Thursday, November 27, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -8
"மனவேடன் காதல்"


'நம்பிராஜன் கூற்று ':

சேவலின்னும் கூவவில்லை! செங்கதிரும் தெரியவில்லை! கருக்கலிலே வந்தென்னை 'கொடிக்கி'[வள்ளியின் தாய்] அன்று எழுப்பிவிட்டாள்.
'என்னவொரு அவசரமாய் நீயென்னை எழுப்பலாச்சு?' என வியந்து நான் கேட்க, கண்ணீரும் கம்பலையுமாய் எனைப் பார்த்து கதறிட்டாள்.

'கள்ளன் வந்து நம் மகளைக் கவர்ந்திங்கே சென்றாராம். கண்டவர்கள் சொன்னாங்க! கட்டிலிலும் ஆளில்லை!

அக்கம்பக்கம் அனைத்திடமும் தேடியிங்கு பார்த்துவிட்டேன்! அருமைமகளைக் காணவில்லை!' என்று சொல்லி கண்ணீர் வீட்டாள்!

'யானிருக்கும் இடத்தினிலே தைரியமாய் உள்நுழைந்து என்மகளைக் கொண்டுசெல்ல எவருக்கிங்கு துணிச்சலாச்சு!
இப்போதே படைதிரட்டி யானவரைத் தேடிடுவேன்!' எனச் சொல்லி கூட்டமாக மகளைத் தேடப் புறப்பட்டேன்.

கண்ணுக்கெட்டிய தொலைவரையும் எவரையுமே காணாமல் தளர்ந்தங்கோர் சோலையதைக் கண்டவுடன் அதை நாடிச் சென்றேன்.
ரத்தம் கொதிக்கவைக்கும் காட்சியொன்றை யான் கண்டேன்! மரத்தடியில் என் மகளும் முகம்தெரியா வேறெவனும் சல்லாபம் செய்திட்ட காட்சியது!

'ஆரடா நீ? கொன்றிடுவேன் யானுன்னை! விட்டுவிடு என் மகளை' எனவங்கே நான் பாய, என்மகளும் அவன் பின்னே ஒளியக் கண்டேன்!

'வனவள்ளி கூற்று':

ஆத்திரமும் கண்மறைக்க, அறிவொழிந்து என் தகப்பன், என் சொல்லைக் கேளாமல் எங்கள் மேல் பாய்ந்து வந்தான்.
அச்சத்தால் நடுநடுங்கி, உடலெல்லாம் பதைபதைக்க, அழகனவன் பின்னாலே கோழிக்குஞ்சாய் ஒளிந்துகொண்டேன்.

'ஆயிரம் வீரரொடு ஆயுதத்தை கைக்கொண்டு, அப்பனிங்கு வருகின்றான்! தப்பித்துச் செல்வதுவும் இயலாதென நினைக்கின்றேன்.
ஏதேனும் செய்தென்னைக் காத்திடுக!' எனச் சொன்னேன்! என்னவனும் அழகாக எனைப் பார்த்து முறுவல் செய்தான்.

'அஞ்சாதே இளமானே! அவரெமக்குச் சமமாகார்!' எனச் சொல்லி என்னவனும் விழிமலரைத் திறந்தங்கு கோபமாக விழித்திட்டார்
ஏவிவிட்ட கணைகளெல்லாம் வளைந்துவிட்ட நாணலதாய் குமரவேளின் காலடியில் பணிந்தங்கு குவிந்தன!

அருகிருந்த சேவலதை அமரர்தலைவன் பார்த்திடவே, உயர்வான சேவலதும் ஓங்கியொரு கூவல் செய்ய,
அப்பனோடு கூடிவந்த அத்துணைப் படைகளுமே அச்சத்தால் நடுநடுங்கி, அப்படியே அழிந்து போயின!

மாண்டுபட்ட தகப்பனவன் திருமுகத்தைப் பார்த்திருந்து, வருத்தத்தால் கண்ணீர் விட்டேன்!

அங்குவந்த நாரதனும், அண்ணலவன் முகம் பார்த்து, 'பெற்றவரைக் கொன்றுபோட்டு, கன்னியை நீர் கவருவதும் முறையல்ல' எனச் சொல்ல,
'என் மனையாட்டி பெருமையினை உலகறியச் செய்திடவே, யாமிங்கு இது செய்தோம்! அஞ்சவேண்டா!' எனவுரைத்து,

'நீயே அவர்களை எழுப்பிடுக!' எனச் சொல்ல, 'எழுந்திடப்பா என்னப்பா! என்னை நீயும் மன்னியப்பா!' என நானும் சொல்லுகையில், எல்லாரும் உயிர் பெற்றார்!

'நம்பிராஜன் கூற்று':

உறக்கத்தில் எழுந்தாற்போல் விழித்தங்கு காணுகையில், மலைக்காட்டுத் தெய்வமகன் குமரவேளைக் கைதொழுதேன்!

மணவாளன் இவனென்றே மனதுக்குள் அறிந்ததுமே, மதிமயங்கி யான் செய்த பிழையெல்லாம் புரிந்திடவே
'மன்னித்தருள்க!'வென முருகனவன் அடிபணிந்து, 'வேடர்மகள் உமக்கெனவே பிறந்திட்ட தெய்வமகள்!

மணமுடிக்க நும்மவர்க்கு முழுதான உரிமை இருக்க, கள்ளன்போல் கவர்ந்திங்கு சென்றதுவும் எமக்கிழுக்கு!
குலப்பெருமை குறைந்திடாது இப்போதே எம்மகளை எமக்களித்து அருளிடுக! எம்மோடு வந்திருந்து முறையாக எம்மகளை எம்மூரில் மணந்திடுக!'

எனச் சொல்லி வேண்டிநின்றேன்! அழகனவன் 'அப்படியே ஆகுக!' என்றான்! அனைவருமே மகிழ்ந்திருந்தார்!

எம்மூரை அடைந்தவுடன், அனைவரையும் ஒருக்கூட்டி, அழகான பந்தலிட்டு, ஆனையெல்லாம் முழங்கிடவே
என்மகளை திருக்குமரன் கைகளிலே ஒப்படைக்க, இனிதாகத் திருமணத்தை நாரதரும் நடத்திவைத்தார்!வானினின்று மலர்மாரி தேவரெல்லாம் பூச்சொரிய, வான்மேகம் குளிர்ந்திருந்து மென்தூறல் தெளித்திருக்க, சந்தனத்தின் மணமங்கு மலைக்காடு தாங்கிநிற்க, தென்றலது அதையெடுத்துப் பாங்காகக் கொண்டுவர, தீ வளர்த்து மந்திரங்கள் நாரதரும் நவின்றிருக்க, ஐம்பூத சாட்சியாக வடிவேலன் வள்ளிக்குறத்தியின் வலதுகையைப் பற்றிக் கொண்டான்!

'மனவேடன்':

அங்கிருந்து புறப்பட்டு, அருந்துணைவி கூடவர, தணிகைமலை சென்றடைந்து தெய்வானை முன் சென்றேன்.
அமிர்தவல்லி, சுந்தரவல்லி எனத் திருமாலின் பிறப்பிரண்டும்,

பலகாலம் தவமிருந்து,
இருவேறு இடம் வளர்ந்து,
கூடிவந்த நேரமதில் குமரனெனைத் தானடைந்த மகிழ்வினிலே,

இருவருமே அன்புகாட்டும் விதமாக ஆரத் தழுவிக்கொண்டார்!

ஞானமெனும் ஒரு சக்தி இடப்புறத்தில் தெய்வானை! இச்சையெனும் ஒருசக்தி வலப்புறத்தில் வள்ளியென,
அழகுமயில் மீதமர்ந்து தனிவேலைக் கையிலேந்தி அண்டிவரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகின்றோம்!...............

மனவேடன் சொல்லி முடித்தான்! மகிழ்ச்சி பொங்க அருள் செய்தான்! தெய்வமகள், வனவல்லி இருவருமே மனமகிழ்வுடன் உடனிருந்தார்!

கூடிநின்ற அனைவருமே குமரவேளை வாழ்த்தி நின்றார்!

அருளிடும் கந்தனின் கதையிதுவே
அதையே சிறியேன் சொல்லிவந்தேன்
சொற்குற்றம் பொருட்குற்றம் பொறுத்தருளி
அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்

கந்தனின் கருணைப் பெருவெள்ளம்
தடையின்றி அனைவர்க்கும் கிட்டிடுமே
[காலையில்]

கதையினைப் படித்தவர் மிகவாழி!
கேட்டவர் அனைவரும் தான் வாழி!
அன்பினை நாளும் யாம் வளர்த்து
நல்லறம் பெருகிட வேண்டிடுவோம்!

கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் நிறைவு செய்தேன்!

முருகனருள் முன்னிற்கும்!!
வேலும் மயிலும் துணை!
கந்தன் கருணை வெல்க!
******************** சுபம் *********************

6 பின்னூட்டங்கள்:

Anonymous,  Thursday, November 27, 2008 12:16:00 PM  

வள்ளி தெய்வயானையுடன் வந்துவிட்டான் வடிவேலன்

வையகத்தின் துயரமெல்லாம் வழித்தெறிவான் சிவபாலன்.

பொங்கும் மங்களம்!
எங்கும் தங்கட்டும்!!

வெற்றி வேல் முருகனுக்கு!
அரோகரா!!

VSK Thursday, November 27, 2008 2:17:00 PM  

தங்கள் வேண்டுதலே என் விருப்பமும்!

அப்படியே விரைவில் நிகழட்டும்!
நன்றி!
மு. மு.

S.Muruganandam Friday, November 28, 2008 4:33:00 AM  

//கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கார்த்திகை மைந்தா! கருணை செய்வாய்!!//


கருணை செய்வாய் சிவ பாலா

VSK Friday, November 28, 2008 8:09:00 AM  

நம் அனைவரின் பிரார்த்தனையும் இதுவே தான் திரு. கைலாஷி!
நல்லதே நடக்கட்டும்!
நன்றி.

மணி Thursday, December 18, 2008 7:47:00 AM  

இந்த காவியத்தை படிக்கும் போதுயோசித்தேன் ஏன் இதற்க்கு எவர்ரும் பினுஉட்டம் இடவில்லை என்று படித்து முடிக்கும் போது தான் முருகன் சொன்னான் இது என்னுடைய காவியம் இதை நான் மட்டுமேன் விமர்சிப்பேன் ஏனெனில் இந்த காவியமும் நானும் ஒன்றே என்றான் பிறகுதான் இந்த மர மண்டைக்கு உரைத்தது , அதனால் அடியேனும் விமர்சிக்க வில்லை , வந்து படித்து மகிழ்ந்ததற்கான வருகை பதிவு அவ்வளவே ......

Mani Pandi

VSK Wednesday, December 31, 2008 8:57:00 AM  

// மணி said...
இந்த காவியத்தை படிக்கும் போதுயோசித்தேன் ஏன் இதற்க்கு எவர்ரும் பினுஉட்டம் இடவில்லை என்று படித்து முடிக்கும் போது தான் முருகன் சொன்னான் இது என்னுடைய காவியம் இதை நான் மட்டுமேன் விமர்சிப்பேன் ஏனெனில் இந்த காவியமும் நானும் ஒன்றே என்றான் பிறகுதான் இந்த மர மண்டைக்கு உரைத்தது , அதனால் அடியேனும் விமர்சிக்க வில்லை , வந்து படித்து மகிழ்ந்ததற்கான வருகை பதிவு அவ்வளவே ......//

மிக்க நன்றி ஐயா!
படித்ததும் எழுதியதன் பலன் கிடைத்த ஒரு மகிழ்ச்சி! மீண்டும் நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP