பெற்றவர்தான்!
இனிமே மெயின் பிக்சர்தான்!
பீடி வலிக்கப் போகாம,[!!] நல்லபிள்ளையா உட்கார்ந்து படத்தைப் பாருங்க!

ஏற்கெனவே கொத்தனாருக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்!

//தொடர் நேரடியான நிகழ்வுகளுக்குப் போகும்போது, இதை ஒட்டிய பல கருத்துகள் வர இருக்கின்றன.
அந்நேரத்தில் "என் நிலையின் தெளிவு" அனைவர்க்கும் இருக்கட்டும், எந்த கண்ணோட்டத்தில் இருந்து நான் சொல்கிறேன் என்பதை ஒவ்வொரு முறையும் விளக்கிக்கொண்டிருக்க வேண்டாம் எனத்தான், இப்பதிவை எழுதினேன்.//

எல்லாரும் டிக்கட் வாங்கிட்டு உள்ளே வந்து உட்கார வேணாமா?
அதுக்குத்தான்!
:)

ஓகை Sunday, August 27, 2006 1:44:00 PM  

பாலியல் உளவியலை நோக்கிச் செல்கிறது. கால்பந்து போட்டிகளில் கோல் போடுவதுகூட பாலியல் தொடர்புடையது என்று ஃபிராய்ட் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அது பற்றியெல்லாம் வருமா? உங்கள் இரண்டாம் பகுதி, மூன்றாம் பகுதியை எதிர்நோக்க வைக்கும் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது.

Sivabalan Sunday, August 27, 2006 2:53:00 PM  

SK அய்யா,

//தகவலைச் சொல்லி, பரிமாறலைத் தவிர்த்து, நம் கருத்தை மட்டுமே வலியுறுத்தி, இப்படித்தான் செய்ய வேன்டும் என நிர்பந்தித்து வளர விடாமல் செய்து விடுகிறோம். //

மிக அருமையாக சொன்னீர்கள்..

நன்றி.

Sivabalan Sunday, August 27, 2006 2:53:00 PM  

இது நல்ல பதிவிற்காக...1

VSK Sunday, August 27, 2006 5:22:00 PM  

அதாங்க நடக்குது, சிபா!
தன் 'லிமிட்' என்ன என்பதை மறந்து நம்ம சபாநாயகர்கள் போல செயல்படுகிறோம்,... பெற்றோர்கள்!
நானும் ஒருவன் தானே அதில்!
:)

Sivabalan Sunday, August 27, 2006 10:37:00 PM  

இது நல்ல பதிவிற்காக...2

VSK Sunday, August 27, 2006 10:42:00 PM  

இது என்னங்க புது ஸ்டைல்!?

எதாவது மதிப்பெண்ணா, சிபா?
:))

Sivabalan Sunday, August 27, 2006 10:50:00 PM  

SK அய்யா,

பின்னூடம் போடுவது என்று முடிவு செய்தவுடன் என்ன போடுவது எனபதில் குழப்பம் எனக்கு வந்துவிடுகிறது..

மொத்ததில் நல்ல பதிவு..

அதனால் இப்படி ..

இது நல்ல பதிவிற்காக...3

பின்னூடம் போட்டு பதிவை முன்நிறுத்தும் முயற்சி...

சும்மா ஒரு ஜாலிக்குதான்,, தப்பா நினைச்சுக்காதீங்க..

VSK Sunday, August 27, 2006 11:42:00 PM  

தப்பால்லாம் நினைக்கலீங்க!
சும்மா, தெரிஞ்சுக்கலாம்னுதான்!
அடுத்து, 4, 5, 6 எனத் தொடரவும்!
:))!

தி. ரா. ச.(T.R.C.) Tuesday, August 29, 2006 8:16:00 AM  

ஏங்க ஸ்.கே.டிக்கெட் வாங்க நான் ரெடி ஆனா ஸிசன் டிக்கெட் உண்டா தவறாமல் வகுப்புக்கு வரணமில்லே.

Sudhakar Kasturi Tuesday, August 29, 2006 1:21:00 PM  

ஜி.ராவின் இக்கருத்தில் மேல் விளக்கங்கள் தேவைப்படுகின்றன. ஜாக் ஆக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது எனப் புரியவில்லை. எப்படி இருக்கவேண்டும் எனப்து அவரவர் தேர்ந்தெடுப்பதிலும் அதன் விளைவுகளை மேலேற்பதிலும் இருக்கிறது.
எனது சித்தப்பா அதிகம் படித்தார்- ப்ரொபசராக இருந்தார். ரிடையர் ஆன பிறகும் லா படித்தார். அவரிடம் ஒருமுறை வியந்து கேட்டபோது சொன்னார் " எனக்கு எங்கோ பிறழ்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. எதாவது ஒரு துறையில் சாதித்திருக்கவேண்டும். வீணடித்து விட்டேன்" இது அவர், தனது முயற்சிக்கு வந்த விளைவுகளைக் குறித்த கருத்து. ஜாக் ஆக இருப்பதில் உள்ள சுகம் பற்றி அவரிடம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வில்லை இன்றும்:)
"முடிந்த அளவில்" குழந்தைகளுக்கு எக்ஸ்போஷர் கொடுப்போம். "முடிந்த அளவு" என்பது "மிகக் கண்டிப்பு என்றும் மிகச் செல்லம் - சக்திக்கு மீறிய எடுப்பு" என்னும் எல்லைகளுக்கு நடுவில் எங்கேயாவது அவரவர் வரையறுக்கட்டும். எது பிடித்திருக்கிறதோ , எது சாத்தியப்படுமோ, அதனைப் பிடித்து முன்னேறும் குழந்தை. ஒரு துறை... பத்து துறைகள் ஆனாலும், அந்த முயற்சி என்றாவது திருவினையாகும் என்ற நம்பிக்கையோடு நாமும் இருப்போம்.
அன்புடன்
க.சுதாகர்

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP