Tuesday, November 22, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 35

34.

'அவனை விட்டா வேற கெதி ஏது? எல்லாம் அவன் செயல்!' என்றவாறே நிமிர்ந்து உட்கார்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்.


'சரியாச் சொன்னீங்க சாமி! நல்லது கெட்டது எதுன்னாலும் அவனைக் கெட்டியாப் புடிச்சுக்கினா போறும். அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான். இதைத்தான் சூசகமா இந்தப் பாட்டுல சொல்றாரு அருணகிரியாரு. பாட்டைப் படிப்பா' என்றான் மயிலை மன்னார்.

சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மலெனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லக்ருபா கரனே


சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்காநதி பால க்ருப ஆகரனே.

பொண்ணுங்கன்னாலே கெட்டவங்கன்னு அர்த்தம் இல்லை. ஆனாக்காண்டிக்கும், எல்லாத்துலியுமே நல்லவங்க, கெட்டவங்க க்கீறமாரி, பொண்ணுங்கள்லியும் இப்பிடி க்கீறாங்க.


சாதாரணமாப் பள[ழ]கறதுல ஒரு தப்பும் கிடையாது. ஆனாக்க, தப்பான நோக்கத்துல ஒன்னிய வளைச்சுப் போடறதுக்குன்னே சில பொண்ணுங்க இருப்பாங்க! அவங்க பொய[ழை]ப்பு அப்பிடி! அவங்களையும் குத்தம் சொல்ல முடியாது. நாமதான் சாக்கறதையா நடந்துக்கணும். கெட்ட வளி[ழி]யுல கொண்டுபோறதுக்குன்னே குறியா இருக்கற பொண்ணுங்களைப் பத்தித்தான் இந்த வரி சொல்லுது.

'சிங்கார மடந்தையர் தீ நெறி போய் மங்காமல்'னு சொல்றாரு.

நம்ம மனசு எப்பவும் ஒரு நெலையுல இருக்கறதில்லை. சமயா சமயத்துக்கு 'டொப்'புன்னு வளு[ழு]க்கி விட்டுரும். இப்பிடிப் போனாத்தான் இன்னான்னு இந்தப் பொண்ணுங்க கூப்புடற வளி[ழி]யுல கொண்டு போயிறும். நாம இன்னாதான் கவனமா இருந்தாக்கூட, ஒண்ணும் பண்ண முடியாம சறுக்கிறும்.


நாம சமாளிச்சிரலாம்னு நெனைச்சா அம்போ தான்! அதுக்குத்தான் ஒரு 'ரூட்டைக்' காமிக்கறாரு அடுத்தாப்பல!

'எனக்கு வரம் தருவாய்'னு அந்த முருகன் காலுலியே போய் விளுந்துடறாரு!


என்னிய இப்பிடி ஆக்கினது நீதானே! நீதான் இந்த கெட்ட வளியுலல்லாம் போயி சிக்கிக்காம க்கீறதுக்கு வரம் கொடுக்கணும்னு சரணடையறாரு!


'நான் கெட்டவந்தான். எனக்கு இதும்மேலல்லாம் கொஞ்சம் ஆசை வரத்தான் செய்யும். ஆனாக்காண்டிக்கும், நீதான் நான் அப்பிடில்லாம் போயிறாமப் பார்த்துக்கணும்'னு பாரத்தை அவன் மேலேயே போட்டுடறாரு!

'இது நன்னாருக்கே! இவர் பண்றதையெல்லாம் பண்ணிட்டு, அப்பிடிப் பண்ணாம இருக்கறதுக்கு முருகனை வழி கேக்கறாரா? ஆனாலும், அவனைப் பிடிச்சுண்டுட்டா, அவன் ஒரு நல்ல வழி காட்டாமலா போயிறுவான்? சரியாத்தான் சொல்லியிருக்கார். ஆமா, இதுக்கும், அந்த அடுத்த ரெண்டு வரிக்கும் என்னடாப்பா சம்பந்தம்? சொல்லேன் கேட்போம்' என்றார் நமுட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துக்கொண்டே, சாஸ்திரிகள்!

'அதான் இதுல விசேசம்!

சங்க்ராம சிகாவல சண்முகனே

'சங்க்ராமம்'னா யுத்தம்,... சண்டைன்னு வைச்சுக்கலாம்.


இங்கியும், அங்கியுமா பாய்ஞ்சு பறந்து சண்டை போடற மயில் மேல வர்ற சண்முகனேன்னு மொத வரியுல முருகனோட வீரத்தைப் பத்தி சொல்றாரு.

இந்த மயிலு இன்னா பண்ணும்னா, கோவத்தோட படமெடுத்து ஆடற பாம்பைக் காலுல போட்டு மிதிச்சுக்கினு, பறந்து, பறந்து சண்டை போடும்! அத்தப் போல, இப்பிடிப் படமெடுத்து ஆடுற பாம்பைப்போல,.... [போக்குக் காட்டற பொண்ணுங்க பக்கமா,] நாலா பக்கமும் அலையுற மயிலை அடக்கி ஆள்றவனேன்னு சொல்லி, அதேபோல நாலாபக்கமா நான் அலையாம நீதான் பார்த்துக்கணும்னு நாசூக்கா கேட்டுக்கறாரு.


இதை விடவும், அந்த அடுத்த வரிதான் இன்னும் ஷோக்கா க்கீது!

'கங்கா நதி பால க்ருபாகரனே'

'ஆகரன்'ன்னா உண்டான இடம்னு அர்த்தம். கிருபை பண்ற முருகனை கிருபாகரனேன்னு கொண்டாடறாரு. இவந்தான் நமக்கேல்லாம் கிருபை பண்ணணும்.


இத்தனை பெருமைங்க இவனுக்கு இருந்தாலுங்கூட, 'கங்காநதி பாலகனே'ன்னு சொல்றதுலதான் ஒரு பெரிய அர்த்தம் ஒளிஞ்சுக்கினு க்கீது!


சிவனோட கண்ணுலேர்ந்து பொறியாப் பொறந்தவரை,.... வாயுவும், அக்கினி பகவானுமாத் தூக்கியாந்து, ....நம்மால தாங்க முடியலேன்னு ...... கங்கையுல போட்டுட்டாங்க! ஆனந்தமா அதுல மெதந்து வர்றாரு. அந்தம்மா இவரைக் கொணாந்து சரவணப் பொய்கையுல போடறாங்க!


இத்தனையும் நடக்கறப்ப, இவரு மட்டும் ஒண்ணுமே பண்ணாம, அப்பிடியேக் கெடக்கறாரு. 'என்னிய எங்கே இட்டுக்கினு போவணுமோ, போ'ன்னு சிரிச்சுக்கினே மெதக்கறாரு.


கங்கையம்மா தூக்கிக்கினு வந்ததால இவருக்கு இந்தப் பேரு.


நீதான் என்னைக் காப்பாத்தணும் முருகான்னு சொல்றப்ப, நாம எப்பிடி இருக்கணும்ன்றதை இந்தக் கங்கைநதி பாலன் காமிச்சுத் தர்றாரு.


அது வாயுவாவட்டும், அக்கினியாவட்டும், கங்கை நதியாவட்டும்... அவங்க கையுல கொடுத்ததுக்கப்பறம், தான் ஒண்ணும் பண்ணாம அவங்க போக்குலியே வுட்டமாரி, நாமளும் முருகன் கையுல நம்மளை ஒப்படைச்சதும், அல்லாமே அவனே கெதின்னு, இப்ப நம்ம ஐயரு சொன்னாரே,... அதும்மாரி 'கம்'முன்னு கெடக்கணும்! அப்பால, அல்லாத்தியும் அவன் பார்த்துப்பான்றதை இந்த ரெண்டு வரியுல ரொம்ப சிறப்பா சொல்லியிருக்காரு!' என்றான் மயிலை மன்னார்!

'அடடா! இதுக்கு இப்பிடியும் சொல்லலாமா? ரொம்ப நன்னாயிருக்குடா! அவனே கெதின்னு அவன் காலடியுல சரணாகதி அடையறதுதான் ஒரே வழி! முருகா ஷண்முகா! ஓம் சரவணபவா!' எனக் கைகளைக் கூப்பினார் சாம்பு சாஸ்திரிகள்!

'அப்பாலிக்கா இன்னொரு சமாச்சாரம்! அருணகிரியாரு ஆம்பளையா இருந்ததால, இப்பிடி எளுதியிருக்காரு. ஆனாக்காண்டிக்கு, இது ஆம்பளை, பொம்பளை அல்லாருக்குமே ஒண்ணானதுதான். ஆம்பளைங்கள்லியும் இப்பிடி மோசம் பண்றவங்க க்கீறாங்கதானே!' எனச் சொல்லி, ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நடையைக் கட்டினான் மயிலை மன்னார்.
*************
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்தும், பின்னூட்டமிட்டும் வாழ்த்தும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

4 பின்னூட்டங்கள்:

VSK Wednesday, November 23, 2011 8:56:00 AM  

வள்ளலார் அருளியத் தெள்ளமுதைத் தெளிவாகச் சொல்லி எமை உய்க்கும் ஐயா அவர்களைப் போற்றிப் பணிகிறேன்.

இராஜராஜேஸ்வரி Wednesday, November 23, 2011 10:25:00 PM  

அவனைப் பிடிச்சுண்டுட்டா, அவன் ஒரு நல்ல வழி காட்டாமலா போயிறுவான்? சரியாத்தான் சொல்லியிருக்கார்.

Lalitha Mittal Saturday, November 26, 2011 9:56:00 AM  

''அல்லாத்தியும் அவன் பாத்துப்பான்....''

நிம்மதியா இருக்கு மன்னாரு;நன்றி!

VSK Saturday, November 26, 2011 2:21:00 PM  

சரியாச் சொன்னதைச் சரியாப் பிடிச்சுகிட்டீங்களே, ராஜராஜேஸ்வரி அவர்களே! முருகனருள் முன்னிற்கும்.

அன்பே அவனெனக் கண்டு அவன் மீது தொடர்ந்து பக்தி புரிந்துவரும் உங்களது நிம்மதிக்குக் குறைவென்ன லலிதாம்மா! முருகனருள் முன்னிற்கும்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP