Tuesday, September 22, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 9&10

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 9&10

1&2 3,4&5 6,7&8


நவநாயகியரின் நிறைவு அம்சமாய் விளங்கும் அன்னையின் தரிசனம் இங்கே! அனைத்துக்கும் ஆதிகாரணி துர்க்கை என்பதால் அவளது பெயரை நான்காம் அடியிலும், அம்சத்தின் பெயரை இறுதி அடியிலும் வைத்தேன். முதல் நான்கு அடிகளில் அன்னையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும், அடுத்த நான்கு அடிகளில் அவளது தோற்றமும் சொல்லப்பட்டிருக்கின்றன. யாவினும் நலம் சூழ்க!


9. ஸித்திதாத்ரி தேவி:



சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே

அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே


அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே


அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும்
துர்க்கையளே!

ஸித்திதாத்ரி எனப் பெருமைபெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே


தாமரைமலர்மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே


சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே


நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று
ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்! [9]


ஸ்ரீ மஹா துர்கா!:

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே


நவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே


நவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான
துர்க்கையளே!

நவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே

நவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே


நவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே


நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே
துர்க்கையின் தாள் பணிந்தேன்!
[10]



நாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்

சொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து

நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே

அன்னையுன்றன் அடிபணிந்தேன் தாழ்ந்து.


நவநாயகியர் நற்றமிழ்மாலை நிறைவுற்றது
.

பொங்கும் மங்களம் எங்கினும் தங்குக!


ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! *****************************************************************

[அன்னையைப் பற்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வம் ஒன்று மட்டுமே இதன் பின்னணி! இலக்கணப் பிழைகள் இருக்கக்கூடும். ஆர்வலர்கள் பொறுத்தருள்க!]

பின்னிணைப்பு:

என்ன காரணமெனத் தெரியவில்லை இந்த நவநாயகியர் எனக்கருள் செய்ய வந்தது! இந்தப் பதிவை இட்டு முடித்தபின், என் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க துர்கை பற்றிய எதையோ தேடப்போய், என் கண்ணில் இது பட்டது. என்னவெனத் தெரியாமலேயே, பார்க்க ஆரம்பித்ததும் என்னையறியாமல் ஒரு பரவசம்! என்னவென்று நீங்களும் பாருங்களேன்! நான்கே நிமிடங்கள்தான் இது!


ஜெய் தேவி துர்கா!

http://www.youtube.com/watch?v=AXx6vBKEnCk&feature=channel_page



பொங்கும் மங்களம் எங்கினும் தங்குக!


ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

*****************************************************************

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP