"இறைசெயல் தன்செயல்"
"இறைசெயல் தன்செயல்"
'இறைசெயல் தன்செயல் எப்படி உணர்வது இதனை?'
என்றொருகேள்வியை நானும்வைத்திட
எம்மவர் அருகினில் திரும்பிப் பார்த்தார்
நிகழ்வன யாவும் இறைசெயலாகும்
எம்துணையின்றியே அதுவும் நிகழும்
நீயும் நானும் இருந்திடும் நேரம்
இங்கே எதிரே எம்நலன்பேணி
அன்புடன் அன்னை அளித்திடும் உணவும்
தன்செயல்தொட்டே நிகழ்வது ஆகும்
வருபவர் நலனைக் கருத்தினில் கொண்டு
அறுசுவையமுது எமக்கெனப் படைக்க
மாலையில் தொடங்கிய பணியின் விளைவே
இங்கே எதிரில் இருந்திடும் உணவு
சோலையில் மாலையில் அமர்ந்திடும் நேரம்
எவரோ ஒருவர் குறுக்கே போவதும்
இலையது உதிர்ந்து மேலே வீழ்வதும்
எம்செயல் அதிலே ஏதும் இல்லை
சித்திரப்படமொன்று[animation movie] பார்த்திடும் நேரம்
இதுபோல் காட்சியை நினைத்துப் பார்க்கின்
இலைகள் விழுவதும் மனிதர் நடப்பதும்
இயக்குநர் ஒருவரின் ஆக்கம் அல்லவோ
நிகழ்ந்திடும் எதனையும் கருத்தினில் கொண்டு
கவனமாய் இயக்கத்தைப் புரிந்துகொண்டு
வருவதைத் தாங்கிடும் மனமிது கொண்டால்
வருத்தங்களில்லா வாழ்வும் அமையும்
வலியச்சென்று வம்புகள் செய்து
அலையும் மனதின் செயல்வழி நடந்திட
வந்திடும் வினைகளோ எந்தம் பொறுப்பு
என்பது புரிந்திட தன்செயல் அடங்கும்
கணக்குகள் வழக்குகள் எமக்குள் வேண்டாம்
பிணக்குகள் பூக்கும் அடுசெயல் வேண்டாம்
நல்லது கெட்டது என்பதும் இல்லை
நடக்கும் யாவையுமோர் கணக்கினில் நிகழும்
நிகழ்வினை நிகழ்த்திடும் இறைவன் அறிவான்
கணக்குகள் என்ன காட்சிகள் எதுவென
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் அவனுக்கில்லை
மகிழ்ச்சியில் ஆழ்வதன் மர்மமும் இதுவே
இறைசெயல் விளைத்திடும் அமைதியில் ஆழ்ந்து
தன்செயல் என்பதைத் தள்ளியே வைத்து
வருவன யாவையும் ஏற்றிடும் பண்பினை
அவனே அருளிட அவனை வேண்டு
என்றவர் சொல்லி என்னைப் பார்த்தார்
என்ன செய்யணும் இப்போ என்றேன்
ஒன்றும் வேண்டாம் சும்மாயிருப்பாய்
இன்னுமா புரியலை என்றே சிரித்தார்!
*********************************************
9 பின்னூட்டங்கள்:
/////கணக்குகள் வழக்குகள் எமக்குள் வேண்டாம்
பிணக்குகள் பூக்கும் அடுசெயல் வேண்டாம்
நல்லது கெட்டது என்பதும் இல்லை
நடக்கும் யாவையுமோர் கணக்கினில் நிகழும்/////
நடக்கும் யாவையுமோர் கணக்கினில் நிகழும்
நயந்து நடந்தால் நிம்மதி கிடைக்கும்
அறிந்தது சொன்னார் விஎஸ்கே அய்யா
அவர் புகழ் வாழ்க! வளர்க!
ஜோசியத்தில் ஆசானாய்த் திகழும் தங்களுக்கு இந்த வரிகள் நிச்சயம் பிடிக்குமென நம்பினேன் ஆசானே!
அதேபோல், நீங்களும் வந்து சொன்னதில் மகிழ்ச்சியே!:))
நன்றி!
//இறைசெயல் விளைத்திடும் அமைதியில் ஆழ்ந்து
தன்செயல் என்பதைத் தள்ளியே வைத்து
வருவன யாவையும் ஏற்றிடும் பண்பினை
அவனே அருளிட அவனை வேண்டு//
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
அனைத்தும் அருளுபவன் அவன் என உணர்தல் வேண்டும்; அஃதும் அவன் அருளாலேயே கைகூடும்.
நன்றிங்க திரு. நம்பி!
அவனருள் நம்மை அழைத்துச் செல்லும் !
ஒன்றும் வேண்டாம் சும்மாயிருப்பாய்
இன்னுமா புரியலை என்றே சிரித்தார்!
வரிகள் ஒவ்வொன்றும் வைரங்கள் அய்யா அருமை.
எல்லாப் புகழும் இதைச் சொல்லியருளிய என் குருநாதரையே சாரும். நன்றி, திரு.கேசவன் அவர்களே!
மன்னிக்கவும் திரு. தங்கமணி பிரபு!
இன்றுதான் இணையப் பக்கம் வந்து இதனைப் பார்த்தேன். தாமதமாகப் பதிய நேர்ந்தமைக்கு மனிக்கவும்.
விரைவில் தங்கள் பதிவுகளைப் படித்து அங்கே வந்து சொல்கிறேன். நன்றி.
//என்றவர் சொல்லி என்னைப் பார்த்தார்
என்ன செய்யணும் இப்போ என்றேன்
ஒன்றும் வேண்டாம் சும்மாயிருப்பாய்
இன்னுமா புரியலை என்றே சிரித்தார்!//
ஒன்றும் செய்யாமல் இருப்பதே சுகம் !
//
ஒன்றும் செய்யாமல் இருப்பதே சுகம் !//
அதே! அதே! கோவியாரே!
நன்றி!
Post a Comment