"காட்டில் எரியும் வட்டநிலா!"
"காட்டில் எரியும் வட்டநிலா!"
பனிபொழியும் இரவுநேரம்
பாதையிலாக் காட்டுவனம்
தென்றலொன்றைத் துணையாக்கித்
தனிமரமாய் நடந்திருந்தேன்
ஆருமற்ற காட்டினிலே
வேறுசத்தம் கேட்கவில்லை
பறவைகளும் உறங்கியாச்சு
இரவுமங்கே அடர்ந்தாச்சு
காற்றலையின் சிலுசிலுப்பில்
கனிமரங்கள் இலையசைய
கிளைகளது விரிப்பினிலே
பால்நிலவின் தரிசனம்
முழுநிலவாய் ஒளிர்ந்தங்கு
பால்நிலவாய்ப் பொழிந்திருக்க
பாதைசற்றுத் தெளிவாக
நன்றியுடன் தலைநிமிர்ந்தேன்
நிலவங்கு அழுவதுபோல்
எனக்குள்ளே பிரமைதட்ட
துணுக்குற்று அதைப் பார்த்தேன்
என்மீது சிறுதூறல்
யாருமில்லாக் காட்டினிலே
எவர்க்காகப் பொழிகி்றது
வட்டநிலா வடிவழகைக்
கண்டிடவோ் ஆளில்லை
அழகினையே ரசித்திடவோ
அக்கம்பக்கம் எவருமில்லை
தண்ணொளியைப் பருகிடவோ
எவராலும் இயலவில்லை
தனிக்காட்டில் எரிகின்ற
தங்கநிலா துயரதனை
எவரறிவார் ஏதறிவார்
எவருக்குத்தான் இதுபுரியும்
எரிகின்ற வண்ணநிலா
எத்தனையோ நாட்டினிலே
அவரையெண்ணி மனம் கசிந்தேன்
நலம்வாழப் பிரார்த்தித்தேன்!
எரிகின்ற நிலாக்கள் இனி
வளமாகும் நிலை வேண்டும்
சுவரில்லாச் சித்திரங்கள்
தம்துணையைச் சேரவேண்டும்!
என்மனத்தை அறிந்தவனாய்
மனமுருகன் சிரித்திட்டான்
சுவருண்டு துணையுண்டு
நேரம்வரும் பொறு என்றான்!
ஓம்!ஓம்! என்பதுபோல்
மணியோசை காதில்விழ
பால்நிலாவைத் துணைகொண்டு
வேகமாக நடக்கலானேன்!
முருகனருள் முன்னிற்கும்!
அனைவருக்கும் ஆடிக் கிருத்திகை வாழ்த்துகள்!
சிந்தாமணியே திருமால்மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகம்நோக்கி வரம்
தந்து எனையாள் முருகா! தணிகாசலனே!
இதை இன்று 16 முறை சொன்னால் நல்ல பலன் தருவான் மனமுருகன்!
*********************************
4 பின்னூட்டங்கள்:
16 முறைக்கும் அதிகமாகவே சொல்லியாச்சுங்க.
\\நொந்தாழ் வினையேன் முகம்நோக்கி வரம் \\
இதுக்கு என்ன பொருள்?
//16 முறைக்கும் அதிகமாகவே சொல்லியாச்சுங்க.
\\நொந்தாழ் வினையேன் முகம்நோக்கி வரம் \\
இதுக்கு என்ன பொருள்?//
நல்லதுங்க!
வினைகளால் [அ]வினைகளில் ஆழ்ந்து நொந்திருக்கும் எந்தன் முகம் பார்த்து வரம் தந்து என்னை ஆட்கொள்வாய் முருகா என வேண்டுகிறேன்! எனப் பொருள் சொல்லலாம்.
சிங்கை (செந்தில்) நாதனுக்காக சிறப்பு கவிதையா ?
அவர் நினைவும் இதை எழுதுகையில் வந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
விரைவில் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்.
நன்றி கோவியாரே!
Post a Comment