Wednesday, November 19, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்]-4
"மனவேடன் காதல்""மனவேடன் கூற்று":

'என்ன பிழை செய்துவிட்டோம்? ஏனிப்படி எண்ணியதும் நிகழவில்லை?' எனும் நினைப்பு மனதிலோட, அண்ணனவன் நினைவில் வந்தான்! நினைத்தவுடன் முன்னும் வந்தான்!

'கன்னி பிடிக்கும் அவசரத்தில் சொல்லாமல் சென்றிட்டாய்! கன்னி கிடைக்கவில்லை! கவண்கல்தான் பரிசுனக்கு!' எனச் சொல்லிச் சிரித்தவனின் காலடியில் நான் விழுந்தேன்!

'கைத்தலத்தில் கனிவைத்து கருணையொடு காக்கின்ற தெய்வமே! நினை மறந்து சென்றதுவும் என் பிழையே! மன்னித்து எனக்கருள வேண்டுகிறேன்!
நின்கையில் கனியிருப்பதுபோல், என்கையில் கன்னி கிடைத்திட அருள் செய்யப்பா!' எனத் தொழுதேன்! 'அப்படியே ஆகுக!' என்றான் அண்ணல்!

'அழைக்கின்ற நேரத்தில் அண்ணா நீ வரவேணும்' என்னுமெந்தன் வேண்டலுக்கு 'அப்படியே அழைத்திடுவாய்! வந்திடுவேன் தப்பாமல்' என்றண்ணன் ஆசிகூறி மறைந்தான்!

'வேடனாக வந்ததிலே கை பிடித்த சுகமன்றி, வேறு பலனொண்ணும் காணவில்லை! மீண்டுமந்த வேடமிட்டு கல்லடியைப் பெறவேண்டாம்!
தனியாளாய்த் தனித்திருக்கும் கன்னியிவள் கைபிடிக்க, அவளருகில் செல்லவேண்டும்! அடுத்ததெல்லாம் அண்ணன் கையில்!

நரைதிரையும், நடுங்குகின்ற கைகளுமாய் முதியவனாய்ச் சென்றிட்டால் முத்தழகி கருணை கொள்வாள்!' எனவெண்ணி வேடம் கொண்டேன் வயோதிகனாக!

"வனவள்ளி கூற்று":

'கவண்வீசிக் கவண்வீசி கைகளுமே வலிக்கிறது! காத்திருந்த சோதரரும் காட்டுவழி சென்றுவிட்டார்!
கூடவந்த தோழியரும் கண்ணினின்று மறைந்துவிட்டார்! தனியளாய் வாடுதலே தலைவிதியாய்ப் போனதிங்கு!

ஆறவமர்ந்து கதைத்திடவோ ஆதரவாய் ஆளில்லை! ஏது செய்வேன்? என்னழகா! நின்னையுமே காணவில்லை!
பரண்மேலே நின்றிட்டு கால்களுமே நோகிறது! கீழிறங்கி அமர்ந்திடுவோம்' என்றெண்ணித் தரை வந்தேன்!

'ஈதென்ன! ஏதோவோர் ஆளரவம் கேட்கிறதே! அழகனவன் முருகவேளின் அருட்பெருமை பாடிவரும் குரலோசை கேட்கிறதே!
ஆதரவாய்க் கேட்டிடவே அருகழைத்துப் பார்த்திடுவோம்!' எனவெண்ணி ஆசையுடன், 'ஆரது அங்கே?' எனக் குரல் விடுத்தேன்!

வந்தவொரு உருக்கண்டு வாயெல்லாம் பல்லாச்சு! வயோதிகரைப் பார்த்ததுமே மனசெல்லாம் லேசாச்சு!
தள்ளாடும் வயதினிலே தடியொன்றை ஊன்றியவர் தள்ளாடி வருதல்கண்டு, கைபிடித்துத் தாங்கி நின்றேன்!

'நடுங்குகின்ற கைபிடித்த என்கையும் நடுங்குவதேன்? நரம்பினிலே இதுவென்ன புத்துணர்ச்சி பரவிடுது?
நரைகண்ட தலைமுடியும் தாடியுடன் அலைகிறது! இருந்தாலும் இருகண்ணில் இதுவென்ன பேரொளியாய்?

குரலோசை குழறலாக வந்தாலும் என்மனத்தை ஏனிங்கு இப்படியது பிசைகிறது? என்னவிது மாயம்?' என்றெண்ணிக் கலங்கினேன்!
என்னுணர்வு என்னைவிட்டு எங்கேயோ போவதினை மெல்ல மெல்ல யானுணர்ந்து வந்தவரை வரவேற்றேன்.

'சொந்தவூர் செல்லவெண்ணி வழிதவறிப் போனீரோ? காட்டுவழி வந்ததென்ன? காரணத்தைச் சொல்லிடுக' வெனக் கேட்டேன்.
'காடுமலை சுற்றிவரும் கானகத்துக் கிழவன் யான்! கால்போன போக்கினிலே காததூரம் வந்திருந்தேன்! கால்வலியை மறப்பதற்குக் கந்தன் புகழ் பாடிவந்தேன்'

என்றவரும் சொல்லிடவே, 'காரியங்கள் ஏதுமில்லாக் கிழவரிவர் துணைகொண்டு மாலைவரை ஓட்டிடலாம்' எனக் களித்தேன்!

'வெகுதொலைவு நடந்ததனால் மூச்சிங்கு இளைக்கிறது! வெறும் வயிற்றில் இருப்பதனால் வயிறிங்கு பசிக்கிறது!
புசிப்பதற்கு ஏதுமுண்டோ? பெண்மானே சொல்லிடுவாய்!' என்றவரின் குரல் கேட்டு துணுக்குற்றேன் ஓர் கணம்!

'சென்றவனும் மானென்றான்! வந்தவரும் மானென்றார்! என்னவின்று மான்வேட்டை நாளோ!' எனும் நினைப்பு வந்தவுடன் வேடனவன் திருமுகமும் மனக்கண்ணில் நிழலாட,
'வந்த களைப்பு தீர்ந்திடவே நீரருந்தி நீரும் உணவருந்திச் சென்றிடலாம்! சுவையான தினைமாவும் கலந்துண்ண தேனுமுண்டு!' எனச்சொல்லி முறுவலித்தேன்!

'சுந்தரியாள் நீயெடுத்து கைகளினால் உருட்டியதை என்கையில் வைத்திட்டால் சுகமாகத் தானிருக்கும்'
எனச் சொல்லி எனைப் பார்த்து இளித்திட்ட வயோதிகரின் முகவடிவைப் பார்த்ததுமே, சரியான வம்புக் கிழவரிவர் எனத் தெளிந்தேன்!

'காலலம்பிக் கைகழுவ நீரிங்கு வைத்திருக்கேன்! விரைவாக வந்திங்கு மரத்தடியில் அமர்ந்திடுக!
தினைமாவும் தெளிதேனும் வட்டிலிலே எடுத்தாறேன்' எனச்சொல்லி கலயத்தைக் கையெடுக்க குடிசைக்குள் நான் நுழைந்தேன்!


மனவேடன் [வயோதிகர்] கூற்று:

திரும்பியவள் வருவதற்குள், திரட்டிவைத்த நீரையெல்லாம் குறும்பாகத் தரையினிலே கொட்டிவிட்டு, குறுக்காகக் கால்நீட்டி மரத்தடியில் நான் சாய்ந்தேன்.

'களைப்பதிகம் ஆனதினால், கால்நீட்டிப் படுத்தீரோ! தேனமுது உண்டிடவே சற்று எழுந்து வந்திடுங்க! என்றவளைக் களைப்பாக நான் பார்த்தேன்!

'தொலைதூரம் நடந்ததனால் கால் சற்று குடைகிறது! கன்னிமான் நீ கைதொட்டு சற்றமுக்கி விட்டிருந்தால் கால்வலியும் பறந்தோடும்!
வேற்றாளைத் தொடுவதுவோ என்றஞ்சி மயங்காதே! வயதான கிழவனிவன் கால்தொட்டால் குற்றமில்லை' எனச் சொன்னேன்!


கிழவரின் அடுத்த நாடகம் என்ன?
*****************************

[நாளை வரும்!]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP