Saturday, December 06, 2008

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்

"ஆணிவேரை" அசைக்கமுடியுமா?" - திரை விமரிசனம்கடந்த 2006-ம் ஆண்டு வெளிவரும்முன் பரபரப்பாகப் பேசப்பட்டு, வெளிவந்தபின் அதிகமாகப் பார்க்கப்படாத "ஆணிவேர்" என்னும் திரைப்படத்தை நேற்று பார்க்க முடிந்தது. இதை நீங்கள் பார்க்கவேண்டும் என அன்புடன் எனக்கு அனுப்பிவைத்த நண்பருக்கு நன்றி.

இந்தப் படம் ஒரு காதல் கதை!

தொழில் நிமித்தமாகச் சென்ற இடத்தில் தான் சந்தித்த ஒரு தமிழீழ மருத்துவரின் செயல் திறமையிலும், அவரது தன்னலமற்ற உன்னத நோக்கத்திலும் மனதைப் பறிகொடுத்த ஒரு இந்திய பத்திரிகைப் பெண்நிருபர், இது ஒத்துவராது எனக் காதலனால் நிராகரிக்கப்பட்டு தமிழகம் திரும்ப, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், அவரைத் தன் மனதை விட்டு நீக்க முடியாமல், தேடிவருகிறார் இலங்கைக்கு.

அவரைப் பற்றிய ஒரு விவரமும் அறியமுடியாமல், தவிக்கும்போது பின்னோட்ட நினைவுகளாக, தான் அவரைச் சந்தித்த சூழ்நிலைகளை அசைபோடும் காட்சிகளாகப் படம் விரிகிறது.


சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அட்டூழியங்கள், கொடூரக் கற்பழிப்புகள், ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களைக் விதவிதமாகக் கொன்று குவிக்கும் அவலங்கள் அனைத்தையும் விலாவாரியாக, ஒரு ஆவணப்படம் போலக் காட்டி சற்று அலுப்புத் தட்டும் விதத்தில் காட்டுகிறார்கள்.
ஒரே நிகழ்வுக்கு இத்தனை அடி படச்சுருளை வீணாக்கியதற்கு பதிலாக, இன்னும் பல நிகழ்வுகளை அடுத்தடுத்து காட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது.

இதற்கு நடுவில், காதலர் இருவரும் முதன்முறை சந்தித்தது, நிலைமையின் தீவிரத்தை அறியாத தமிழகப்பெண் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக இதனைத் தானே அனுபவித்து உணர்கிறார் என்பதை நன்றாகவே காட்டி இருக்கிறார்கள்.


யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயரும் மக்களின் அவலம் இதயத்தைத் உலுக்குகிறது. "பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்" என அறிவுறுத்தப்படும் அவர்கள், தங்களுக்குப் பாதுகாப்பான இடம் வன்னியே எனச் சென்றது ஏன? என்ற கேள்வி மனதை நெருடியது. அதற்கான விடையை எனது நண்பர் திரு. சோழியான் ஒரு பதிவில் சொல்லியிருந்தார்! தங்களுக்குப் பாதுகாப்பு என அவர்கள் சென்ற இடம் வன்னி என்பதிலேயே பல விடைகள் அடங்கியிருக்கிறது என அவர் சொன்னது இப்போது நன்கே புரிகிறது.

கதாநாயகன் நந்தா சிறப்பாகச் செய்து தன் சொந்தக் குரலிலேயே பேசியது மிகச் சிறப்பு. மதுமிதா, ப்ரியா தங்கள் பாகத்தை நிறைவாகவே செய்திருக்கின்றனர். கற்பழிக்கப்பட்டு, கொல்லப்படூம் காட்சியில் ப்ரியா நிறைவாகச் செய்திருந்தார்.

இத்தனை சோகக் காட்சிகள் நிறைந்த படத்தில் நான் அழவே இல்லை..... ஒரே ஒரு காட்சியைத் தவிர.!!

'எம் பேரனைக் கட்டிப்பியா நீ?' என அந்த வயதான பாட்டி கேட்டபோது என்னையும் அறியாமல் கண்களில் நீர் துளித்தது. இரண்டே காட்சிகளில் வந்தாலும் நெஞ்சைத் தொட்டுவிட்டார் அந்த மூதாட்டி!

இது ஒரு விமரிசனம் கூட அல்ல! என் மனதில் பட்ட கருத்துகளே!

அந்தக் கடைசி காட்சி பலராலும் 'வெறும் சினிமாத்தனம்' என விமர்சிக்கப்பட்டது. காதலர் இருவரும் மீண்டும் சேரும் அந்தக் காட்சி வேறு எந்தப் படத்தில் வந்திருந்தாலும் நானும் அதையேதான் சொல்லியிருப்பேன். ஆனால், எனக்கென்னவோ அது ஒரு மிகப் பெரிய செய்தியைத் தாங்கி நின்றாற்போல் இருந்தது.
தன் காதலன் இறந்துவிட்டான் என அதிகாரபூர்வமாக அறிந்த காதலி மனமொடிந்து தமிழகம் திரும்பும் நொடியில், மீண்டும் ஒரு குண்டு வெடிக்கிறது.... மக்களின் அவலக் கூச்சல்கள்,...... புகை நடுவிலிருந்து ஒரு உருவம் இரு குழந்தைகளைத் தன் கைகளில் ஏந்தியவாறு சிகிச்சை முகாமை நோக்கி ஓடி வருகிறது! வேறு யார்? நம் மருத்துவர் நந்தாதான்! அவசர அவசரமாக சிகிச்சை அளித்த பின்னர் ஏதோ ஒரு உணர்வு உந்த, சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார். தூரத்தில் கடலோரத்தில் காதலி! 'நாம் சேரணும் என்பதற்காகவே நான் இன்னமும் உயிரோடிருந்தேன் போல!' எனச் சொல்லி காதலியை அணைக்கிறார். என் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது!

ஆம்! நந்தா போன்றவர்களின் கனவு நிச்சயம் மலரும்! போராட்டம் நசுக்கப்பட்டாலும், அடக்குமுறைகள் கேட்பாரற்று போனாலும் நந்தாவைப் போல பலர் இதனைத் தொடர்ந்து தங்கள் கனவை நனவாக்குவர் என்பதைச் சிம்பாலிக்காகச் சொன்னதுபோல எனக்குத் தோன்றியது. இந்த ஒரு காட்சியிலேயே இயக்குநர் தன் எண்ணத்தை மிகவும் திறம்படச் சொல்லிவிட்டார் எனவே நம்புகிறேன்.

இவர்கள் கனவு பலிக்கட்டும்!

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் படத்தின் கோரக் காட்சிகளின் நீளத்தைச் சற்று குறைத்து இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை திரையரங்குகளிலும் ஒரு காட்சி இலவசமாக[ அரசு செலவில்] திரையிடப்பட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மக்கள் படும் அவலத்தை நம்மவர்க்கு உணர வைக்க இது பெருமளவில் உதவும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் இருக்கும் இணையநண்பர்கள் இதனை ஒரு கோரிக்கை மனுவாக்கி, அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இது எவருடைய போராட்டத்தையும் ஆதரித்துச் சொல்லும் பதிவல்ல! அவர்களே சொல்வதுபோல், [நீ இலங்கை அரசுக்கு உதவி செய்யாமலிரு போதும்! மற்றதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!] இது அவர்கள் அவலம். ஆனால், இதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட!

நல்லதே நடக்கட்டும்! முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************
இந்தப் படத்தைத் தரவிறக்கம் செய்து பார்க்க கீழ்வரும் சுட்டிகள் உதவும்.

http://www.megavideo.com/?v=I3ASZ3Y0 - முதல் பாகம்
http://www.megavideo.com/?v=WMBFKLHV - இரண்டாம் பாகம்
http://www.megavideo.com/?v=0HBTMLLE - மூன்றாம் பாகம்
http://www.megavideo.com/?v=F58G9ZLL - நான்காம் பாகம்
http://www.megavideo.com/?v=LGUXINEV - இறுதி பாகம்

4 பின்னூட்டங்கள்:

கானா பிரபா Saturday, December 06, 2008 5:28:00 PM  

பதிவுக்கு நன்றி, ஆணிவேர் ஜானை ஒரு முறை பேட்டி எடுத்தேன் அதில் இந்தப் படம் எடுக்கும் போது சந்தித்த போரினால் தம் வாழ்க்கையைத் தொலைத்த பலரைப் பற்றிய கதைகளைச் செல்லியிருந்தார். ஒரு சில சினிமாத்தனங்கள் இருந்தாலும் ஆணிவேர் முக்கியமான ஒரு படைப்பு என்பதை மறுக்க முடியாது.

VSK Saturday, December 06, 2008 5:34:00 PM  

சினிமாத்தனங்கள் இல்லாவிட்டால் அது சினிமா ஆகாதே! இது ஒவ்வொரு இந்தியத் தமிழனும் அவசியம் பார்க்க வேண்டிய படம்!

நன்றி திரு. கானா பிரபா

வெத்து வேட்டு Saturday, December 06, 2008 10:49:00 PM  

did you see the movie "Prabakaran"..in that too great "story telling" that would touch hearts of numerous people...

VSK Saturday, December 06, 2008 10:53:00 PM  

Could be!
This is not in support of any one! Why are you bringing in a comparison?

Thanks for your comment.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP