Saturday, September 06, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 23 "ஊழ்"


இன்னிக்கு எப்படியும் மன்னாரைப் பார்த்திடுவேன்னு ஒரு 'நம்பிக்கை'யோட மயிலாப்பூர் குளத்தை வலம் வந்து கொண்டிருந்தேன்!

[அட! ஆமாங்க! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது! நாயர் கடையில முதல்லியே கேட்டாச்சு! ]

'சரி! நம்ம விதி அவ்ளோதான்! இன்னிக்கு மன்னாரைப் பார்க்கற விதி இல்லைன்னு ஒரு முடிவோட..... சில பேரு அதை அவநம்பிக்கைன்னு சொல்லுவாங்க!!..... வீடு திரும்ப எண்ணி பஸ்ஸைப் பிடிக்க பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றேன்.

அப்போது.... என் எதிரே ஒரு ஆட்டோ வந்து நின்றது!

ஒரு கை என்னை இழுத்து உள்ளே தள்ளியது!

மயிலை மன்னார்!

என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை!

விதி இன்னிக்கு நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன் என சந்தோஷமாகச் சிரித்தேன்!

விதின்னா என்ன? அது உன் நம்பிக்கைதானே? ஒண்ணு நடந்தா அது விதின்றே! நடக்கலியா ... அதையும் விதின்றே! என்னைப் பாக்கணும்னு வந்தே! நான் இல்லேன்னதும் உன் நம்பிக்கை இடிஞ்சு போச்சு! விதி சதி பண்ணிச்சுன்னு நினைச்சே! இப்ப என்னைப் பாத்ததும், விதி நீ நினைச்ச மாரியே பண்ணிருச்சுன்னு சந்தோசப் படறே! இந்த விதியைப் பத்தி ஐயன் சொன்னதைச் சொல்றேன் கேளு! எளுதிக்கோ! எனச் சொல்லிச் சிரித்தான் மன்னார்!

நான் நோட்புக்கைப் பிரித்தேன்!

இனி வருவது மன்னாரின் குறள் விளக்கம்!!

"அதிகாரம் 38 -- ஊழ்"

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. [371]

ஒருத்தனுக்குப் பணம் வரணும்னு விதி இருந்திச்சுன்னா, அவனுக்குள்ல ஒரு புது சக்தி பிறக்கும்..... எதுனாச்சும் பண்ணனும்ன்ற வெறி வரும். என்னமாச்சும் பண்ணி பணக்காரனாயிடுவான். அவனுக்குள்ளேயே ஒரு தனி முயற்சி பிறக்கும்.
அதே, அவனோட நேரம்.. அதாம்ப்பா.. விதி..... விதி சரியில்லேன்னா, 'சரி, போ! அப்புறமாப் பார்த்துக்கலாம்'னு சோம்பேறித்தனமா இருந்திருவான்.
இப்ப இதுக்கு ஒரு ஒதாரணம் வேணும்னா.....

நேரம் நல்லா இருந்ததுனால, எம்ஜியார் கரீட்டா தேர்தல் நேரத்துல குண்டடி பட்டு திமுகவை கெலிக்க வைச்சாரு. இப்ப இன்னாமா துட்டு பாத்துட்டாங்க பாரு அவங்கள்லாம்!
அதே, நேரம்.... விதி சரியா இல்லாததுனால, ஆனானப்பட்ட காமராஜரே, 'படுத்துகிட்டே ஜெயிப்பேன்னு, சோம்பேறித்தனமா இருந்து தோத்துட்டாரு!
அவ்ளோதான்!
அதுக்கப்புறம், காங்கிரஸுக் கட்சி நம்ம ஊருல தலை தூக்கவே முடியல!
அதாவது, இன்னும் அதுக்கு நேரம் சரியா அமையலை!
:)) ஆகூழ்னா நல்ல விதி, போகூழ்னா கெட்ட நேரம்னு பொருள்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. [372]

அதேமாரி, பொல்லாத விதி உனக்கு இருந்திச்சுன்னா, அதாவது கெட்ட நேரம்னா, ஒன்னோட புத்தியும் கெட்டுத்தான் போவுமாம். நல்ல விதி இருந்திச்சுன்னா, அறிவு நல்லாவே வேலை செய்யுமாம்.

தோ! மேலே சொன்னதையே எடுத்துக்கோயேன்!

எம்ஜியாரை ராதாஅண்ணன் சொந்த விரோதத்துல சுட்டாரு.
அதியே, அரசியலாக்கி அண்ணதொரை, அவரு ஃபோட்டோவைக் காட்டியே ஜெயிச்சாரு தேர்தல்ல! அதான் அவரோட நல்ல புத்தி!... விதி சரியா வொர்க்கவுட் ஆச்சு!


காங்கிரஸு... ....... ஒனக்கே புரியுமின்னு நெனைக்கறேன்!:))

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும். [373]


இப்ப ஒரு கூட்டத்துல நிக்கற நீ! ரொம்பவே படிச்சவந்தான் நீ! எத்தக் கேட்டாலும், டக்கு டக்குன்னு சொல்லிடுவேதான்! ஆனாக்காடியும், ஒனக்கு நேரம் சரியா இல்லேன்னா, சரியான நேரத்துல நீ சொல்லணும்னு நெனைக்கறது உனக்குத் தோணாமலியே பூடும்! அதான் உண்மை அறிவுன்னு ஐயன் நக்கலா சொல்லிக் காமிக்கறாரு!

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. [374]

இப்ப நீயே பாக்கற...! சிலபேரு ரொம்பவே மெத்தப் படிச்சவனா இருப்பான். ஆனாக்க, பரம ஏழையா இருப்பான்.
இன்னும் சிலபேரு ஒண்ணுமே படிக்கலேன்னாலும், பெரிய பணக்காரனா இருப்பான்.
இதெல்லாம் எப்பிடீன்றே?
அல்லாம் விதிப்பா.... விதி!
ஒன் தலயில இன்னா எளுதியிருக்கோ, அதும்படித்தான் நடக்கும்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. [375]

ஒன்னோட விதி சரியா இல்லேன்னா... கெட்ட நேரந்தான் ஒனக்குன்னா... நீ ஒரு நல்ல காரியம் பண்ணினாக்கூட கெட்டதாவே முடியும் அது!

காருல அடிபட்டு விளுந்திருக்கானேன்னு போய் எதுனாச்சும் ஒதவி பண்ணலாம்னு நெனைச்சு அவனைத் தூக்குவே! பொசுக்குன்னு ஒன் மடியில மண்டையைப் போட்டுருவான் அவன்! போலீஸு, கேஸு, சாட்சின்னு நீ அலைய வேண்டிவந்து, ஏண்டா போனோம்னு வெறுத்துருவே நீ!

ஒண்ணுமே தப்பு நெனைக்காம ஒரு சொல்லு சொல்லுவே ஒன்னோட தோஸ்த்துகிட்ட.... இன்னாமா அத்த நீ சொல்லப் போச்சுன்னு பொலுபொலுன்னு பிடிச்சு உலுக்கிடுவான் உன்னிய!

அதே சமயம், நல்ல விதி இருந்திச்சுன்னா, அதே ஆள சரியான நேரத்துல காப்பாத்தினேன்னு ஜனாதிபதி பதக்கமே ஒன்னியத் தேடி வரும்!
ஆஹா! இன்னாமா ஒரு சொல்லு சொன்னே கண்ணுன்னு ஒன்னோட நண்பன் ஒன்னியத் தூக்கிக் கொண்டாடிருவான்.


அல்லாம் விதிப்பா.... விதி!:))

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. [376]


கெட்ட நேரம் ஒனக்கு வந்திருச்சுன்னா, இன்னாதான் வருந்தி வருந்தி ஒரு பொருளை நீ வைச்சுக் காப்பாத்தினாலும், அது ஒங்கிட்ட நிக்காம போயிரும்.

அதே, ஒன்னோட ஒரு பொருளையே வேண்டாமின்னு வெளியே போயிக் கொட்டினாலும், அது ஒங்கிட்டியே திரும்பி வந்து சேர்ந்திரும்.
அல்லாத்துக்கும் இந்த விதிதான் காரணம்னு ஐயன் சொல்றாரு.


வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. [377]

நீ இன்னாதான் கஸ்டப்பட்டு, கோடி கோடியா சேர்த்து வைச்சாலும், விதி ஒனக்கு சரியா இல்லேன்னா, ஒத்தப் பைசா கூட அதுலேர்ந்து அனுபவிக்க முடியாது. சுளி சரியா இருக்கனும் கண்ணு அதுக்கெல்லாம்!

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின். [378]


இப்ப, ஒண்ணுமே இல்லாம ஏளையா இருக்கறவன்லாம் இன்னாத் தும்பம் வந்தாலும் சகிச்சுகிட்டு இருக்கானே! அது ஏன்னு யோசிச்சியா? இது வரும்.... அப்பிடியே சீக்கிரமே போயிரும்னு விதி மேல ஒரு நம்பிக்கை வைச்சுகிட்டு காலத்தை ஓட்டறான் அவன். அது மட்டும் இல்லேன்னா எப்பவோ சன்னியாசம் வாங்கிகிட்டு துறவியாப் போயிருப்பான்!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். [379]

ஒனக்கு ஒரு நல்லது நடக்குது! ரொம்ப ரொம்ப சந்தோசமா அத்த அனுபவிக்கற! திடீருன்னு ஒருநாளு அத்தினியும் சட்டுன்னு பூடுது! ரொம்பவே கஸ்டம் வந்திருது ஒனக்கு. அதையும் சந்தோசமா அனுபவிக்காம, ஐயோ அல்லாம் பூடுச்சேன்னு இன்னத்துக்கு அளுவறே நீ?

ஆனாக்க, இப்பிடி இல்லாம அதைக்கூட சந்தோசமா அனுபவிச்ச ஒரு ஆளை ஒனக்குத் தெரியுமா?

அவருதான் காமராசரு! மவராசன் அல்லாம் இருந்தப்பவும் சிரிச்சுக்கிட்டுத்தான் இருந்தாரு. அல்லாம் போனபோதும் அப்பிடியேதான் இருந்தாரு.

விதிய மீறி வாள்ந்து காமிச்சவரு அவரு!

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். [380]

மந்திரம் கால்; மதி முக்கால்னு சொல்லுவாங்க!
விதிய மதியால வெல்லலாம்னும் சொல்லுவாங்க!
ஆனா, அல்லாம் தெரிஞ்ச சித்தன் நம்ம ஐயன் இன்னா சொல்றாருன்னா,
நீ இன்னாத்தான் புத்திசாலின்னு நெனைச்சுகிட்டு செஞ்சாலும், அதையெல்லாம் தாண்டிகிட்டு, விதி முன்னாடி வந்து நிக்குமாம்!
ஒரு ரயிலைப் பிடிக்கனும்னு நெனைக்கறே! இப்ப நேரம் ஒனக்கு சரியில்லேன்னு ஜோசியன் சொன்னாண்ட்டு, ரெண்டு மணி நேரம் முன்னாடியே ஆட்டோவைப் பிடிச்சு ஏறிடுறே!
அப்பாடா! அல்லாம் சரியாப் பண்ணிட்டோம்னு நெனைக்கறப்ப, வருது ஒரு ட்ராஃபிக் ஜாம்!
ஆட்டோ ட்ரைவர் கையில ஒரு அம்பது ருப்பாய அளுத்தி ஸ்டேஷனுக்கு ஓட்டச் சொல்ற!
அவரும், குறுக்கால குறுக்கால புகுந்து கொண்டுபோய் விட்டுடறாரு.
ஓட்ட ஓட்டமா ஓடி ட்ரெயினைப் பிடிச்சுடற!
ஒன்னோட ஸீட்டும் கிடைச்சுருது.
ஆஹா, விதியை கெலிச்சிட்டொம்னு நெனைச்சுப் படுக்கற.
எளுந்து பார்க்கறப்ப.......... ஒன்னோட பர்ஸ் காலி!
அதான் விதி!


இப்பப் பாரேன்!
என்னைப் பார்க்க நீ வந்தே! இல்லேன்னதும், கொஞ்சம் மயங்கினே! சரி போலாம்னு முடிவு பண்ணின! ஆனாக்கூட நீ விதிய நம்பி இங்கியே சுத்திகிட்டு இருந்தே! ஒன்னோட நம்பிக்கை உண்மையாச்சு! விதியை நம்பு! நல்லதே நடக்கும்! நடக்கறதெல்லாமே நல்லதுன்னு நம்பு! இப்ப வடையைத் துண்ணு! டீயைக் குடி! சந்தோசமா இரு!' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

விதியை வாழ்த்தி அவனைத் தழுவிக் கொண்டேன் நான்!


**********************************

15 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Sunday, September 07, 2008 9:25:00 PM  

//நேரம் நல்லா இருந்ததுனால, எம்ஜியார் கரீட்டா தேர்தல் நேரத்துல குண்டடி பட்டு திமுகவை கெலிக்க வைச்சாரு. இப்ப இன்னாமா துட்டு பாத்துட்டாங்க பாரு அவங்கள்லாம்!
அதே, நேரம்.... விதி சரியா இல்லாததுனால, ஆனானப்பட்ட காமராஜரே, 'படுத்துகிட்டே ஜெயிப்பேன்னு, சோம்பேறித்தனமா இருந்து தோத்துட்டாரு!
அவ்ளோதான்!
அதுக்கப்புறம், காங்கிரஸுக் கட்சி நம்ம ஊருல தலை தூக்கவே முடியல!
அதாவது, இன்னும் அதுக்கு நேரம் சரியா அமையலை!
:)) //

வீஎஸ்கே ஐயா,

திருவள்ளுவரை வைத்து செய்ய வேண்டிய (அரசியல்) எல்லாம் சரியாக செய்றிங்க. விளக்கம் நன்று ! பாவம் திருவள்ளூவர் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் திருக்குறளே எழுதி இருக்க மாட்டார்.
:)

VSK Sunday, September 07, 2008 9:39:00 PM  

நடக்காத எதையும் நான் சொல்லவில்லை கோவியாரே!

அரசியல் பண்ண வேண்டிய அவசியமும் எனக்கில்லை!

உண்மை எப்பவும் சுடத்தான் செய்யும்!
பின்னூட்டத்துக்கு நன்றி!

குமரன் (Kumaran) Tuesday, September 09, 2008 7:18:00 PM  

உங்கள் தயவால் இந்த அதிகாரம் முழுவதையும் ஒரு முறை படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி எஸ்.கே.

VSK Wednesday, September 10, 2008 12:44:00 AM  

என்னை இன்னமும் எஸ்.கே. என அன்புடன் அழைக்கும் உங்களைப் போன்றோரின் வருகையால் மிகவும் மனமகிழ்கிறேன் குமரன்! நன்றி!

குமரன் (Kumaran) Wednesday, September 10, 2008 2:44:00 PM  

அட. அது உங்கள் கட்டளை தானே எஸ்.கே. நான் சில முறை ஐயா என்று அழைத்த போது ஐயாவெல்லாம் வேண்டாம் என்று தடுத்தீர்கள். அதனால் எஸ்.கே. என்றே உங்களை அழைத்துவருகிறேன்.

அப்படி இன்னொருவரும் கட்டளை இட்டு அது போலவே ஐயா இன்றி நான் அழைத்து வருபவர் தி.ரா.ச. :-)

Subbiah Veerappan Wednesday, September 10, 2008 3:20:00 PM  

வள்ளுவர் பெருந்தகை எழுதிய அதிகாரங்களில் எனக்கு மிகவும் பிடித்த அதிகாரம் இந்த ஊழ்வினை'அதிகாரம்தான்
அதை இன்று நீங்கள் முழுமையாக அனைவரும் படிக்கும் விதத்தில் தந்தமைக்கு மிக்க நன்றி!
===========================
இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்!

கடவுள் வாழ்த்து,
அதற்கு அடுததபடியாக வான்சிறப்பு
(மழையின் மகத்துவம்)
அதற்கு அடுத்தபடியாக
நீத்தார் பெருமை
(ஆசைகளைத் துறந்தவர்களின் மேன்மை)
என்று ஒரு ஒழுங்கில் அறத்துப்பாலை
வடிவமைத்த வள்ளுவர் பெருந்தகை
கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை (Destiny)
வைத்ததற்குக் காரணம்
மனித வாழ்வு ஊழ்வினைப் படிதான்
(விதிக்கப்பெற்ற விதிப்படிதான்)
நடக்கும் என்பதை வலியுறுத்தத்தான்

ஊழ்வினை அதிகாரத்தில் உள்ள
இரண்டு முத்தாய்ப்பான குறள்கள்
-----------------------------------------------------------------

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"
(குறள் எண் 377)

அவரவர்க்கு வகுத்த வகைப்படி அல்லாமல்
கோடிக்கணக்கில் பொருளை வருந்திச் சேர்த்தவர்க்கும்
அப்பொருளால இன்பம் நுகர்தல் இயலாது!
------------------------------------------------------------------

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் நுறும்"
(குறள் எண் 380)

ஊழைப்போல மிகுந்த் வலிமையுள்ளவை
வேறு எவை உள்ளன? அதை விலக்குவதற்கு
வேறு வழியை ஆராய்ந்து எண்ணினாலும் அது
அவழியையே தனக்கும் வழியாகி முந்திக் கொண்டு வந்து நிற்கும்!

Nothing is stronger than destiny

Subbiah Veerappan Wednesday, September 10, 2008 3:21:00 PM  

வள்ளுவர் பெருந்தகை எழுதிய அதிகாரங்களில் எனக்கு மிகவும் பிடித்த அதிகாரம் இந்த ஊழ்வினை'அதிகாரம்தான்
அதை இன்று நீங்கள் முழுமையாக அனைவரும் படிக்கும் விதத்தில் தந்தமைக்கு மிக்க நன்றி!
===========================
இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்!

கடவுள் வாழ்த்து,
அதற்கு அடுததபடியாக வான்சிறப்பு
(மழையின் மகத்துவம்)
அதற்கு அடுத்தபடியாக
நீத்தார் பெருமை
(ஆசைகளைத் துறந்தவர்களின் மேன்மை)
என்று ஒரு ஒழுங்கில் அறத்துப்பாலை
வடிவமைத்த வள்ளுவர் பெருந்தகை
கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை (Destiny)
வைத்ததற்குக் காரணம்
மனித வாழ்வு ஊழ்வினைப் படிதான்
(விதிக்கப்பெற்ற விதிப்படிதான்)
நடக்கும் என்பதை வலியுறுத்தத்தான்

ஊழ்வினை அதிகாரத்தில் உள்ள
இரண்டு முத்தாய்ப்பான குறள்கள்
-----------------------------------------------------------------

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"
(குறள் எண் 377)

அவரவர்க்கு வகுத்த வகைப்படி அல்லாமல்
கோடிக்கணக்கில் பொருளை வருந்திச் சேர்த்தவர்க்கும்
அப்பொருளால இன்பம் நுகர்தல் இயலாது!
------------------------------------------------------------------

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் நுறும்"
(குறள் எண் 380)

ஊழைப்போல மிகுந்த் வலிமையுள்ளவை
வேறு எவை உள்ளன? அதை விலக்குவதற்கு
வேறு வழியை ஆராய்ந்து எண்ணினாலும் அது
அவழியையே தனக்கும் வழியாகி முந்திக் கொண்டு வந்து நிற்கும்!

Nothing is stronger than destiny

VSK Wednesday, September 10, 2008 11:32:00 PM  

நீங்கள் அப்படி அழைப்பது எனக்கு மகிழ்ச்சிஅளிக்கிறது என்றுதான் அதைச் சொன்னேன் குமரன்!

நன்றி.

VSK Wednesday, September 10, 2008 11:33:00 PM  

மிக அழகான விளக்கம் ஆசானே! நன்றி.

இதுதானே நீங்கள் எழுதிவரும் ஜாதக, ஜோசியப் பதிவுகளுக்கும் ஆதாரம்.

S.Muruganandam Wednesday, September 10, 2008 11:56:00 PM  

//நீ இன்னாதான் கஸ்டப்பட்டு, கோடி கோடியா சேர்த்து வைச்சாலும், விதி ஒனக்கு சரியா இல்லேன்னா, ஒத்தப் பைசா கூட அதுலேர்ந்து அனுபவிக்க முடியாது. சுளி சரியா இருக்கனும் கண்ணு அதுக்கெல்லாம்!//

பணம் நிறைய இருப்பவர்கள் இன்று சாக்கரை நோயாலும், இரத்தக்கொதிப்பாலும் அவ்திப்பட்டு ஒன்றும் சாப்பீதமுடியாமல் இருப்பதை அன்றே ஐயன் திருவள்ளுவர் சூல்லியிருக்கிறார் என்று காட்டிய VSK ஐயா வாழ்த்துக்கள்.

Subbiah Veerappan Thursday, September 11, 2008 3:26:00 AM  

/////Blogger VSK said...
மிக அழகான விளக்கம் ஆசானே! நன்றி.
இதுதானே நீங்கள் எழுதிவரும் ஜாதக, ஜோசியப் பதிவுகளுக்கும் ஆதாரம்.////

ஆமாம், வி.எஸ்.கே சார்! வகுப்பறையில் நான் நடத்த வந்தது ஆன்மீகப் பாடங்கள்.
இறையுணர்வு இளைஞர்களிடையே இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக ஆரம்பித்த
அந்தப் பதிவில் ஜோதிடத்தைத் தொடர்ந்து எழுதும்படியாகிவிட்டது.
கூடிய சீக்கிரம் அதை நிறைவு செய்துவிட்டு, ஆன்மிகக் கட்டுரைகளை எழுதலாம்
என்று உள்ளேன் - உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன்!

திவாண்ணா Saturday, September 13, 2008 4:30:00 AM  

மன்னார் வாய்க! ப்ரென்டு எஸ்கே வும் வாய்க!

VSK Sunday, September 14, 2008 12:00:00 AM  

//பணம் நிறைய இருப்பவர்கள் இன்று சாக்கரை நோயாலும், இரத்தக்கொதிப்பாலும் அவதிப்பட்டு ஒன்றும் சாப்பிடமுடியாமல் இருப்பதை அன்றே ஐயன் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்று காட்டிய VSK ஐயா வாழ்த்துக்கள்.//

அதைக் குறிப்ப்பிட்டுச் சுட்டிக் காட்டிய உங்களுக்கும் நன்றி ஐயா!

VSK Sunday, September 14, 2008 12:01:00 AM  

//கூடிய சீக்கிரம் அதை நிறைவு செய்துவிட்டு, ஆன்மிகக் கட்டுரைகளை எழுதலாம்
என்று உள்ளேன் //

மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஆசானே!

காத்திருக்கிறேன்!

VSK Sunday, September 14, 2008 12:02:00 AM  

//மன்னார் வாய்க! ப்ரென்டு எஸ்கே வும் வாய்க!//

திவாவும் வாய்க!

அல்லாரும் வாய்க!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP