Monday, November 28, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 36
35.

'என்ன? அடுத்த பாட்டுக்குப் போலாமா?' என்றவாறே வந்தமர்ந்தான் மயிலை மன்னார்.

'இதுக்குக் கேள்வி என்ன? அதுக்குத்தானே வந்து ஒக்காண்டிருக்கோம்' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

'ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்கணும்ன்றத இந்தப் பாட்டு சொல்லுது. ஊருக்கு உபதேசம் பண்றவன், தான் எப்படி நடந்து காட்டணும்ன்றத சொல்ற பாட்டு இது. மொதல்ல பாட்டைப் படி' என்றான் மன்னார்.

35.
விதிகா ணுமுடம் பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே

'ஒரு சின்ன சொல்வெளையாட்டு இந்த மொதல் வரியுல நடத்தியிருக்காரு அருணகிரி.

"விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்"

'விதி காணும் ஒடம்பு'ன்னா இன்னா?

இந்த ஒலகத்துல பொறந்த அல்லாரையுமே விதிதான் ஆட்டி வைக்குதுன்னு நமக்கெல்லாம் தெரியும். அப்பிடின்னா இன்னா அர்த்தம்? நாம செய்யற அல்லாத்தியும் இந்த விதின்றது பார்த்துக்கினு க்கீதுன்னு ஒரு அர்த்தம்.

அதே சமயத்துல, இங்க இந்த 'விதி'ன்றத வேற விதமாவும் பாக்கலாம்.
விதிப்படி ஒர்த்தொர்த்தரையும் படைக்கற பிரம்மா, எப்பவும் நாம பண்ற அல்லாத்தியுமே பார்த்துக்கினே க்கீறாருன்னும் புரிஞ்சுக்கலாம்.

அதாவது, ஆரு பாக்கலைன்னாலும், நம்மைப் படைச்ச அந்த பிரம்மா எப்பவுமே பார்த்துக்கினே க்கீறாருன்னாலும், அததுக்குத் தகுந்தமாரி, நம்மை ஆட்டிப் படைப்பாருன்னாலும், நாமள்லாம் இன்னா பண்றோம்?

இந்த ஒடம்பு மேல இருக்கற அபிமானத்தை விடாம, இன்னாமோ இதுதான் சாசுவதம்னு நெனைச்சுக்கினு ஆட்டம் போடறோம். மேல மேல வெனையை சேர்த்துக்கினே போறோம். அதைத்தான் 'வினையேன்'னு சொல்லிப் பொலம்பறாரு.

இந்தக் கொரங்கைப் பார்த்திருக்கியா? ஒரு கிளையிலேர்ந்து அடுத்ததுக்குத் தாவறச்ச, எந்த ஒரு கவலையுமில்லாம, 'டக்'குன்னு பிடியை விட்டிரும். ஒரே பாய்ச்சல்தான்; அடுத்த கிளையைப் பிடிச்சிக்கிரும்.

அதும்மாரி, இந்த ஒடம்பு மேல க்கீற பிடிப்பை எப்ப விடறோமோ, அப்பத்தான் இதுக்கும் மேலானதா க்கீற முருகனோட காலடி நமக்குக் கிடைக்கும்.

ஒண்ணை விட்டாத்தான் அடுத்தது கிடைக்கும்!

ஆனாக்காண்டிக்கு, நாம இத்தயும் விடாம, அது வேணும்ன்னு அவங்கிட்டியே போய் மொறை வைக்கறோம்.

இத்தத்தான் அருணகிரியாரும் சொல்றாரு.
'எனக்கு இன்னும் இந்த பாளா[ழா]ப்போன ஒடம்பு மேல க்கீற அபிமானம் தீரலியே! அதுனால, விடாம வினையை சேர்த்துக்கினே போறேனே. இது ஒங்கண்ணுக்குத் தெரியலியா? பார்த்துக்கினு ஏன் சும்மா க்கீறே? ஒன்னோட பூப்போல க்கீற திருவடியை எனக்கு சீக்கிரமாக் கொடுத்து அருள் பண்ணுப்பா'ன்னு கந்தங்கிட்ட கதற்ராரு, இந்த மொத ரெண்டு வரியுல.

'ம்ம்ம்' என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடுத்த ரெண்டு வரிக்கு என்ன சொல்லப் போகிறான் என்னும் ஆவலுடன்!

'ஆரைப் பார்த்து இப்பிடி அருணகிரியாரு சொல்றாரோ அவரு இன்னா பண்ணிக்கினு க்கீறதா இந்த அடுத்த ரெண்டு வரியுல சொல்றாருன்னு பாப்பம்!

"மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே"

'நல்லா ஒளி வீசற நிலாவைப்போல, வாள் போல வளைஞ்சு அள[ழ]கா க்கீற நெத்தியுடைய வள்ளியம்மாவைத் தவர வேற ஆரையும் பெருமை பண்ணித் துதி பண்ணாத முருகா'ன்னு கூப்பிட்டுக் கேக்கறாரு!

இப்பிடி வள்ளியம்மாவைத் துதிக்கறதை ஒரு விரதம் மாரி பண்றவனேன்னு சொல்றாரு!

இந்திரலோகத்துக்கே ராசாவா க்கீறவனேன்னும் சொல்லிப் பாடறாரு!

கொஞ்சம் கொய[ழ]ப்பம் வரத்தான் செய்யும்.... இத்தக் கேட்டா!

அம்மாம் பெரிய ராசாவா க்கீறவரு எதுக்காக இப்ப கொறஜாதிப் பொண்ணாண வள்ளியம்மாவோட காலடில விளு[ழு]ந்து கெடக்கணும்?

அத்தயும் எதுக்கு ஒரு விரதம் மாரி பண்ணணும்னு கேக்கத் தோணும்!

சூரனை அளி[ழி]ச்சதும், அந்த தேவேந்திரன் தன்னோட ராஜ்ஜியத்துக்கே இவரை ராசாவாக்கி, கூடவே பத்துமோ, பத்தாதோன்னு தன்னோட பொண்ணான தெய்வானையம்மாவையும் கண்ணாலம் கட்டி வைச்சாரு.

இந்த தெய்வானையம்மா கிரியா சக்தி! அதாவது, ஒரு காரியத்தைச் செஞ்சு முடிக்கறதுக்கு தூண்டுகோலா இருக்கறவங்க! இவரு வந்த காரியம் சூரனை அளி[ழி]க்கறது! அதுக்கு இந்தம்மாதான் தூண்டுகோலு!

இனிமே இவரோட வேலை தன்னோட பக்தருங்களைக் காப்பாத்தறது. ஆனாக்காண்டிக்கு, இந்த பக்தருங்க அல்லாரும் இன்னா பண்ணிக்கினு க்கீறாங்கன்னா, இந்த ஒடம்பைப் பிடிச்சுக்கினு, அதும்மேல வினையா சேர்த்துக்கினே க்கீறாங்க. எதுனாலன்னா, ஒடம்ப்பு மேல க்கீற ஆசையினால. ஆசைன்னா இச்சை. அந்த இச்சைக்குல்லாம் காரணமா க்கீறவங்க வள்ளியம்மா! வள்ளியம்மாதான் இச்சா சக்தி!

அதுனால இவரு இன்னா பண்றாருன்னா, அந்த இச்சா சக்தி கிட்டயே போயி, அவளையே சரணடைஞ்சிடறாரு! 'இந்த ஒலகம், ஒடம்பு மேலெல்லாம் க்கீற ஆசையை விட்டுட்டு, என்னோட பக்தருங்க அல்லாரையும் என்னையே நெனைக்கறமாரி பண்ணு'ன்னு அவளைக் கொஞ்சிக் கேட்டுக்கறாராம்!

இத்தத்தான் ஒரு விரதம் மாரி பண்னிக்கினு க்கீறாராம்!

நம்மளையெல்லாம் காப்பாத்தறதுக்கு வேண்டி, இவரு விரதம் இருக்காரு!
அப்பிடீன்னா இவருக்கு நம்ம மேலெல்லாம் எத்தினி அன்பும், அக்கறையும் க்கீதுன்னு புரிஞ்சுக்கோ!

இதான் குருவா வர்ற ஒர்த்தர் பண்ற காரியம். தன்னோட அடியாருங்க நல்லாருக்கணுமேன்ற ஒரே ஒரு கவலைதான் அவருக்கு எப்பவும்! அதுக்காவ இன்னா வோணும்னாலும் செய்வாரு.

இப்ப நாம இன்னா பண்ணணும்?

இந்தத் தலைவன் வளி[ழி] காட்டித் தர்றமாரி, நாமளும், சதா சர்வகாலமும், 'முருகா முருகான்னு, அவரையே சரணடையணும்னு சொல்லிக் காமிக்கறாரு' என முடித்தான் மயிலை மன்னார்.

நாயரின் 'ஓம் சரவணபவ' ஜபம் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
*************
முருகனருள் முன்னிற்கும்!

4 பின்னூட்டங்கள்:

Anonymous,  Monday, November 28, 2011 4:24:00 PM  

முருகா முருகா முருகா

___/\___

Lalitha Mittal Monday, November 28, 2011 11:49:00 PM  

'கதிகாண மலர்க்கழலென்றருள்வாய்'

நதிசூடும் நடேசனின் விழிச்சுடரே!

ஓம் சரவணபவ!

VSK Tuesday, November 29, 2011 8:06:00 AM  

//முருகா முருகா முருகா//

மு.மு.

VSK Tuesday, November 29, 2011 8:06:00 AM  

//'கதிகாண மலர்க்கழலென்றருள்வாய்'

நதிசூடும் நடேசனின் விழிச்சுடரே!

ஓம் சரவணபவ!//

ஆஹா! அருணகிரியைத் தொடர்ந்து அடுத்த வரியா!!!
மிக அருமையாக இருக்கிறது அம்மா!
மு.மு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP