Sunday, May 18, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 6

"பாரதி" -- சில காட்சிகள் -- 6


முந்தையப் பதிவு இங்கே!





'அடுத்து, 'நாட்டிற்கு உழைத்தல்' என்பது பற்றி ஒரு புதுமை விளக்கம் கொடுக்கிறான் பாரதி!
அடுத்த பதிவில்!'
எனச் சொல்லியிருந்தேன்.
அது என்னவெனப் பார்ப்போம்!


"நாட்டிற்குழைத்தல்" என்னவெனச் சொல்லப் புகும் முன், அதற்கு முதலில் பொறுமை மிகவும் அவசியம் எனச் சொல்ல வருகிறான். சட்டென, தன்னிடம் இல்லாத அதை எப்படி வரவழைப்பது என ஒரு ஐயம் பாரதிக்குத் தோன்றுகிறது. அதே வேகத்தில் பதிலும் கிடைக்கிறது.

ஆம்! கணபதியைப் பணிந்தால்தான் எதுவுமே கிடைத்துவிடுமே! அவரையே கேட்போம் எனத் துவங்குகிறான்.

'எனை நீ காப்பாய், யாவுமாம் தெய்வமே!
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார்?
யாவும் நீ ஆயின், அனைத்தையும் பொறுத்தல் செவ்விய நெறி. அதில் சிவநிலை பெறலாம். பொங்குதல் போக்கிப் பொறை எனக்கு ஈவாய்!
மங்கள குணபதி; மணக்குள கணபதி;
நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!'


முன்னம் என் ஆன்மாவே நீதான் எனச் சொல்லிய கணபதியிடம் இப்படி வேண்டிய அவன், தொடர்கிறான்.
நாடு என்பதற்கு அவன் அளிக்கும் விளக்கம் இது!

'நாட்டினைத் துயரின்றி நன்கு அமைத்திடுவதுவும்' 'உளம் எனும் நாட்டை ஒரு பிழையின்றி ஆள்வதுவும்' பேரொளி ஞாயிறே அனைய சுடர்தரு மதியொடு துயர் இன்றி வாழ்தலும்' 'நோக்கமாக் கொண்டு நின் பதம் நோக்கினேன்!'

நாம் வாழ்வது நாடு என்றால், நம் உயிர் வாழ்கின்ற இந்த உடல் தாங்கிய உள்ளமும் ஒரு நாடே எனப் புதுப் பார்வை வைக்கிறான்!

சுற்றியிருக்கும் இந்த நாட்டைத் திருத்துவது எவ்வளவு தலையாய பணியோ, அதே போலத்தான், நம் உள்ளத்தைச் செம்மையாக வைத்திருத்தலும் எனப் பாடம் புகட்டுகிறான்!

'காத்தருள் புரிக கற்பக விநாயகா! காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம் கோத்து அருள் புரிந்த குறிப்பரும் பொருளே! அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்! எங்குல தேவா போற்றி! சங்கரன் மகனே! தாள் இணை போற்றி!' எனப் போற்றி முடிக்கிறான்.

தன் தொழில் இன்னதென்று தெரிந்துவிட்டதால், இப்போது ஒரு பெரிய செய்தி சொல்ல விழைகிறான் பாரதி! அதற்கு வாணி சரஸ்வதியின் அருள் தனக்குக் கிட்ட வேண்டும் ; அப்போதுதான் கவிதைத் தொழிலைச் செவ்வனே செய்ய முடியும் என நினைத்து, வேண்டுகிறான்..... கணபதியைத்தான்!

'போற்றி! கலியாணி புதல்வனே!' என அடுத்த பாடலைத் துவங்கி,
'பாட்டினிலே ஆற்றல் அருளி அடியேனைத் தேற்றமுடன் வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்!' என்கிறான்!

என்ன வேண்டுமாம்?

'வாணியருள் வீணையொலி என் நாவில் விண்டு' வைத்துவிட அருள் செய்யப்பா! என மனமுருகி வேண்டுகிறான்!

அப்படி 'விண்டு' வைத்தால், ஏ! 'புதுவை விநாயகனே!' இதோ உனக்கு விளக்கமாகச் சொல்கிறேன்!

'தொண்டு உனது அன்னை பராசக்திக்கு என்றும் தொடர்ந்திடுவேன்' எனச் சொல்லி விநாயகனைக் குளிர்விக்கிறான்.

நமக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால், அதை நிறைவேற்றக்கூடிய ஆளுக்கு நெருக்கமானவரைக் கவனிப்போம் என்பதுபோல, 'உன் அம்மாவை.... ஏனென்றால், இவர்தான் அகல்விழி உமையாளின் ஆசை மகனாயிற்றே!.... நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்!' என இவரைக் குஷிப்படுத்துகிறான்!

அது மட்டுமா! 'பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவைத் தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!' எனவும் ஒரு கூடுதல் விண்ணப்பம் வைக்கிறான்.

ஒரு வரம் கேட்க எண்ணுகிறான் கணபதியிடம்! நிச்சயம் தந்துவிடுவான் என நம்புகிறான்!

இவனது முப்பெரும் தொழில்களான, 'கவிதை செய்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல், நாட்டிற்குழைத்தல்' இவை மூன்றுக்கும் உதவ முப்பெரும் சக்தியரைத் துணைக்கழைக்கிறான்....கூடவே, அதில் கணபதியையும் வைத்துப் பாடுகிறான்!

பொருள்நலம் அளிக்கும் இலக்குமி, இவளைச் 'செந்தாமரையில் சேர்ந்திருக்கும் செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி' எனப் போற்றி, 'தான் செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் இவனே எனது "கையாள்" போலச் செய்கிறானே என அவள் மனமகிழ்ந்து, 'அடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து செய்வாள்' எனச் சொல்லுகிறான்.

இந்தச் 'செய்தொழில்' என்னும் வினைத்தொகைச் சொல் மிகவும் ஆழ்ந்த பொருளுடையது. தான் 'இதுவரையில் செய்த, இப்போது செய்கின்ற, இனிச் செய்யப் போகின்ற', என எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து பெரிதாக அடிபோடுகிறான் பாரதி!

'புகழ்சேர் வாணியும் என்னுள்ளே நின்று தீங் கவிதை பெய்வாள்' எனவும்,
'சக்தி துணை புரிவாள்' எனவும் சொல்லிவிட்டு,

இதெல்லாம் எப்போது நிகழும் தெரியுமா, ஓ, மணக்குள கணபதியே!,'பிள்ளாய் நின்னைப் பேசிடிலே' என ஒரு போடு போடுகிறான்..... ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள் அடிப்பது போல!

சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி?
அப்படி என்ன வரம் கேட்கப் போகிறான்?

[அடுத்த பதிவில்]

2 பின்னூட்டங்கள்:

jeevagv Monday, May 19, 2008 10:13:00 PM  

சத்திய வழியில் அயராது உழைக்க அதீதப்பொறை அவசியம் தேவை என்பது - அந்நாளிலும், இந்நாளிலும் நாட்டிற்கும், நம் நடைக்கும்!
நன்று ஐயா நன்று!

வெண்தாள் உடையாள், எமையாள் உமையாள்,
செய்யாள் இனியாள்
, கையாள் நானென
கைகலந்து இனிதே செய்வாள், கணபதி

காற்பதம் சரண் புக.

VSK Monday, May 19, 2008 11:32:00 PM  

அதீதப் பொறையுடன் காத்திருந்த எனக்கு அருமருந்தாய் வந்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி, திரு.ஜீவா.

இது ஒரு பரபரப்பான பதிவாக இல்லை எனச் சில நண்பர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

பாரதியை மட்டும் காட்டவே இந்தக் காட்சிகள்!

மீண்டும் நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP