அருள் செய்ய வா முருகா!
தைப்பூச நன்நாளில் ஒரு முருகன் பதிவு இட்டு உங்கள் புதுக் கணக்கைத் துவங்கலாமே என என் அன்பு நண்பர் திரு.ரவி கண்ணபிரான் சொன்னதிற்கிணங்க இதோ என் முருகன் மீதான ஒரு சுய பதிவு. படித்தவர்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
அருள் செய்ய வா முருகா!
பாராளும் மன்னனிவன்
சீராளன் செல்வனிவன்
கார்போலப் பொழிந்துவரும்
கருணைமழை நாதனிவன்
வேதனைகள் யாவினையும்
வேரறுக்கும் விநாயகனை
பாதமலர் நான் தொழுது
குமரன்புகழ் பாடிடுவேன்
சிவனாரின் தீப்பொறியில்
சுயமாக தோன்றிநின்றான்
கார்த்திகையில் தான்பிறந்தான்
கமலத்தில் உருவெடுத்தான்
அறுவர்முலைப் பால்குடித்தான்
சரவணத்தில் தான்மிதந்தான்
அன்னைவந்து அணைத்திடவே
அறுமுகனாய் அவதரித்தான்!
அண்ணனிடம் தோற்றதனால்
அருங்கனியைத் தவறவிட்டான்
அறுமலையில் முதல்மலையாய்
ஆவினன்குடி சென்றுநின்றான்
ஆண்டிக்கோலத்தில் தண்டெடுத்து
ஆங்கவனும் தான்நிற்க
தண்டபாணி என்றபெயர்
தாங்கியவன் சிரித்திருந்தான்!
நான்முகனின் செருக்கடக்க
பிரணவத்தின் பொருள்கேட்டு
விடைதெரியா பிரமனையும்
வெஞ்சிறையில் தானடைத்தான்
விடுவிக்க வேண்டிநின்ற
விடையனார் விடைகேட்க
தந்தைக்கே குருவானான்
ஏரகத்தில் தானமர்ந்தான்!
தேவர்குறை நீக்கிடவே
தான்பிறந்த காரணத்தை
நாதனவன் நயமுரைக்க
மாதரசி வேலளிக்க
சூரனவன் துடுக்கடக்கி
மாமரத்தைக் கூர்பிளந்து
சேவலும் மயிலுமாய்
சீரலைவாயில் சிரித்து நின்றான்!
இந்திரனும் மனமகிழ்ந்து
குஞ்சரியை குலமகளைக்
குமரனுக்கு மணமுடிக்க
தேவரெலாம் வாழ்த்திவர
மாதேவன் உமையவளும்
மங்கலமாய் நாணெடுத்து
மைந்தனவன் கைகொடுக்க
பரங்குன்றில் மணமுடித்தான்!
சூரனவன் கதைமுடித்த
கோபமது தானடங்க
ஒருகுன்றில் வந்தமர்ந்தான்
தனித்தங்கு நின்றிருந்தான்
தணியாத கோபமது
தணித்தவொரு மலையதனால்
நரமுனிவர் வாழ்த்திவரும்
தணிகைமலை தானமர்ந்தான்!
தினைப்புனத்தைக் காத்துவந்த
குறவள்ளி தனைமணக்க
வேடனாய், விருத்தனாய்
வேங்கைமர வித்தகனாய்
பலவேடம் தானணிந்து
மனவள்ளி மாலைசூட
சோலையெலாம் தவழ்ந்துவந்தான்
குன்றுதோறும் ஆடிநின்றான்!
தைப்பூச நன்நாளில்
பக்தரெலாம் கூடிநின்று
பால்காவடி பன்னீர்க்காவடி
புஷ்பக்காவடி சந்தனக்காவடி
பலவிதமாய்க் காவடிகள்
தெருவெல்லாம் ஆடிவர
மயில்மீது நீயமர்ந்து
அருள் செய்ய வா முருகா!
பாலாலே அபிஷேகம்
பன்னீரால் அபிஷேகம்
சந்தனத்தால் அபிஷேகம்
பஞ்சாமிர்த அபிஷேகம்
வெண்ணீறால் அபிஷேகம்
அத்தனையும் தாங்கிநின்று
அழகாக நீ சிரித்து
அருள் செய்ய வா முருகா!
முருகனருள் முன்னிற்கும்!!
20 பின்னூட்டங்கள்:
ஆறு படை(யல்) பாட்டை போட்டு பட்டையை கிளப்பி இருக்கிங்க.
பாராட்டுக்கள் !
தைப்பூசத் திருநாளில் நல்லதொரு வாழ்த்தினைப் படிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி எஸ்.கே. அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்ததோர் திருப்தி.
பாட்டை படித்ததும் முருகனே வந்தது போல் இருக்கிறது. :-)
அன்பு நண்பரே! செல்லக் கோவியாரே! உங்கள் மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!
அன்பு குமரன்,
கருத்துக்கும் திருத்தத்துக்கும் மிக்க நன்றி!
மராமரம் என்பதை மாமரம் எனச் சுட்டியதற்கு!
:))
என் இனிய நண்பரே [my friend]
முருகனை மனதிறுத்தியே இப்பாடல் எழுதினேன்!
அதனைத் தாங்களும் உணர்ந்தது முருகனின் வெற்றி!
முருகனருள் முன்னிற்கும்!
மீண்டு(ம்) வந்ததுக்கு நன்றி. நல்ல வரவேற்போடதான் வந்திருக்கீங்க!! :))
எல்லாம் ஒரு ஏற்பாடோடத்தான் வருவோமின்னு தெரியும். ஆனா, இப்படி ஒரு வரவேற்பு வந்தது எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு கொத்தனாரே! எல்லாம் அவன் அருள்!
:))
எல்லாம் 'அவன்' அருள்!!
ரிப்பீட்டே!!! :)))
//எல்லாம் 'அவன்' அருள்!!
ரிப்பீட்டே!!! :)))//
என்னமோ வில்லங்கமா சொல்றீங்கன்னு மட்டும் புரியுது. ஆனா, அது என்னன்னுதான் புரியலை கொத்ஸ்!
முருகா! அருள் செய்ய வா!
:))
வார்த்தைகள் அருவி மாதிரி வந்து விழுந்து இருக்கிறது.
அகமகிழும் வண்ணம் பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றி திரு.குமார்.
தங்களின் இஷ்ட தெய்வத்தோட ஆரம்பித்திருக்கிறீர்கள்.
வாருங்கள். தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
ஊரில் அனைவரும் நலமா?
மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஊரில் அனைவரும் நலமே. இந்த முறை தோஹா வழியாகச் சென்றேன், அந்த விமான நிலையத்தில் ஒரு 4 மணி நேரம் இருந்தபோது சென்றமுறை நிகழ்வை நெஞ்சார நினைவு கூர்ந்தேன். இறைவன் அருளால் மீண்டும் சந்திப்போம். நன்றி.
நல்வரவு! கவிதை எப்படி இப்படி பொங்கி வருகிறது? "உள்ளிருந்து" வந்தது நன்றாகத்தெரிகிறது.
அழகன் முருகனின்
அழகான, அருள்நிறை பாமாலையுடன்
ஆஜராகியுள்ளீர்கள்.
வாருங்கள்! வாருங்கள்!!
அகமுயர்த்தும் ஆக்கம் பல
தாருங்கள்! தாருங்கள்.!! :)
சூரனவன் கதைமுடித்த
கோபமது தானடங்க
ஒருகுன்றில் வந்தமர்ந்தான்
தனித்தங்கு நின்றிருந்தான்
தணியாத கோபமது
தணித்தவொரு மலையதனால்
நரமுனிவர் வாழ்த்திவரும்
தணிகைமலை தானமர்ந்தான்
எம் குலதெய்வததை பாடிய உங்களுக்கு திருத்தணி முருகன் திருவருள் புரிவான்.
நீங்க ரொம்ப நல்லவர். எப்படி என்கிறீர்களா. நல்லவனுக்கு அடையாளம் சொல்லாம போவாங்கன்னு சொல்லுவாங்க அதை வெச்சுத்தான்
ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் எனது பயணத்திட்டத்தில் மாற்றங்கள் உண்டாகி பல நல்லவர்களை சந்திக்க முடியாமல் போயிற்று ஐயா! மன்னிக்கவும்! அடுத்த முறை கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்.
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்! ஆசிகளுக்கு நன்றி ஐயா!
ஆறுபடை வரிசையைச் சற்றே மாற்றி,
வயதில்லா முருகனின் வயது வளர்ச்சிக்கு ஏற்ப ஆற்றுப்படுத்துறீங்களோ? :-))
வேண்டுகோளை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றி SK!
நான் தான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்! அதுனால என்ன!
2008இன் பதிவை முருகனில் துவங்கிய உமக்கு இனிய புத்தாண்டுகளின் வாழ்த்துக்கள்!!
ஆங்கிலப் புத்தாண்டு + தமிழ்த் தைப்புத்தாண்டு! :-))
2008க்கு ஒரே ஒரு புத்தாண்டு நாள் ஜனவரி 1
தை 1-ஐ விடுங்க! அதான் பொங்கல் கொண்டாடியாச்சே!
நன்றி!
வரிசையெல்லாம் முருகனுக்கு கிடையாது ரவி!
நம்ம வசதிதான் அவனுக்கும்!!
:))
Post a Comment