"அ.அ. திருப்புகழ் - 34 "பாதி மதி நதி"
"அ.அ. திருப்புகழ் - 34 "பாதி மதி நதி"
அடுத்து எதை எழுதலாம் என எண்ணியபோது திரு. ராமச்சந்திரன் என்னும் அன்பர் ஒருவரிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பாடலுக்கு பொருளெழுத எண்ணி அதை எழுதியும் முடித்த பின்னர், ஏதோ ஒரு நினைவில் பழைய பதிவுகளைப் புரட்டியபோது, இதற்கு ஏற்கெனவே பொருள் எழுதியது தெரிந்தது!
அதுவும் எனது நண்பர் ரவி கேட்டதன் பேரில்தான் எழுதியிருக்கிறேன்!
ஆனால், அதையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதில் இன்னும் விவரித்துச் சொல்லியிருப்பது தெரிய வந்தது!
இதுவும் முருகன் திருவுளம் என மகிழ்ந்து, சுவாமிமலை நாதன் புகழ் பாடும் இந்தப் பதிவை இடுகிறேன்.
நானே[!!] சுருக்கமாகச் சொன்னது அவனுக்குப் போதவில்லை போலும்!
ரவி அன்புடன் அனுப்பிய ஒளிப்பேழை இதோ!
முருகனருள் முன்னிற்கும்!!
********************************
******* பாடல் ********
தான தனதன தான தனதன
தான தனதன ...... தனதான
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
**********************************
****** பொருள் *******
[வழக்கம்போல் பின் பார்த்து முன் பாதி பார்க்கலாம்!]
ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறைமீளா
தன்னை மதியா தருக்கினராகி
மமதை கொண்ட பிரம தேவனை
ஓமெனும் பொருளின் உண்மை கேட்டிட
விழித்திட்ட பிரமனின் தலையில் குட்டித்
தரையினில் தள்ளிச் சிறையினில் இட்டுப்
படைப்புத் தொழிலும் தான் கையெடுக்க,
பிரமனைச் சிறைவிட வேண்டிய சிவனார்
மனமகிழும்படிப் பொருளும் உரைத்து
அயனை அன்று சிறை விடுத்தாய்!
சூரனின் கொடுமையால் சிறையில் வாடிய
தேவரின் குறையைத் தீர்த்திட வேண்டி
சிவனார்கண்ணின் தீப்பொறி கிளம்பி
கங்கையடைந்து அதுவும் வறளச்
சரவணப்பொய்கையில் கமலங்கள் நடுவே
ஆறுகுழந்தைகள் அவதரித்திருக்கக்
கார்த்திகைப் பெண்டிர் முலைப்பால் அருந்தி
அன்னை பார்வதி அணைப்பினில் சேர்ந்து
ஆறுமுகத்தான் திருவுருக் கொண்டு
அன்னை தந்த சக்திவேல் தாங்கி
சூரனை அழித்து இருகூறாய்ப் பிளந்து
அமரர்கள் அனைவரைச் சிறையும் விடுத்தாய்!
பிரமனும் தேவரும் தேவருலகினை
மீண்டும் ஆண்டிட அருளும் செய்தாய்!
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே
ஆடுமயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே
ஆடிவரும் அழகுமயில் மீதேறி
அமரர்கள் அனைவரும் கூட்டமாகச்
சூழ்ந்துவர பவனி வரும் இளமைகுன்றா
எழிலுடையவரே! கணபதிக்கு இளையவனே!
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே
சூதம் மிகவளர் சோலைமருவு சுவாமிமலைதனில் உறைவோனே
மாமரங்கள் மிக வளர்ந்து
அடர்த்தியான சோலையாகி
அத்தகு சோலைகள் சூழ்ந்திருக்கும்
சுவாமிமலை என்னும் திருத்தலத்தில்
வாழுகின்ற முருகப் பெருமானே!
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே.
அடாது செய்த சூரனுடல்
விடாது கொன்றழிக்க
தொடர்ந்து துரத்திவந்து
காணாது சென்றொளிந்த
கடலையும் வற்றிடச்செய்து
சூரனுயிர் மாளச்செய்யும்
வல்லமை படைத்திட்ட
வீரவேலைக் கையிலேந்திய
பெருமைக்குரிய தலைவனே!
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா
பாதிமதி நதி போதும் அணிசடை நாதர் அருளிய குமரேசா
முழுநிலாய்ச் சந்திரன் பொலிந்திருந்த முன்னொருநாள்!
எழுமாலைப் பொழுதினிலே கண்டவரும் காமுறுவர்!
அப்படித்தான் கொண்டனரே இருபத்து எழுமரெனும் குமரியரும்!
பெருமைமிகு தக்கனின் அருந்தவப் புதல்வியவர்!
சேர்ந்திணைந்து வாழ்கவெனச் சந்திரனை மணமுடித்தார்!
சேர்ந்தவரும் மகிழ்வுடனே சிலகாலம் இருந்திட்டார்!
ஒருவர்மீது மட்டுமவன் பேரன்பு செலுத்துதலால்
மனங்கொதித்த தக்கராஜா சந்திரனைச் சபித்திட்டார்!
கலையெல்லாம் அழிந்துபோய் கருநிலவாய் ஆகவென!
பயங்கொண்ட நிலவரசன் சிவனாரை அண்டிநின்றான்!
அண்டிவந்து நின்றவரின் அடுதுயரம் தீர்ப்பவனாம்
சிவானரும் மனமிரங்கி அவன் குற்றம் பொறுத்திட்டார்!
தலைமீது சூடியவன் பெரும்பயத்தை நீக்கிவிட்டார்!
பிறைமதியைத் தலைசூடிய பெம்மான் எனும் பெயர் பெற்றார்!
பெற்றவர்க்குச் செய்கடனாய் கங்கைநதி வேண்டுமெனப்
பகீரதன் எனுமரசன் கடுந்தவமும் செய்திருந்தான்
தேவலோக மங்கையிவள் கங்கையெனும் புண்ணியளைப்
பூலோகம் வரச்சொல்லி விண்ணவரும் வரம் தந்தார்!
மனமில்லாக் கங்கயன்னை மாறாத கோபங்கொண்டு
அலைகடலெனப் புரண்டுவர அண்டமெலாம் நடுங்கியதே!
அமரரெலாம் பதைபதைத்து அரன்பாதம் பணிந்திட்டார்!
அன்புகொண்ட அரனாரும் கங்கையளைத் தலைக் கொண்டார்
தம்சடையில் எடுத்தணிந்தார் கங்கையளும் மறைந்துபோனாள்!
போகுமிடம் தெரியாமல் கங்கையன்னை அலைந்திட்டாள்
அகமழிந்து அடிபணிந்து காத்தருள வேண்டிட்டாள்
அன்புருவாம் அருட்சிவனும் அவள்மீது கருணைகொண்டார்
தம்சிரசில் என்றென்றும் இருந்திடவே அருள்செய்தார்!
ஒருசடையைப் பிரித்தங்கே சிறுநதியாய் செல்லவிட்டார்
பகீரதன் பின்னாலே அடக்கமுடன் கங்கை சென்றாள்!
கங்கையினைச் சடையணிந்த புனிதனெனச் சிவனானார்!
கொன்றையெனும் மலர்க்கொத்தும் சிவனாரின் தலையிருக்கும்!
நிலவையும், கங்கையையும், கொன்றை மலரும் தலைக்கணியும்
சிவனாரின் குமரனாக வந்துதித்த குமரேசக் கடவுளே!
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
தேனினும் இனியவள் தினைப்புனம் காத்தவள்
வள்ளியெனும் குற நல்லாள் - அவள்
வடிவும் தேனே குணமும் தேனே
குரலும் தேனின் இனிமையொக்கும்
குரலின் இனிமையைக் கேட்டிட்ட குமரன்
குமரியின் பாதம் வருடுகிறான் - அவள்
சிலிர்த்திடும் சிரிப்பினில் சிந்திடும் தேனைக்
காதால் கேட்டு மகிழுகிறான்
கன்னியொருத்தியின் பாதம் எவரும் பற்றுவதில்லை
மகளிர் ஆடவர் காலில் விழுந்து பணிவது உண்டு
திருமணநாளில் மிஞ்சி அணிந்திட மெல்லக் குனிந்து
கணவன் ஒருவனே கால்களைப் பற்றுவான்
குமரியின் பாதம் தொட்டிடும் உரிமை
கணவர்க்கு மட்டுமே உரியதெனும்
சீரிய கருத்தினை இங்கே சொன்னார்
மணவாளன் எனும் சொல்லின் மூலம்!
காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே
காதும் ஒருவிழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே
அன்னையைக் கண்டுபிடிக்கும் அண்ணலவன் ஆணையேற்று
தென்புலத்தை நோக்கிச்சென்ற அங்கதனின் சேனையரும்
அன்னையைக் காணாமல் அகம்குலைந்து அல்லலுற
சம்பாதி சொற்கேட்டு விண்ணிலேறிக் கடல்தாண்டி
இலங்கையினுள் புகுந்திட்டு எங்கெங்கும் தேடி
அசோகவனத்தினிலே அன்னையவள் வீற்றிருக்கும்
அருட்கோலம் கண்டவுடன் அகம்களித்து அடிபணிந்து
கணையாழி தான்கொடுத்து அடையாளம் சொன்னவுடன்
அன்னையவள் அன்புடனே அனுமனவன் முகம்பார்த்து
அன்றோர்நாள் நிகழ்வொன்றை அவனுக்குச் சொல்லலானாள்:
'தாய்சொல் தவறாமல் தம்பியுடன், தாரத்துடன்
கானகம் சென்றராமன் சென்றடைந்தான் சித்திரகூடம்
வனத்திடை படர்ந்திருக்கும் மலையடிவாரம்
முனிவரும் சித்தரும் தவம்செயும் காடு
மந்தாகினி நதியங்கு மலைவளத்தைக் கொண்டுவந்து
சோலைவனம் என்றாக்கிப் புள்ளினத்தைச் சேர்த்திருக்கும்
கண்ணுக்கு விருந்தாகக் காட்சிக்கு அருமையதாய்
நல்லதோர் இடத்தினிலே நாங்களெல்லாம் தவமிருந்தோம்.
நல்லதோர் மாலைப் பொழுது நாயகனும் களைப்புற்றான்
என்மடியில் தலைவைத்து கண்ணுறங்கத் தொடங்கிவிட்டான்
தலைவனவன் கண்ணுறங்கத் தனியளாக நானிருந்தேன்
கண்ணுறக்கம் கொள்ளாதுப் பதுமையென அமர்ந்திருந்தேன்
வான்வழியே சென்றிருந்த சயந்தனெனும் இந்திரனும்
என்னழகைக் கண்டங்கே கணப்பொழுதில் காமுற்றான்
காகமாக உருவெடுத்து எனைத் தீண்ட எண்ணங்கொண்டான்
கூரானத் தன்னலகால் என் தனங்கள் கொத்திவந்தான்
சீராகக் குருதிபொங்கி என் தலைவன் முகத்தில்விழ
துணுக்குற்று எழுந்தவனும் என்நிலையைக் கண்டிட்டான்
எவரிழைத்த கொடுமையெனச் சீற்றம்மிகக் கொண்டிட்டான்
காகத்தை நான்காட்டி நடந்தனைத்தும் கூறிநின்றேன்
ஏனென்னை எழுப்பவிலையென வருந்தியவன் கேட்கத்
தேவரீர் உறங்குகையில் தொல்லைசெய்யக் கூடாதென்றேன்
ஆறாத கோபத்துடன் காகத்தை நோக்கினான்
படுத்திருந்த பாயினின்று புல்லொன்றைக் கிள்ளினான்
'காதும்' [கொல்லும்] எனச்சொல்லி அப்புல்லை வீசினான்
வல்லவன் கையினிலே புல்லும் ஆயுதமெனும்
சொல்லுக்குக் காரணமாய் அப்புல்லும் அஸ்திரமாகி
காகத்தைவிரட்டியது! சயந்தன் வெருண்டோடினான்
மூவுலகும் சுற்றியங்கு கடவுளரிடம் வேண்டினான்
ஏதும் செய்ய இயலாதென அனைவருமே கைவிரித்தார்
சிவனடியில் அவன்பணிந்து காத்தருள வேண்டினான்
எய்தவர்க்கே மன்னிக்கும் மரபுண்டு எனச்சொல்லி
இராமனிடம் சென்றங்கு மண்டியிடச் சொல்லிவிட்டார்
சித்திரகூடம் சென்றடைந்து என்பதியின் அடிவீழ்ந்து
இராமா அபயம்! இரகுவீரா அபயம்! தாசரதே அபயம்!
காத்தருள வேண்டுமெனக் காகமும் கதறியது!
தஞ்சமென வந்தவரைக் காப்பதெங்கள் குலவழக்கம்
அபயமெனக் கேட்டதனால் நின்னுயிரைக் காத்திடுவேன்
ஆயினும் ராமபாணம் வீணாகிப் போவதில்லை
பிறன்மனை நோக்கிட்ட நின்கண்ணொன்றைக் கொண்டுசெல்லும்
எனச்சொல்லி அருள்சுரக்கக் காகமொரு கண்ணிழந்தது
அருங்குற்றம் செய்தவர்க்கும் அபயமளிக்கும் அண்ணலவன்
இக்கதையைச் சொல்லியென்றன் பதியின் துன்பம் போக்கிடுவாய்'
எனச் சொன்னாள் அன்னை! அனுமனும் விரைந்தான்!
இத்தகைய பெருமைபெற்ற இராமனின் மருகனே
என்குற்றம் பொறுத்தென்னைக் காத்தருள்க முருகனே!
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழிபட அருள்வாயே
அடைக்கலமாய் வந்தாலும் அகங்காரம் கொண்டாலும்
அபயமெனச் சொன்னாலும் அன்புடனே அருள்புரியும்
பரமசிவன் மைந்தனே! திருமாலின் மருகோனே!
தக்கன்சாபம் சந்திரனை, ராமபாணம் காகத்தைத்
துரத்திவந்து பேரழிவாய்த் தாக்குதல்போல் இங்கென்றன்
உயிர்கொண்டு செல்லவரும் காலன் என்னைக் குறிவைத்து
அச்சுறுத்தும் வடிவினிலே வந்திடாமல் காத்திருந்து
நின் திருவடித் தாமரையில் அடைக்கலமாய் எனையேற்று
தொழுதுய்ய அருள்புரிய வேண்டுகிறேன்! காத்தருள்வாய்!
********************
அருஞ்சொற்பொருள்:
போதும் - கொன்றை முதலிய மலர்களையும்
காதும் = கொல்லும்
அரி = ஹரி
காலன் = எமன்
ஆதி அயன் = அனைத்துக்கும் முதலான படைப்புத் தொழில் புரியும் பிரமன்
சுரர் உலகு = தேவ லோகம்
சூதம் = மாமரம்
வாரி = கடல்
சுவறிட = வற்றிப் போகுமாறு
வல = வலிமை பொருந்திய
****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
*****************************
29 பின்னூட்டங்கள்:
எனக்கு மிகவும் பிடித்த பாடல், அழகாக வந்திருக்கிறது. நன்றி டாக்டர் சார்.
மிக்க நன்றி மௌலி ஐயா!
பின்னூட்டத்தில் ரிப்பீட்டே சொல்லுவாய்ங்க தெரியும்! முருகா, பதிவிலியே ரிப்பீட்டா? :))
ஹிஹி! அதனால் என்ன? முருகன் உன்னை ரிப்பீட்ட ரிப்பீட்ட எங்களுக்கு அல்லவா கொள்ளை சுகம்!
அடியேனின் பழைய நேயர் விருப்பத்தை இன்னொரு முறை உயிராக்கித் தந்த திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி!
காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழிபட அருள்வாயே
காலில் வழிபட அருள்வாயே
இப்பல்லாம் ஆத்திகம் வலைப்பூவில் திருப்புகழ் எடுத்தா ஒரே சாமிமலைப் புகழா வருது SK ஐயா! :)
சாமிமலை முருகனுக்கு அரகரோகரா!
//நானே[!!] சுருக்கமாகச் சொன்னது அவனுக்குப் போதவில்லை போலும்!//
ஹா ஹா ஹா
பின்னே...."வெகு கோடி" நாம சம்பு குமாரா நமோ நம அல்லவா? அதான்! :)
//பிரமனும் தேவரும் தேவருலகினை
மீண்டும் ஆண்டிட அருளும் செய்தாய்!//
பிரம்மன் தேவலோகத்தை ஆள்வதில்லையே! கொஞ்சம் மேல் விளக்குங்கள் SK!
//ஆடுமயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே//
இதைச் சொல்லும் போதெல்லாம், அப்படியே அந்த அழகு முருகன், ஆடும் மயிலினில் ஏறி, சூழ வராப் போலவே இருக்கும்! :)
தோழன் ராகவன் இந்தப் பாட்டை youtube காணொளியா முன்பு வலை ஏற்றி இருந்தான்! யாமிருக்க பயம் ஏன் திரைப்படத்தில், வாணி ஜெயராம் குரலில்!
அதைப் பதிவில் சேர்த்து விடுங்களேன்! இதோ
http://www.youtube.com/watch?v=FDMcv6CjglI
//சூதம் மிகவளர் சோலைமருவு சுவாமிமலைதனில் உறைவோனே//
சோலை மருவு சுவாமி மலை தான்! காவிரி, குடமுருட்டி தாண்டிப் போகும் போதே வாழை, நெல்லு-ன்னு பச்சை பசேலைப் பார்க்கலாம்! மா மரங்கள் இப்போ இருக்கான்னு தெரியலை!
சூரனும் மா மரமாய் தானே நின்றான் SK ஐயா?
அது எதுக்கு மாமரமாய் நிக்கோணும்? ஏதாச்சும் பொருள் இருக்கா?
//பாதி மதி நதி போது மணிசடை
நாதர்//
சிவபெருமான் சிந்தனைத் துதியை (தியான சுலோகம்) இப்படி ஒரே வரியில் தர அருணகிரியால் மட்டுமே முடியும்!
* பாதி மதி
* நதி
* போது
* மணி சடை
* நாதர்
அருணகிரிக்கு (அண்ணாமலை) நாதன் யார்?
= சிவபெருமான் தானே!
அப்படின்னா பாதி மதி நதி போது மணிசடை நாதர் = அருணகிரி நாதர்-ன்னும் சொல்லீறலாம்! :)
//முருகா, பதிவிலியே ரிப்பீட்டா? :))//
என்னாலும் நம்பமுடியவில்லை ரவி! எழுதும்போது, ஒரு இடத்தில் கூட இதை எழுதிய நினைவு வரவே இல்லை! இதையெல்லாம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டேனே எனும் உந்தலில், பதியும்முன் போய்ப் பார்த்தபோதுதான் தெரிய வந்தது. முழுதும் எழுதிய ஒன்றை போடாமல் இருக்க மனம் இடம் கொடுக்கவில்லை. !:))
//முருகா, பதிவிலியே ரிப்பீட்டா? :))//
என்னாலும் நம்பமுடியவில்லை ரவி! எழுதும்போது, ஒரு இடத்தில் கூட இதை எழுதிய நினைவு வரவே இல்லை! இதையெல்லாம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டேனே எனும் உந்தலில், பதியும்முன் போய்ப் பார்த்தபோதுதான் தெரிய வந்தது. முழுதும் எழுதிய ஒன்றை போடாமல் இருக்க மனம் இடம் கொடுக்கவில்லை. !:))
//இப்பல்லாம் ஆத்திகம் வலைப்பூவில் திருப்புகழ் எடுத்தா ஒரே சாமிமலைப் புகழா வருது SK ஐயா! :)
சாமிமலை முருகனுக்கு அரகரோகரா!//
சாமிமலை முருகனுக்கு அரகரோகரா!//
//பாகு கனி மொழி மாது குறமகள்//
வள்ளியின் வாய்மை அப்படி! அவள் வாய்ச் சொல் அப்படி! அதில் வரும் வாய் அமுதமும் அப்படி! - பாகு போலவும் இருக்கும்! கனி போலவும் இருக்கும்! அதான் பாகு-கனி! ஏன் இப்படி?
கனி போல சுவையான சொல்லை மட்டுமே புருசன் கிட்ட பேசிக்கிட்டு இருந்தா போதுமா? கனி இருப்பக் காய் கவர்ந்தற்று எல்லாம் சரி தான்!
ஆனால் இனிக்க இனிக்கப் பேசுபவள் மட்டுமே காதலி-மனைவி ஆக மாட்டாள்! வாயால இனிப்பு காட்ட பல பேராலும் முடியுமே! அருணகிரிக்கே எத்தனையோ பெண்கள் காட்டி இருக்காங்களே, அவர் முந்தைய வாழ்வில்!
அதான் பாகு என்றும் சொல்கிறார்!
பாகின் தன்மை குழைவது!
சூடு ஏற ஏற, வெல்லப் பாகு இன்னும் குழையும்! கரைந்து கரைந்து குழையும்! அப்போது அதில் சேர்க்கும் ஏலக்காய் போன்றவையும் அதில் கரைந்து குழைந்து விடும்!
அது போல வள்ளி!
* கனியைப் போல் இனிக்கப் பேசுபவள் தான் என்றாலும்...
* பாகைப் போல் அகம் குழைபவள்! ஈரம் கசிபவள்!
பாகில் இருவரும் கரைவது சுகம்! வெறும் இனிப்பு பேச்சு மட்டுமல்லாது, உள்ளத்தில் ஈரத்தால் பாகு போல் கரையும் வள்ளி - உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே! அகம் குழைய மாட்டேனே! முருகாஆஆஆ!
//ஹா ஹா ஹா
பின்னே...."வெகு கோடி" நாம சம்பு குமாரா நமோ நம அல்லவா? அதான்! :)//
அதான் வெகுநீட்டி முழக்கிட்டேன்! :))
//பிரம்மன் தேவலோகத்தை ஆள்வதில்லையே! கொஞ்சம் மேல் விளக்குங்கள் SK!//
கைலாசம், வைகுண்டம் போல, பிரமனுக்கு சத்யலோகம் எனச் சொல்வார்கள். இவர் ஆள்வதில்லை தேவலோகத்தை என்றாலும், அனைத்து தேவர்களும் ஒரு பிதாமகரைப் போல முதலில் ஓடுவது இவரிடமே! கிங் மேக்கர் மாதிரின்னு வைச்சுப்போமே! அதனால், தேவலோகத்தில், இவரது ஆளுமையும் உண்டு!
//அதைப் பதிவில் சேர்த்து விடுங்களேன்!//
இன்றுமாலை வீட்டுக்குப் போனதும் செய்துவிடுகிறேன். அலுவலில் இயலாது! நன்றி!
//காதும் ஒருவிழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே//
இந்தக் கதையை எடுத்துச் சொன்னமைக்கு நன்றி SK ஐயா!
முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சேர்க்க விரும்புகிறேன்!
சீதையிடம் தவறாக நடக்க நினைத்தவன் ஜெயந்தன்! இந்திரன் புள்ள! அதனால் குலத்தால் அவனும் தேவன் தான்! ஆனால் அவனை ஜெயந்தேந்திரன் என்றோ, ஜெயந்த தேவன் என்றோ சொல்வது இல்லை! "காகாசுரன்" என்றே வைணவத்தில் அழைப்பார்கள்!
எம்பெருமானுக்கு தேவாசுர பேதங்கள் உண்டு! தேவர்களுக்கு மட்டுமே ஆதரவாக நடப்பவன் - என்ற பொய்யான குற்றச்சாட்டு அவ்வப்போது எழும்! ஆனால் அதில் கிஞ்சித்தும் ஆதாரமில்லை என்பதற்கு இந்த தேவன் காகாசுரன் ஆகி இழிந்து போனது தான் உதாரணம்!
எம்பெருமான் கண்ணாடி போல! நாம் எது அணிந்து பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அது தேவனோ, அசுரனோ, அவரவர் அணிந்து பார்ப்பது போலவே அவனும் தெரிகிறான்! அவ்வளவே!
பிரகலாதன், குலத்தால் அசுரன்! ஆனால் அவனை பிரகாலாதாசுரன்-ன்னு சொல்வதில்லை! பிரகலாத ஆழ்வான்! பக்தர்கள் வரிசையில் வேத வியாசர், சுகப் பிரம்மம் என்பவர்களுக்கு எல்லாம் முன்னாடி, முதல் வரிசையில் வைக்கப்படுகிறான்! இன்றும் துதிகள் பிரகலாதனை முன்னிட்டே துவங்கும்!
* பிரகலாதாசுரன் இல்லை! பிரகலாதாழ்வான்!
* ஜெயந்ததேவன் இல்லை! ஜெயந்தாசுரன்! காகாசுரன்!
- இதுவே எம்பெருமான் திருவுள்ளம்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்!
//சூரனும் மா மரமாய் தானே நின்றான் SK ஐயா?
அது எதுக்கு மாமரமாய் நிக்கோணும்? ஏதாச்சும் பொருள் இருக்கா?//
இப்படி ஒரு பதில் இருக்கு ரவி!:)))
1:10 PM, February 01, 2006
G.Ragavan said...
அருமையான விளக்கம் இராமநாதன்.
காலை எழுந்ததும் கொக்கரக்கோ என்று சேவல் கூவுவது ஏன் தெரியுமா? மக்களே எழுங்கள். முருகனைத் தொழுங்கள். என்னைப் போல பேரின்பக் கடலில் விழுங்கள் என்று சொல்லத்தான்.
கொக்கறக்கோ = கொக்கு+அறு+கோ
கொக்கு என்றால் மாமரன். சூரன் ஆணவ மலம். ஆணவம் நேராக வளராது. கிளைக்கும். அதுவும் வலுவாக. ஆகையால்தான் சூரன் மாமரமாக நின்றான். அந்த மாமரத்தை இரு கூறாக அறுத்தார் முருகப் பெருமான். அதில் ஒரு கூறு சேவல். ஒலியால் ஞானம் காட்டுவது.
ஆகையால்தான் கொக்கு அறு கோ என்று காலை எழுந்ததும் கதிர்வேலன் புகழைச் சொல்கிறது.
//அப்படின்னா பாதி மதி நதி போது மணிசடை நாதர் = அருணகிரி நாதர்-ன்னும் சொல்லீறலாம்! :)//
இதுவும் நல்லாத்தான் இருக்கு ரவி!!
//பாகில் இருவரும் கரைவது சுகம்! வெறும் இனிப்பு பேச்சு மட்டுமல்லாது, உள்ளத்தில் ஈரத்தால் பாகு போல் கரையும் வள்ளி - உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே! அகம் குழைய மாட்டேனே! முருகாஆஆஆ!//
மிக அருமையாகப் பாகு போலக் குழைந்து சொல்லியிருக்கீங்க ரவி! உணர்ச்சிமயமா இருக்கு! வாழ்க!
/எம்பெருமானுக்கு தேவாசுர பேதங்கள் உண்டு! தேவர்களுக்கு மட்டுமே ஆதரவாக நடப்பவன் - என்ற பொய்யான குற்றச்சாட்டு அவ்வப்போது எழும்! ஆனால் அதில் கிஞ்சித்தும் ஆதாரமில்லை/
மிக ஆணித்தரமான, அருமையானதொரு விளக்கம் இது! பேதங்கள் உண்டாக்குபவர் எல்லாம் மனிதர்தாமே! ஆண்டவனில் ஏது பேதம்? ஆண்டவனுக்குத்தான் ஏது பேதம்?
மிகவும் உன்னிப்பாகப் படித்து, விரிவாகப் பின்னூட்டங்கள் இட்டு களிப்பு பொங்கச் செய்தமைக்கு மிக்க நன்றி, ரவி!
//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா//
பாகு்+கனி மொழி பற்றி முன்னமே பார்த்து விட்டோம்!
அடுத்து பாதம் வருடிய மணவாளா! :)
வள்ளியின் பாதங்களை மணவாளப் பெருமான் முருகன் வருடி விடுவதாக அருணகிரி மட்டுமே அடிக்கடி சொல்லுவாரு! வேறு யாரும் அவ்வளவாகச் சொன்னதில்லை! இது ஏன்-ன்னு நானும் பல முறை யோசிச்சிப் பார்த்து இருக்கேன்! காதலிச்சி இருந்தா பட்டுனு புரிஞ்சிடும்! :)
முருகன் இவ்வாறு செய்வதாகக் கற்பனை பண்ணிப் பார்க்கும் போதெல்லாம்.....என் மனம் நினைத்தாலே இனிக்கும்! :))
பொதுவா புருசன் காலைப் பொண்டாட்டி பிடிச்சி விடுவதாகத் தான் சினிமாவில் எல்லாம் காட்டிக் காட்டி நம்மூருல பழக்கம்! பெண்டாட்டி காலை, அம்மி மிதிக்கும் போது, என் குலத்தை இனி நீ தான் காப்பாத்தணும்-ன்னு, ஒரே ஒரு முறை மட்டுமே, புருசன் பிடிப்பான் என்றே ரூல்ஸ்/தத்துவம்-ன்னு பலரும் விதம் விதமாப் பேசுவாய்ங்க! :) அதுக்கு அப்புறம் பிடிப்பது ஆண்மைக்கு இழுக்கு-ன்னு வேற சமூகம் பேசும்! பொண்டாட்டி தாசன்-ன்னு பட்டம் வேற கட்டும்! :)
ஆனால் சேயோனாகிய முருகப் பெருமான் இதெல்லாம் கடந்தவன்! அவனுக்குக் காதல் உள்ளம் மிக மிக அதிகம்! ஏன் அடிக்கடி வள்ளியைப் பாதத்தில் தொடணும்?
ஆம்பளைப் பசங்க வேற என்னன்னமோவெல்லாம் தானே பண்ணுவாய்ங்க? :)
இதழ், கன்னம், அதுக்கும் கீழே, அப்படி இப்படி-ன்னு இருப்பதை விட்டுட்டு....ஹிஹி! என் முருகனுக்கு "அதுல" எல்லாம் வெவரம் போதாதா? :))))
பாதம் வருடிய மணவாளா!
வள்ளி, மாயோன் திருமாலின் மகள்! அவளுக்கு வைணவம் தான் பொறந்த வீடு! அப்போதே முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு! ஆனால் உடனே முருகனை மணக்க அவளால் முடியவில்லை! தவம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது! பூவுலகக் காதலால் தான் ஆட்கொள்ளப் படுவாள் என்றும் சொல்லப் பட்டது! என்ன செய்வாள் பேதை? :((
வைணவக் கொழுந்தானவள், நம்பியின் மகளாகப் பிறக்கிறாள்! உலகத்தையே அளந்தவன் திருமகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்! எதற்கு காத்திருப்பு என்று தெரியாமலேயே பாவம் அவளுக்குக் காத்திருப்பு!
முருகனை அவள் முன்-பின் பார்த்தது இல்லை! முருகனும் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை! அப்படி இருந்தும் அவன் காதலிலேயே ஆழ்ந்து இருந்தாள்! ஆழும் ஆழ்வார் உள்ளம் இயற்கையாகவே உள்ளதே வள்ளிக்கு! தானாகவே ஆழ்ந்து விட்டாள்!
இப்படி பார்க்காத ஒரு முருகனுக்காக, வீட்டில் பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்! சில சமயம் வீரமாய் விரட்டவும் விரட்டினாள்! :)
இப்படி முருகன் வருவானா இல்லையா என்ற தெரியாத நிலையிலும் கூட, அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே!
வெறுமனே காடு மேடு என்று காலப் போக்கில் கால் தேயத் தேய, மனமும் தேயத் தேய அலைந்து திரிந்தவள் வள்ளி!
அதனால் தான் என்னாசை முருகப் பெருமான், அந்தத் தேய்ந்த வள்ளிப் பாதங்களைப் பிடித்துக் கொண்டான்! இவள் எனக்காக மேலுலகில் நடந்து தேய்ந்தாள், பின் அங்கிருந்து கீழே நடந்து வந்தாள், வளர்ந்து தினைப்புனத்தில் நடந்து தேய்ந்தாள்! ஹைய்யோ!
நடந்த கால்கள் நொந்தவோ
நடுங்கும் ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ?
இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த கா-
விரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து
பேசு வாழி கேசனே!!!
இப்படித் தனக்காக மனத்தாலும் காலாலும் தேய்ந்தவள் காலைத் தான், என் முருகன் பிடித்துக் கொண்டான்! தேய்ந்த காலை இன்னும் வருடிக் கொண்டு இருக்கிறான்!
இராமனின் பாதுகைக்கு பாதுகா பட்டாபிஷேகம்-ன்னு சொல்லுவாய்ங்க!
ஆனால் காதல் பாதங்களுக்கு, காதல் முருகன் செய்யும் இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!
பாதம் வருடிய மணவாளா!
பாதம் வருடிய மணவாளா!
முருகாஆஆஆஆ!
//இப்படித் தனக்காக மனத்தாலும் காலாலும் தேய்ந்தவள் காலைத் தான், என் முருகன் பிடித்துக் கொண்டான்! தேய்ந்த காலை இன்னும் வருடிக் கொண்டு இருக்கிறான்!
இராமனின் பாதுகைக்கு பாதுகா பட்டாபிஷேகம்-ன்னு சொல்லுவாய்ங்க!
ஆனால் காதல் பாதங்களுக்கு, காதல் முருகன் செய்யும் இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!
பாதம் வருடிய மணவாளா!
பாதம் வருடிய மணவாளா!
முருகாஆஆஆஆ!//
விரிவாகச் சொல்லி வளமாகப் பொருள் தந்திருக்கீங்க ரவி, இந்தப் பாதம் வருடியது எதனால் என! இதே நிகழ்வை நான் முன்னர் எழுதிய கந்தபுராணக் கதையிலும் சொல்லியிருக்கிறேன். ஆனால், இவ்வளவு விரிவாகச் சொன்னது நீங்கதான்! பாதிமதிநதிபோதணிசடைநாதகுமரன் பண்ணும் வேலையைப் பார்த்தீங்களா? ரீ-மேக்கிலும் பல நயங்களைக் கொண்டுவந்து கொட்டுகிறான்! மிகவும் ஆனந்தமாக இருக்கிறது ரவி! முருகனருள் முன்னிற்கும்!
//மிகவும் ஆனந்தமாக இருக்கிறது ரவி! முருகனருள் முன்னிற்கும்!//
பாதம் வருடிய மணவாளா - பற்றி எழுதும் போது...என்னமோ தெரியலை...
வள்ளி-முருகன்-ன்னு அந்த அன்னோன்ய உறவு பற்றி எழுதும் போது, கண் கலங்கிக்கிட்டே தான் எழுதி முடித்தேன்! அலுவலகம் வேற.....தனி அறை என்பதால் தப்பிச்சேன்!
பாதம் வருடிய மணவாளா!
பாதம் வருடிய மணவாளா!
வள்ளிக் கொழுந்தே...
//பாதம் வருடிய மணவாளா - பற்றி எழுதும் போது...என்னமோ தெரியலை...
வள்ளி-முருகன்-ன்னு அந்த அன்னோன்ய உறவு பற்றி எழுதும் போது, கண் கலங்கிக்கிட்டே தான் எழுதி முடித்தேன்! அலுவலகம் வேற.....தனி அறை என்பதால் தப்பிச்சேன்!
பாதம் வருடிய மணவாளா!
பாதம் வருடிய மணவாளா!
வள்ளிக் கொழுந்தே...//
ஒவ்வொரு சொல்லையும் படிக்கும்போதே உணர்ந்தேன் ரவி, நீங்க நிச்சயமா கலங்கிய கண்களுடன்தான் எழுதினீர்கள் என.
முருகா! முருகா! இன்னல் தீர்த்தருள்வாய் எல்லாருக்கும்!
நான் பாதி அறிந்த இந்த பாடலை
.......மிக மதியுடன்
மிகையா ல்
.....மிதமிஞ்சிய நடையில் . .போதும்
என்றளவுக்கு எழுதியதற்கு .....மிக மிக நன்றி
...முதல் வரியும் .நான்காவது வரியும் நான் அடிக்கடி பாடுவேன்
.காலென் எ னை அனுகாமல் காலில் வழிபட அருள்வாயே
....ஆப்போதைக்கு இப்போதே சொல்லி விடுகிறேன் கந்தா குமரா
......பேரெதும் வேண்டிலேன் .!புகழ் வேண்டேன் !உன் பாத -புகலொன் றே போதுமப்பா
...நெஞ்என கன கல்லும் நெகிழ்ந்துருகியது மனம் ...மிகமிக நன்றி ...சித்ரம் ///
ramachandran
//நெஞ்என கன கல்லும் நெகிழ்ந்துருகியது மனம் ...மிகமிக நன்றி ...சித்ரம் ///
தங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நீங்கள் கேட்டதால்தானே இது நிகழ்ந்தது.
அடுத்த பதிவு திருப்புகழில் .
தை மாத ம் சகல செல்வ யோக வாழ்வு
அனைவரும் அடைய இப் பாடல் பேர்உதவி யாக இருக்குமே
" சரணகம லால யத்தை அரைநிமிட நேர மட்டி ல்"
சித்ரம் ..//
அடுத்த பதிவு திருப்புகழில் .
தை மாத ம் சகல செல்வ யோக வாழ்வு
அனைவரும் அடைய இப் பாடல் பேர்உதவி யாக இருக்குமே
" சரணகம லால யத்தை அரைநிமிட நேர மட்டி ல்"
சித்ரம் ..//
Post a Comment