Sunday, November 23, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5



"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -5
"மனவேடன் காதல்"


'வனவள்ளி கூற்று':

'ஆபத்துக்குப் பாவமில்லை! விருந்தினரை உபசரித்தல் வேட்டுவரின் பண்பாகும்!' எனச்சொல்லி எனைவளர்த்த என் தாயின் சொல் நினைந்து,
பக்கத்தில் அமர்ந்தபடி பட்டுக் கையெடுத்து பக்குவமாய்த் தைலம் தடவி பாங்காகப் பிடித்துவிட்டேன்!

'இதமாக இருக்குதடி பெண்ணே! இன்னும் கொஞ்சம் மேலமுக்கு!' என்றவரைப் பொய்க்கோபத்துடன் பார்த்துவிட்டு,
'போனால் போகிறது! பாட்டைக்குச் செய்ததென எண்ணிக்கொள்வோம்!' என நினைத்து இன்னும் கொஞ்சம் பலமாக, இதமாகக் கால் பிடித்தேன்!


'மனவேடன் கூற்று':

மனக்கள்ளி குறவள்ளி மெல்லிய தன் கையெடுத்து, இதமாகப் பிடித்துவிட என்னையே நான் மறந்துபோனேன்!

'தினையருந்தும் நேரமாச்சு! எழுந்திருங்க பாட்டையா!' என்றவளின் குரல்கேட்டு சட்டென்று எழுந்திருந்தேன்.
வட்டிலிலே தினையிட்டு வட்டமாக அதைக் குழித்து, நடுவினிலே தேன் விட்டு, சிந்தாமல் சிதறாமல் மாவோடு கலக்கின்ற மலர்க்கரத்தைப் பார்த்ததுமே மையல் கொண்டேன்!

குழைத்திட்ட தினைமாவை உருண்டையாக உருட்டியவள் என்கையில் வைத்திடவே ஆவலுடன் நான்விழுங்க.........???
தொண்டையிலே சிக்கியது உள்ளேயும் செல்லாமல், வெளியினிலும் வாராமல் இடையினிலே பந்தாக கதவடைத்து நின்றிடவே,
விக்கலொன்று வெளிக்கிட்டு மேல்மூச்சை அடைத்திருக்க, கண்கள் செருகியதால் கைகாட்டி ஜாடையாக தண்ணீர்! தண்ணீர்! எனச் சைகைசெய்தேன்!

பட்டுக்கையெடுத்து பைங்கிளியாள் குறத்திமகள் என் தலையில் தட்டிவிட்டு நீரெடுக்கச் சென்றாள்.
சென்றிட்ட வேகத்தில் விரைவாகத் திரும்பியவள் 'நீரெல்லாம் என்ன செய்தீர் நீர்? ஒரு சொட்டும் காணவில்லையே!' எனப் பதறினாள்.

'மலையருவி உண்டிங்கு பக்கத்தில்! சுனையொன்று அதனடியில்! சுவையான நீருண்டு! நீருண்டு தணிந்திடவே! சென்றுவாரும் சீக்கிரமாய்!' என அல்லிமகள் படபடத்தாள்.

'நீயும் கூட வந்திட்டால் சுகமாக இருக்குமே!' என நான் சொன்னதுமே,
'காட்டானை அலையுமிடம்! காரிகை நான் வரமாட்டேன்! நீரே சென்றுவருக!' என்றவளும் பகர்ந்திருந்தாள்!

'வழிதெரியா இடத்துக்கு வயதான கிழவனென்னைத் தனியாக அனுப்புதலும் முறையல்ல! ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி! பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு!' என்றவுடன்,
அரைமனதாய்ச் சம்மதித்து, என்கையைப் பற்றியவள் எனையிட்டுச் சென்றிட்டாள்!
தணிகைமலைத் தாகமின்னும் தணியாத யானுமவள் தளிர்க்கரத்தைப் பற்றியே மலையருவிப் பக்கலில் சென்றோம்.
இதமான குளிர்த்தென்றல் மிதமாக வீசிவர, மலையருவி நீர் தெளித்து திவலைகளும் முகத்தில்பட,
கன்னிமகள் பனிமலர்ப்பூம் பாவையென மிளிர்ந்திருக்க, பேரழகைப் பருகியபடி நீரமுதை நான் பருகினேன்!

'வனவள்ளி கூற்று':

தாகம் தணிந்தவுடன் தணிகைமலை வேலவனின் திருப்புகழைக் கேட்டிடவே ஆவலுடன் அங்கமர்ந்தோம்.
குரலெடுத்து கணீரென குமரனவன் திருப்புகழைக் காதார நான் கேட்க சுதியோடு அவர் பாட,
எனை மறந்து கண்மூடி நானிருந்த வேளையினில், கரமொன்று சூடாக என்மீது பட்டிடவே திடுக்கிட்டுக் கண்விழித்தேன்!

முதியவரின் கரமொன்றென் வளைக்கரத்தைப் பற்றிநிற்க, வந்திட்ட கோபத்தில் வெடுக்கென்று உதறிவிட்டு சட்டென்று யானெழுந்தேன்!

தள்ளிவிட்ட வேகத்தில் தண்ணீரில் அவர் விழுந்தார்! காப்பாற்றிட வேண்டியெனைக் கரங்கூப்பி முறையிட்டார்!
கைபிடித்து வெளியெடுத்து கரையினிலே அமர்த்திவிட்டு குடிசை நோக்கி நான் விரைந்தேன்!
'அண்ணா வரணும்!' எனவொரு குரலும் பின்னாலே ஒலித்திடவே என்னவென பார்க்குமொரு ஆவலினால் முகம் திருப்ப,
காட்டானையொன்று துதிக்கையை வீசிவந்து காதுமடல் படபடக்க எனைநோக்கி ஓடிவர கன்னி நான் படபடத்தேன்!!!!!!

ஒற்றையானை ஓடிவந்தால் ஓடிச்சென்று தப்பிக்கும் உபாயம் சொல்லித்தந்த உணர்வங்கு ஓங்கிவர,
வழிமறைத்து நின்றிருக்கும் ஆனைதாண்டிச் செல்லுதலும் இயலாதே எனவறிந்து, 'காத்திடுக! காத்திடுக' எனவவரைக் கூப்பிட்டேன்!

'ஆனை கண்டு பயம் வேண்டா! விரட்டுகின்ற வழி தெரியும்! ஆனாலும் அதற்கு முன்னால்
நீயெனக்கு சத்தியமாய் ஒருவார்த்தை சொல்லவேண்டும்!'
என்றவரின் சொல்கேட்டு எரிச்சலும் கோபமும் இணைந்தங்கே என்னுள் பிறக்க, 'சத்தியம் செய்வதற்கு நேரத்தைப் பார்த்தீரே!
சீக்கிரமாய் ஆனையதை விரட்டுதற்கு வழி பாரும்! ' என்றிட்ட என் கூவல் காதுகளில் விழாததுபோல், கையிரண்டும் மார்மீது குறுக்காகக் கட்டியபடி,

'சீக்கிரமாய்ச் சத்தியம் செய்தால்... "நானுன்னை மணப்பேன்".... எனச் சத்தியம் செய்திட்டால் ஆனையிங்கு சென்றுவிடும்! சீக்கிரமாய்ச் சொல்லிவிடு' என்றார் பாட்டையா!
ஆனைபயம் மனக்கதவை ஆழமாகப் பதிந்துவர, 'அப்படியே செய்கின்றேன்! யானும்மை மணப்பதற்கு சத்தியமும் செய்கின்றேன்' என்றதுமே,
'அண்ணா! செல்!' எனவந்த முதியவரும் ஒரு சொல்லைச் சொன்னதுமே, மந்திரத்தால் கட்டுண்டதுபோல ஆனை விலகிச் சென்றதங்கே!


'மனவேடன் கூற்று':

ஆனையது சென்றதுமே அல்லிமகள் எனைவிட்டு தழுவிநின்ற தளிர்க்கரத்தைச் சட்டென்று விலக்கிவிட்டு,
எட்டிநின்று எனைப்பார்த்துக் கைகொட்டிக் கலகலவெனவே சிரித்தபடி, 'ஏய்ச்சுப்புட்டேனே தாத்தா! ஏய்ச்சுப்புட்டேனே!' என்றாள்!

'யானும்மைக் கைபிடிப்பேனெனக் கனவினிலும் எண்ணவேண்டா! ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு!' என்றவளைப் பார்த்தபடி,
'அண்ணா! வரணும்!' என மீண்டும் யான் சொல்ல, ஆனையங்கு வந்திடவே அழகுமகள் என் தோளில் அல்லியென துவண்டு வீழ்ந்தாள்!

'அறியாமல் சிறுபிள்ளை யான் செய்த பிழை பொறுத்து ஆனையதை விரட்டிடுக! சொன்னபடி கேட்டிடுவேன்! மணந்திடவே சம்மதிப்பேன்'
என்றவளின் சொல்கேட்டு, 'அண்ணா! செல்!' என்றதுமே, ஏளனமாய் எனைப் பார்த்து ஆனையங்கு அகன்றதுவே!

'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம்! எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்!
எனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்!

வள்ளிக்கண்ணாள் தள்ளி நின்றாள்! இரக்கமுடன் எனைப் பார்த்தாள்! 'காடழைக்கும் நேரத்தில் காதலியா உமக்கு வேண்டும்?
காதவழி சென்றுவிடும் காரியத்தை யான் செய்வேன்!' எனச் சொல்லிச் சிரித்தபடி,
'அண்ணா! வரணும்!' என ஓங்கிக் குரல் விடுத்தாள்!

ஓடிவந்த ஆனையங்கு உத்தமியாள் அருகடைந்து "என்ன?"வெனக் கேட்பதுபோல் ஏறிட்டு அவளைப் பார்க்க,
'வயதான இவர் செய்யும் குறும்பிங்கு தாங்கவில்லை! வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக!' என வேண்டி நின்றாள்!

வரம்தந்த சாமியையே புறந்தள்ளும் பொல்லாத இந்தப்பெண் பொய்யள் மட்டும் அல்லள், கள்ளியும் கூடத்தான் என மகிழ்ந்து[!] அண்ணனவன் முகம் பார்த்தேன்!

'யானிங்கு செய்வதற்கு இனிமேலும் ஏதுமில்லை! நீயாகப் போகிறாயா? நான் வந்து முட்டிடவோ!' என்பதுபோல் எனைப்பார்த்த அண்ணனவன் குறிப்பறிந்து, கால்தெறிக்க ஓடினேன்!
காதல்மொழிக் குறத்தியவள் கைகொட்டிச் சிரிக்கின்ற வளையோசைச் சத்தமங்கு பின்னாலே கேட்டுவர,

காதவழி சென்றபின்னர் காலார தரையமர்ந்து அடுத்தென்ன செய்வதென அமைதியாகச் சிந்தித்தேன்!

வேறென்ன வழி இனிமேல்?....
********************************

[நாளை வரும்!]

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP