"பிள்ளையாரே பிள்ளையார்!"
"பிள்ளையாரே பிள்ளையார்!"
பிள்ளையாரே பிள்ளையார் என மறுமொழி வந்திடும்!
தாயைக் காத்திட தான் அவதரித்தான்
தாயைக் காத்திட வாயிலில் நின்றான்
சிவனே ஆயினும் விலகிடு என்றான்
தாயைக் காத்திட போரும் செய்தான்
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
என்பதன் பொருளே இன்பப் பிள்ளையார்!
தந்தையும் தாயும் தெய்வம் என்றான்
தம்பியாம் முருகன் உலகைச் சுற்றிட
தந்தை தாயை வலமும் வந்தான்
தந்தை தந்த மோதகம் வென்றான்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்னும் சொல்லின் இலக்கணம் பிள்ளையார்!
தந்தைக்காக கயிலையில் நின்றான்
தந்தை தந்த ஆத்மலிங்கம்
தசமுகராவணன் தவத்தால் கொள்ள
தந்திரமாகத் திரும்பவும் கொணர்ந்தான்
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை
என்னும் சொல்லின் நாயகன் பிள்ளையார்!
குறமகள் வள்ளியை மணந்திடும் ஆவலில்
தன்னை வணங்காத் தம்பியின் துயரை
ஆனையாய் வந்து துணையும் புரிந்தான்
தன்பலம் தெரிந்தும் தம்பிக்காக
சொன்னபடி கேட்டான் சுகமே புரிந்தான்
உறவின் உயிராய் நின்றவன் பிள்ளையார்!
ஓமெனும் பிரணவப் பொருளை வேண்டி
சிவனார் பணிந்து தனயனைக் கேட்க
சுப்பிர மணியன் பாடம் சொன்னான்
என்னவன் சொன்னான் என்றே உணர்ந்தால்
ஓமெனும் வடிவாய் இருப்பவன் அண்ணன்
அவனே ஓம்நவ சக்திப் பிள்ளையார்!
உலகைச் சமனிட அகத்தியன் சென்றான்
தென்புலம் நோக்கிக் குறுமுனி நடந்தான்
குடத்தில் கூடவே காவிரி சென்றாள்
தென்புலம் வாழக் காவிரி தரவே
காகமாய் வந்து கமண்டலம் கவிழ்த்தான்
கருணையின் வடிவம் கற்பகப் பிள்ளையார்!
பிள்ளை என்பதன் இலக்கணம் காட்ட
அரும்பெருஞ் செயல்கள் பலவும் செய்தான்
உலகினில் உள்ள பிள்ளைகள் யார்க்கும்
வழிமுறை காட்டிட கருத்தினில் நின்றான்
இவனைப் போலொரு பிள்ளை எவரெனச்
சொல்லும் வண்ணம் திகழ்பவன் பிள்ளையார்!
உலகில் உள்ள பிள்ளைகள் அனைவரும்
வணங்கிடும் தெய்வம் அன்புப் பிள்ளையார்
ஆற்றங்கரையின் அருகிலும் இருப்பான்
அரசமரத்தின் அடியிலும் இருப்பான்
மண்ணிலும் இருப்பான் மஞ்சளிலும் இருப்பான்
வடிவம் எதுவும் இல்லாப் பிள்ளையார்!
தடைகளை உடைப்பான் தயவினைக் கொடுப்பான்
எடுக்கும் காரியம் எதிலும் வெற்றி
என்பது இவனை வணங்கிட நிகழும்
ஆனையின் வடிவம் கொண்டவன் இவனே
தும்பிக் கையால் துன்பங்கள் தொலைப்பான்
துணிவும் தருவான் செல்வப் பிள்ளையார்!
அருகம் புல்லில் உள்ளம் மகிழ்வான்
தோப்புக்கரணம் போட்டால் அருள்வான்
தலையில் குட்டிட அறிவும் தருவான்
கொழுக்கட்டை படைத்திட குவலயம் கொடுப்பான்
மந்திரம் எதுவும் சொல்லிடவேண்டாம்
அருள்வாய் என்றால் தருவான் பிள்ளையார்!
விஜயகணபதி வெற்றிகள் தருவான்!
செல்வக்கணபதி சுகங்கள் தருவான்
மூஷிகவாகனன் முக்தியைத் தருவான்!
மோஹனக்கணபதி மகிழ்ச்சியைத் தருவான்!
செந்தமிழ்க்கணபதி சொற்சுவை தருவான்!
மங்கல கணபதி மங்கலம் அருள்வான்!
பிள்ளையார் என்னும் பொருளைச் சொன்னேன்
பிள்ளை யாரெனத் தெரிந்திடும் இங்கு!
பிள்ளைகள் நாமும் அவன்புகழ் பாடி
அவனடி பணிவோம் அனைத்தும் பெறுவோம்!
நற்செயல் புரிய அவனிடம் கேட்போம்!
அவன்புகழ்பாடி அனுமனில் முடிப்போம்!
**************************************************
0 பின்னூட்டங்கள்:
Post a Comment