"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"
"அ.அ. திருப்புகழ்" -- 27 "திமிர வுததி யனைய நரக"
****** பாடல் ******
ராகம்: பைரவி
தாளம்: திஸ்ர ஏகம் [3]
தனன தனன தனன தனன
தனன தனன....... தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் வரவேநின்
அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள மிகவே நீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
****** பொருள் விளக்கம் ******
[வழக்கம் போல் பின் பார்த்து முன்]
[சிறிய பாடலுக்கு நீட்டி முழக்க வேண்டியிருக்காது என நினைத்தேன்! முழக்கித்தானிருக்கிறேன்!:))]
"சமர முக வெல் அசுரர் தமது
தலைகள் உருள
மிகவே நீள் சலதி அலற
நெடிய பதலை தகர
அயிலை விடுவோனே"
நிலையான தவம் செய்து
அழியாத வரம் பெற்று
எவராலும் வெல்லாத
திறன் கொண்ட இராக்கதரின்
தலைகளெல்லாம் உருண்டிடவும்,
வற்றாத நீருடைய
பரந்திருக்கும் நீளமுடை
கடலினிடை சூரன் ஒளிய
முற்றாக அது வற்றி
அற்றாது அது கதறிடவும்
மாயங்கள் புரிகின்ற
கிரௌஞ்சமெனும் மலையாக
தாரகனும் உருமாற
நெடிதுயர்ந்த அம்மலையை
பொடியாக்கிப் பிளந்திடவும்
அன்னைதந்த வேல் விடுத்து
அரக்கர்குலம் அழித்தவனே!
"வெம் அரவு அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே"
கொடிய விஷம் கக்குவதால்
வெப்பப் பெருமூச்சினை நா வழியே
வீசுகின்ற ஆதிசேஷன் எனும்
பாம்பணையில் பள்ளி கொண்டு
பங்கயம் போலும் கண்மலர் கொண்ட
நாராயணனின் மருகோனே!
"மிடறு கரியர் குமர"
அமுதம் எடுக்க அசுரரும் தேவரும்
பாற்கடலைக் கடைந்த வேளை
வெப்பம் தாளாது வருந்திட்ட
வாசுகி எனும் பாம்பின் வாயினின்று
புறப்பட்ட கொடும் விஷமாம்
ஆலகாலத்தைத் தான் வாங்கி
தன் கண்டத்தில் வைத்ததினால்
"கரியர்" எனப் பெயர்பெற்ற
சிவனாரின் திருக்குமாரனே!
"பழநி விரவும் அமரர் பெருமாளே"
தேவர் குறை தீர்த்துநின்ற
பெருமைமிகு பழனியிலே
எழுந்தருள் செய்கின்ற பெருமை மிக்கவரே!
"திமிர உததி அனைய நரக செனனம்"
பிறவியும் கடலும் ஒன்றெனச் சொல்வார்
அறிந்தவர் அதனை ஆமென உணர்வார்
கருநீலம் கொண்ட கடல் இருளுற்று இருக்கும்
அறியாமை என்னும் இருள் பிறவியிலே உண்டு
அலைகள் கடலில் அடுக்கடுக்காய் வந்து ஓய்வதே இல்லை
ஆசை பாசம் என்னும் அலைகள் பிறவியில் என்றும் ஓய்வதும் இல்லை
மீனும், மலையும், திமிங்கிலமும் கடலில் வாழும் உயிர்வகைகள்
எண்ணம், பாவம், மதங்கள் என்னும் பல்வகை உணர்வுகள் பிறவியிலே
கரையின்றி நீண்டிருக்கும் கடல்நடுவே நின்றிருந்தால்
கரைகாணா நிலையென்றே பிறவியினைச் சொல்லிடுவார்
கடல் போலும் பிறவியினை தொல்லையெனச் சொல்லிடுவார்
நரகமென நலிந்திருக்கும் தொல்லைகளே இதிலுண்டு!
"அதனில் விடுவாயேல்"
இத்தனை தொல்லைகள் நிறைந்திட்ட
நரகவாழ்வு எனும் பிறவிப் பெருந்துயரில்
எனை ஆழ்த்திட நீ திருவருள் புரிகுவாயேல்
"செவிடு"
'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்'
என்கின்ற தமிழ்மறையின் வாக்கொப்ப,
கண் இல்லாவிடினும் உணர்ந்து தெரிந்திடலாம்
சுவையுணர்வு இல்லாவிடினும் விழுங்கி உயிர் வாழ்ந்திடலாம்
மணம் உணராவிடினினும் சுவையிருப்பின் பயனுண்டு
தொடுவுணர்வு இல்லையெனினும் செவி வழியே உணர்ந்திடலாம்
பிறந்தவுடன் பெயர் ஓதுவதும் செவியிலேயே
முதலாண்டு அணிகலனும் செவித் தோடே
'தோடுடைய செவியன்' என சிவனாரைப் புகழ்வதுவும் செவிவழியே
எழுத்தறிவு உணர்ந்திடும்முன் கேட்பதுவும் செவிவழியே
'ஓம்' என்னும் வரிவடிவில் அமைவதுவும் செவியேதான்
மரிக்கையிலே வழியனுப்ப மந்திரம் சொல்லுவதும் செவியிலேதான்
இத்தகைய செவியுணர்வு நன்கருளி செவிடில்லாமலும்,
"குருடு"
அருள்மேனி காண்பதற்கு அருளுவதுவும் கண் வழியே
திருவாளர் துணை காணத் தேவையிங்கு கண்கள் இங்கே
'கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க' எனக் கோதை
சொன்னதுவும் கண் குறித்தே என்பதினால் குருடில்லாமலும்,
"வடிவு குறைவு"
இறைவனாரை,
வாழ்த்துதற்கு வாய் வேண்டும்
வணங்குதற்குத் தலை வேண்டும்
அருச்சிக்கக் கைகள் வேண்டும்
வலம் வந்திடக் கால்கள் வேண்டும்
எனவே,
என் வடிவினில் எக்குறையும் இல்லாமல்
சுத்தமாகப் படைத்திடவும்,
"சிறிது மிடியும் அணுகாதே"
'கொடிது கொடிது வறுமை கொடிது' என்கின்ற
தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது போல்
வறுமை,
வனப்பை அழித்து உலர்த்தி வாட்டும்
உறவினிடை கலகத்தை உண்டாக்கும்
சோம்பல் மிக வளர்க்கும்
கஞ்சகுணம் மிகவாகும்
பொய், பேராசை, அவமானம் என்கின்ற
தீயவையை நம்முள் வளர்க்கும்
எனவே,
சிறிதளவும் வறுமையென ஒன்று என்னை
அணுக வேண்டியதே கூடாதென வேண்டுகின்றேன்
"அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு நிறையும் வரவே"
மருவற்ற தேகமுடைய
தேவர்போலும் வடிவும்
நன்நெறியில் திகழ்கின்ற
மேன்மைக் குணங்கள்
நிறைந்திருக்கும் குலத்தினிலே
யான் பிறந்து நல்லறிவும்
நிறைவான குணங்களும்
எனக்கு வந்திடவே
"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வரவேணும்"
நினது திருவருளை எனக்கு மிகவருளி
என்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்
நீ அடிமை செய்து, நினது வசமாக்கி
தடுத்தாட்க்கொண்டிட வந்தருள வேண்டும்!
*************************************************
அருஞ்சொற் பொருள்
திமிரம் - இருள்
உததி - பெருங்கடல்
மிடி - தரித்திரம்
சமர முகம் - போர்க்களம்
சலதி - கடல்
பதலை - மலை
தகர - உடைய
அயில் - வேலாயுதம்
வெம் - வெப்பம்
அரவு - பாம்பு
அணை - மஞ்சம்
மிடறு - கண்டம், தொண்டை
மிடறு கரியர் - விடம் உண்டதால் கரிய தொண்டை உடைய சிவன்
விரவும் - எழுந்தருளியிருக்கும்
******************************************
வேலும் மயிலும் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
*******************************
12 பின்னூட்டங்கள்:
//கடலினிடை சூரன் ஒளிய
முற்றாக அது வற்றி
அற்றாது அது கதறிடவும்//
இப்படியெல்லாம் உரையும் நடையும் சொல்ல
ஆகா, முழக்கம் முருகனுக்கும் பிடித்திருக்கிறதாம்!
ஏனிந்தக் பிறப்புக்குறைகள் தவிர்க்க வேண்டுமென்ற விளக்கமும் அருமை!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்பதற்கு ஏற்ப
அமரகிரியாம் அருணகிரி, திஸ்ர நடையில் கலக்குகிறார்!
ஆமாங்க திரு. ஜீவா!
திஸ்ர நடையில் பைரவியில் கலக்கிய இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
நன்றி
முழக்கம் ஆரம்பித்ததே உங்கள் பதிவில் தானே!:))))))
/////"நின் அருள் அது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வரவேணும்"
நினது திருவருளை எனக்கு மிகவருளி
என்னை மட்டுமல்லாமல் என் மனத்தினையும்
நீ அடிமை செய்து, நினது வசமாக்கி
தடுத்தாட்க்கொண்டிட வந்தருள வேண்டும்!////
அருமை!
விளக்கத்தைக் கேட்டால், ஆறுமுகனே வந்து ஆட்கொண்டு விடுவார்!
//அருமை!
விளக்கத்தைக் கேட்டால், ஆறுமுகனே வந்து ஆட்கொண்டு விடுவார்!//
அதுதான் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன் வருவது எவ்வளவு உறுதியோ அதேபோல்தான் எங்களுக்குப் பாடம் சொல்லும் இந்தச் சுப்பையா வருவதும். மிக்க மகிழ்ச்சி ஆசானே!
இந்தப் பதிவில் உள்ள பழனி முருப்பெருமானின் படம் பெரியதாக இருந்தால் அதைச் சுருக்காமல் (without resizing)
அடுத்த பதிவில் வெளியிட வேண்டுகிறேன்.
இந்தப் படத்தை சேமித்து, பெரிதாக்கிப் பார்த்தேன். Clarity இல்லை
சந்தத் தமிழ்க் கவியாம்
முருகப் பெருமானின் சொந்தத் தமிழ்க் கவியாம்
அருணகிரி அள்ளித் தந்த கவியாம்
தீந்திருப்புகழினை ஓதி ஓதி
மற்றோர்க்கு சொற்சிக்கலை ஊதி ஊதி
பதிவிடும் வி.எஸ்.கேவிற்கு நன்றி பல. முருகனருள் முன்னிற்கும்.
இந்தத் திருப்புகழ் எனக்கு மிகமிகப் பிடித்தது. திமிரவுததியனைய நரக ஜனனம் என்று சொல்லும் பொழுதே பிறந்ததால் வந்த துயரம் விளங்கும். அந்தத் துயருக்குத் துயரை வைக்கும் துரையாம் தமிழ்க்கடவுளாகிய முருகப் பெருமானே அனைத்தும் தர வல்லார். அவறன்றி வேறு யார் வல்லார்!
துயருக்கே துயர் வைக்கும் துரை!
அற்புதமான சொற்பிரயோகம் ஜி. ரா.!
நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ் SK!
திமிர உததி = இருட் பெருங்கடல்!
ஒளி ஒன்றுமில்லா இருள் என்னும் பெருங்கடலில் தானே சனனம் ஆரம்பிக்கிறது!
கருவாய் உயிராய்...இருட்டில் குறுகி, கருப்பைக் கடலாம் நீரில் நீந்தித் தானே சனனம்?
இருட் பெருங்கடலில் இருந்து
அருட் பெருங்கடலில் சேர்க்க வல்லவன் முருகப் பெருமான்!
//அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்//
என்னை மட்டும் அடிமை கொண்டால், உன் செயலை மட்டுமே கடனுக்குச் செய்ய முடியும்! மனம் ஓரிடம் மார்க்கம் ஓரிடம் என்று எவ்வளவு நாள் நிலைக்கும் அந்த பேறு?
அதான் மனதோடு அடிமை கொள்ள வர வேணும் என்று வேண்டுகோள் வைக்கிறார்!
//பழநி விரவும் அமரர் பெருமாளே//
விரவுதல் என்றால் என்ன SK?
வெறுமனே எழுந்து அருளி இருத்தல் மட்டும் இல்லைன்னு நினைக்கிறேன்!
நல்ல பல கருத்து விளக்கங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் ரவி!
விரவுதல் என்றால் கலத்தல், எனப் பொருள் வரும்.
பழனி எங்கணும் அவன் திருப்பெயர்தானே விரவி நிற்கிறது!
நன்றி.
viravu (p. 882) [ viravu ] , s. mixture, kalappu; 2. discretion, viravu.
viravu (p. 882) [ viravu ] , III. v. t. mix, unite, mingle, kala; 2. approach draw near, anuku.
நீட்டி முழக்கியதற்கு மெத்த நன்றி.
திமிர உததி அனைய நரக செனனத்திற்கு இவ்வளவு நீட்டி முழக்கியதற்கு இரட்டை மகிழ்ச்சி.
செவிடு குருடு வடிவு குறைவு இவற்றை விரித்ததற்கு மும்மடங்கு மகிழ்ச்சி.
மிடியை நீக்கவும் குலம் தரும் சொல்லை விளக்கவும் விரித்ததற்கு பல்மடங்கு மகிழ்ச்சி.
கந்தனையே தந்தையெனக் கொண்டுள்ள
தங்களையே
கரம் கூப்பி வணங்குகின்றேன் வாழ்க
நீங்கள்
தந்தையினைப் போற்றி இன்றும்
தமிழாலே வணங்குகின்ற
மைந்தருங்கள் நன்றியினை ம்னதாரப்
போற்றுகின்றேன்
எந்த விதம் வந்தோம் நாம் என்பதனை உணராத
சந்ததிக்கு குரங்கதனைக் காட்டியதைக்
கண்டேன் நான்
சந்ததமும் தமிழோடு வடமொழியும்
சேர்த்தளித்த
கந்தனவன் அருணகிரிக் கனியானைக்
கண்டேன் நான்
எந்த விதம் இறையருள் நம்
இரு பேரைச் சேர்த்ததுவோ
அந்த இறை தனைப் பணிந்தேன்
அய்யா நீர் வாழியவே
பெரியோர்க்கு எனது வணக்கங்களையும்
இளையோர்க்கு எனது வாழ்த்துக்களையும்
தெரிவிக்கவும் நன்றி அய்யா
தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்
அன்பான ஐயா!
தங்களிடமிருந்து வந்த வாழ்த்துப்பாவில் திக்குமுக்காடிப் போனேன்.
நான் சற்றும் எதிர்பாராமல் வந்த ஒரு மடல் என்னை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தங்களது சீரிய உரைகளை விஜய் தொலைக்காட்சி மூலம் கண்டு களித்துக் கொண்டிருக்கிறேன்.
தங்கள் பதிவுகளைப் படித்து தினமும் இன்புறுகிறேன்.
தாங்கள் சொன்ன வாழ்த்துரை எனக்கு ஒரு ஊக்கமருந்து.
பதிவுலகிற்கு வந்ததின் பயனை இன்று பெற்றேன் எனச் சொன்னால் மிகையாகாது!
மிக்க நன்றி.
//பெரியோர்க்கு எனது வணக்கங்களையும்
இளையோர்க்கு எனது வாழ்த்துக்களையும்
தெரிவிக்கவும் நன்றி அய்யா
தங்கள் அன்பின் அடிமை//
Post a Comment