Saturday, April 12, 2008

"மீண்டும் மீண்டும் பிறப்பு!"

"மீண்டும் மீண்டும் பிறப்பு"!

'என்னங்க! எங்கே போயிட்டு வரீங்க? புது வருஷமும் அதுவுமா!' என்று என் மனைவி கேட்டார்!
ஒன்றும் பேசாமல் என் பையிலிருந்து ஒரு இலையை எடுத்து அவரிடம் கொடுத்தேன்!
'என்ன இது?' என்றார்!
நான் சொல்லலானேன்!
ஆற்றோரம் அமர்ந்து கால்களை ஓடும் நீரில் நனைத்தபடி அமர்ந்திருந்தேன்!

சலசலவென ஓடிய குளர்ந்த நீர் என் பாதங்களை வருடி, சிரித்தபடியே சென்றது!

தெளிந்த நீரின் உள்ளே மெல்ல நகர்ந்து கொண்டு தங்களைச் சமன்படுத்திக் கொண்டிருந்த கூழாங்கற்களை காலால் சற்று கலைத்தேன்!

உலர்ந்த சருகொன்று மிதந்தபடியே வந்து என் கால்களில் தேங்கி நின்றது!

'எங்கிருந்து வருகிறாய் பெண்ணே!' எனக் கேட்டேன்!

"நான் ஒரு பெண்ணென்பதை எப்படி உணர்ந்தாய்?" என ஆச்சரியத்துடன் வினவியது சருகு!

"தவறாக நினைக்காதே! என் பாதங்களை வருடியபடி நீ வந்து நின்றதினால் உடனே அப்படி ஒரு எண்ணம் என் மனதில் பட்டது! அவ்வளவுதான்!" சிரித்தபடியே சொன்னேன்!

"ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தன்னம்பிக்கை!" சருகும் சிரித்தது!

'அப்பாடா! தவறாக நினைக்கவில்லை இவள்! இவளுக்கும் என்னைப் போலவே இயல்பான நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது!' என சற்று சமாதானமானேன்!

சருகைக் கையில் எடுத்தேன்!

ஒட்டியிருந்த ஈரத்தை என் சட்டையில் துடைத்து நீவி விட்டேன்!

சருகு நிமிர்ந்தது!

தன் அழகை மீண்டும் பெற்றது போல் ......நிமிர்ந்தது!

"என் கேள்விக்கு இன்னமும் நீ பதில் சொல்லவில்லையே! எங்கிருந்து வருகிறாய்!" என மீண்டும் கேட்டேன்!

"என் கதை சொல்கிறேன் கேள்!

சென்ற வசந்தத்தில் ஓர் நாள்!
நான் உயிர் துளிர்த்தேன் ஒரு மரத்தில்!
மெல்லிய தளிராக என்னை உயிர்த்தாள் என் அன்னை!
சிவப்பும் பழுப்பும் கலந்த அந்த நிறத்தில் நீ என்னைப் பார்த்திருக்க வேண்டும்!
எனக்கே என் அழகைக் கண்டு மிகவும் பொறாமையாக இருந்தது!
என்னுடன் கூடவே இன்னொரு சகோதரி!
இரட்டை இலையாகப் பிறந்தோம்!
வேண்டிய உணவைத் தந்து வேராக என் தந்தையும், அள்ளி அரவணைத்து எப்படி இருக்க வேண்டுமென என தாயும் எம்மை வளர்த்தனர்!
வசந்தம் முடியும் நேரம் என் நிறம் பச்சையாக மாறியது!
என்னில் சில மாற்றங்களை நான் உணரத் தொடங்கினேன்!
பூக்கள் சில என்னுள் பிறந்து என்னிலிருந்து மலர்ந்தன!
இப்போது இன்னமும் அழகானேன்!
என் பருவம் அனைவரையும் கவர்வதை உணர்ந்தேன்!
வண்டுகள் என்னைச் சுற்றி மொய்த்து பூவை நோட்டமிடுவதைக் கண்டு ஒரு பெருமை எனக்குள் பிறந்தது!
மகரந்தத் தேனைக் குடிக்க வந்த வண்டுகளை விரட்ட முடியாமல், பூக்களை மெல்ல அணைத்து மறைத்தேன்!
அப்படியும் ஒரு வண்டின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை!
என்னருகில் வந்து ஆசை வார்த்தைகள் பேசியது!
'நீ எவ்வளவு அழகாயிருக்கிறாய்! எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது! நான் உன் பூவின் மீது அமரலாமா?'
நான் அதன் ஆசை வார்த்தைகளில் மயங்கினேன்!
என்னைத் திறந்தேன்!
பூவின் மீது அமர்ந்த வண்டு தேனை அள்ளிக் குடித்தது!
கூடவே ஏதோ ஒன்றையும் என்னுள் விட்டுச் சென்றது!
நான் சூலானேன்!
பூ மலர்ந்ந்து காயாகி, காய் கனியாயிற்று!
எவனோ ஒருவன் வந்து கனியைத் தட்டிச் சென்றான்!
என் மனம் துடித்தது!
என் கனியை என்னிடம் கொடு! எனக் கதறினேன்!
என்னை லட்சியமே செய்யாமல் அவன் சென்று விட்டான்!
நான் வாடினேன்!
என் அழகு குலைந்தது!
'என்னம்மா இது?' என என் தாயை வினவினேன்!

'இதுதானடி காலம் செய்யும் கோலம்!
துளிர்ப்பதும், பருவம் அடைவதும், மல்ர்வதும், சூலுறுவதும், காயாகிக் கனிந்து பின் குலைவதும் வழிவழி
நிகழும் செயல்கள்! இப்படி எத்தனையோ என் மக்கள் என்னை விட்டுச் சென்று விட்டனர்!
இதோ! இன்னும் சில காலத்தில் நீயும் செல்வாய்! உன் பணி முடிந்தது! என் பணி இன்னமும் தொடரும்!
பழையன கழிவதும், புதியன புகுவதும் வழிவழி நிகழும் செயல்கள்!' என்றாள் என் தாய்!

காற்று ஒன்று வேகமாக வீசியது!
என்னுடன் வா! இனி உனக்கு இங்கு வேலையில்லை! என்றது!

இல்லை! நான் வரமாட்டேன்! என்னிடம் இன்னும் இளமை இருக்கிறது! என் மரத்தை விட்டு வர மாட்டேன்!'
இறுக என் தாயைப் பிடித்துக் கொண்டேன்!
காற்று சிரித்தபடியே, என்னுடன் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு சென்றது!

அன்பு மிகுந்து என் தாயை அணைத்தேன்!
இனம் புரியாத ஒரு பரிவுடன் மரம் என்னை மெல்ல அசைத்தது!

குளிர்காலம் வந்தது!
பனியின் இறுக்கத்தில் என் வலு தளர்வதை உணர்ந்தேன்!
எனினும் அன்னையை விடவில்லை!
பனி உதிர்ந்து, மரம் மீண்டும் சிலிர்த்தது!
ஏதோ ஒன்று என்னிலிருந்து விலகுவதை உணர்ந்தேன்!

'எனக்கு வழி விடு அக்கா! நான் வர வேண்டும் வெளியே!' உள்ளிருந்து ஒரு குரல் என்னைக் கெஞ்சியது!
'உனது வேலை முடிந்து போனது! இனி வருவது என் காலம்! என்னைத் தடுக்க உன்னால் முடியாது! நீயாக நகர்ந்தால் நலம்!' என்றது அந்தக் குரல்!

'என்னம்மா இதெல்லாம்! என்றேன் நான்!

'அதுதான் முன்னமேயே சொன்னேனே! பழையன கழிதலும், புதியன புகுதலும் வழிவழி நிகழும் செயல்கள்! நீ செல்லும் காலம் வந்து விட்டது! உன்னைப் பிரிதல் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது! இருந்தாலும், இனி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது! நீ சென்றால் நான் மீண்டும் துளிர்ப்பேன்! இதுதான் பருவங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்! வசந்தம் ஒவ்வொரு முறையும் வரும்! உயிர்கள் மீண்டும் மலரும்! நீ முழுமையானாய்! மகிழ்வுடன் செல்! வசந்தத்தைப் போற்று!'

நான் தெளிவானேன்!
சுற்றி இருந்த அனைவரையும் அன்புடன் பார்த்துக் கையசைத்தேன்!
என்னை விடுத்தேன்!

மீண்டும் காற்று என்னை ஆதரவாகத் தாங்கியது!
'உனக்காகத்தான் காத்திருந்தேன்! நீ ஒருநாள் வருவாய் எனத் தெரியும்!' எனச் சொல்லி என்னை வருடியது!
அன்புடன் என்னை இந்த ஆற்றில் விட்டது!"

சருகு தன் கதையைச் சொல்லி முடித்தது!
எனக்கும் ஏதோ புரிந்தது போல் இருந்தது!
அன்புடன் அந்தச் சருகை எடுத்து என் சட்டைப்பைக்குள் பத்திரப் படுத்தினேன்!

மெல்ல எழுந்து நடக்கலானேன்!
வசந்தம் தன் விதைகளைத் தூவி தன் செயலை எங்கும் காட்டிக் கொண்டிருந்தது!
எதிரில் தெரிந்த மரத்தில் இரு துளிர் இலைகள் பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்தில், என்னைப் பார்த்துக் கண்ணடித்தன!
அவைகளைப் பார்த்து உரக்கக் கத்தினேன்!

"வசந்தமே வாழ்க!"

புனரபி ஜனனம் புனரபி மரணம்
பிறப்பதும் இறப்பதும் வழிவழிவழி நிகழும்!

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரையே வருக~!
சித்திரமாய் வருக~!
சிறப்பெல்லாம் தருக~!
சிறுமையெல்லாம் ஒழிக~!
சிந்தனைகள் மலர்க~!
சினமெலாம் தவிர்க~!
சிலரிங்கு செல்வதும்
சிலரிங்கு வருவதும்
சிவமெனும் ஒருவின்
சித்தம் என்பதை
சிந்தையில் கொண்டு
சிவனைப் பணிக~!

19 பின்னூட்டங்கள்:

jeevagv Saturday, April 12, 2008 9:28:00 PM  

காய்ந்த சருகு, பழுத்த மரம்,
அனுபவ வார்த்தைகள்,
புத்தாண்டு வாழ்த்துக்கள்,

தங்களுக்கும்!

VSK Saturday, April 12, 2008 10:04:00 PM  

உடனே பார்த்து பதில் அளித்து வாழ்த்து சொன்னமைக்கு நன்றி!தீரு.ஜீவா

இலவசக்கொத்தனார் Saturday, April 12, 2008 10:59:00 PM  

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல! :))

Thamiz Priyan Sunday, April 13, 2008 12:05:00 AM  

கவிதையின் நடையும், இலையின் உணர்வும் அழகாக வந்திருக்கிறது.

VSK Sunday, April 13, 2008 12:43:00 AM  

நன்றி கொத்ஸ், திரு. தமிழ் பிரியன்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

திவாண்ணா Sunday, April 13, 2008 1:07:00 AM  

இலையிலிருந்து பூ வருகிறதா? பரவாயில்லையே! கவித்துவம் பொங்குகிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Unknown Sunday, April 13, 2008 1:30:00 AM  

மிகவும் சிறப்பான கதை.

நன்றி எஸ்கே

உங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சேரநாட்டவருக்கு இனிய விஷு தின வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) Friday, April 18, 2008 8:18:00 PM  

அருமை அருமை அருமை எஸ்.கே. மிகவும் அருமையான தொடர்பினைச் சுட்டிக் காட்டும் கதை. இளவேனிலில் இயற்கை மட்டும் மீண்டும் பிறக்கவில்லை; ஆண்டும் பிறக்கிறது என்ற தங்கள் கருத்தினையும் மிக நன்றாகச் சொல்லிவிட்டீர்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். தாமதமாக வந்து படித்து வாழ்த்துகளைச் சொல்லியதற்கு மன்னிக்கவும்.

VSK Friday, April 18, 2008 8:29:00 PM  

என்னங்க நீங்க குமரன்! 'மன்னிக்கவும்' என்றெல்லாம் சொல்லிக் கஷ்டப் படுத்துறீங்க!

நீங்க வந்து படிக்கலியேன்னு நான்தான் கஷ்டப் பட்டிருந்தேன்!

மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, குமரன், உங்க கருத்து!

"புரிபவர்க்குப் புரியும்" என்பதை நல்லாவே தெளிவுபடுத்தியமைக்கு உங்களுக்கு என் நன்றி!

VSK Friday, April 18, 2008 8:32:00 PM  

அவ்ளோதானா கொத்ஸ்?

சரி! சரி!

புத்தாண்டில் பிறந்த ஒன்றின் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் உங்களை லூஸ்ல விடறேன்!

VSK Friday, April 18, 2008 8:34:00 PM  

//கவிதையின் நடையும், இலையின் உணர்வும் அழகாக வந்திருக்கிறது.//

தமிழின் பிரியனே வந்து சொல்லியது மிகவும் மகிழ்வளிக்கிறது!!

VSK Friday, April 18, 2008 8:36:00 PM  

//இலையிலிருந்து பூ வருகிறதா? பரவாயில்லையே! கவித்துவம் பொங்குகிறது.//

இலை வந்த பிறகுதான் பூ வரும் திவா!

புரிந்தால் சரி!@

VSK Friday, April 18, 2008 8:37:00 PM  

மிக்க நன்றி செல்வன்!

குமரன் (Kumaran) Friday, April 18, 2008 9:17:00 PM  

இரண்டு விதமான தொடர்புகளைப் பற்றி சொல்ல நினைத்தேன். ஒரு தொடர்பைப் பற்றி மட்டுமே சொன்னது போல் பின்னூட்டம் அமைந்துவிட்டது.

1. பெண்ணுக்கும் இலைக்கும் இருக்கும் தொடர்பு. இந்தத் தொடர்பினை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இதனைத் தான் அருமை அருமை என்று பலமுறை சொல்லும் படி அமைத்திருக்கிறீர்கள்.

2. இளவேனில் தொடக்கத்திற்கும் புத்தாண்டிற்கும் உள்ள தொடர்பும் இங்கே நன்கு சொல்லப்பட்டிருக்கிறது.

VSK Saturday, April 19, 2008 12:35:00 AM  

'புரிபவர்க்குப் புரியும்' என்ற என் கூற்றினை மீண்டும் வந்து மெய்ப்பித்தமைக்கு எனது நன்றி, குமரன்!

நான்சொல்ல வந்ததை மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்!

பெண்மை வாழ்க!
புத்தாண்டும் வாழ்க!

சதங்கா (Sathanga) Saturday, April 19, 2008 12:42:00 AM  

பதிவு படித்து முடிக்கும் வரை ஒரு உயிரோட்டம் இருந்ததை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். வாழ்த்துக்கள் VSK.

VSK Saturday, April 19, 2008 12:50:00 AM  

உயிரோட்டத்தின் உள்ளைப் புரிந்து பதித்தமைக்கு நன்றி 'சதங்கா'!
:))

Sivamjothi Thursday, March 12, 2009 11:11:00 PM  

அருமையாக இருந்தது.

உங்களுக்கு இதற்க்கான விடை சொல்ல தோனவில்லையா?

VSK Thursday, March 12, 2009 11:53:00 PM  

//உங்களுக்கு இதற்க்கான விடை சொல்ல தோனவில்லையா?//

என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லையே!திரு. யாரோ.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP