Wednesday, August 30, 2006

அ.அ. திருப்புகழ் -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"
----------------------------------------------------------------

சென்ற பாடல் பார்த்து குமரன் கேட்டிருந்தார், 'நாயகன் - நாயகி பாவத்தை அருணையார் பாடிக் கேட்டதில்லை இதுவரையில்' என!

இதோ அதே கருத்தில் இன்னுமொரு எளிய பாடல்!

இதன் உள்ளின்று கவனித்தால், அருணையார் மற்றவர்களைப் போல, தன்னை நாயகி பாவத்தில் வைத்துப் பாடவில்லை என்பது புலனாகும்!

அவர்தான் அனுபூதி பெற்றவராயிற்றே!

அவர் நமக்காக, நம் மீது கருணை கொன்டு, நம் நலம் நாடி வேண்டுகிறார்!
என்னே அவர் கருணைத் திறம்!

நாடு பார்த்ததுண்டா?
இது போன்ற நல்லவரை!
------------------------------------------------------------

...........பாடல்............

[தந்தந் தன தந்தந் தனதன

தந்தந் தன தனதான]


வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை

வந்துந் தியதிரு மதனாலே

வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு மதனாலே

பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு கொடியான

பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை நினையாயோ

தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி லதனூடே

தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு மயிலாடப்

பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக
ளென்றும் புகழ்பெற மலரீனும்

பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல பெருமாளே.
______________________________________________________________

.......பொருள் விளக்கம்.........

"தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள்

சென்று ஒன்றிய பொழில் அதனூடே

தெந்தெந் தெனதென என்று அண்டு உற அளி

நின்றும் திகழ்வொடு மயில் ஆட

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள்

என்றும் புகழ்பெற மலர் ஈனும்

பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழுபுவி

என்றும் செயவல பெருமாளே."

நீண்டு வளர்ந்ததோர் சோலை !
அதன் நீடெங்கும் நிறைந்து நிற்கும்
தென்னை மரங்களும் வாழை மரங்களும்!
இருக்க இடமின்றி அடர்ந்திருக்கும் அச்சோலையுள்
தெந்தெந்தெனவென ரீங்காரம் செய்தவண்ணம்
அமர இடமின்றி போட்டிபோடும் வண்டினங்கள்
அடுத்தவரை விரட்ட எண்ணி அழகிசை பாடவும்,

அவ்விசை கேட்டு அதற்கேற்ப மயிலினங்கள்
தம்தோகை விரித்தங்கு அழகு நடம் ஆடிடவும்,

சோலை செழித்திடக் காரணமாய் பொங்கி நிறைந்து
வழிந்தோடுகின்ற நீர்ச்சுனைகள் முழுதினிலும்
குவளைமலர்க் கூட்டம் இவைகண்டு கண் மலரவும்,

இதுபோன்ற அழகுக் காட்சிகள் அத்தனையும்
நிறைந்திருக்கும் பெருமை பெற்ற தலமதுவாம்
திருத்தணிகை மலையதனின் மீதமர்ந்து
தன் செயல்கள் யாவையும் முடித்து விட்டு இனி
ஏழுலகும் படைத்தழித்துக் காக்கவென
வீற்றிருக்கும் பெருமை கொண்ட முருகோனே!

"வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும் அதனாலே"

ஒரு சேர அலை அடித்தால் ஒலியங்கு இனித்திருக்கும் !
பல வேறு கப்பல்கள் தொடர்ந்தங்கு செல்வதனால்
அலைகளின் ஓட்டமங்கு மாறி மாறி வேறுபட்டு
கரையதினில் சேர்கையிலே தடதடவெனவே
அதிர்ந்தங்கு ஒலிப்பதனால் உளத்தினிலே எழுகின்ற
வேட்கையதின் தாக்கம் இவளை வருத்துவதாலும்,

"வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழல் உற
அஞ்சு அம்பு அதும் விடும் அதனாலே பங்கம் படும்"

தான் நினைக்கும் நேரம் பார்த்து
ஆசையென்னும் தீ மூட்டி,
அவர் மீது மலர்க்கணை தொடுத்து,
அடங்காத மனத்தினரையும்,
அம்பு விட்டு அவர் உள்ளம்
தளரச் செய்யும் மன்மதனால்
நாணம் என்னும் பண்பு மறந்து
காதல்வயத்தால் அவமானம்
அடைந்திங்கு வாடுகின்ற,

"எனது அங்கம் தனில் உதி
பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல்
பொன்றும் தனிமையை நினையாயோ"

என் உடலினில் இருந்து பிறந்தவள்;
நற்பண்புகள் பொருந்தியவள்;
கொடி போலும் மெல்லிய உடலை உடையவள்;
பஞ்சு போலும் மென்மையுடையவள்;
மயில் போலும் சாயல் ஒத்தவள்;
இன்று உம் மீது கொண்ட காதல் தீயை
உள்ளத்தில் பொருத்தி உழலுகின்றாள்!
அதனால் இறந்து படுகின்ற
நிலைமையில் இன்றவள் நிற்கின்றாள்!

பெண்ணென்றால் பேயும் இரங்கிடுமே!
முருகா! இவள் துயர் பார்த்து
நீவிர் திருவுளம் இரங்கிடக் கூடாதோ!
இவளது தனிமை கருதி இப்போதே
இனிமை செய்திடல் வேண்டும், பெருமானே!
_____________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

திரை
= அலை
அழல்= நெருப்பு
பங்கம்= அவமானம்
நெஞ்சொன்றிய அழல்= காமத்தீ
தெங்கம்= தென்னை
கதலி= வாழை
அண்டு உற = நெருக்கமாக நின்று
அளி= வண்டு
திகழ்வொடு= விளக்கமாக
-----------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை !
முருகனருள் முன்னிற்கும் !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !

___________________________________________________________________

16 பின்னூட்டங்கள்:

ஜெயஸ்ரீ Thursday, August 31, 2006 12:07:00 AM  

SK,

மிக அழகான விளக்கம். உங்கள் மற்ற திருப்புகழ் பதிவுகளையும் படித்து வருகிறேன். ஊன்றிப் படிக்கவேண்டிய பதிவுகள்.

//அடங்காத மனத்தினரையும்,
அம்பு விட்டு அவர் உள்ளம் தளரச் செய்து
நாணம் என்னும் பண்பு மறந்து
காதல்வயத்தால் அவமானம்
அடைந்திங்கு வாடுகின்ற"//

"அடங்காத மனத்தினரையும்
அம்பு விட்டு உள்ளம் தளரச்செய்யும் மன்மதனால் "

மன்மதனால் என்ற சொல் விட்டுப்போய் விட்டதோ?

VSK Thursday, August 31, 2006 12:23:00 AM  

நீங்கள் படித்து வருகிறீர்கள் என அறிந்து மகிழ்கிறேன், ஜெயஸ்ரீ!

தவறுதான்!

எழுதும் போது நினைத்துக் கொண்டிருந்தேன்!

எப்படியோ விட்டுப் போய்விட்டது!

சரி செய்து விடுகிறேன்!

இன்னும் சற்று விளக்கமாக பதிவைப் பற்றி எழுதினால், இன்னும் மகிழ்வேன்!

மிக்க நன்றி!

வெற்றி Thursday, August 31, 2006 2:26:00 AM  

SK அய்யா!
ஆகா! அருமையான விளக்கம். அருஞ்சொற்பொருள் எனும் தலைப்பின் கீழ் இதுவரை நான் பொருள் தெரியாத பல தமிழ்ச்சொற்களுக்கு நீங்கள் பொருளுரைப்பதனால் பல தமிழ்ச் சொற்களை தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மிக்க நன்றி. உங்களின் திருப்புகழ் விளக்க உரைகளைப் பிரதி எடுத்து கோர்வையில் வைத்துள்ளேன்.

கோவி.கண்ணன் [GK] Thursday, August 31, 2006 9:47:00 AM  

//அச்சோலையுள்
தெந்தெந்தெனவென ரீங்காரம் செய்தவண்ணம்
அமர இடமின்றி போட்டிபோடும் வண்டினங்கள்
அடுத்தவரை விரட்ட எண்ணி அழகிசை பாடவும்//

எஸ்கே ஐயா !

அருணையாருக்கு வண்டுகளின் ரீங்காரம் மிகவும் பிடித்ததோ!
முன்பு கூட ஒரு பாடலில் உள்ளதற்கு விளக்கம் கொடுத்திருந்தீர்கள் ஞாபகம் வந்துவிட்டது.

VSK Thursday, August 31, 2006 10:21:00 AM  

அவருக்குப் பிடிக்காதது என ஏதேனும் உண்டா, கோவியாரே!

மாலை நேரத்தில், அடர்ந்த சோலையில் அமர்ந்திருக்கும் போது அந்த ரீங்காரத்தைக் கேட்டிருக்கிறீர்களா?

குறிப்பாக கிராமத்துச் சோலைகள்!

குமரன் (Kumaran) Friday, September 01, 2006 6:19:00 AM  

நல்ல சந்தத்துடன் கூடிய பாடல் எஸ்.கே. இதுவும் நான் இதுவரை படித்திராத பாடல். (மொத்தமாகவே எனக்கு 20 திருப்புகழ் பாடல்கள் தான் தெரியும் என்று நினைக்கிறேன்). எளிமையாகப் பாட முடிந்தது. பொருளைப் படிப்பதற்கு முன் எங்கே எப்படி எந்தச் சொல்லைப் பிரிக்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் நீங்கள் பதம் பிரித்துப் பொருள் சொல்லியிருப்பதைப் படித்தப் பின் எளிதாகப் பாடலைப் பாடமுடிந்தது.

குமரன் (Kumaran) Friday, September 01, 2006 6:24:00 AM  

திருத்தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும். அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியம் ஆடும் என்ற பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன. என்ன அருமையான வர்ணனை. அடர்ந்த சோலைகளின் நடுவே தென்னையும் வாழையும் சூழ வண்டினங்களின் பாடலுடனும் மயில்களின் ஆடலுடனும் சுனைகளில் உள்ள குவளை மலர்களைப் பார்ப்பது போலவே உணர்ந்தேன். அருமையான பாடல்வரிகள். மிகச் சிறந்த விளக்கம்.

இப்படி தென்னையும் கதலியும் மிகுதியாக வளர்ந்திருந்ததால் தான் வழிபாட்டிற்கு தேங்காயும் வாழைப்பழமும் என்று வைத்தார்களோ? :-) தெங்கந் திரளுடன் எங்கும் கதலிகள்... ஆகா... பாடவே அருமையாக இருக்கிறது.

குமரன் (Kumaran) Friday, September 01, 2006 6:26:00 AM  

வள்ளியம்மையின் கையில் இருப்பது குவளை மலர்கள் தானே? அதனால் தான் தணிகைமலையில் உள்ள சுனைகள் எங்கும் குவளைகள் மலர்ந்துள்ளனவா?

குமரன் (Kumaran) Friday, September 01, 2006 6:28:00 AM  

ஆழ்வார் பாசுரங்களில் தாய்ப்பாசுரம் வரும் போது தாயை அறிவாகவும் மகளை மனமாகவும் உருவகம் செய்து மனம் இறைவனை விரும்புவதாகவும் அறிவு மனதிற்காக இறைவனிடம் கெஞ்சுவதாகவும் விளக்கம் சொல்லுவார்கள். அந்த விளக்கம் இங்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன்.

VSK Friday, September 01, 2006 9:31:00 AM  

இப்படி நீங்கள் வந்து விளக்கம் கொடுப்பதுதான் எனக்குப் பிடித்த ஒன்று, குமரன்!

இதில்தான் சுவை கூடுகிறது!

மிக்க நன்றி!

VSK Friday, September 01, 2006 9:35:00 AM  

நான் உங்களுக்கு அளித்த பதில் எப்படியோ தவறியிருக்கிறது, வெற்றி!

இது பயனுள்ளதாக இருப்பது குறித்து மகிழ்கிறேன்!

ஒரு 10 புகழ் பாடிட்டு, ஒரு தேர்வு வைத்து விடலாம்!

என்ன சொல்றீங்க!

:))

இலவசக்கொத்தனார் Friday, September 01, 2006 9:55:00 AM  

ஆஹா! மிக அழகான பாடல். ஒரு சமயப் பாடலினுள் இவ்வளவு அழகான இயற்கை பற்றிய வர்ணனை. நாம் இயற்கையையும் வழிபடுபவர்கள்தானே.

அதற்கு தங்கள் விளக்கமும் அருமை. அப்படியே திருத்தணிகையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

இந்த நல்ல வேலையை மேலே வையுங்கள்!

VSK Friday, September 01, 2006 10:17:00 AM  

ஒரு கவிதை எழுத வரும் போது, கருத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போவர் சிலர்!

அதோடு கூட, தமிழ் மேல் கொண்ட காதலை வர்ணனைகளின் மூலம் அழகூட்டுவர் சிலர்!

கவிதை எழுதுவது எப்படி என, சொல்லாமலேயே, நமக்கெல்லாம் பாடம் எடுத்திருக்கிறார் அருணையார்!

சரிதானே கொத்தனாரே!

"திருத்தணி முருகா! என் பொண்ணைக் காப்பாத்து!"

இவ்வளவுதான் கருத்து!

என்னவெல்லாம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்!

நன்றி!

Sivabalan Friday, September 01, 2006 2:06:00 PM  

//"வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும் அதனாலே" //

மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்..


//கதலி= வாழை
அண்டு உற = நெருக்கமாக நின்று //

அருஞ்சொற்பொருளும் கலக்கிடீங்க..

நன்றி.

கோவி.கண்ணன் [GK] Sunday, September 03, 2006 8:49:00 PM  

//என் உடலினில் இருந்து பிறந்தவள்;
நற்பண்புகள் பொருந்தியவள்;
கொடி போலும் மெல்லிய உடலை உடையவள்;
பஞ்சு போலும் மென்மையுடையவள்;
மயில் போலும் சாயல் ஒத்தவள்;
இன்று உம் மீது கொண்ட காதல் தீயை
உள்ளத்தில் பொருத்தி உழலுகின்றாள்!
அதனால் இறந்து படுகின்ற
நிலைமையில் இன்றவள் நிற்கின்றாள்!
//

எஸ்கே ஐயா !

இங்கு நாயகி (வள்ளி? ) அருணையாருக்கு மகளாக சொல்லப்படுகிறாரா ?

புரியவில்லை விளக்குங்களேன் !

VSK Monday, September 04, 2006 12:57:00 AM  

வள்ளியம்மையை மகளாக வைத்தல்ல, கோவியாரே!

மேலே, நம்ம குமரன் மிக அழகான விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்!

மனம், அறிவு என்று!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP