Friday, September 23, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 28

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 28
27.

"போன பாட்டுக்குச் சொன்னமாரி பெருசா சொல்லாமலியே, இப்ப வர்ற பாட்டு ரொம்பவே ஈஸியாப் புரிஞ்சிறும்! சும்மாப் படிச்சாலே புரியறமாரி அருணகிரியாரு எளு[ழு]தியிருக்காரு. படிப்பா, கேக்கலாம்' என்றான் மயிலை மன்னார்.


அவன் சொன்னதுபோலவே பாடல் எளிமையாகத்தான் இருந்தது.

மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலே றியவா னவனே.


மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.

"மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?"

இதுக்கு இன்னா புதுசாச் சொல்லப்போறான் இவன்னுதானே பாக்கறே! பெருசா ஒண்ணுமில்லை.


போனபாட்டுல 'நீ கொஞ்சங்கூட என்னியப் பத்தி நெனைக்கமாட்டேன்றியே முருகா'ன்னு சொன்னவருக்கு இன்னொரு நெனைப்பு வருது! இந்த சென்மம் சீக்கிரமே முடிஞ்சிறப் போவுதே! அதுக்குள்ளார முருகன் வரணுமேன்னு பதைக்கறாரு.


ஒரு மின்னல்மாரி ஒரு செகண்டுல பளிச்சின்னு வெட்டி, மறைஞ்சிறப்போற இந்த வாள்[ழ்]க்கை மேல ஆசைப்பட்டேனேன்னு பொலம்பறாரு.


மின்னலைப் பாத்திருக்கேல்ல? ஒரு செகண்டுகூட இருக்காது. ஆனா, அதுக்குள்ளாரவே கண்ணைப் பறிக்கறமாரி வெளிச்சமா இருக்கும்! வந்த வேகத்துலியே முடிஞ்சும் போயிறும்.


ஆனாக்க, அதுக்குள்ளதான் இன்னா ஆட்டமில்லாம் போடறோம்! இது தான் சதம்னு நம்பிக்கினு, இதும்மேல ஆசைப்பட்டு, இதும் பின்னாடியே சுத்தினேனே! ன்னு தன்னோட தலைவிதியை நொந்து 'நூடுல்ஸ்' ஆறாரு!


அப்பத்தான் ஒரு உண்மை இவருக்குப் புரியவருது!

"பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே."

நெசமான பொன்னு, மெய்யான மணி, உண்மையான பொருளுல்லாமே 'தோ! மயிலுமேல 'ஜம்'முன்னு குந்திக்கினு ஒரு ராசா மாரி வராரே இந்த முருகந்தான் மெய்யின்னு 'பொட்'டுல அடிச்சமாரி வெளங்குது!


இந்த ராசாவோட அருளு இருந்தாப்போறுமே. அத்த சீக்கிரமே எனக்குக் குடுக்கமாட்டியான்னு கேக்கறாரு அருணையாரு.


அதுனால, இந்தக் கடைசி ரெண்டு வரியை இப்பிடிப் படிக்கணும்.

'பொன்னே மணியே பொருளே மன்னே மயிலேறிய வானவனே,.....அருளே'

அதாவுது, எனக்கு அருள் பண்ணே'ன்னு அவர் கேக்கறதுபோல' என்றான் மன்னார்.


'ஆமாண்டாப்பா! இதைத் தமிழ் இலக்கணத்துல 'வியங்கோள்வினை, ஏவல்வினையா' வர்றதுன்னு சொல்லுவா! அதாவது ஆச்சரியமாச் சொல்ற ஒரு வார்த்தையை அப்படியே ஒருத்தரைப் பார்த்துச் சொல்றமாதிரி! இப்ப ரொம்ப அழகா ஒருத்தர் இருக்கார்னா, அந்த சந்தோஷத்துல 'அழகே'ன்னு அவாளையே கூப்டறோமோன்னோ! அதுமாதிரி' எனச் சொன்னார். சாம்பு சாஸ்திரிகள்!


'சேட்டன் பறயாதது ஐயர் பறஞ்சு!' எனச் சிரித்தான் நாயர்!


*************
[தொடரும்]


வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP