Thursday, November 17, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – 34
33.

'கண்டத்தயெல்லாம் படிச்சுப் பைத்தியம் பிடிச்சு அலையாமத் தப்பிச்சாலும் தப்பிச்சுக்கலாம்; இந்த சம்சார பந்தத்துலேர்ந்து தப்பிக்கறது ரொம்பவே கஷ்டம்ப்பா’ என அலுத்துக் கொண்டே வந்து அமர்ந்தார் சாம்பு சாஸ்திரிகள்!


‘ஏன்? என்ன ஆச்சு சாமி? வூட்டுல எதுனாச்சும் பிரச்சினையா?’ என அக்கறையாய் விசாரித்தான் மயிலை மன்னார்.


‘அதை விடுறா! அது என்னிக்கும் கூடவேதானே இருக்கு. நீ அடுத்த பாட்டைச் சொல்லு கேக்கலாம். மனசுக்காவது நிம்மதியா இருக்கும்’ என்றார் சாஸ்திரிகள்.


ஒருவிதமான அர்த்தபுஷ்டியுடன், ஒரு நமட்டுச் சிரிப்பைச் சிரித்துக்கொண்டே, ‘ம்ம்..படிப்பா. ஐயருக்குன்னே எளு[ழு]தின பாட்டை!’ என்றான் மன்னார்.


ஒன்றும் புரியாமல் நானும் படித்துக் காட்டினேன்.

சிந்தா குலவில்லொடு செல்வமெனும்
விந்தா டவியென் றுவிடப் பெறுவேன்
மந்தா கினிதந் தவரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே


சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும்
விந்தா அடவி என்று விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வர உதயனே
கந்தா முருகா கருணா ஆகரனே


“சிந்தாகுலம் இல்லொடு செல்வம் எனும் விந்தா அடவி என்று விடப் பெறுவேன்?”

‘இப்ப ஐயரு அலுத்துக்கினாரே….. அதையேதான் இந்த வரியும் சொல்லுது’ என ஆரம்பித்தான் மன்னார்!


‘சிந்தாகுலம்’னா மனக்கவலை. ஆகுலம்னா கவலை; சிந்தான்னா மனசு. மனசுல ஒரு பெரிய கவலை நம்ம எல்லாருக்குமே எப்பவும் தொத்திக்கினு இருக்கு.


ஒண்ணு, நம்ம பொண்டு, புள்ளைங்களை எப்பிடிக் கரையேத்தப் போறோம், எப்பிடி சமாளிக்கப் போறோம்னு.
இன்னொண்ணு, இதுக்கெல்லாம் தேவையான துட்டை எப்பிடி சம்பாரிக்கறது; எப்பிடி சேக்கறதுன்னு.


இது வோணும், அது வோணும்னு தெனம் நச்சரிக்கறதுக்குன்னே பொண்டாட்டி, புள்ளைங்க எப்பவும் அலையும். இது இல்லை, அது வோணும், இந்த ஃபீஸு கட்டணும், இந்த புக்கு வாங்கணும், இந்தப் பொடவை நல்லாருக்கு,; அந்த நகை டிஸைனு நல்லாருக்குன்னு சமயா சமயம் தெரியாம ரோதனை பண்ணுவாங்க.


இதுக்கெல்லாம் இன்னா வளி[ழி]?; இதை சமாளிக்க எங்க போறது?; எப்பிடி துட்டு சம்பாரிக்கறதுன்னு மனசு கெடந்து அல்லாடும்!
ஒண்ணு சமாளிச்சாச்சுன்னா, அடுத்தது ஒடனே பூதாகாரமா கெளம்பி நிக்கும்! இதுங்களையெல்லாம் சமாளிக்கறதுக்குள்ள, ‘தாவு’ தீந்து பூடும்!


இது எப்பிடி இருக்குன்னு ஒரு ஒ[உ]தாரணம் சொல்றாரு அருணையாரு.


இருக்கறதுக்குள்ளியே அடர்த்தியான மலை விந்திய மலையாம். அதுக்குள்ளாற பூந்துட்டா, கண்ணைக் கட்டிக் காட்டுல வுட்டதுன்னு சொல்லுவாங்களே…. அதும்மாரி இருக்குமாம். விந்தா அடவின்னா விந்திய மலை.


இப்ப ஐயரு சொன்ன இந்த சம்சார பந்தம்ன்றது அந்த விந்திய மலைக்குள்ள பூந்துட்டமாரி இருக்குதாம்!
இந்த மலைக்குள்ளேர்ந்து எப்ப நான் வெளியே வர்றது முருகா? இதுக்கு இன்னா வளி[ழி]?ன்னு அலர்றாரு அருணகிரி!
இத்தயெல்லாம் ஒருமாரியா சமாளிக்கறதுக்குள்ள, மனுசனுக்குப் பைத்தியம் புடிக்காம இருந்தா, அதுதான் பெரிய ஆச்சரியம்!
என்னைக்குத்தான் எனக்கு இதுலேர்ந்து விமோசனம் பொறக்கும் முருகான்னு கேக்கறாரு…. இப்ப நம்ம சாமி கேட்டதுமாரி!’ எனச் சிரித்தான் மன்னார்!

‘அடடே! இது நன்னாவே இருக்கே! ம்ம்.. இதுக்கு அடுத் ரெண்டு வரியுல ஒரு பொடி வைச்சு சொல்லியிருப்பாரே! அதைச் சொல்லு…. ஏதாவது புரியறதான்னு பாக்கறேன்’ என அசட்டுச் சிரிப்புச் சிரித்தார் சாஸ்திரிகள்.


‘இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை’ என்பதுபோல, மாமி முகத்தை நொடித்துக் கொண்டார்!

“மந்தாகினி தந்த வர உதயனே கந்தா முருகா கருணா ஆகரனே!

‘பெருசா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லாதமாரித்தான் இருக்கும்.


கங்கை பெத்த புள்ளையே! ரொம்ப ரொம்ப ஒசந்தவனே! கந்தா!! முருகா! கருணையே உருவாப் பொறந்தவனே!ன்னு இந்த வரியுல துதி பாடறாரு அருணகிரியாரு.


கொஞ்சம் ஆள[ழ]மா நெனைச்சுப் பாத்தா, இந்த எடத்துல இப்பிடி ஏன் சொல்றாருன்னு புரியலாம்.
இதுல்லாங்கூட, என்னோட நெனைப்பாக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்லி வைக்கறேன்’ என ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தான் மன்னார்.


கருணையே உருவா ஒரு பெரிய சாமி, தேவருங்கல்லாம் வந்த மொறையிட்டப்ப, தன்னோட நெத்திக் கண்ணைத் தொறந்து ஆறு பொறியாக் கெளம்பினதை எடுத்து அக்கினி பகவான்கிட்ட குடுக்க, அவரால வைச்சுக்க முடியலேன்னு, வாயு பகவான் கையுல அதைக் குடுக்கறாரு. அவராலியும் அத்தத் தாங்க முடியாமப் போக, அவரு கங்கையுல போடறாரு. கங்கைக்கு ‘மந்தாகினி’ன்னு ஒரு பேரு க்கீது! இந்த மந்தாகினி அம்மா அந்த ஆறு பொறிங்களை எடுத்துக்கினு போறச்சே, அவங்களாலியும் அத்தத் தாங்க முடியாம, சரவணப் பொய்கையுல வந்து போட்டுடறாங்க!!


ஆறு பொறிங்களும் ஆறு கொள[ழ]ந்தைங்களா மாறி, ஆறு தாமரைப் பூவுல மெதக்குதுங்க!


கார்த்திகைப் பொண்ணுங்க ஒரு ஆறு பேருக்கு அடிச்சுது லக்கி ப்ரைஸ்! அவங்களுக்குக் கெடைச்ச வரத்துனால, இந்த ஒசத்தியான கொழந்தைங்களுக்குப் பாலு கொடுக்கற அதிர்ஸ்டம் கெடைக்குது! அந்த வரத்துல உதயமானவரு இந்தக் கந்தன்!


‘கந்தன்’னா ஒண்ணாச் சேந்தவன்னு அர்த்தம்! எப்பிடி அது? நம்ம கற்பகாம்மா வர்றாங்க சரவணப் பொய்கைக்கு! அளகாத் தாமரைப் பூவுங்க மேல மெதக்கற ஆறு கொளந்தைங்களையும், ஆசையா வாரி, தன்னோட மாருல அணைச்சுக்கறாங்க. இந்த அம்மா கை பட்டதும், ஆறும் ஒண்ணா சேந்திருது. அதான் கந்தன்!


கருணையே வடிவான அந்த கந்தக் குமரன்……. முருகன்……. இத்தனைப் பேருங்க தங்கூட இருந்தும், எல்லாத்தையும் விட்டு, ஆண்டியா நின்னுக்கினு நமக்கெல்லாம் கருணை பண்ணறாரு! அவரை வேண்டிக்கினா, இந்த பந்தத்துலேருந்தும் நமக்கு விடுதலை தருவாருன்னு சொல்றாருன்னு நெனைக்கறேன்’ என முடித்தான் மயிலை மன்னார்!

‘அதென்னமோ ரொம்பச் சரியாத்தான் சொல்லியிருக்கே மன்னார்! அந்த ஆறுமுகனை விட்டா, நமக்கெல்லாம் ஆறுதல் தர்றதுக்கு வேற யாரு இருக்கா?’ எனக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!


‘வாசல்ல வந்த புடவைக்காகரன்கிட்ட சும்மா ஒரு நாலு புடவையைப் பார்த்ததுக்கு இந்த பிராம்மணர் என்னல்லாம் பேசறார் பாரு, மன்னார்! இத்தனைக்கும் ஒண்ணும் வாங்கலை! அதுக்கே இத்தனை நாடகம் ஆடறார்!’ என மாமி சொல்ல, ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!


நாயர் விடாமல், ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தைச் சொல்லியபடியே,கூடச் சேர்ந்து சிரித்தான்!
************************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!
[படித்துப் பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Saturday, November 19, 2011 9:55:00 PM  

"ஆறுமுகனை விட்டா நமக்கெல்லாம் ஆறுதல் தர்றத்துக்கு வேற யார் இருக்கா?"


வேற யாரு வேணும்?
ஓம் சரவணா பவா!

VSK Tuesday, November 22, 2011 1:18:00 PM  

சரியாச் சொன்னீங்கம்மா! அவன் ஒருவனே எப்பவுமே ஆறுதல்! மு.மு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP