"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2
"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2
நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள்.
ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின் குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.
எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!
"நவநாயகியர் நற்றமிழ்மாலை"
'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.
1. ஷைலபுத்ரி தேவி:
சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே
புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே
மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே
வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!
ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே
சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே
மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே
நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]
2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே
சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே
சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே
ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!
பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே
ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே
தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே
நவநாயகியரில் இரண்டாம்நாளின்று ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]
********************
[நவநாயகியர் உலா தொடரும்]
3 பின்னூட்டங்கள்:
Very good & useful. I chant it while reading.
Thanks & good wishes.
Balakka
very good and useful verses on the goddess.
Thanks Sankar.
Love & wishes.
Balakka
மிக்க நன்றி அக்கா!
நவராத்ரி வணக்கங்கள்!
Post a Comment