Tuesday, November 25, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -7
"மனவேடன் காதல்"
'நம்பிராஜன் கூற்று:'

'தினையெல்லாம் முத்திப்போச்சு! அறுவடைக்கு நாளாச்சு! அதுவரைக்கும் காவல் காத்த ஆசைமகளும் வீடு வந்தாச்சு!
கலகலப்பா காட்டுக்குப் போன புள்ள, காலடியைச் சுத்திச் சுத்தி வளையவந்த சிறு புள்ள, இப்பல்லாம் ஏனிப்படி பேசாம குந்திகிடக்கா?


துறுதுறுன்னு வேலையெல்லாம் பக்குவமா செய்யிறவ, பித்துப் பிடிச்சாப்புல மூலையில சாஞ்சு கிடக்கா!
ஆரோடும் பேசவில்லை! சாப்பாடும் செல்லவில்லை! தினைப்புனத்தைப் பாத்தபடி ஆர் வரவோ தேடியிருக்கா!

ஏன்னு கேக்கப்போனா ஏதுமவ பேசவில்லை! எம்மகளைப் பாக்கறப்ப பெத்த மனசும் தாங்கவில்லை! என்ன செஞ்சா தீருமின்னு குறி கேட்டுப் பாக்க வேணும்!
மலைக்காட்டு முனி வந்து மக மேல குந்திகிச்சோ! வேப்பமரப் பேயொண்ணு எம்மவளைப் புடிச்சிருச்சோ!

ஆத்தாளை அனுப்பிவைச்சு என்னவின்னு கேக்கச் சொன்னேன்! தனக்கொண்ணும் தெரியலைன்னு திரும்பி வந்து கை விரிக்கா!
எங்கசாமி மலைக்குமரன் அருள் கேட்டு வளி கேட்டு அப்படியே செஞ்சிறணும்! இனிமேலும் தாங்கிடவே என்னால முடியலியே!'

என்றிவ்விதம் யோசித்து தேவராட்டி, வெறியாட்டாளன் இருவரையும் வரவழைத்து, நடந்த கதை சொல்லிவைத்து குறி சொல்லக் கேட்டிருந்தேன்.

அகில்புகையும் மணமணக்க, உடுக்கையொலி உரக்கொலிக்க, பம்பையொலி பாரதிர, வெறியாட்டன் வேகமதைக் கூட்டிநின்றான்.
ஆவேசப் பாட்டெடுத்து அழைத்ததுமே அருள்முருகன் அவன்மேலே அருள்செய்து அருள்மொழியால் உரைத்திட்டான்!

'தினைப்புனத்தில் நின்மகளை யாம் வந்து கைபிடித்தோம்! விரைவிலங்கு வந்திருந்து நின்மகளை மணம் செய்வோம்!
அலங்காரப் பூசைகளும், அபிசேக ஆராதனையும் அளவின்றி எமக்காக நீயுடனே செய்துவிடு!'

அமுதமொழி கேட்டிட்ட ஆனந்தம் கண்மறைக்க அப்படியே பூசைகளும் அழகனுக்காய்ச் செய்திருந்தேன்.
ஆனாலும் மகள் நிலையில் மாற்றமேதும் தெரிந்திடாமல், செய்வதென்ன இனியென்று கைபிசைந்து தவித்திருந்தேன்!

'காட்டினிலே கண்டெடுத்து காதலுடன் வளர்த்தமகள், தாபத்தால் தவிப்பதனைப் பார்த்திடவோ மனமில்லை!
நாட்டமுடன் நான்வணங்கும் வேலனவன் வந்திருந்து, சீக்கிரமாய்
என்மகளின் தாபத்தைத் தீர்க்கவேணும்!'

'மனவேடன் கூற்று':

'வள்ளிக்கு வாக்குரைத்து வந்திட்ட நாள்முதலாய், அவள் நினைவே எனை வாட்டித் துயரதிகம் செய்கிறது!
மீண்டுமந்த மான்விழியைக் காணாமல் இருந்திடவோ மனமிங்கு நிலையின்றி பரிதவித்து அலைகிறது!

தினைப்புனத்தில் தேவியவள் திருமுகத்தை மீண்டுமொரு தடவையேனும் பாராமல் என்னாலும் இயலவில்லை!'
என வாடி, தாபத்தால் தினைப்புனத்தைத் தேடிவந்து, தேவிநின்ற குடிசைவாசல் மரத்தடிக்கு மீண்டும் சென்றேன்!

காட்டுக்குடிசையதில் காற்றுமட்டும் தானிருக்கக், காதலியைக் காணாமல் கந்தனிவன் தவித்திட்டேன்.
கால்போன இடமெல்லாம் காதல்மகள் தடம்தேடி காட்டுவழி நடந்தங்கோர் சிற்றூரை அடைந்திருந்தேன்!

காட்டுவேடன் தலைவனவன் நம்பிராஜன் வீடடைந்து நள்ளிரவில் ஆருமில்லா வேளையினில் இங்குமங்கும் அலைந்திருந்தேன்
வெளிப்பட்ட பெண்ணொருத்தி வனத்திலெனை வள்ளியுடன் கண்டிருந்த நினைவங்கு வந்திடவே ஆவலுடன் அவளிடத்தில் "ஆசைமகள் எங்கே?" என்றேன்!

'நின்னைக் காணாத் தாபத்தால் தன் தேகம் தான் மெலிந்து, ஊனுமின்றி உறக்கமின்றி எம் தலைவி வாடுகிறாள்!
இப்போதே நீர் சென்று தாபத்தைத் தணித்திடுக! என்னோடு வந்திடுக!' எனச் சொல்லி அழைத்துச் சென்றாள்!

கண்ணெதிரே யான் கண்ட காட்சியினைச் சொல்லிடவும் நெஞ்சமும் பதறிடுது,.... இப்போது நினைத்தாலும்!
உடல்மெலிந்து, ஊனிளைத்து, கண்ணிரண்டும் பஞ்சடைந்து, காதல்மகள் கட்டிலினில் களைப்பாகப் படுத்திருந்தாள்!

தாவியவள் பக்கலிலே தயவாக யானமர, தளிர்க்கொடியாள் கண்விழித்து, மழையெனவே நீருகுத்தாள்.

'நள்ளிரவில் நீரிங்கு வந்ததனை என்னுடைய சோதரரும் கண்டிட்டால் தாளாக்கோபத்தால் தாறுமாறு செய்திடுவார்!
இனிக் கணமேனும் உமைவிட்டு கன்னியெந்தன் உயிரிங்கு நில்லாது! கனிவோடு எனைக் கொண்டு கடிந்தேக வேண்டுகிறேன்!'

என்னுமவள் சொல் கேட்டு, அப்படியே அல்லியளைக் கொடியெனவே அள்ளிக்கொண்டு, யானிருக்கும் தணிகைமலை வந்தடைந்தேன்!

களவு மணமா கந்தனுக்கு?
*******************************
[நாளை நிறைவுறும்!]

5 பின்னூட்டங்கள்:

Anonymous,  Thursday, November 27, 2008 9:23:00 AM  

வள்ளி திருமண வைபோகம் எப்போ?
ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறொம்.

VSK Thursday, November 27, 2008 10:11:00 AM  

இன்னும் சற்று நேரத்தில்!

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் Friday, December 05, 2008 7:49:00 AM  

கருணை மழையில் இன்றுதான் முழுதும் நனைந்தேன்

நன்றி டாக்டர்

VSK Friday, December 05, 2008 8:18:00 AM  
This comment has been removed by the author.
VSK Friday, December 05, 2008 8:19:00 AM  

மிகப் பெரிய இழப்பின் சோகத்தில் இருந்து நலமுடன் மீண்டு வந்து பல அரிய படைப்புகளை அளிக்க எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டிக் கொள்கிறேன் திரு.மௌலி. நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP