Tuesday, September 01, 2009

"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1


"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]-1



[முதல் பகுதி]
நண்பர் ரவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, திருவெழு கூற்றிருக்கை வகையில்
அமைந்துள்ள இந்தத் திருப்புகழை எனக்குத் தெரிந்த அளவில் விளக்க
முயன்றிருக்கிறேன்.

1 முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என
அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்வதுமாக
அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போற்றிப் பாடும்
அற்புதப் பாடல்.

ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து
அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321

என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.

அதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!

பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ்
அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே
முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயர்.
சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்.

இப்போது பாடலைப் பார்ப்போம்!


*********** பாடல் ***********

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை


இருபிறப் பாளரி னொருவ னாயினை

ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக் கிளையோ னாயினை


ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை


ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை


அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே.

**************

*********** பொருள் ***********

இப்பாடலில் எண்களை வைத்து விளையாட அருணையார் முடிவெடுத்திருக்கிறார்.
அதற்காக அப்படியே விட்டு விடுவாரா?!!
சொற்களில் எண்களை வைத்தவர், கருத்தினில் கந்த புராணத்தையே
சொல்லியிருக்கிறார்.
இறையருள் கைவந்த ஒருவரால் மட்டுமே இது இயலும் என்பதற்கு
இப்பாடல் ஒரு உதாரணம்.
பாடலின் பொருள் புரியவரும்போது, நமக்கும் இது புரியும்!

முதலில் இதைப் பதம் பிரித்துப் பார்ப்போம்!

ஓர் உருவாகிய தாரகப் பிரமத்து

ஒருவகைத் தோற்றத்து இரு மரபு எய்தி

ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை


இரு பிறப்பாளரின் ஒருவன் ஆயினை

ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்


நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீவலம் செய்தனை


நால்வகை மருப்பின் மும்மதத்து இருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய

மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை

ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு

ஒரு குரு ஆயினை


ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என

எழில்தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை


அறுமீன் பயந்தனை ஐம்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு

அன்றில் அம் கிரி இருபிளவாக ஒருவேல் விடுத்தனை


காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற

ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
--------------------------------

இப்பவே கொஞ்சம் புரிஞ்சிருக்குமே!

இருந்தாலும், அவர் சொன்ன கந்தபுராணக் கதையை நான் சொல்வதற்காக,
இதன் பொருளைப் பார்ப்போம்.
எண்களை வைத்து இப்பாடல் அமைந்திருப்பதனால், வழக்கம்போல்
பின் பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பொருள் காணலாம்.
அருஞ்சொற்பொருளையும் ஒவ்வொரு பத்திக்கும் அடியில் இட்டிருக்கிறேன்,
பாடல் விளங்குவதற்காக!
சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை
விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும்.

பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழுக் கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை!
பொறுத்தருள்க!
[அடுத்த பதிவு நாளை வரும்!]
**********************************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------

17 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Tuesday, September 01, 2009 11:56:00 PM  

வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?

VSK Wednesday, September 02, 2009 12:08:00 AM  

//வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?//

சற்று விரிவாகவும், ஒரு மாறுபட்ட வடிவமைப்பிலும் இப்பாடலின் பொருளை
விளக்க எண்ணியிருப்பதால், இது ஒரு சில பதிவுகளாகத் தினமும் வரும்.

பாடலின் பொருள், கந்தபுராணம் சொல்லும் கதை, மற்றும் திருவெழுக் கூற்றிருக்கையை எனது பாணியிலும் சொல்லியிருப்பதால் இந்த முறை!
பொறுத்தருள்க!
[அடுத்த பதிவு நாளை வரும்!]

அது இல்லாமலா?:)) நாளை முதல்!
ரொம்பப் பெருசா இருந்தா படிக்க கஷ்டப்படுவாங்களேன்னு!:))
நன்றி கோவியாரே!

அ. நம்பி Wednesday, September 02, 2009 12:17:00 AM  

//ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை//

இஃது அருணகிரிநாதரின் தனிமுத்திரை.

ஆளுடைய பிள்ளையாரைத் திருமுருகனாகவே பார்ப்பவர் அருணகிரிநாதர்.

தொடருங்கள்.

VSK Wednesday, September 02, 2009 12:23:00 AM  

//ஆளுடைய பிள்ளையாரைத் திருமுருகனாகவே பார்ப்பவர் அருணகிரிநாதர்.

தொடருங்கள்.//

ஆம் ஐயா! அஃதே அவரது தனி முத்திரை!

நாளை தொடர்வேன் ஐயா!
நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, September 02, 2009 5:24:00 PM  

அருமை! அருமை!
சாமி மலை அப்பன் திருவடிகளே சரணம்!
அப்படியே தேரோட்டம் இழுத்தாப் போல இருக்கு! :)

//கோவி.கண்ணன் said...
வழக்கம் போல் பிரிச்சு மேயலையா ?//

கோவி அண்ணா
அதான் அடியேன் வந்துட்டேன்-ல்ல? ஆரம்பிச்சிடறேன்! :)
SK ஐயா! ஆசி கூறுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, September 02, 2009 6:41:00 PM  

தேரு படம் சூப்பர் SK ஐயா!
முழுப் பாட்டும் படத்திலேயே வரைஞ்சி வச்சிருக்காங்க! எங்கிட்டு புடிச்சீக? :)
மக்கா, எல்லாரும் க்ளிக் பண்ணி, பெருசாக்கிப் பாருங்க!
அப்படியே சுவாமி மலைத் தேர்! மலைத்தேன்!
:)

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, September 02, 2009 7:05:00 PM  

SK ஐயா பதிவில் சொன்ன அருமையான எழுக் கூற்று இருக்கை விளக்கத்துக்கு...கொஞ்சமா மேலதிக தகவல்கள் இதோ! அடியேன் பொடியேன் அறிந்த வரை!

அது அருணகிரியார் செய்யும் Binomial Theorem! :))
இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு பேரு-ன்னு தான் நினைக்கிறேன்! (SK ayya, correct me If I am wrong)
* ஞான சம்பந்தர்
* திருமங்கை ஆழ்வார்
* அருணகிரியார்

Folks, If u notice...
11^2=121
111^2=12321
1111^2=1234321
11111^2=123454321
etc....

It is actually about the squares of the numbers consisting of 1s! It is the x^2 transformation in binomial...

ஒரு தேர்த்தட்டு அடுக்கு போல வரணும்-ன்னு தான் இதை அமைச்சது! ஆனா இதன் பின்னாடி நுட்பமான குறீயீடும் இருக்கு! இந்தக் குறியீடு ஏனோ அதிகம் வெளியில் சொல்லப்படுவதில்லை! நாலாயிர அருளிச் செயல் வியாக்யானத்தில் (முப்பத்தாறாயிரப் படி) மட்டும் இந்தக் கணித சூட்சுமத்தை லேசாத் தொட்டுச் செல்லுவாரு!

அப்படியே திருப்பிப் போடுங்க...
121=11^2
12321=111^2
1234321=1111^2
123454321=11111^2

இடது பக்கம் நம்பர்கள் விதம் விதமா மாறினாலும், வலப்பக்கம் எல்லாம் ஒன்று என்னும் எண்ணின் அடிப்படையில் ஒன்னாயிருச்சி பாருங்க!

* எண்கள் அப்போதில் வேறுரு காட்டினாலும்
* ஒரே சீரில் சீர்மையுடன் வருமேயெங்கில்,
* அதை ஒரே எண்ணுக்கு ஏற்றி விடுமாற் போலே
* பல்வேறு தெய்வ வணக்கங்களையும், வணங்காமைகளையும், எம்பெருமானுக்கே ஏற்றி விடுவங்கள் ஆவன, அதுவே
* அவரவர் தமதம அறிவறி வகைவகை
* அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
* அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
* என்னுமாப் போலே இந்த ரதபந்தம் நின்றது
-ன்னு கொஞ்சம் கணிதமாவும் வியாக்யானங்கள் அருமையாச் சொல்லி இருப்பாய்ங்க!

VSK Wednesday, September 02, 2009 7:42:00 PM  

அடடா! அடடா! ரவி வந்தா என்ன ஒரு களை கட்டுது பாருங்க! எழுகூற்றிருக்கை பற்றிய உங்க ஆராய்ச்சி விளக்கம் அமர்க்களம்!
தேரு கிளம்பியாச்சு!
நிலைக்கு வர்ற வரைக்கும் கூடவே வடம் பிடிங்க ஐயா!

மலைத்தேனை எல்லாரும் போய் பிடிக்க முடியாதேன்னுதான் நானே பிடிச்சுக் கொண்டுவந்துட்டேன்!

ரொம்ப சந்தோஷமா இருக்கு ரவி!
நன்றி!!

VSK Wednesday, September 02, 2009 7:43:00 PM  

//அது அருணகிரியார் செய்யும் Binomial Theorem! :))
இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு பேரு-ன்னு தான் நினைக்கிறேன்! (SK ayya, correct me If I am wrong)
* ஞான சம்பந்தர்
* திருமங்கை ஆழ்வார்
* அருணகிரியார்//

இந்தப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் சொல்லுங்க ரவி!:))

VSK Wednesday, September 02, 2009 7:45:00 PM  

//
கோவி அண்ணா
அதான் அடியேன் வந்துட்டேன்-ல்ல? ஆரம்பிச்சிடறேன்! :)
SK ஐயா! ஆசி கூறுங்க!//

என்னாசி எப்பவுமே உங்களுக்குத்தான் ரவி!
நான் சொன்னதையும் படியுங்களேன்!
:))

VSK Wednesday, September 02, 2009 7:48:00 PM  

//இந்த ரதபந்தம் நின்றது
-ன்னு கொஞ்சம் கணிதமாவும் வியாக்யானங்கள் அருமையாச் சொல்லி இருப்பாய்ங்க!//

ரதபந்த விளக்கம் அருமையான ஒருமைத் தத்துவத்தைச் சொல்லி நிற்கிறது! அருமை! அருமை!!

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, September 03, 2009 1:36:00 AM  

//இந்தப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் சொல்லுங்க ரவி!:))//

ஆகா! படிச்சேனே!
//சம்பந்தரும் இன்ன பிறரும் இவ்வகையைத் தொட்டிருக்கிறார்கள்//-ன்னு சொல்லி இருக்கீக! திருமங்கையை விட்டுட்டீங்க! அதான் பின்னூட்டத்தில் மூனு பேருன்னு சொன்னேன்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, September 03, 2009 12:26:00 PM  

//இதைச் செய்தவர்கள் தமிழ் இலக்கியத்தில் மூனே மூனு பேரு//

இப்போ பார்த்தா, மூனு பேரு இல்ல! மொத்தம் நாலு பேரு மாதிரி தெரியிறாங்க! யார் அந்த நாலாமவர்? யார் அந்த நாலாமவர்?

சேலார் வயல் பொழில் சூழ் கரோலினா உறை மருத்துவன் உரைத்த எழுக் கூற்றிருக்கையோ? :)))

அடுத்த பதிவுல ஈசியாக் கண்டுபிடிச்சிறலாம்! :)

VSK Thursday, September 03, 2009 9:23:00 PM  

//சேலார் வயல் பொழில் சூழ் கரோலினா உறை மருத்துவன் உரைத்த எழுக் கூற்றிருக்கையோ? :)))

அடுத்த பதிவுல ஈசியாக் கண்டுபிடிச்சிறலாம்! :)//

சும்மா முயற்சி செய்தேன் அருணையாரை ஒட்டி. அவ்வளவுதான்!

நீங்க கொடுத்த பட்டம்கூட நல்லாயிருக்கே!

ஒரே ஒரு திருத்தம்!

புகையிலைவயல்சூழ் எனச் சொல்லலாம். இங்கெல்லாம் முக்கியப் பயிர் புகையிலைதன்!:))

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, September 04, 2009 12:18:00 AM  

திரு எழுக் கூற்று இருக்கைத் தேர் வடம் இழுத்துக் கொண்டே...

சுவாமிமலை முருகனுக்கு அரோகரா!
எங்கள் சரவண பவனுக்கு அரோகரா!

குமரன் (Kumaran) Saturday, September 05, 2009 6:37:00 PM  

புதுமையான ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று மகிழ்வாக இருக்கிறது எஸ்.கே. ஐயா. நன்றிகள்.

S.Muruganandam Sunday, September 06, 2009 9:23:00 AM  

சுக்கு விற்கும் ஏரகத்து செட்டியாரின் மலைத்தேன் (கணிதத்தேன்) கண்டு மலைத்தேன். நன்றி VSK ஐயா.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP