அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"
அ. அ. திருப்புகழ். 30 "குமர குருபர முருக சரவண"

'அடியவர் அழுகுரல் கேட்டு அடுத்துவந்து காத்தருள் முருகா!' என அருணையார் நமக்காக வேண்டுகிறார்.
ஈழத்தில் இப்போது இதே குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு வாழும் தமிழரின் அபயக்குரல் அழகன் முருகனின் காதுகளைச் சென்றடைந்து, விரைவில் ஒரு நல்ல முடிவுடன் அமைதி திரும்ப அவனருள் வேண்டி இதனை இடுகின்றேன்.
முருகனருள் முன்னிற்கும்!
------- பாடல் --------
குமர குருபர முருக சரவண
குகசண் முக கரி - பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள் குரு - மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின - முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட - வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் - குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே.
------ பொருள் -------
[பின்பார்த்து, முன் பார்க்கலாம்!]
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட
திமிர எழுகடல் உலகம் முறிபட
திசைகள் பொடிபட
உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல்,
மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல்,
பாற் கடல், சுத்த நீர்க் கடல் எனப்
புராணம் சொல்லும் ஏழு கடல்களும் வற்றிடுமாறும்
எஞ்சியிருக்கும் நிலம் சூழ்ந்த பூமி அழியுமாறும்
எட்டுத் திசைகளும் பொடிபட்டழியவும்
வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா
வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்
திறைகொடு அமர்பொரும் மயில்வீரா
பாலனெனவெண்ணிப் போர்செய்யத் துணிந்துவந்த
சூரபதுமன் உடன்சேர்ந்த இராக்கதர்கள்
மணிமுடிகளும், தலைகளும் அறுந்துபட்டு
உடல்கள் தனியாக வெவ்வேறாய் நிலத்தில் வீழவும்
அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு
கடும்போர் செய்த வேலினைக் கையினில் தாங்கிய
வெற்றிவீரனான முருகனே!
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் – குருநாதா
நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்
கணக்கிட்ட காலத்தில் காலன்வந்து கயிறுவீச
காத்திடுவாய் எனக்கட்டிய பாலகனின் இடர்தீர
காளைமீது ஏறிவந்து நெருப்பனைய இடக்காலால்
காலனை எட்டியுதைத்து காத்திட்ட பெருமான்
நதிகொள் சடையினர்
வானுலகில் தவழ்ந்திருந்த சீரான நதியொன்றை
மூதாதையர் கடன்தீர பூவுலகில் கொண்டுவர
பகீரதன் செய்தவத்தால் மனமின்றிக் கிளம்பித்
தாங்கொணாக் கோபம்கொண்டு கரைபுரண்டு ஓடிவந்த
கங்கையாளின் சீற்றம்கண்டு மூவுலகும் அஞ்சிநிற்க
மாறாத புன்னகையுடன் தன்கைகளில் அவளையெடுத்துத்
தன் தலையில் ஒளித்துவைத்து சடைவழியே ஒருநதியாய்ப்
பூலோகம் வரச்செய்த நதிகொள் சடையினர் சிவபெருமான்
குருநாதா
பிரணவத்தின் பொருள் கேட்கத் தனயன்முன் சீடனைப்போல்
தாள்பணிந்து வாய்பொத்தி தயவுடன் கேட்டிருக்க
ஓமெனும் மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்துத்
தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதராகிய சுவாமிநாதனே!
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே.
நளின குருமலை மருவி அமர்தரு
நீர்நிலைகளினால் எழிலாக விளங்கிநிற்கும்
சுவாமிமலை என்கின்ற திருத்தலத்தில்
பொருந்தி அமர்ந்திருக்கும்
நவிலும் மறைபுகழ் பெருமாளே.
நன்னெறிகளைச் சொல்லிநிற்கும்
நான்மறைகளும் போற்றிப்புகழ்கின்ற
பெருமையில் மிக்கவரே!
குமர குருபர முருக சரவண
குகசண் முக கரி - பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள் குரு - மணியே
குமர குருபர முருக சரவண
குக சண்முக கரி பிறகான குழக
சிவசுத சிவயநம என குரவன் அருள்
குருமணியே
குமரக் கடவுளே!
குருவாக நின்றருளும் பெரிய பொருளே!
இளையவனே! அழகனே! முருகனே!
சரவணப் பொய்கையில் தோன்றியவனே!
குறிஞ்சி நிலக் கடவுளாதலின், குகையில் வீற்றிருப்போனே! அன்பர்களின் இதயக் குகையில் வீற்றிருப்போனே!!
முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!
ஆனைமுகனுக்குத் தம்பியாக வந்த அழகனே!
சங்கரன் குமாரனே!
சிவகதி அளிக்கும் சூக்கும பஞ்சாக்கரமான 'சிவய நம' எனும் மந்திரத்தைச் செபிப்பவர்க்கு வந்தருள் புரிபவனே!
குருவுக்கும் குருவான மணி போன்றவனே!
யென்றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென
என்று அமுத இமையவர் திமிர்தம் இடு கடல்
அது என
இவ்வாறாக,
பாற்கடலில் இமையவர்கள் அமுதம்
கடந்த வேளையில் எழுப்பிய
திமிர்தம் என்கிற பேரொலிபோல
அநுதின - முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ
அநுதினம் உனை ஓதும்
அமலை அடியவர் கொடிய வினை கொடும்
அபயம் இடு குரல் அறியாயோ
பாற்கடலில் இமையவர்கள் அமுதம்
கடந்த வேளையில் எழுப்பிய
'திமிர்தம்' என்கிற பேரொலிபோல
முன்செய்த வினையாலே உடல்நொந்து மனம் நொந்து
தினந்தோறும் உனையெண்ணி அபயம் எமைக் காத்தருள்வாய் எனப்
பலலட்சம் அடியார்கள் பலவாறும் கதறுகின்ற
அவலக்குரல் இன்னாரது என இன்னமும் நீ அறியவில்லையோ?
[உடன் வந்து துன்பம் தீர்த்தருள்வாய் முருகா!]
************************
***** அருஞ்சொற்பொருள்******
குழக= குழகன்=அழகன்
சுத=சுதன்= மகன்
குரவன்= குருபரன்
இமையவர்= கண்களை இமைக்காத தேவர்கள்
அமலை= மிகுந்த
திமிர= இருள் நிறைந்த
நமன்= எமன்
அழல்= நெருப்பு
***************
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!
**********************************
10 பின்னூட்டங்கள்:
குருமலை-ன்னா சுவாமிமலையா SK? புதிய செய்தி! அழகிய திருப்புகழ்!
அபயம் இடு குரல் அறியாயோ? என்று மிக உருக்கமாகக் கேட்கிறார்!
//அமலை அடியவர் கொடிய வினை கொடும்
அபயம் இடு குரல் அறியாயோ//
இலங்கை அடியவர் ஈழ வினை கொடும்
அபயம் இடு குரல் அறியாயோ? :((
//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு
கடும்போர் செய்த//
திறைப் பொருளாகவா? கொஞ்சம் விளக்குங்கள் SK!
திறை என்பது குறு நில மன்னன், மா மன்னனுக்குத் தரும் ஒன்றல்லவா?
இங்கே முருகன் திறைசெலுத்த வேண்டிய அவசியம் என்ன? திறைப்பொருளாய்க் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
//முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!//
இறைவனுக்குப் பொதுவாக எண்குணங்கள் சொல்லப்படுமே SK? முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான்? முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின? - விசுத்த தேகம் & நிராமயம்?
1. தன்வயத்தனாதல் - ஸ்வதந்த்ரத்வம்
2. தூயடம்பினனாதல் - விசுத்த தேகம்
3. இயற்கையுணர்வினன் ஆதல் - அநாதி பேதம்
4.இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - நிராமயம்
5. பேரருள் உடைமை - அலுப்த சக்தி
6. வரம்பில் இன்பமுடைமை - நித்ய திருப்தித்வம்
7. முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
8. முடிவிலா ஆற்றல் உடைமை - அனந்த சக்தி
தவறாமல் வந்து தரமான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி ரவி!
முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!
பொதுவாக, திறைப் பொருள் என ஒரு சில வளங்களை மாமன்னருக்கு குறுநில மன்னர்கள் கொண்டுவந்து அடி சேர்ப்பார்கள்.
அதன்படியே இங்கும் சூரர்களின் தலைகளும், உடல்களும் நிலத்தில் வீழ, உயிர்கள் மட்டும் முருகனிடம் திறைப்பொருள் போல வந்து சேருகின்றன எனக் குறிக்கிறது.
அனைத்துயிர்களும் சேருமிடமும் அவன் தானே!
//VSK said...
முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!//
திறைகள் முருகப் பெருமானிடம் வந்து சேர்கின்றன என்றில்லையே SK ஐயா...பதிவில்!
//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு
கடும்போர் செய்த// என்றல்லவா இருக்கிறது?
திறைப்பொருளாக அவர்களின் உயிரை வைத்துக் கொண்டு, போர் புரிந்தான் என்றல்லவா இருக்கு? அதான் கேட்டேன்! :)
என் முருகப் பெருமான் பெரு நிலப் பெரியோன்! திறை சேர்த்துக் கொண்டு செருச் செய்தான்-ன்னு அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன்! :)
இங்கே "திறை"-க்கு வேற ஏதாச்சும் பொருள் இருக்கா SK ஐயா?
//முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி!
பொதுவாக, திறைப் பொருள் என ஒரு சில வளங்களை மாமன்னருக்கு குறுநில மன்னர்கள் கொண்டுவந்து அடி சேர்ப்பார்கள்.
அதன்படியே இங்கும் சூரர்களின் தலைகளும், உடல்களும் நிலத்தில் வீழ, உயிர்கள் மட்டும் முருகனிடம் திறைப்பொருள் போல வந்து சேருகின்றன எனக் குறிக்கிறது.
அனைத்துயிர்களும் சேருமிடமும் அவன் தானே!//
//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு//= அவரது உயிர்களைத் திறைப் பொருளாகக் கொண்டான் எனவே அது பொருள் படும்!
திறை அவன் சேர்ப்பதில்லை.
அடி பணிந்து பிறர் வந்து கொடுப்பது.
அதனை அவன் கொள்வான்.
இங்கு பயனற்ற உடல்களை விட்டவுடன் உயிர்கள் பெரு நிலப் பெரியோனிடம் இயல்பாகவே வந்து சேர்ந்தன எனக் கொள்ள வேண்டும்.
திறை நாடி அவன் போர் செய்வதில்லை.
ஆனால், தோற்றவர்கள் தாமாக வந்து கொடுத்தெ செல்வர், தமது தோல்வியை ஒப்புக் கொண்டும், பாதுகாப்புக்காகவும்!
எனக்குத் தெரிந்து வேறு பொருள் இருப்பதாக அறியவில்லை, ரவி!
//திறை (p. 528) [ tiṟai ] , s. tribute as paid by inferior states, அரசிறை.
திறையளக்க, to pay tribute, இறை கொடுக்க.//
//வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்
திறைகொடு//
அவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்!!
//அவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்!!//
உம்...
சரி SK ஐயா! அவர்களே அவர்கள் உயிர்களைத் திறையாகக் கொடுத்தார்கள் என்று கொள்ள வேண்டியது தான்! நன்றி!
////முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே!//
இறைவனுக்குப் பொதுவாக எண்குணங்கள் சொல்லப்படுமே SK? முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான்? முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின? - விசுத்த தேகம் & நிராமயம்?
1. தன்வயத்தனாதல் - ஸ்வதந்த்ரத்வம்
2. தூயடம்பினனாதல் - விசுத்த தேகம்
3. இயற்கையுணர்வினன் ஆதல் - அநாதி பேதம்
4.இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - நிராமயம்
5. பேரருள் உடைமை - அலுப்த சக்தி
6. வரம்பில் இன்பமுடைமை - நித்ய திருப்தித்வம்
7. முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
8. முடிவிலா ஆற்றல் உடைமை - அனந்த சக்தி//
நன்றி ரவி!
எவர்தம் பாலுமின்றி எல்லைதீ ரமலற்குள்ள
மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன
பூவியல் சரவணத்தன் பொய்கையில் வைகுமையன்
ஆவிகட் கருளுமாற்றால் அறுமுகங்
கொண்டானன்றே.
எனக் கந்தபுராணம் சொல்கிறது.
அதையொட்டியே சொல்லியிருந்தேன்.
Post a Comment