Friday, January 25, 2008

பத்திரமாய்க் காத்திடம்மா!


பத்திரமாய்க் காத்திடம்மா!

இன்று தை இரண்டாம் வெள்ளிக்கிழமை! சென்ற வாரம் இதே வெள்ளியன்று அன்னை காமாக்ஷியின் அருள் தரிசனம் காஞ்சியில் எனக்கு கிடைத்தது! அந்த நினைவுடன் அவளை நினைத்தபோது என் மனதில் தோன்றிய சில வரிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! அனைவரும் அன்னை அருள் பெறுக! இன்புற்று வாழ்க!

பத்திரமாய்க் காத்திடம்மா!

அண்டங்கள் அனைத்திற்கும் ஆதியான சக்தியிவள்
பிண்டங்கள் சமைத்திங்கு உலவிடவே உயிர்தருவாள்
கண்டவரும் இங்கில்லை விண்டவரும் எவருமில்லை
அண்டிவரும் அடியாரின் அருந்துணையாய்த் தானிருப்பாள்
கற்பனைக்கும் எட்டாத காமகோடி பீடமதில்
அற்புதமாய்த் தானமர்ந்து அருள்மழையைப் பொழிகின்றாள்
சொற்பதங்கள் கோர்த்துவொரு பாமாலை சூட்டிடுவேன்
கற்பகமாம் கணபதியின் தாளடிகள் தான் பணிந்து. [1]

பிரபஞ்சத்தில் இயக்கங்கள் எதுவுமின்றி இருந்தவேளை
ஆழமைதி தான்கலைந்து சிவனாரும் கண்விழித்தார்
அசைவின்றி நின்றிருந்த பெருவெளியும் அக்கணத்தில்
இசைவாக உருப்பெற்று மெதுவாக ஆடியது
வேறியக்கம் ஏதுமில்லை ஓருயிரும் அசையவில்லை
சக்தியவள் கருணையின்றி தன்னியக்கம் தொடராது
என்றறிந்த சிவனாரும் மோனத்தில் கண்மூடி
தாயவளைத் தியானித்தார் அவளருளை நாடிநின்றார். [2]

அன்னையவள் அருள் சுரந்தாள் அன்புடனே சிரித்திட்டாள்
கடைக்கண்ணால் பார்த்ததிலே கோடியண்டம் தான் பிறக்க
கைவிரலை அசைத்ததிலே காற்றுமங்கே ஓமென்க
புருவங்கள் உயர்த்துகையில் புள்ளினங்கள் பொலிவுபெற
புன்னகைத்த வேளைதனில் பல்லுயிரும் பிரசவிக்க
கால்விரலின் அசைவினிலே ஐம்பொறிகள் உருவாக
சிற்றிடையின் நெளிவினிலே சீரலைகள் ஆர்ப்பரிக்க
கண்ணசைவில் இயக்கங்கள் களிப்புடனே தொடக்கி வைத்தாள் [3]

உடுக்கை ஒலியினிலே ஓங்காரம் பிறந்ததம்மா
பம்பை ஒலியினிலே பாற்கடலும் பிறந்ததம்மா
செண்டை ஒலியினிலே நானிலங்கள் பிறந்ததம்மா
கைவளையின் கலகலப்பில் தாரகைகள் பிறந்ததம்மா
முத்துப்பல் சிரிப்பினிலே மன்னுயிரும் பிறந்ததம்மா
கண்ணிரண்டின் ஒளிகளிலே ரவிமதியும் பிறந்ததம்மா
கால்மெட்டி அசைவினிலே காவினங்கள் பிறந்ததம்மா
அன்னையிவள் நினைத்துவிட்டால் ஆகாதது எதுவுமுண்டோ [4]

தலையினிலே பொற்கிரீடம் நெற்றியிலே சுட்டிமணி
காதுகளில் கருகமணி கண்விழியில் அஞ்சனங்கள்
நாசியிலே மூக்குத்தி செவ்வாயில் தாம்பூலம்
அலையலையாய்க் கூந்தலிலே அகில்புகையின் நறுமணங்கள்
கழுத்தினிலே பொற்றாலி ரத்தினத்தால் பதக்கங்கள்
கைகளிலே பொன்வளையல் கைவிரலில் மோதிரங்கள்
இடுப்பினிலே ஒட்டியாணம் கால்களிலே கொலுசொலிக்க
கால்விரலில் மெட்டியுடன் பட்டாடை புனைந்திருப்பாள் [5]

சங்கடங்கள் செய்திட்ட சண்டமுண்டரை யழித்தாய்
பாதகங்கள் தான் புரிந்த பண்டனையும் போர்முடித்தாய்
காளியாக நீ மாறி காலரையும் தான் வதைத்தாய்
சூலியாக வந்தங்கு சும்பநிசும்ப வதம் செய்தாய்
மஹிஷாஸுரமர்த்தினியாய் அவதாரம் செய்திட்டாய்
சிங்கமதில் தானமர்ந்து வெஞ்சமர்கள் நீ செய்தாய்
சூலமதைக் கையிலேந்தி வீணர்களை அழித்திட்டாய்
அத்தனையும் சொல்லப்போமோ அறியாத சிறுமகனால் [6]

காத்யாயினி காமாக்ஷி கருமாரி கல்யாணி
வேதாயினி விசாலாக்ஷி வடிவுடையாள் வாராஹி
மங்களாம்பா மீனாக்ஷி மகமாயி மதுரவல்லி
சுகுணவதி சுந்தரியாள் சுகுமாரி சரசுவதி
திரிசூலி திலகவதி திரௌபதியாள் திகம்பரி
படவேட்டு மாரியம்மா பார்வதியாள் பவானி
கமலாம்பா தேனாம்பா நீலாம்பா கௌமாரி
ஆயிரம் கண்ணுடையாள் அலங்காரி நாயகியே! [7]

அடியவரைக் காப்பதிலே அன்னையவள் அபிராமி
கொடியவரைத் தொலைப்பதிலே கோபமான மாகாளி
வேண்டும் வரம் தருவதிலே வாஞ்சையான வரலக்ஷ்மி
தண்டனைகள் தருவதிலே துடுக்கான துர்க்கையிவள்
குற்றங்கள் பொறுப்பதிலே கருணையுள்ள காமாக்ஷி
வெற்றிகள் குவிப்பதிலே வளமான விஜயலக்ஷ்மி
எத்திசைக்கும் காவலாக என்றுமென்னைக் காத்திருப்பாள்
பத்திமலர் பாடுகிறேன் பத்திரமாய்க் காத்திடம்மா! [8]
****************************************************************

13 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, January 25, 2008 9:07:00 PM  

//சென்ற வாரம் இதே வெள்ளியன்று அன்னை காமாக்ஷியின் அருள் தரிசனம் காஞ்சியில் எனக்கு கிடைத்தது!//

ஆகா!
தை முதல் வெள்ளியில் முதல்வள் அவள் தரிசனமா? அருமை!
சரி பயணக் கட்டுரை எங்கே SK? ;-))

jeevagv Friday, January 25, 2008 9:38:00 PM  

ஆகா, காஞ்சி காமாட்சியின் தரிசனமா, மிக்க நன்று.
சக்தியின் உயர் சக்தி
கச்சியம்பதியில் காமாட்சி
அருள் தரும் அம்பிகை கடாட்சம் பரவட்டும் பக்தர் அனைவருக்கும்!

VSK Friday, January 25, 2008 9:53:00 PM  

அதெல்லம் சரிதான் ரவி. சென்ற பதிவு... உங்க பெயர் சொல்லி போட்டது... அதை இன்னும் பார்க்கலையா!

பயணக் கட்டுரை விரைவில் வரும்!:))\

VSK Friday, January 25, 2008 9:55:00 PM  

///கச்சியம்பதியில் காமாட்சி
அருள் தரும் அம்பிகை கடாட்சம் பரவட்டும் பக்தர் அனைவருக்கும்!//

அப்படியே வழிமொழிகிறேன் திரு.ஜீவா!

இலவசக்கொத்தனார் Friday, January 25, 2008 10:52:00 PM  

பயணக்கட்டுரை வருதா!! வெயிட்டிங்.

VSK Friday, January 25, 2008 11:41:00 PM  

அப்போ இதை இக்னோர் பண்றேன்னு சொல்றீங்க!
புரியுது சாமி!
:))

SurveySan Friday, January 25, 2008 11:57:00 PM  

welcome back!

பாட்டு நல்லாவே இருந்துது. ஸிம்பிளா.

VSK Saturday, January 26, 2008 12:23:00 AM  

நன்றி சர்வேசன்!

தேவி மஹாத்மியம் எளிமையாச் சொல்ல நினைத்தேன்!
எனக்குத் தெரிந்த அளவில்!

திவாண்ணா Saturday, January 26, 2008 4:02:00 AM  

//சரி பயணக் கட்டுரை எங்கே SK? ;-))//
பாவம் இப்பதான் திரும்பி வந்திருக்காரு. அதுக்குள்ள வாட்டரீங்களே!
மன்னாரை பாத்தீங்களா? நல்லா கீறாரா?

VSK Saturday, January 26, 2008 10:38:00 AM  

//மன்னாரை பாத்தீங்களா? நல்லா கீறாரா?//

அடுத்து அவன் தான் வரப் போறான்!:))

திவாண்ணா Saturday, January 26, 2008 11:03:00 AM  

யேஏஏஎ!
காத்திருக்கேன்!

தி. ரா. ச.(T.R.C.) Tuesday, January 29, 2008 10:28:00 AM  

அன்னையவள் பாதம் பணிந்து விட்டால்
தன்னையவள் நிதம் தராளமாய் தந்திடுவாள்
காமத்தின் எல்லையாய் இருப்பவளும் அவளே
கருமத்தின் தொல்லயை எரிப்பவளும் அவளே

மனம் குளிர்ந்து அனுபவித்தேன் நன்றி ஸ் கே

VSK Tuesday, January 29, 2008 10:53:00 AM  

அன்னை காமாக்ஷியின் அருளைப் பரிபூரணமாய்ப் பெற்ற தங்களது வாழ்த்து மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது தி.ரா.ச. ஐயா! நன்றி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP