Tuesday, March 04, 2008

சிவமாய் நிறைவாய்! "சிவராத்திரி பதிவு"






சிவமாய் நிறைவாய்!




[சிவராத்திரியை முன்னிட்டு ஒரு பதிவு இட வேண்டுமென என் நண்பர் திரு. ராஜா அண்ணாமலை கேட்டிருந்தார்! என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை!]


உலகாய் உயிராய் உலவும் பொருளாய்

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
விண்ணாய் விளங்கும் அனைத்திலும் ஒன்றாய்
கண்ணாய் ஒளியாய் சிவமாய் நிறைவாய்!

என்னுள் உறையும் இறையாய் நின்றாய்!
உறையுள் உறையும் வாளாய்ச் சென்றாய்!
எல்லாம் நீயே இயக்கம் என்றாய்!
உறங்கும் போதிலும் நடனம் புரிந்தாய்!

உறைவாய் உறைவாய்! என்னுள் உறைவாய்!
கரைவாய் கரைவாய்! என்னில் கரைவாய்!
பொழிவாய் பொழிவாய்! அன்பைப் பொழிவாய்!
மொழிவாய் மொழிவாய்! முத்தமிழ் மொழிவாய்!

பணிவாய் பணிவாய்! பண்பினில் பணிவாய்!
பனிவாய் பனிவாய்! இமயவன் பனிவாய்!
செவ்வாய் செவ்வாய்! தித்திக்கும் செவ்வாய்!
இசைவாய் இசைவாய்! இன்புடன் இசைவாய்!

அளவாய் அளவாய்! வளமும் அளவாய்!
உணர்வாய் உணர்வாய்! என்னுயிர் உணர்வாய்!
குழைவாய் குழைவாய்! தேனினில் குழைவாய்!
நிறைவாய் நிறைவாய்! என்னில் நிறைவாய்!

அமர்வாய் அமர்வாய்! இதயம் அமர்வாய்!
சொல்வாய் சொல்வாய்! இன்கதை சொல்வாய்!
உருவாய் உருவாய்! உளமே உருவாய்!
வருவாய் வருவாய்! துணையாய் வருவாய்!

தருவாய் தருவாய்! சகலமும் தருவாய்!
அருள்வாய் அருள்வாய்! இணையடி அருள்வாய்!
உறவாய் உறவாய்! என்னுடை உறவாய்!
மலர்வாய் மலர்வாய்! சிவமாய் மலர்வாய்!

வடிவாய் விளைவாய் பொலிவாய் குளிர்வாய்
நகையாய் மணியாய் நலமாய் தவமாய்
வளமாய் வருவாய் அன்பாய் அருள்வாய்
சிவமாய் சிவனாய் செம்மையாய் ஆக்குவாய்!

என்னில் உறையும் இறைவன் இவனே
நம்மை எழுப்பும் நடனம் புரிவான்
தன்னை உணரும் அனைவரின் மனதில்
இன்றே இவனே நடனம் புரிவான்!

சிவனிவன் நடனம் ஆடிடும் இறைவன்
அவனடி நிழலே அடியவர் துணையே!
சுடலையில் நடமிடும் நடுநிசியிரவில்
சிவனுடை நினைவு சுகமும் தருமே
!

************************************************

14 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Tuesday, March 04, 2008 9:36:00 PM  

இன்னிக்கு சிவனிரவா ?

உங்களுக்கு தூக்கம் வருமா வராதா ?

குமரன் (Kumaran) Tuesday, March 04, 2008 11:25:00 PM  

http://sivanpaattu.blogspot.com/

எஸ்.கே. இந்தப் பாடல் இந்த சிவன் பாட்டு பதிவில் அல்லவா வந்திருக்க வேண்டும். சிவராத்திரியை முன்னிட்டு சிவன் பாட்டு பதிவைத் தொடங்கியிருக்கிறேன். அழைப்பை அனுப்பியிருக்கிறேன். இணைந்து இந்தப் பாடலை அந்தப் பதிவிலும் இடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH Wednesday, March 05, 2008 12:03:00 AM  

////என்னில் உறையும் இறைவன் இவனே
நம்மை எழுப்பும் நடனம் புரிவான்
தன்னை உணரும் அனைவரின் மனதில்
இன்றே இவனே நடனம் புரிவான்!////

இந்த வரிகள் மிகவும் பிடித்துள்ளன!

இது இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியவனின் தாழ்மையான எண்னம்!

என்னில் உறையும் இறைவன் இவனே
எங்கும் நிறைந்த பரம்பொருள் இவனே
தன்னை உணரும் அடியார் மனதில்
என்றும் நடனம் புரிபவன் இவனே!

சரியாக இருக்கிறதா வி.எஸ்.கே அவர்களே?

SP.VR. SUBBIAH Wednesday, March 05, 2008 12:07:00 AM  

////உங்களுக்கு தூக்கம் வருமா? வராதா?////

சிவனைப் பற்றி பதிவு போட்டுவிட்டு தூக்கம் எப்படி வரும்?
இல்லை சிவன்தான் தூங்கவிட்டு விடுவாரா?

படித்துப் பின்னூட்டம் போட்ட எனக்கே தூக்கம் வராது!
ஓம் நமச்சிவாயா!
ஓம் நமச்சிவாயா!
ஓம் நமச்சிவாயா!

jeevagv Wednesday, March 05, 2008 12:24:00 AM  

நிறைந்தவன் நிறைவாய் நிறைக்கட்டும் நம் அகத்தை

தண்முகில் போலே வந்து நிரப்பட்டும் அருளை.
சிவனடியார்ப் பேறு போல வேறுண்டோ,
உமையொருபாகன் நமையிருளில் இருந்து மீட்கட்டும்.

VSK Wednesday, March 05, 2008 9:10:00 AM  

தூக்கம் எல்லாருக்குமே வரும், கோவியாரே!
ஆனால், தூங்காமல் இருந்து, சிவனை எம்முள் நிறைப்பது நல்லது!
அகம் அழியும்!!

VSK Wednesday, March 05, 2008 9:11:00 AM  

கண்டிப்பாகச் செய்கிறேன் குமரன்.
நான் பார்க்கத் தவறிவிட்டேன்.
மன்னிக்கவும்!

VSK Wednesday, March 05, 2008 9:13:00 AM  

மிகவும் நன்றாக இருக்கிறது, ஆசானே!

நன்றி!

VSK Wednesday, March 05, 2008 9:15:00 AM  

//படித்துப் பின்னூட்டம் போட்ட எனக்கே தூக்கம் வராது!
ஓம் நமச்சிவாயா!
ஓம் நமச்சிவாயா!
ஓம் நமச்சிவாயா!//

ஒரு பதிவுக்கு 2 பின்னூட்டங்களா!
சிவன்கொடுத்து வைத்தவர்!

அப்பனுக்கு பாட்டு சொல்லும் சுப்பையா!
:))
நமசிவாய!

VSK Wednesday, March 05, 2008 9:18:00 AM  

//உமையொருபாகன் நமையிருளில் இருந்து மீட்கட்டும்.//


நல்லதொரு வேண்டுதல் திரு. ஜீவா!
நிறைவாய் நிறைவேற நமசிவாயன் அருளுவான்!

தி. ரா. ச.(T.R.C.) Wednesday, March 05, 2008 11:19:00 AM  

@ஸ்கே சிவராத்ரிக்கு உதவும் நல்ல பதிவு.

ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்

ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்

அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே

ஆதலினால் மனமே இன்றே சிவ
நாமம் சொல்லிப்பழகு

VSK Wednesday, March 05, 2008 11:59:00 AM  

அனைவருக்கும் பலனளிக்கக் கூடிய ஒரு கருத்தையும் சேர்த்துச் சொன்னமைக்கு நன்றி தி.ரா. ச. அவர்களே!

திவாண்ணா Thursday, March 06, 2008 11:54:00 PM  

//கரைவாய் கரைவாய்! என்னில் கரைவாய்!//

நாமதானே அவனில் கரையனும்?

VSK Monday, March 10, 2008 12:48:00 AM  

நாமே சிவமானால், ..... யார் எதில் கரைகிறார்கள் என்பதைப் பற்றிய கவலை இருக்காது!

புரிபவர்க்குப் புரியும்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP