Thursday, September 29, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 29
28.


'எளிமையாப் பாடிகிட்டே வந்தவருக்கு திடீருன்னு ஒரு நெனைப்பு வந்திருது.
'இன்னாடா, இன்னாமோ குடுத்தாரு, குடுத்தாருன்னு சொல்லிக்கினே வரோமே, அத்த இப்ப வெலாவாரியா சொல்லிறணும்னு முடிவு பண்ணிட்டு, அது இன்னான்னு நெனைச்சுப் பாக்கறாரு.


முருகனைப் பாத்தது நெனைப்பிருக்கு!
அவுரு கையில தாங்கிப் பிடிச்சது நெனைப்புல வருது!
இன்னாமோ சொன்னாரேன்னு ஒரு நெனைப்பு க்கீது!
அதுக்கப்புறமா?????.........


ரொம்பவே யோசனை பண்ணிப் பாக்கறாரு!
இன்னாமோ நடந்திச்சேன்னு புரியுது!
அது இன்னான்னு சொல்லத் தெரியல!
அதான் இந்தப் பாட்டு!
எங்கே படி கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்!
நான் படிக்க, மன்னார் பதம் பிரித்துச் சொன்னான்!

ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே .

"ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ"

நேத்து ஒரு வூட்டுக்கு விருந்து சாப்பிடப் போயிருந்தேன்!
நல்ல சாப்பாடு!

எல்லா அயிட்டமுமே ரொம்ப நல்லாயிருந்தாக்கூட, அந்தப் பால் பாயாசம் க்கீதே, அத்தச் சொல்லவே முடியாது!
அவ்ளோ ருசியா இருந்திச்சு!
ரெண்டு டம்ளர் குடிச்சுட்டேன்!

அப்பவும் ஆசை விடலை!
அத்தப் புரிஞ்சுகிட்ட அந்த வூட்டுக்க்காரம்மா 'அண்ணே! இன்னும் ஒரு கப்பு தரட்டுமா'ன்னாங்க!
நான் பதிலே பேசாம டம்ளரை நீட்ட, மேல ரெண்டு கரண்டி ஊத்தினாங்க!
அப்பறம், இன்னும் ரெண்டு கரண்டி!
அவங்க ஊத்த ஊத்த, நானும் வேணான்னே சொல்லாம குடிச்சுக்கினே இருந்தேன்!
எப்பிடி குடிச்சேன்னு இப்ப நெனைச்சுப் பார்த்தா, இப்ப அத எப்பிடி சொல்றதுன்னே தெரியலை!


இப்ப எதுக்கு சம்மந்தமேயில்லாம இத்தச் சொல்றானேன்னுதானே நெனைக்கறே?
அதான் இந்த 'ஆனா'!!
மேல மேல போதும்ன்னே சொல்லாம இருக்கறதுக்குப் பேருதான் 'ஆனா'.
அப்பிடியாப்பட்ட அமுதத்தை தர்றவனேன்னு முருகனைக் கூப்பிடறாரு
ஆனா அமுதேன்னு!


அயில்னா கூர்ப்புன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்!
கூரான வேலைக் கையுல வைச்சுக்கினு க்கீற என்ராசாவேன்னு கொஞ்சறாரு! அதான் 'அயில்வேல் அரசே'!


'ஞான ஆகரனே'ன்னா ஞானத்த உண்டுபண்றவன்னு அர்த்தம்!

'ஆகரன்'னா பொறக்க வைக்கறவன்.

இப்ப இந்த மூணையும் கொஞ்சம் சேர்த்துப் பாப்போமா!

வேலு ஞானத்தோட அடையாளம்!
அந்த ஞானம் பொறக்கற வேலு முருகன் கையுல !
அந்த வேலு ரொம்பவே கூர்ப்பா க்கீது!
அதாவுது, கூர்மையான ஞானம் இவுரு கையுல!

அந்தக் கையால ஒரு அமுதத்தைத் தராரு அருணகிரியாருக்கு!
அது அமுதம் மாரி க்கீதாம்!

அப்பிடி ஒரு அமுதத்தைக் குடுக்கறப்ப, அதைக் குடிக்கறாரு அருணையாரு!

போதும்னே இவுருக்கும் சொல்லத் தெரியல.
அவரும் குடுக்கறத நிறுத்தவேயில்லை!

ஞானாகரனே அயில்வேல் அரசே ஆனா அமுதே சொல்றது இதைத்தான்!


இப்பிடி அவுரு குடுத்த ஞானத்தை இன்னான்னு சொல்லச் சொன்னா, இவரால சுத்தமா முடியலை!

'நான் எப்பிடிப்பா இத்தச் சொல்றதுன்னு முருகன்கிட்ட பொலம்பறாரு!
நவிலத் தகுமோன்னு கதற்ராரு!
அதைத்தான் அடுத்த ரெண்டு வரியுல சொல்றாரு!

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

இதப் பத்திச் சொல்றதுக்கு முன்னாடி, ஒண்ணு நான் கண்டிப்பா சொல்லியே ஆவணும்!
போன பாட்டுல சொன்னேனே, அந்தக் கொணந்தான் இந்தப் பாட்டுலியும் வருது.... இன்னொரு விதமா!


எனக்குக் கிடைச்ச மாதிரியே எல்லாருக்கும் கிடைக்கணும்னு பாடினாருன்னு சொன்னேனே.. அதையே, இப்ப, இன்னொருமாரி,
தனக்குக் கிடைச்சதை நாம இவங்களுக்கு சொல்லலாமேன்னு நெனைக்கறாரு. ஆனா, முடியலை ! இன்னாமோ நடந்திச்சுன்னு புரியுது!
அதச் சொல்ல முடியல!

இந்த இடத்துலதான் நாம ஒண்ணைப் புரிஞ்சுக்கணும்!
எதுக்காவ, அவரு இப்பிடிப் பொலம்பணும்?

அப்பிடி இன்னாத்த இவரு அனுபவிச்சாரு? அது இன்னான்னு சொல்ல முடியலியேன்னு கூட சொல்றாரே? ன்னு நம்மளையெல்லாம் ஒரு செகண்டு நெனைக்கவைச்சு, அது இன்னாவாத்தான் இருக்கும்னு நம்மளோட ஆசையையும் தூண்டிவிடறதுக்காவத்தான் அருணையாரு இப்பிடில்லாம் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!

அப்பிடி நம்ம ஆசையைத் தூண்டறமாரி இன்னாதான் சொல்றாரு?

"யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே ."

மனுஷனாப் பொறந்த அன்னைக்கே நம்மளையெல்லாம் வந்து பிடிச்சுக்கற சனியன் இந்த 'நானுன்ற' ஆணவம்! மொளைச்சு மூணு நாளுகூட ஆயிருக்காது ஒரு கொள[ழ]ந்தைக்கு! அதுக்குள்ளாறயே 'இதான் என்னோட அம்மா'ன்னு ஒரு நெனைப்பு எங்கேருந்தோ வந்து
ஒட்டிக்கிரும் அதுக்கு! அவளைத் தவர, வேற ஆராச்சும் வந்து தொடட்டும்.... இன்னாமோ தன்னோட சொத்தே பறிபோனமாரி, 'வீல்,வீலு'ன்னு அலறித் தீத்திரும்!

அப்பத் தொடங்கின இந்த 'நானு'ன்ற ஆணவம் மேல மேல வளர்ந்துக்கினே போவும்! கொறையவே கொறையாது!

இந்த 'என்னோடது'ன்ற ஆணவம் இருக்கற வரைக்கும் ஆண்டவனைப் பாக்க்கறதுன்றது கொஞ்சங்கூட நடக்கவே நடக்காதுன்னு அன்னைலேர்ந்து இன்னிக்குவரைக்கும் எத்தினியோ பேருங்க... பெரிய பெரிய மகானுங்கள்லாம் சொன்னாலும், இதைப் பத்திக் கவலைப் படறவங்க ரொம்பவே கம்மின்னுதான் சொல்லணும்!

இதைப் பத்தித்தான் இந்த வரி சொல்ல வருது.

அதும் மூலமா தனக்கு இன்னா ஆச்சுன்றதையும் நமக்கெல்லாம் ஒரு கோடி காட்டி, இதைப் பத்தி நமக்குள்ளியும் ஒரு ஆசையைத் தூண்டறமாரி ஒரு கருணை பண்னியிருக்காருன்னுதான் சொல்லணும்.

இன்னான்னமோ தப்புல்லாம் பண்ணி, இந்த ஆணவத்தால தறிகெட்டு அலைஞ்சப்பக் கூட, தனக்கு இந்த கந்தன் பண்னின கருணையைச் சொல்லிக் கலங்கற வரியாத்தான் இதை நான் பாக்கறேன்.


இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க!

அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!
சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!


ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!

ஒங்கிட்ட ஒரு தப்பு இருக்குன்றதுக்காவ ஒன்னைத் தண்டிக்க மாட்டாரு!
ஒங்கிட்ட இன்னா தப்பு, குத்தம், கொறை இருக்கோ, அத்த மட்டும் தீர்த்துக் கட்டிட்டு, ஒன்னியத் திருத்தி, தன்னோடயே வைச்சுக்கிருவாரு!

பிரம்மா, சூரன், இந்திரன், ஔவையாருன்னு இப்பிடி ஆரை வோணும்னாலும் பாரு.. இப்பிடித்தான் பண்ணியிருப்பாரு!

தனக்கும் அப்பிடித்தான் பண்னினாருன்னு இவுருக்கு ஒரே பூரிப்பு!

அப்பிடி இன்னா பண்ணினாரு?
ஆணவத்தால அலைஞ்சு திரிஞ்ச அருணகிரியைத் தன்னோட கையுலியே வாங்கிக்கினு, அவருகிட்ட இருந்த அந்த 'யான்' அப்பிடீன்ற கொணத்தை 'லபக்'கினு முளு[ழு]ங்கிட்டாரு முருகன்!

இந்த எடத்துல அருமையான ஒரு சொல்லைப் போட்டிருக்காரு அருணையாரு!
'விழுங்கி'ன்னு!


இப்ப ஒரு ஜிலேபி க்கீது!
அத்தக் கையுல வைச்சுக்கினு க்கீற நீ! பாக்கறே! சுருள்சுருளா பாக்கறதுக்கே அள[ழ]கா செவப்பா க்கீது! நாக்குல வைச்சு லேசா ருசி பாக்கறே. அந்த ஜீராவும், அந்த மணமும் அப்பிடியே நாக்குல எச்சி ஊறவைக்குது. கொஞ்சமாக் கடிக்கறே! இனிப்பு அடிநாக்கு வரைக்கும் போயித் தாக்குது! வேக வேகமா அதைக் கடிச்சுத் துண்றே! மொத்தமா முளு[ழு]ங்கிட்டே அந்த ஜிலேபியை இப்ப!

அதுக்கப்பறம்??? இன்னா ஆச்சு அதுக்கு!

இத்தினி நேரமா நீ அனுபவிச்ச அத்தினியும் காலி!

நல்லா இருந்திச்சுன்னுதான் சொல்லமுடியுமே தவர, வேற ஒண்ணுமே இப்ப ஒன்னால சொல்ல முடியாது!

அந்த நெலைமையுலத்தான் க்கீறாரு அருணகிரியும்!

இவர்கிட்ட இருந்த அந்த 'யான்' இப்ப காணோம்!

முருகன் அத்த எடுத்து முளு[ழு]ங்கிட்டாரு!
இப்ப தான் ஆருன்னே அருணகிரியாருக்குத் தெரியலை!
அதே சமயம் அத்த எப்பிடிச் சொல்றதுன்னும் சொல்ல முடியலை!

யான் இப்ப தான் ஆயிருச்சு!

அந்த தான் ஆருன்னா எப்பவுமே நெலைச்சு நிக்கற அனுபவந்தான் 'அந்தத் 'தற்பரம்'.

'தற்பரம்'னா தனக்கும் மேலே க்கீற ஒரு பெரிய பொருளு!

அது எப்பிடி இருக்கும்... அந்த அனுபவம் எப்பிடி இருக்கும்ன்றத என்னால சொல்லவே முடியலியே முருகா!ன்னு இந்தப் பாட்டுல சொல்றாரு அந்தப் பெரியவரு!

ஒரு சாதாரண ஜிலேபியப் பத்தின அனுபவமே இப்பிடி இருக்கும்னா, நமக்கெல்லாம் மேலான ஒரு பெரிய தெய்வம்.... அந்த முருகன்....நமக்குள்ளியே வந்து குந்திக்கினா அது எப்பிடி இருக்கும்ன்றதை நமக்குள்ள புகுத்தி, இதைப் பத்தி நம்மளையெல்லாம் இன்னும் தீவிரமா ஈடுபடச் செய்யறதுக்குன்னே இதையெல்லாம் இங்க சொல்றாரு அருணகிரியாரு!

இதான் கந்தன் கருணையோட தனிப் பெருமை!

கந்தன் மட்டுமில்ல, அவர் மேல பக்தி பண்றவங்களுக்குங்கூட இந்தக் கருணை தானா வரச் செஞ்சிருவாரு முருகன்!

ஆனாக்காண்டிக்கு, இப்ப சாப்ட்டது ஜிலேபிதான்னு மட்டும் தெரியறமாரி, தனக்கு வந்தது ஞானம்னு மட்டும் இவருக்குத் தெரியுது! அதுனாலத்தான், 'கூர்வேல் போலக்கீற ஆனா அமுது கொடுத்த ஞானாகரனே'ன்னு மொதல்ல சொல்லி ஆரம்பிச்சாரு அந்தக் கருணையாறு....அருணையாரு! '
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

'ஓம் சரவண பவ' எனும் மந்திர ஒலி நாயரிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்தது!
********************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

13 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, October 01, 2011 5:02:00 PM  

அருமையான அனுபூதிப் பாடல்!
ஆனால்.....பிழையான விளக்கம்! :(

இதற்கு நானும், என் முருகனும் சேர்ந்தே வருத்தப்படுகிறோம்! :(

VSK Sunday, October 02, 2011 2:40:00 PM  

என் முருகன் மிகவுமே மகிழ்ந்தான்!:))

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, October 02, 2011 3:58:00 PM  

பிறர் வருத்தத்தில் மகிழ்வது முருகன் அறியாத ஒன்று!

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, October 02, 2011 3:59:00 PM  

//இந்த சாமிங்களுக்கே பொதுவா ஒரு கொணம் இருக்குன்னு பெரியவங்க சொல்லுவாங்க!//

//அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!//

//சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!//

அரும்ம்ம்ம்மையான கருத்து!
எந்தப் பெரியவா சொன்னார்கள்?

ஒன்றை ஏற்றிச் சொல்ல, எத்தனை எத்தனை இறக்கங்கள்?

VSK Sunday, October 02, 2011 4:00:00 PM  

நான் சொன்னது, இந்த விளக்கத்தில் முருகன் மகிழ்ந்தான் என்பதே! புரியாமல் போனது என் தவறல்லவே ரவி!:)

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, October 02, 2011 4:01:00 PM  

//ஆனா, முருகனோட வளி[ழி] எப்பவுமே தனி... வளி[ழி]!//

உம்ம்ம்ம்

//ஒங்கிட்ட ஒரு தப்பு இருக்குன்றதுக்காவ ஒன்னைத் தண்டிக்க மாட்டாரு!
ஒங்கிட்ட இன்னா தப்பு, குத்தம், கொறை இருக்கோ, அத்த மட்டும் தீர்த்துக் கட்டிட்டு, ஒன்னியத் திருத்தி, தன்னோடயே வைச்சுக்கிருவாரு!//

பேஷ் பேஷ்
சூரனைச் சாவடிக்கலை! Gentleஆ டச் பண்ணி, மயிலாத் தன்னோடவே வச்சிக்கிட்டான் என் முருகன்! சரி தானே?

சூப்பர், இப்ப மேற்கொண்டு பார்ப்போமோ? நான் பேசலை! கச்சியப்ப சிவாச்சாரியாரோட "கந்த புராணம்" பேசுது....

மனுசனைத் தண்டிக்காம, குறையை மட்டும் நீக்கி தன்னோடு வச்சிக்கிருவாரு!
* தாரகாசுரன் - சாவலியா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?
* சிங்கமுகாசுரன் - சாகலையா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?
* பதுமகோபன் - சாவலியா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?

* போரில் இறந்த அத்தனை பேரும் - சாவலியா? எங்கே தன்னோடு வச்சிக்கிட்டாரு?

* அட, சூரபத்மன் = சாவலியா? அப்படியே வச்சிக்கிடலாமே? எதுக்கு ஒரு உயர் திணை மன்னனை, அஃறிணையாக்கி, மயிலாக்கி, தன்னைச் சுமக்கும் வாகனமா வச்சிக்கணும்?

* இதெல்லாம் போதாது-ன்னு.....வீர மகேந்திரபுரம் என்னும் ஒட்டு மொத்த பட்டினத்தையே, எதுக்கு கடலுக்குள் மூழ்கடிக்கணும்?
அப்பாவி பொதுமக்கள் என்னா பண்ணாங்க?


* தேவாளுக்கு எதிரா ஒருவனும் வளரக் கூடாது, ஆணவம் பிடிச்சவன் சூரன் - அவன் ஆணவத்தை அழிக்கணும்-ன்னா அவனை மட்டும் அழிக்க வேண்டியது தானே?
எதுக்கு மொத்த ஊரையும் மூழ்கடிக்கணும்?

* மூழ்கடிச்ச மக்கள் யாருமே சாகாம, swimming pool-இலா மிதந்து கொண்டு இருக்கிறார்கள்? தன்னோடவே வச்சிக்கிட்டாரா, இத்தனை மக்களையும்?

சும்மா.....ஒன்றைப் புகழ வேண்டி, என்ன வேணும்ன்னாலும் பேசிறலாமா? கேட்டா, பெரியவங்க சொல்லி இருக்காங்க என்பது தான் பதிலா?

மேற்கண்ட சாகடித்தல்கள்...
மேற்கண்ட பட்டினம் சூறையாடல்...
இதுக்கெல்லாம் கந்த புராணப் பாடல்களை இங்கு எடுத்து வைக்கலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, October 02, 2011 4:02:00 PM  

//சிவன், பெருமாளு, துர்க்கைன்னு அல்லா சாமியும் பண்ணினதைப் பார்த்தியானா, நான் இன்னா சொல்ல வரேன்னு ஒனக்குப் புரியும்!//

//அது இன்னான்னா, தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறதுதான் அது!//

* சிவபெருமான், மலை அசைத்த இராவணனைத் தீர்த்துக் கட்டலையே! அந்தாகாசுரனைத் தீர்த்துக் கட்டலையே!

* நவராத்திரி அம்பிகை, யாரை எல்லாம் மன்னிக்காம, தீர்த்துக் கட்டினாள்?

* "ஒங்க" பெருமாளு, இராவணன்-கும்பகர்ணனை, மோட்சக் கதவுகளுக்கே காப்பாளர் ஆக்கி (துவார பாலகர்), தன் சங்கு சக்கரங்களையும் அவர்களிடமும் குடுத்து வச்சிருக்காரே!

* அஃறிணைப் பொருளா ஆக்காம, உயர் திணையாவே மதிப்பா வச்சிருக்காரே!

* உலகளந்து, மாவலியை, பாதாளத்துக்கு அழுத்தினாலும், அங்கே, மன்னனா மதிப்பா வச்சிருக்காரே! அஃறிணை ஆக்கிடலையே!

* ஒரு ஊரையே கடலுக்கு அடியில் மூழ்கடிக்கலையே!

= இதுக்கெல்லாம் என்ன சொல்லப் போறீங்க?

* இயேசு நாதப் பெருமான், அடுத்தவன் செஞ்ச பாவங்களையும் தன் மேல் சுமந்து கொண்டாரே!

* எதுக்கு அவதாரம் எல்லாம் எடுத்து, பூமியில் பொறந்து, அன்பானவர்களைப் பிரிஞ்சி கஷ்டப்பட்டு...
நண்பனுக்கு குதிரை ஓட்டி, மானம் பார்க்காம சாணம் அள்ளி...
இப்படி வாழலாம், இப்படி வாழக்கூடாது-ன்னு ரெண்டுமே செஞ்சிக் காட்டி...

இதெல்லாம் எதுக்குங்குறேன்?

Straight-ஆ ஒரு weapon வாங்கிக்கிட்டு வந்து, எல்லாரையும் போட்டுத் தள்ளி, கடேசி ஆளை மட்டும் வாகனம் ஆக்கிக்கிட்டு, ஊரையே மூழ்கடிச்சி...சிம்பிளா மேட்டரை முடிக்க முடியாதா என்ன? :((

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, October 02, 2011 4:07:00 PM  

முருகா, என்னவா.....
உன்னைய மையமா வச்சி, இப்பிடிப் பொதுவில் சொல்லிட்டேண்டா.....
Sorry Darling! I just wanted to bring out this hypocrisy! :(

தெய்வங்கள் இப்படியெல்லாம் செய்வதே இல்லை!
ஆனால், அவற்றை வைத்து, "பேசிக்" திரியும் மனிதர்களே, இப்படியெல்லாம் எழுதுவதும், ஏற்றுவதும், இறக்குவதும்!

ஒன்றை ஏற்றிச் சொல்ல, இப்படியெல்லாம் அடுத்தவர்களை இறக்கிச் சொல்வது என்பது "பண்பாடு"! :(((

பொதுமக்களும் அப்பாவிகள்!அப்படியா என்று நம்புவார்கள்!
இப்படிப் பேசிப் பேசியே கருத்துப் பரவல்-தவறான கருத்துப் பரவலும் கூட!
எதிர்த்துச் சுட்டிக் காட்டவோ, தரவுகளை முன் வைக்கவோ, பொதுமக்களுக்குத் தெரியாது, பாவம்!

அதனால்...கேள்வி கேட்பார் இல்லாத வரை...இப்படியான "புனைவுகள்" தொடர்கின்றன!:(
அப்படியே ஓரிருவர் கேட்டாலும், "குழப்பவாதிகள்", "தெய்வநிந்தனை"-ன்னு ஏதாச்சும் சொல்லி, உட்கார்த்தி வச்சீறலாம்:))

ஆனால், இப்படி, ஒன்றை ஏற்ற, இல்லாத ஒன்றைச் சொல்லி இறக்குவது...
இது நல்லதா? ஈசனுக்கே இது அடுக்குமா? என்பதை அவரவர் மனச்சாட்சிகளுக்கே விட்டு விடுகின்றேன்!

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, October 02, 2011 4:07:00 PM  

இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன்...

என் முருகன்...எந்த ஊரையும் இப்படி மூழ்கடிக்கலை!
ஆனா, அப்படி மூழ்கடிச்சா எழுதி வச்சது, கந்த புராணம் + கச்சியப்ப சிவாச்சாரியார் தான்!

ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட சமயம், அதன் வளர்ச்சி, அந்தஸ்து, கெளரவம் = இதுக்கெல்லாம் மெனக்கெட்டு, இப்படியான வீரங்கள், பறை சாற்றதுல், துதிபாடல்கள், தற்பெருமை! அப்போது தான் அந்தச் சமயத்தின் தூண் ஆக முடியும்! ஸ்ரீலஸ்ரீ பட்டங்கள் குடுப்பார்கள் :(

மேன்மை கொள் ** நீதி, ஒலகமெல்லாம் ஓங்கணுமாம்!
மறுப்பவர்கள் தெய்வ நிந்தனைக்கு உள்ளாவார்கள்! = இப்படியான பரப்பல்!

அதுக்காக முருகனின் தனிப் பெருங் "கருணை" என்பதேயே மறந்து விட்டு, ஊரையே மூழ்கடிச்சான் என்றும் எழுதப்பட்டது!

ஆனால் முருகன், முருகனாவே தான் இருக்கான்!
மனுசன், மனுசனாவே தான் இருக்கான்!

முருகன் குடி கெடுப்பவன் அல்ல!
ஆனா, அசுரர் குடி கெடுத்த ஐயா வருக-ன்னு மனிதன் தான் எழுதுவது!

இப்படியெல்லாம் பேசியதற்கு என்னை, பெரியவர்கள் மன்னிக்கவும்!
ஆனால்...மனச்சாட்சியே தெய்வ சாட்சி! அதில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தாலும் போதும்!

எவர் குடியும் கெடுக்காத ஐயா வருக!
என் ஆருயிர்க் காதலே முருகா வருக!!

VSK Sunday, October 02, 2011 4:18:00 PM  

மன்னிக்கும் குணம் மிகுந்தவன் முருகன் என்பதையே சொல்லியிருக்கிறான் மன்னார்.

அதனைப் புரிந்தால், இந்தக் குழப்பம் உங்களுக்கு வந்திருக்காது என நினைக்கிறேன், ரவி.

தனித்தனியே பதில் சொல்லி, விவாதமாக்க விரும்பவில்லை நான்.

தலைவன், முக்கிய எதிரி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் இதை அணுகினால், இன்னும் கொஞ்சம் புரியலாமோ என்னவோ?

உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

தவறெனக் கருதினால், உங்கள் கருத்துக்கு மறுப்பில்லை. அது உங்கள் உரிமை.

உங்களை மட்டுமல்ல; உங்கள் கருத்தையும் மதிக்கிறேன்.
வணக்கம்.

VSK Sunday, October 02, 2011 4:21:00 PM  

முருகனை உணர்ந்து சொன்ன வரிகளுக்கு முருகன் மிகவுமே மகிழ்கிறான்!
முருகனருள் முன்னிற்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, October 03, 2011 1:15:00 AM  

//மன்னிக்கும் குணம் மிகுந்தவன் முருகன் என்பதையே சொல்லியிருக்கிறான் மன்னார்//

அத மட்டுமா சொன்னான்?
சிவபெருமான், பெருமாள், அம்பிகை போன்றவர்கள் எல்லாம் "கருணையே" இல்லாமல், தண்டித்துக் கொல்லுபவர்கள் என்றல்லவா சொன்னான்! - //மத்த சாமிக்கெல்லாம் ஒரு கொணம் இருக்குது...தீர்த்துக் கட்டறது தான் அது//

ஒன்றை ஏற்றிச் சொல்ல, எத்தனை எத்தனை இறக்கங்கள்?

//தலைவன், முக்கிய எதிரி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் இதை அணுகினால், இன்னும் கொஞ்சம் புரியலாமோ என்னவோ?//

ஆக, இன்னும் இப்படி ஒன்றை ஏற்ற, மற்றவைகளை இறக்குவது தவறு-ன்னு படலை! இருக்கட்டும்! ஏத்தியதாவது உண்மையா இருக்கா-ன்னா அதுவும் இல்லை!

தலைவன், முக்கிய எதிரி என்ற கண்ணோட்டத்தில், அவனுக்கு மட்டும் வாழ்வளித்த முருகன், எதுக்கு, ஊரையே கடலுக்குள் மூழ்கடிக்கணும்? அதைச் சொல்லுங்க பார்ப்போம்!
தலைவன் உசுரு ஒஸ்தி! மிச்ச லட்சம் உசுரு சீப்பாப் போயிருச்சா?

முருகனைப் புகழ்ந்து எழுதுங்கள்!
ஆனால்...ஒன்றை ஏற்ற, இன்னொன்றை இறக்காதீர்கள்!

உண்மையிலேயே, தவறு-ன்னா அப்போது இறக்குங்கள்!
ஆனால், ஒன்றை ஏற்ற மட்டுமே மற்றவற்றை இறக்காதீர்கள்!

இயேசு பெருமான் கொண்ட கருணையில், கால் தூசி வராது, இந்த "மன்னிச்சி மயிலாக்கும்" குணம்!
தப்பு பண்றவங்களைத் தீர்த்துக் கட்டறது தான் மற்ற இறைக் குணம்-ன்னு never never make a sweeping statement!

VSK Monday, October 03, 2011 10:17:00 AM  

உங்கள் கோணத்திலிருந்து பார்க்கையில் நீங்கள் சொல்வது சரியே!

மன்னார் சொன்னதில் மாற்றம் ஏதுமில்லை.

அவரவர் புரிதல் அவரவர்க்கு. வாதம் செய்ய ஏதுமில்லை!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP