Thursday, April 10, 2008

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"கொலையும் செய்வாள் பத்தினி??" [4]

"தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே" என க்ளாரா வாதிடுகிறார்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு!

நல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது!

வேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின், இறங்கி வந்து பேசியதும் பதிவாகி இருக்கிறது.

இதைக் காட்டி, அரசு தரப்பில் வாதம்.

வெளியே, க்ளாராவுக்கு பெண்ணிய இயக்கங்களின் ஆதரவு வலுக்கிறது!

"க்ளாரா குற்றவாளி அல்ல!" என்ற பலகைகளைத் தாங்கியபடி ஊர்வலம்!

நீதிமன்றத்தில், லோரா கூண்டிலேறி, கொலையுறுவதற்கு முன், சில வாரங்களாகவே டேவிட் தன்னைச் சந்திக்க வில்லை என்றும், ஹில்டன் ஹோட்டலில் இனி இந்த உறவு நமக்குள் தொடர முடியாது எனச் சொல்லி விடை பெற்றதையும் கூறுகிறாள்!

இது போன்ற வலுவான ஆதாரங்களை வைத்து அரசு தரப்பில் ஒரு பெண் வக்கீல்.

"சந்தேகத்தின் உச்சத்தில், திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு இரக்கமற்ற கொலை என வாதிடுகிறார்.

3 வாரம் விசாரணை நடக்கிறது.

ஜூரர்கள் 4 மணி நேர விவாதத்திற்குப் பின், தங்கள் முடிவைத் தெரிவிக்கிறார்கள்.

"குற்றம் சாட்டப்பட்ட க்ளாரா, அப்படியே ஒரு குற்றவாளிதான்"[Guity as charged] என்று!

தலை கவிழ்த்து, நிலை குலைந்து அழுகிறாள் க்ளாரா!

அவளது வக்கீல் அவளைத் தேற்றுகிறார்!

"இன்னமும் ஒன்றும் ஆகவில்லை. நீ டேவிட்டின் மேல் காரை ஏற்றிக் கொன்றது உண்மையே! அதைத்தான் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனால், இதற்கு மேல், இன்னொன்று இருக்கிறது! அதுதான் உனக்கு விதிக்கப்போகும் தண்டனை!
இன்னும் நம்பிக்கை இருக்கிறது!"

ஆம்!

க்ளாரா கணவன் மேல் கொண்ட ஒரு ஆசை கலந்த ஆத்திரத்தில் மட்டுமே [Passion] இதைச் செய்தாள் என்றால், ஒரு எச்சரிக்கையுடன் அவள் விடுவிக்கப் படலாம்!

அல்லது,
அவள் மனநிலை குன்றியவர் என நிரூபிக்கப் பட்டாலும் கூட!
ஆனால், இதற்கு இவள் முன்னமேயே ஒரு மனநல நோயாளியாக இருந்தாள் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்!

க்ளாராவுக்கு அப்படி எந்தவொரு கடந்தகால சாட்சியங்கள் இல்லை!
படிப்பில் சுட்டி!
அழகிலும், புத்திசாலித்தனத்திலும் கெட்டி!
எனவே இது சாத்தியமில்லை!

இதெல்லாம் முடியாவிட்டால், குறைந்தது 20 ஆண்டு கடுங்காவல் நிச்சயம்!

இந்த நிலையில்,....,
க்ளாரா தரப்பில், டேவிட்டின் பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயாவது மிஞ்சட்டும் என மீண்டும் முறையிடுகிறார்கள்.

அரசு தரப்பு இதற்கும் ஒரு பதிலடி வைத்திருக்கிறது!
லிண்டா கூண்டிலேறி, தனது தாய், டேவிட் மேல் காரை ஏற்றும் முன் சொன்ன கடைசிச் சொற்களைச் சொல்கிறாள்!
கோர்ட் அதிர்கிறது!

"இப்போ நான் அவனை இந்தக் காரை ஏத்திக் கொல்லப் போறேன்!"

க்ளாரா தலை குனிந்து அழுகிறாள்.

இறுதியாக,

க்ளாராவின் வக்கீல் தனது வாதங்களை வைக்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமன விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
கை கோர்த்து இருவரும் வந்த ஒரு காட்சியைப் பார்த்த அவளால் அதைத் தாங்க முடியவில்லை.
ஆத்திரத்தில், தன் கணவன் மீது கொண்ட ஆசையில் செய்யப்பட்ட கொலை இது எனக் கருதி கருணையுடன் அணுக வேண்டுகிறேன்!'

அரசு தரப்பு பெண்வக்கீல் தனது வாதத்தைத் தொடர்கிறார்!

'க்ளாரா ஒரு உன்னதமான பெண்!
தன் வாழ்க்கை சிறக்க வேண்டுமென விரும்பியவள்!
தன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்!
இப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?
அவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன!
கணவனை திருந்துகிறேன் எனச் சொன்னதை நம்பி இருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் திருமணத்தை ஒரு ஆலோசகர் [Counsellor]மூலம் சரி செய்ய முனைந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
விவாகரத்து கோரியிருக்கலாம்!..... செய்யவில்லை!
தன் குழந்தைகளை வளர்க்கத் தானே சரியானவர் என நிரூபித்திருக்கலாம்!.... செய்யவில்லை!
லோராவுடன் பேசி இதைச் சுமுகமாகத் தீர்த்திருக்கலாம்!...... செய்யவில்லை!
இறுதியாக,
குறைந்த பட்சம், தன் குழந்தைகளுக்கு ஒரு தந்தையைத் தந்திருக்கலாம்!.... செய்யவில்லை!
அவள் செய்தது ஒன்றே ஒன்றுதான்!!
கொலை!
'காரை ஏத்திக் கொல்லப் போகிறேன்' எனத் தன் வளர்ப்பு மகளிடமே சொல்லிவிட்டு, அதைச் செய்தும் காட்டியவள்!
ஆம்!
க்ளாரா, தன்னை மட்டுமே எண்ணிய ஒரு சுயநலவாதி.
தான் பெற்ற குழந்தைகளைக் கூட நினைக்காத ஒரு கொடிய மனம் படைத்த பெண்தான்
இதோ இங்கே உங்கள் எதிரே நிற்கும் க்ளாரா!
அதிகபட்ச தண்டனையைத் தவிர, வேறெதற்கும் தகுதியில்லாத ஒரு பெண்!
தகுந்த தண்டனையை வழங்குங்கள்!'

அரசு தரப்பு பெண் வக்கீல் அமர்ந்தார்!

ஜூரர்களுக்கு இப்போது 2 மணி நேரமே தேவைப்பட்டது!

"அதிக பட்ச தண்டனையான 20 ஆண்டு கடுங்காவல்!"

12 ஆண்டுகளுக்குப் பின் பரோல் விசாரணைக்கு உட்பட முடியும்!

நீதி வழங்கப் பட்டது எனப் பலரும், இல்லை எனச் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்!

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முதலில், க்ளாரா செய்ததைப் பற்றிய உங்கள் கருத்தையும்,
அடுத்து, நீங்கள் அந்த நிலையில் என்ன செய்திருப்பீர்கள் எனவும் சொல்லுங்களேன்!

[முற்றும்]


தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் நன்றி!

8 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Thursday, April 10, 2008 10:59:00 PM  

////இப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்?
அவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன!////

அதுதான் உண்மை!

பலவித வாய்ப்பு இருந்தும் - ஒன்றைக்கூட
யோசிக்கவில்லை.

passionஆல் ஏற்பட்ட மூர்க்கத்தனம் மட்டுமே இருந்தது.

மூர்க்கத்தனமான செயலுக்கு மன்னிப்பு ஏது?

இறைவன்கூட மன்னிக்க மாட்டாரே!

SP.VR. SUBBIAH Thursday, April 10, 2008 11:02:00 PM  

இந்த உண்மைக் கதையின் கடைசிப் பகுதி பல அழுத்தமான வாதங்களை வைத்து, நம்து மனதைப் புரட்டிப் போடுகிறது என்பது மறுக்க முடியாத உணமை!

மறக்க முடியாத பதிவு வி.எஸ்.கே அய்யா!

நன்றி! நன்றி! நன்றி!

வடுவூர் குமார் Thursday, April 10, 2008 11:54:00 PM  

இது கோபத்துக்கான விலை.
கொடுத்தே ஆதாவது அனுபவித்தே தீரவேண்டும்.

VSK Friday, April 11, 2008 12:20:00 AM  

ஒவ்வொரு பதிவிலும் வந்து அருமையான முத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் ஆசானே!

மிக்க நன்றி!

பெண்கள் ஒருவரும் இந்தப் பக்கம் வரவே இல்லையே!
என்ன்ன காரணம்??
:)

VSK Friday, April 11, 2008 12:23:00 AM  

கோஒபம் எவருக்கு வந்தாலும் அதற்கு ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது, இல்லையா திரு.குமார்!

நன்றி!

ஆசானிடம் கேட்ட அதே கேள்வி!
பெண்கள் ஒருவரும் இந்தப் பக்கம் வரவே இல்லையே!
என்ன காரணம்??
:)

கோவி.கண்ணன் Friday, April 11, 2008 12:28:00 AM  

வடூவூராரை நானும் வழிமொழிகிறேன்.

ஆத்திரகாரர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் !

மற்றவர்களுக்கு பாடமாக அமையும் !

Unknown Monday, November 17, 2008 4:15:00 AM  

Oru pen, than kanavanai vazhkkai thunaiyaga alla valzhkkaiya nenaithathan vilaivu

VSK Monday, November 17, 2008 8:39:00 PM  

//ஒரு பெண் தன் கணவனை வாழ்க்கைத் துணையாக அல்ல, வாழ்க்கையாக நினைத்ததன் விளைவு.//

கருத்துக்கு நன்றி, திரு/மதி சந்திரா!:)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP