Friday, October 16, 2009

"வந்தாள் மஹாலக்ஷ்மியே!"

"வந்தாள் மஹாலக்ஷ்மியே!"


ஆனையிரு பக்கம்நின்று அலைகடலை அள்ளித் தெளித்து ஆரவாரம் செய்திருக்க


அலர்தாமரை தனைவிரித்து அமர்ந்திருக்கும் பீடமாக அழகுடனே துலங்கிவிட


இருகைகளில் வெண்டாமரை எழிலுடனே ஏந்திவந்து இன்முகத்தைக் காட்டிவர


மறுகைகள் வந்தவர்க்கு இந்தாவெனப் பொற்காசுகள் வஞ்சனையின்றி வாரிவழங்க


மணிமுடியும், மலரணியும், முன்னிருக்கும் நுதலினிலே பொங்கிவரும் குங்குமமும்


காதணியும், கைவளையும், பொன்னாலே செய்திட்ட புத்துருக்கு ஆபரணமும் தாங்கி


பதுமத்தின் மீதமர்ந்து இருகாலும் தெரிந்திருக்கும் பதுமாசனக் கோலமிட்டு


விழியகலச் சிரித்திருந்து இளநகையை இதழ்வடித்து கருணையுடன் பார்ப்பவளே!


காசினியில் வாழ்வோர்க்கு காசு இனியில்லையெனும் குறையெல்லாம் களைந்தருள்பவளே!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [1]



கஞ்சிக்கும் வழியின்றிக் கட்டுதற்கும் துணியின்றி வறுமையிலே வாடிநின்றும்


வாசலுக்கு வந்தவனின் பாத்திரத்தில் நெல்லிக்கனி ஒன்றிட்டு உபசரித்தாள்


அன்னைபட்டத் துயர்கண்டு ஆதிசங்கரன் நினைத்துதித்து கனகதாரைமாலை பாட


நிலமெல்லாம் கனகத்தின் நெல்லிக்கனி வீழச்செய்து நிறைவாக அருள்புரிந்தாய்!


மாலவனின் மார்பினிலே மங்களமாய்க் குடியிருக்கும் மாதரசி நீயன்றோ!


கோலவிழிப் பார்வைபடக் கோடிப்பேர் தவமிருக்க ஏழையெனக்கருள் புரிய


மாலவனின் மார்விடுத்து வேகமாக ஓடிவந்து தயைசெய்வதுன் கருணையன்றோ!


செங்கமலம் வீற்றிருந்து சிங்காரச் சிரிப்பள்ளித் திரைநிதியம் தருபவளே!


பொங்கிவரும் அமுதமெனப் பொற்கலசம் இருபுறமும் பொலிவாகத் திகழ்பவளே!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [2]



வணக்கமுடன் வழிபட்டால் வளமெல்லாம் நிறைத்திருந்து வாழ்வாங்கு வாழவைப்பாய்!


அடக்கமுடன் அண்டிவந்த அடியார்க்கு நீயளக்கும் அருள்நிதிக்கோர் குறைவில்லை!


நேர்மையுடன் இருப்பவரின் இல்லத்தில் நீயிருந்து நீங்காத நிதியம் தருவாய்!


தீக்குணங்கள் கொண்டோரின் தலைவாசல் மிதியாமல் தூரப்போய் நின்றிடுவாய்!


செல்வத்தை நீ கொடுத்து செருக்கையும் கூடவைத்து சோதனைகள் செய்திடுவாய்!


பள்ளத்தில் இருப்போரின் பக்கதுணையாய்வந்து படுதுயரைத் தீர்த்து வைப்பாய்!


உள்ளத்தில் நினைவைத்து உபசாரம் செய்பவரின் இல்லத்தை நீங்க மாட்டாய்!


வெள்ளமெனப் பொங்கிவரும் நீள்நிதியம் நீகொடுத்து நீடூழி வாழவைப்பாய்!


நற்குணங்கள் எனிலோங்க நம்பிக்கை நான்கொண்டு நின்பாதம் சரணடைந்தேன்!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [3]



ஈடில்லாத் தவம்செய்து மாவசுரன் பலியும் நின்னருளைப் பெற்றிருந்தான்!


வெண்கொற்றைக் கொடைசூழும் கனகசிம்மாசனத்தை நீயவர்க்குத் தந்துமகிழ்ந்தாய்!


செல்வத்தால் செருக்குற்றுத் தீவினைகள் புரிந்திட்ட பாலியைநீ நீங்கிவிட்டாய்!


திருமாலின் அவதாரம் வாமனனாய் வடிவெடுத்து செருக்கழியத் துணைசெய்தாய்!


தேவருக்கு அதிபனாக இந்திரர்க்கு முடிசூட்டி தேவரையும் வாழவைத்தாய்!


பூதேவி சோதரியைப் பாதுக்காக்கத் தவறிட்ட இந்திரனை மங்கச் செய்தாய்!


எங்கெங்கு தேடியும் யாருமே அறியாது பாற்கடலுள் நீ மறைந்தாய்!


வாசுகியை நாணாக்கி வடவரையைக் கடைந்தெடுக்கத் திருமகளாய் அவதரித்தாய்!


தேடிவரும் பக்தருக்குத் தீர்த்துவைக்கும் தாயாக நீயிங்கு அருளுகின்றாய்!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [4]



பாற்கடலில் துயில்கொள்ளும் பரந்தாமன் துணையாக ஆதிலக்ஷ்மித் தாயானாய்!


இராமனுக்குச் சீதையென அவதாரம்நீசெய்து கற்புக்கோர் கனலானாய்!


வேங்கடவன் திருமார்பில் வீற்றிருக்கும் பதுமாவதித் தாயவளும் நீதானே!


வரவேண்டி அழைப்பவரின் குறையெல்லாம் நீக்கிவிடும் வரலக்ஷ்மித் தாய்நீயே!


பிள்ளையில்லாப் பெண்டிருக்கு மழலையின்பம் அளிக்கவரும் சந்தான லக்ஷ்மிநீயே!


எவருக்கும் அஞ்சாத வலிமையெலாம் தந்தருளும் வீரலக்ஷ்மியும் நீதானே!


செல்வத்தைக் குவித்தளித்துச் சீரோடு வாழவைக்கும் தனலக்ஷ்மியும் நீயம்மா!


வயலெல்லாம் செழித்தோங்கி பாருலகின் பசிதீர்க்கும் தான்யலக்ஷ்மி நீயம்மா!


கஜலக்ஷ்மி நீயம்மா! வித்யாலக்ஷ்மி நீயம்மா! விஜயலக்ஷ்மியும் நீயம்மா!


கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்! [5]

****************************


பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! தீபாவளி நல்வாழ்த்துகள்!

4 பின்னூட்டங்கள்:

VSK Friday, October 16, 2009 12:59:00 PM  

தீபாவளி நல்வாழ்த்துகள்!:))

Anonymous,  Friday, October 16, 2009 1:10:00 PM  

தீபாவளி நல்வாழ்த்துகள்.

அன்னையருள் பொழிந்து விட்டாள்.

தமிழ் ததும்பும் அன்பு வார்த்தைகளால் பாமாலை என்ன ஒரு விருந்தே படைத்துவிட்டீர்கள்.

நட்புடன்,
விஜிசுதன்

S.Muruganandam Saturday, October 24, 2009 1:34:00 PM  

//கமலம்மா நினைப் பணிந்தேன்! கவலையெலாம் இனியில்லை! கைவல்யம் தந்தருள்வாய்//

அடியேனும் அன்னையிடம் அதையே வேண்டுகிறேன்.

VSK Friday, October 30, 2009 9:51:00 AM  

வருகைக்கும், தங்களது மேலான ஆசிகளுக்கும் மிக்க நன்றி திரு. கைலாஷி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP