"பாரதி" -- சில காட்சிகள் -- 8
"பாரதி" --சில காட்சிகள் -- 8
முந்தைய பதிவு இங்கே
'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதலே கருநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி! சிவன் ஒருமகன் இதை நினக்கு அருள் செய்கவே!'
என்ன செய்ய வேண்டும் இந்த மனம்! இந்த மக்கள்!
விடுதலை பெற?
[அடுத்த பதிவில்]
'விடுதலை' பெற, ' செய்க தவம்! செய்க தவம், நெஞ்சே! ' என மனதுக்குச் சொல்லித் தருகிறான்.
'தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்' எனவும் உற்சாகப் படுத்துகிறான்.
'அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு.' என முடிக்கிறான்.
இந்த அன்பென்னும் ஒன்றே மனிதரின்..... அவர்கள் மனங்களின் 'இயல்பு'; இதைத் தவிர வருகின்ற மற்றதெல்லாமே, எம்முடைய இயற்கை குணம் இல்லையெனவும் வலியுறுத்துகிறான். அப்படி வருகின்ற மற்ற குணங்களை எல்லாம் எப்படி வெல்வதாம்? சொல்கிறான் பாரதி!
'இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்.'
எம்முடைய செய்கைகள் எல்லாமே இந்த மனத்தின் ஆசையினால் விளைகின்ற ஒன்று. இதுதான் இந்த மனத்தின் இன்னொரு இயல்பு.
'செயல் இங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்'
எனவே உனது ஒரே இயல்பான அன்பு கொள்வதை, அன்பு செலுத்துவதை, அன்பைக் காட்டுவதை, ஏன் செய்ய மறுக்கிறாய் எனவும் சாடுகிறான்.
'சீர்மிகவே பயிலு நல்லன்பை இயல்பு எனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்'
ஆம்! இவனுக்குத்தான்,,.... இவனது மனமே முப்பது கோடி ஆயிற்றே! அவர்களுக்கும் சேர்த்தேதான் சொல்லுகிறான்!
'முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே!'
ஆத்மாவே விநாயகன் தான் எனச் சொல்லியவன், அந்த விநாயகனை அனுதினமும் நினைத்து, விடுதலை பெறவேண்டுமாயின் அன்பெனும் தவத்தை அயராமல் செய்து, அன்பு ஒன்றே உன் இயல்பு என்பதை உணர்ந்து செயல்படுவாய் enkiRaan
[moympu (p. 828) [ moympu ] , s. strength, valimai; 2. the shoulder, tol.]
இயல்பு என்பதே ஒரு வலிமை, உன்னோடு உடன் வரும் ஒரு துணை என்பதை மிகவுமே அழுத்தமாகச் சொல்லுகிறான் பாரதி!
இந்தத் துணையின் உதவியோடு நிகழ்கின்ற கலியை நீக்கி, வரப்போகும் கிருத யுகத்தினை எம்மால் கொண்டுவர முடியும் என்பதைச் சொல்ல வந்து, அதற்கு என்ன செய்யவேண்டும்? எனச் சொல்லப் புகுகிறான் பாரதி.
வரிசையாகச் சொல்லுகிறான் நோய் தீர்க்கும் ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டு போல!
'மொய்க்கும் கவலை போக்கி;
முன்னோன் அருளைத் துணை ஆக்கி;
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி;
உடலை இரும்புக்கு இணை ஆக்கி;
பொய்க்கும் கலியை நான் கொன்று;
பூலோகத்தார் கண் முன்னே;
மெய்க்கும் கிருத யுகத்தினையே;
கொணர்வேன்; தெய்வ விதி இஃதே'
இதைச் செய்தால் எவரால்தான் வெல்ல முடியாமல் போகும்?
நிறையச் சொல்லிவிட்டான் பாரதி!
நிறையவே கேட்டு விட்டான் விநாயகனிடம் பாரதி!
அவனுக்கே பாவமாய் இருக்கிறது விநாயகனை நினைத்து!
முடிக்கும் முன் கொஞ்சம் வாழ்த்தி இவனைப் பாடலாமே என எண்ணுகிறான்!
சொற்களுக்கா பஞ்சம் இவனிடம்?
பொழிகிறான்!
'விதியே வாழி!
விநாயகா வாழி!
பதியே வாழி!
பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்று ஆக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி!
வீரம் வாழி!
பக்தி வாழி!
பலபல காலமும் உண்மை வாழி!
ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை அமரர் பதங்களாம் கண்டீர்!
பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன்!
வெற்றி தரும் சுடர் விநாயகன் தாள் இணை வாழியே!'
ஏன் கிருத யுகம்?
கலி யுகத்திற்கு என்ன கேடு!
பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு வேறு சான்றே தேவையில்லை!
இந்த விநாயகர் நான்மணிமாலை ஒன்றே போதும்!
1920 - 1930
வெள்ளையர் ஆட்சியை அடியோடு ஏற்று மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்ற அவலம்.
இன்னமும் காந்தி என்கின்ற மகானின் அருமையை முழுதுமாக மக்கள் அறியாத நேரம்!
இது கலியின் நிகழ்வு என நினைக்கிறான் பாரதி!
சிந்திக்கிறான்!
கலி முடிந்தால் அடுத்து வரவிருப்பது கிருத யுகம்!
கலி ஏன் முடியவேண்டும்? நாமே அதை முடித்தால் என்ன என அலறுகிறான்!
ஏ மனம் மயங்கிய மக்களே! அன்பைக் கொள்ளுங்கள்! அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள்! கலியுகம் முடிந்து கிருத யுகம் தானே மலரும் எனக் கதறுகிறான்.
உங்களது ஆன்மாவான விநாயகனின் அடி பணிந்தால் அன்பு தானே மலரும் என அடித்துச் சொல்லி முடிக்கிறான் பாரதி!
நான்மணிமாலை என்றால் என்ன?
வெண்பாவில் தொடங்கி, கலித்துறையில் பா ஒன்றை அடுத்து வைத்து, மூன்றாவதாக ஒரு விருத்தம் பாடி, கடைசியாக ஒரு அகவல் பாடி நான்கு விதமாக ஒரு கவியை அளிக்கிறான் இங்கு!
இப்படி நான்கு நான்காக பத்து பாடல்கள்!
ஆக மொத்தம் 40 பாடல்கள்.
விநாயகனுக்கு இந்த வகையில், ஒரு நான்மணி மாலையால் அணி செய்கிறான் பாரதி!
இத்துடன் இந்தக் காட்சி நிறைவடைகிறது.
நான்மணிமாலை முழுதும் இன்னும் ஓரிரு நாட்களில் இடுகிறேன்.
அடுத்த சில காட்சிகள் வேண்டுமா என இதுவரை படித்தவர்கள் சொன்னால், தொடரலாம்.
இல்லையேல், இத்துடன் நிறை செய்கிறேன்.
நன்றி! வணக்கம்!
4 பின்னூட்டங்கள்:
ஆகா, நால்மணிமாலை யாவும் விரைவாக படித்திட உதவினீர், மிக்க நன்றி ஐயா. உரைகள் யாவும் அருமை, பயன்மரம் பழுத்ததாகவும் இருந்தது.
இன்னமும் தருகிறென் என்றால் வேண்டாம் எனச் சொல்ல எப்படி விழையும் மனது?
//இந்த அன்பென்னும் ஒன்றே மனிதரின்..... அவர்கள் மனங்களின் 'இயல்பு'; இதைத் தவிர வருகின்ற மற்றதெல்லாமே, எம்முடைய இயற்கை குணம் இல்லையெனவும் வலியுறுத்துகிறான்.//
ஆஹா. உண்மைதானே. அன்பே சிவம். அன்பே தவம். அன்பொன்று செய்தால் போதும்; அவனியிலே துயரம் தீரும்!
//நோய் தீர்க்கும் ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டு போல!//
நல்ல உவமை! :)
பாரதியின் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் விளக்கத்தில் புதுப் பொலிவுடன் மிளிர்கிறது!
//அடுத்த சில காட்சிகள் வேண்டுமா என இதுவரை படித்தவர்கள் சொன்னால், தொடரலாம்.//
இதுக்கு நான் என்ன சொல்வேன்னு உங்களுக்கே தெரியும்தானே?
மிக்க நன்றி திரு.ஜீவா, கவிநயா!
இன்னும் சில நாட்களில் வேறு சில காட்சிகளுடன் வருகிறேன்.
தெரியும், தெரியும் கவிநயா!:))
//ஏ மனம் மயங்கிய மக்களே! அன்பைக் கொள்ளுங்கள்! அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள்! கலியுகம் முடிந்து கிருத யுகம் தானே மலரும் எனக் கதறுகிறான்.//
அவனது கதறல் அனைவரது இதயத்திலும் புகுந்து அருஞ்செயலாற்றட்டும்.
அந்த அற்புதயுகம் விரைவில் பிறக்கட்டும்.
வையகம் வளமுடன் வாழட்டும்.
Post a Comment