Friday, March 16, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55 [50]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 55


50.

‘பணமோ, நல்ல குணமோ வர்றது பெருசில்லை. அதைத் தக்க வைச்சுக்கணும். அதில்லேன்னா ஒண்ணும் பிரயோஜனப்படாது' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.


'இப்ப எதுக்காக இப்படிச் சொல்றீங்க' என்றேன் அவரைப் பார்த்து.


'இல்லேடா அம்பி. ஏதோ பகவானோட அருளால காலம் ஏதோ சொஸ்தமா ஓடிண்டு இருக்கு. இப்பப்போய் அதைக் கெடுத்துக்கலாமோ? அதிகமா காசு பணம் வேண்டாம். இருக்கறதை காபந்து பண்ணிண்டா போறாதோ? எப்பவோ யாருக்கோ கொடுத்த பணம் இப்ப தெய்வாதீனமாத் திரும்பி வந்திருக்கு. அதுக்கு ஒரு செலவு சொல்றா இவ! வேண்டாம்னா கேக்கவா போறா! எல்லாம் மாயையோட விளையாட்டு!' என்று அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.


அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மன்னார் அவரைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.


'ஒங்களுக்கு மட்டுமா நடக்குது சாமி! அன்னி தொட்டு இன்னிய வரைக்கும் இதே கதைதானே நடக்குது! அந்த மாயை தொடங்கிவைச்ச வெளையாட்டுதானே அவங்க கொலத்தியே நாசம் பண்ணி சாச்சுது' என்ற மன்னார்,
'அடுத்த பாட்டைப் படி' என்றான்.


பதில் பேசாமல் பாடலைப் படித்தேன்.

மதிகெட் டறவா டிமயங் கியறக்
கதிகெட் டவமே கெடவோ கடவேன்
நதிபுத் திரஞா னசுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.

'இதை இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என மேலே தொடர்ந்தான் மயிலை மன்னார்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே.

மதி கெட்டு அறவாடி மயங்கி

'ஒரு காரியம் எப்பிடித் தப்பிப் போவுதுன்றத, படிப்படியா, ஒரு பச்சக்கொளந்தைக்குக்கூடப் புரியுறமாரி சொல்லிக் காமிக்கறாரு அருணகிரியாரு.


புத்தி கெட்டுப் போயி, அடடா! இப்பிடி அறிவுகெட்டத்தனமா நடந்துக்கினோமேன்னு அதுக்காவ ரொம்பவே வருத்தப்பட்டுப் பொலம்பி, இப்ப இன்னா பண்ணினா இந்தப் பித்தம் தீரும்னு நெனைச்சு நெனைச்சு, ஒண்ணும் வளி[ழி] புரியாம மயங்கித் திரிஞ்சு நிக்கற நெலை ஒண்ணு வரும்!


நாம இன்னா தப்பு பண்ணினோம்? எப்பப் பண்ணினோம்?னு கூடத் தெரியாத வேகத்துல அல்லாமே நடந்து முடிஞ்சிரும்!
செல்வாக்கா இருந்த நெலைமை மாறி, திடீர்னு பாத்தா, ஒண்ணுமே இல்லாத ஒரு நெலையுல வந்து அல்லாடுவோம்.
இதைத்தான் 'மதிகெட்டு, அற வாடி மயங்கி'ன்னு சொல்றாரு.


'அற'ன்னா ரொம்பவே ஜாஸ்தியான்னு அர்த்தம்.


இதுனால இன்னா ஆவுதுன்றத அடுத்தாப்புல சொல்றாரு.

'அறக்கதி கெட்டு, அவமே கெடக் கடவேனோ'

நல்லது பண்றதால வர்ற நல்ல கெதியைத்தான் 'அறக்கதி'ன்றாரு.
'அவமே'ன்னா ஒண்ணுத்தும் ஒபயோகமில்லாம வீணாப் போறது.
இப்பிடி இருக்கற நல்லதும் இல்லாமப்போயி, நான் கெட்டுஅளி[ழி]ஞ்சு போயிருவேனோன்னு பொலம்பறாரு.


இப்ப இன்னா ஆச்சு இவுருக்கு?

இதுவரைக்கும் நடுநடுவுல இப்பிடி அப்பப்ப பொலம்பினாரு . சரி, ஒத்துக்கலாம் அதைன்னா, இப்ப, கடைசிப் பாட்டாண்டை வந்து எதுக்காவ இவ்ளோ கதர்றாரு?

அநுபூதின்னா இன்னா, அதுக்கு இன்னான்னா பண்ணணும்னு சொல்லி, அது எப்பிடி இருக்கும்ன்ற வரைக்கும் சொன்னவர் ஏன் இப்பிடிப் பயப்படறாரு!?
கொளப்பமா க்கீதில்ல?


அதான் இதுல ரொம்பவே முக்கியம்!


கெடைக்காதது கெடைக்கறது பெரிசில்ல! அது கெடைச்சதும், ஒடனே கூடவே ஓடிவர்ற மயக்கத்தை நெருங்கவிடாமப் பாத்துக்கறதுதான் அத்த வுடவும் பெரிய சமாச்சாரம்.


இப்ப 'லாட்டிரி'ல ஒனக்கு ஒரு பத்து லட்சம் கெடைக்குதுன்னு வையி. நீ கொஞ்சங்கூட எதிர்பாக்காதது அது! வரணும்னு நெனைச்சுத்தான் வாங்கினே. ஆனா, 'ப்ரைஸு' விளுமான்றது தெரியாது. அப்பிடிக் கெடைச்சதுமே கூடவே ஒரு மெதப்பு தானா வந்து தொத்திக்கும்.


முருகா! எனக்கு அருள் பண்ணுப்பான்னு நீ கெஞ்சினதுல்லாம் சுத்தமா மறைஞ்சுபோயிட்டு, இன்னாமோ ஒன்னோட 'லக்'காலத்தான் இது கெடைச்சதுன்ற தெனாவெட்டு தானா வரும். அதான் இந்த மாயை பண்ற வேலை! அதோட வலையுல விளாமத் தப்பிக்கணும்!


அத்தத்தான் அருணையாரு இப்ப செய்யுறாரு!


அநுபூதின்ற 'லாட்டிரி ப்ரைஸ்' எனக்குக் கெடைச்சதுக்கு நீதான் காரணம்ன்றத மறந்திட்டு, நான் எதுனாச்சும் அறிவுகெட்டத்தனமா நடந்து கெடைச்சதியும் கோட்டை விட்டுருவேனோன்னு எனக்கு பயம்மா க்கீது முருகா!ன்னு அவருகிட்டயே மன்னாடறாரு.


இத்தச் சொல்றதுக்காவ அவரு போட்ட அடுத்த ரெண்டு வரிங்கதான் இதுல ரொம்பவே விசேசம்!' என்றான் மன்னார்.

அடுத்து என்ன சொல்லப் போகிறானோ எனும் எதிர்பார்ப்பு கூடுதலாக, அவன் முகத்தையே எங்கள் மூவரது கண்களும் பார்த்துக் கொண்டிருந்தன.

மூணு பேரு சொல்லி, முருகனைக் கூப்புடறாரு! ஒண்ணொண்னாப் பாப்பம்.

'நதி புத்திர'

சிவனோட நெத்திக்கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவருதான் நம்ம கந்தன்!

இந்த ஒலகத்துக்கே கெதிமோட்சம் தர்றதுக்காவவும், தேவருங்களோட கொறையைத் தீக்கறதுக்காவவும் வந்த வள்ளலுதான் இந்த முருகன்!


இவரைத் தாங்கிக்க முடியுமான்னு டெஸ்ட்டு பண்றதுக்காவ, ஆருக்காகப் பொறந்தாரோ, அந்த தேவருங்கள்ல ரெண்டு பேரான வாயு, அக்கினி பகவானாண்டை குடுக்கறாரு.
அவங்களால அத்தத் தாங்க முடியல!


அவங்க கொண்டுபோயி, தேவமகளான கெங்கையம்மாவாண்டை குடுக்கறாங்க.
அவங்களாலியும் இத்தத் தாங்கிக்க முடியாம வறண்டே போயிடறாங்க.


இப்பிடிக் கெடைச்ச பொருளை அவங்களால காப்பாத்திக்க முடியாமத்தான், சரவணப் பொய்கையுல வந்து வுளுந்தாரு முருகன்!


கெங்கையம்மா இட்டாந்து போட்டதால, இவருக்கு இந்தப் பேரு! நதி புத்திரன்னு!


ஆச்சா! இப்ப அடுத்ததப் பாக்கலாம்.

'ஞான சுக அதிப'

ஒடம்பாலியோ, அறிவுனாலியோ வர்ற சொகத்தக் காட்டியும், ஞானத்தால கெடைக்கற சொகத்துக்கு எல்லையே கெடையாது. அதான் நெலையான சொகம். மத்ததுல்லாம் வந்த வேகத்துலியே போயிறும்.


இந்த ஞானத்தால வர்ற சொகத்தைக் குடுக்கறவந்தான் கந்தன்! அவந்தான் இதுக்கெல்லாம் சொந்தக்காரன்.


இப்ப அருணகிரியாருக்கு இப்பிடிக் கெடைச்ச இந்த அநுபூதின்ற சொகத்தைக் குடுத்த மொதலாளியை ஆசையா 'ஞான சுகாதிபா'ன்னு கூப்பிடறாரு.

ஞான சுகாதிப - 'ஞானனே! சுகாதிபனே!'ன்னும் சொல்லலாமோன்னு படறதுடா' என்றார் சாஸ்திரிகள்.

ஆமாம். அப்படியும் சொல்லலாந்தான். ஆனாக்காண்டிக்கு, மத்த சுகங்களைத் தர்றதுக்கு நெறையவே சாமிங்க க்கீறாங்க. ஆனா, இந்த ஞானத்தால வர்ற பெரிய சுகத்தைத் தர்றதுக்கு நீ ஒருத்தன் தாம்ப்பா என் கண்ணுல படுதுன்னு அருணையாரு சொல்றமாரி எனக்குப் பட்டுது. அதான் அப்பிடிச் சொன்னேன்.' என்ற மன்னார் மேலே தொடர்ந்தான்.

கடைசியா வர்றது, 'அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே'!

ஆரிந்தத் 'திதி'?

சூரனோட ஆத்தா. மாயைன்னு பேரு! பேரைக் கெவனி... மாயை! கசியப முனிவர்னு ஒர்த்தரு. அவரை மயக்கி அவர் மூலமாப் பெத்த பசங்கதான் சூரனும், தாரகனும், சிங்கமுகனும்.


இந்த மாயையோட வலையுல வுளுந்ததால, கசியபரோட தவம் அளிஞ்சுது!


இந்தம்மா குடுத்த கெட்ட போதனையால மதி கெட்டு, மயங்கிப்போயி, தனக்குக் கெடைச்ச வரத்தால வந்த சொகம் அத்தினியும் போறமாரி அளிஞ்சுபோனாங்க திதி புத்திரங்க! அதான் சூரனும் அவனோட தம்பிங்களும்! அல்லாம் மாயை பண்ற வேலை! அப்பிடியாப்பட்ட திதியோட புள்ளைங்களோட அகம்பாவத்தை வேறோட அறுத்த வீரந்தான் நம்ம முருகன்!


இப்பிடி மூணுவிதமாக் கூபிட்டு, ஞானத்துக்கே அதிபனான கந்தங்கிட்ட வேண்டிக் கேட்டுக்கறாரு அருணகிரியாரு!

கூலி குடுக்கற மொதலாளிகிட்டியே முளுப் பொறுப்பியும் நம்பிக்கையாக் குடுக்கறாரு!

குடுக்கறவன் ஆருன்றது புரிஞ்சதால!

அதான் கந்தனோட கருணை' என உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான் மயிலை மன்னார்!

'அவனையே சரணாகதி அடையறதை இதைவிடவுமா சிறப்பாச் சொல்லிட முடியும்? அருணகிரியாரோட கருணையே கருணை! என்னமா இந்த லோகம் க்ஷேமமா இருக்கறதுக்காக இப்பிடியொரு அற்புதமான வேதத்தை நமக்குப் புரியறமாதிரி பிழிஞ்சு கொடுத்திருக்கார்! புரியறவாளுக்குப் புரியும்' எனக் கைகூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்!


'ஓம் சரவணபவ' எனும்மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது!
**************
[தொடரும்]

தொடர்ந்து படித்து ஆசிகூறும் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, March 16, 2012 10:55:00 PM  

முருகா, என் செல்வமே,
கை பரபர-ங்குது! இத்தினி நாள் அடக்கி வச்சிட்டுருந்தேன்....
ஆனா அடுத்த பாட்டு...இறுதிப்பாடு, என் உறுதிப்பாடு!
அதான் இந்தப் பின்னூட்டம் போட்டுட்டேன்!
சுகாதிபா - so sexy name to u da:) hey sugaathipaa:)

VSK Friday, March 16, 2012 11:18:00 PM  

அடக்கி வைத்தது அடங்காமல் பீறிட்டு வந்துவிட்டது! இனி அனைத்தும் சுகமே! எல்லாம் சுகாதிபன் அருள்! மு மு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP